யாருடைய ரத்தம்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய “யாருடைய ரத்தம்” உரையை படித்து மிகவும் நெகிழ்ந்தேன். அமெரிக்க வளரிளம்பருவ பிள்ளைகள் மற்றும் பெற்றோரைப் பற்றிய உங்கள் கருத்து 100% உண்மை (கசந்தாலும்). கட்டிய மனைவியின் சுகத்திற்காக  தாய்ப்பாலுடன் ருசியை, அன்பை, அறிவை புகட்டிய பெற்ற அன்னையை மறக்கும், புறக்கணிக்கும், அவமானப்படுத்தும் மகன்களின் மனோபவம்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவர்களுடைய தாய்நாட்டின் மீது. பிள்ளைகள்தான் பாவம், திரிசங்கு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் [ அவர்களின் காரணப்பெயர் ABCD – American Born Confused Desi ]. முடிந்தவரை வேர்களின் அருமையை மண்ணில் புழுங்கி ஜீவன் ரசம் பாய்ச்சும் தியாகத்தை இளம் பழங்களுக்கு உணர்த்துவோம், நாளைய விதைகளின் வேர்களின் நன்மைக்காக…
நன்றி!
-ரா.சு.

 

அன்புள்ள ராசு

நலமாக இருக்கிறீர்களா? நான் அமெரிக்காவில் இருந்து இன்று கிளம்புகிறேன். அமெரிக்காவில் என்னுடைய உரை என்பது பெரும்பாலும் அவ்வப்போது தோன்றிய சொற்கள்தான். அவற்றை உருவாக்கிய சில மனப்பதிவுகளும் இருந்தன

ஜெ

அன்புள்ள ஜெயமோஹன்,

“தமிழ் ஏன் கற்க வேண்டும்” என்று ஒரு வருடத்திற்கு முன் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதினேன்.  உங்களின் இந்த உரையைப் படித்ததும் அதனை உங்களுக்கு அனுப்பத் தோன்றியது.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802144&edition_id=20080214&format=html

எனது வருத்தமெல்லாம், அமெரிக்காவின் சில தமிழ்க் கல்வி அமைப்புகள், தமிழின் உன்னதமான  பல நூல்களையும், கலாசாரத் தொன்மையையும் விழுமியங்களையும் அடையாளம் காட்டித் தரும்  இலக்கியங்களையும் மதச்சார்பற்ற கல்வி என்ற பெயரில்  வடிகட்டி விட்டு, வார்த்தைக் கோர்வையை மட்டும் கற்றுத்தரும் வறட்டுக் கல்வியையே தமிழ் என்ற பெயரில் போதித்து வருகிறார்கள் என்பதே. ஸ்பானிஷ் மொழி கற்றுத்தரும் அமெரிக்க வகுப்பில் ஸ்பானிஷ் மிஷனரிகள் கட்டிய தேவாலயத்திற்கு குழந்தைகளைக் கூட்டிச்சென்று தம் கலாசாரத்தின் பெருமிதமான அங்கமாக அதனை அடையாளம் காட்டுகிறார்கள். தமிழ் கற்றுத்தரும் தமிழரின் வகுப்பிலோ தமிழ்க் குழந்தைகளுக்கு கம்ப ராமாயணமும், தேவாரமும், திருப்பாவையும், பெரிய புராணமும்  மறுக்கப்படுகின்றன. விழா மேடைகளில் அக்குழந்தைகள் தெய்வீகப் பாடல்களைப் பாடவும் ஆடவும்  தடை விதிக்கப்படுகின்றது. சீறாப்புராணத்தையும், மணிமேகலையையும், அரிச்சந்திர புராணத்தையும் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தாமே நாம், இப்போது அமெரிக்கா வந்தபின் மதச்சார்பின்மை என்ற அரிதாரம் பூசிக்கொண்டு நம் இலக்கியங்களையும் பாடல்களையும் ஒதுக்கி வாசலில் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. கடவுளர் பற்றிப் பேசாத நூல் என்றால் தொல்காப்பியம் கூட தமிழுக்கு மிஞ்சாது என்று எண்ணுகையில் இத்தகைய அபத்தங்களை எண்ணிச் சிரிப்பு வருகின்றது.

சுந்தரேஷ்.

அன்புள்ள சுந்தரேஷ்

உங்கள் கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் புரிந்துகொள்ளக் கூடியவையே. ஒருவர் அவருக்கு உண்மையிலேயே மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் அதை நம்புவதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலும் மேலோட்டமான பாவனையாகவே இவை இருக்கின்றன என்பதே என் எண்ணம்.

பண்பாட்டை விமரிசிப்பதும் நிராகரிப்பதும் எளிய விஷயம் அல்ல. நான் எந்த அளவுக்கு நம் பண்பாட்டை ஏற்கிறேனோ அந்த அளவுக்கு கடுமையாக நிராகரிக்கவும் செய்கிறேன்- அதற்கான தளங்களில்

தொடர்ந்த ஈடுபாடு கல்வி மூலம் செய்யவேண்டிய விஷயம் இதுதான்.  அதற்கு தேவையானது கவனம். அதுதான் கணிசமானவர்களிடம் இருப்பதில்லை மேலோட்டமான சில சொற்களில் நம் மரபை நிராகரித்து விட்டு மேலே செல்வதையே நாம் காண்கிறோம்

ஜெ

 

உங்களுடைய ப்ளூமிங்க்டன் உரையை இப்போதுதான் படித்தேன். வாழ்க்கையின் தினசரி பிரச்சினைகளில் எங்கோ உட்கார்ந்திருக்கும் பெற்றோரை மறந்தே
விடுகிறோம். வாராவாரம் பேசுவது என்பது கூட ஒரு சடங்காகி விடுகிறது. அதே நேரத்தில் குழந்தைகளோடு நமக்கு இருக்கும் பந்தமோ நம் சைடிலிருந்து
நாளுக்கு நாள் வலிவடைகிறது, அவர்கள் சைடிலிருந்து தினம் பலவீனம் அடைகிறது. யுதிஷ்டிரன் யக்ஷனுக்கு சொன்ன ஒரு மறுமொழிதான் ஞாபகம் வருகிறது
– வாழ்வின் பெரிய அதிசயம் எது? தினமும் கண்ணெதிரே இறப்பு நேர்வதை பார்த்த பிறகும் ஒவ்வொரு மனிதனும் தானும் இறக்கக்கூடியவன் என்று நினைப்பதில்லை.
அதை போலத்தான் நம் குழந்தைகளை விழுந்து விழுந்து கவனிக்கும் நாம் நம் பெற்றோரை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோமோ?

அன்புடன்
ஆர்வி

முந்தைய கட்டுரைசொல்வனம், இசை ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபாலகுமாரன் மேலும் ….