புறப்பாடு 8 – விழியொளி

ஜெஸ்ஸி அப்போதுதான் அறிமுகமாக ஆரம்பித்திருந்தது. கூஸா என்று இன்னொரு வகை. கழுதையுடன் அதற்கு ஏதோ உதிர உறவுண்டு என்று நம்பப்பட்டமையால் சிலர் அதன் பாலை குடிக்கமாட்டார்கள். அதன் குரல் உடைந்த சர்ச் ஆர்கனின் கட்டைகளை அழுத்தியதுபோல சம்பந்தமில்லாத சுருதிகளில் இருக்கும். ‘அது ஒரு சாதிகெட்ட சென்மமுல்லா” என்பார் போற்றி. அந்தப்பாலை அபிஷேகம் செய்யக்கூடாதென்று ஒரு விதியை அவரே உருவாக்கினார்.

ஆனால் ஜெஸ்ஸிக்கு கம்பீரம் உண்டு. ‘எளவு நீலாண்டன்கோயில் மாகாளைக்க கெட்டினவ மாதிரில்லா இருக்கா’ என்று வேலாயுதநாடார் அப்பாவிடம் சொன்னார். நல்ல உயரம். அதற்கேற்ற எடை. உயர்ந்த திமில். அழகிகளுக்கே உரிய செருக்கு. ஜெஸ்ஸி, கூஸா அளவுக்கு பால் தருவதில்லை. பிள்ளைகள் பக்கத்தில் போகமுடியாது. என்றாலும் அதைத்தான் விரும்பினார்கள்.

நாட்டுப்பசுக்கள் வேகவேகமாக வழக்கொழிந்துகொண்டிருந்தன. ஜெஸ்சிக்கும் கூஸாவுக்கும் தொழுவத்தில் மின்விசிறி வைத்தவர்கள் உண்டு. கோடைக்காலத்தில் நன்றாக நனைத்த வைக்கோல் பரப்பிய மரநிழலில்தான் கட்டவேண்டும். பச்சைப்புல் பருத்திக்கொட்டை புண்ணாக்குடன் மரவள்ளிக்கிழங்குமாவு வாங்கி காய்ச்சி கலக்கிக் கொடுக்கவேண்டும். நாட்டுப்பசுக்களை, பசு வளர்ப்பதை மதக்கடமையாகச்செய்த அய்யர்கள் மட்டும்தான் வளர்த்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் நிறுத்திக்கொண்டார்கள், பால் கறக்க ஆள்கிடைக்காமல் ஆனபோது.

நாகர்கோயில் தெருக்களில் பசுக்கள் அதிகமாகத் தென்பட ஆரம்பித்தது அதன்பிறகுதான். நாட்டுப்பசுக்களை வளர்ப்பதற்கான மிகச்சிறந்த வழி என்பது அவற்றை அடித்து பத்தி தெருவில் விட்டுவிடுவதுதான். வீட்டுப்பக்கம் காலைநேரம் ஒரு தொட்டி கழுநீர் கொடுத்தால்போதும். கருவுற்றதும் பிடித்துக் கட்டிவிடவேண்டும். குட்டிவந்ததும் மீண்டும் துரத்திவிடலாம். காலை ஐந்து ஐந்தரைக்கு நமக்கு தோதுபட்ட நேரத்தில் வந்து பால் கறந்து தந்து பிள்ளையையும் நக்கிவிட்டு கிளம்பிச்செல்லும். காளைக்குட்டி என்றால் அதை கசாப்புக்குப்போட்டுவிட்டு வைக்கோல்குட்டியை தயாரித்துவைத்துக்கொண்டால் ஒன்றரை வருடம் வரை பால் கிடைக்கும்.

விஸ்வகர்மா தெரு அய்யப்பன் அதை அடுத்தபடிக்குக் கொண்டு சென்ற நிபுணன். மொண்டி அவனுடைய பசுதான். காலையில் சரியாக அவன் வைக்கோல் கன்றுக்குட்டியுடன் மணிகண்டா டீ அன்ட் காபி ஷாப் பக்கத்தில் வரும்போது ‘சோலி கெடக்குல்லா’ என்ற பாவனையில் அது அங்கே நின்றிருக்கும். அவன் கறந்துவிட்டு சைக்கிளில் வைக்கோல் கன்றுக்குட்டியை காரியரில் ஏற்றிக்கட்டி சாலைவழியாக மணியடித்தபடி சென்று மீனாட்சிபுரம் சாலையில் ஹமீது மரைக்காயரின் பிஸ்மில்லா டீ வாசலில் நிற்கும்போது செட்டிமுடுக்கு வழியாக பிதுங்கி நுழைந்து இரண்டு சாக்கடைப்பாலங்களில் கவனமாக நான்குகால்களையும் எடுத்துவைத்து வந்து சேர்ந்துவிடும்.

“நம்ம வளப்பு அப்பிடியாக்கும் அண்ணாச்சி. குடும்பத்துக்குள்ள பொட்டைகள வளக்குததுண்ணா அதுக்கொரு நேக்கு இருக்கணும்பாருங்க…சொன்னா நம்ப மாட்டிய. நம்ம கோலப்பனுக்க செவலை முத்து தியேட்டர் பக்கமா நிண்ணுட்டு பாலு குடுக்கு… ஆருக்கு…. சொல்லுங்க பாப்பம்… அண்ணாச்சி… பன்னிக்குட்டிக்கு….! பன்னிக்குட்டி குடிக்கியதுக்காக இது கிடந்து குடுக்குது. எளவு அந்தக் கருமாந்திரத்த நக்கவும் செய்யுது…. அந்த பாலைத்தாலா படுபாவி கறந்து கடைகடையாட்டு ஊத்துகான்…நான் சொன்னேன்லா. சொல்லாம விடுவமா. ஏல குடும்பத்தில பொறந்தவுக வாய வச்சு குடிக்கப்பட்ட டீயில்லாலேண்ணு…. கேளுங்க நம்ம அக்னிலிங்கேஸ்வரர் கோயிலு போத்தி அவரு ஆரு? ரிசியில்லா ரிசி… பாத்தா பச்ச எல எரிஞ்சுல்லா போவும்… அவரு நிண்ணு ஊதி ஊதி குடிக்காரு… பின்ன நாட்டில எப்டி மளை பெய்யும்? சொல்லுதேண்ணு நினைக்காதிய….”

அய்யப்பனால் பேச்சை நிறுத்தமுடியாது. ”அண்ணாச்சி அவன் வாயக் கிண்டீட்டீயள்லா? அது வாயில்லண்ணாச்சி வாகையடிமுக்கு ஊத்தாக்கும்….பத்துமுப்பது வரியமாட்டு ஒளிகிட்டு கெடக்கு” மணிகண்டன் சொன்னான்.

மொண்டி சிவந்த குள்ளமான நாட்டுப்பசு. எந்நேரமும் கர்ப்பமாக இருக்கும் பாவனை கொண்டது. ‘நான்லாம் பொறுப்பாக்கும்’ என்ற முகபாவனை எப்போதும் உண்டு. கழுத்தில் மூக்கில் எதுவும் கிடையாது ‘டே அந்த பசுவுக்கு ஒரு மூக்கணைய போட்டு விடுலே..வீட்டுல பொண்டுகள மொட்டையாப்பாத்த மாதிரில்லாடே இருக்கு”

“அண்ணாச்சி சொல்லாதிய…ஒரு கவுறப்போட்டுவிட்டா அப்பிடியே நவுத்திக்கொண்டுபோயி கறந்துபோடுவானுக. நாட்டில நீதி நாயம்ணு ஒண்ணுமில்ல பாத்துக்கிடுங்க. மாடு ஆருக்க மொதலுண்ணு ஒரு பார்வ கெடையாது. கவுறில்லேண்ணாக்க அருவில வர யோசிப்பானுக. மொண்டி கிட்டத்தில விடவும் மாட்டாண்ணு வையுங்க. அவளுக்கும் ஒரு இது இருக்குல்லா… பசுவுண்ணா காமதேனுவாக்கும். நம்ம பசுவுக்க பாலு நறுநெய்யில்லா… சத்தியமா அண்ணாச்சி நாகலிங்கம் கேக்காரு ஏல அய்யப்பா, உனக்க பசுவுக்க பாலு காச்சும்பம் பாத்திரவிளிம்பிலே நெய்யா வந்து உருகுதுலேண்ணுட்டு”

“ உருகாதா பின்ன?நல்ல நாட்டு நெய்யில்லா நக்கிநக்கி திங்குது”

அய்யப்பனின் குழாய் கப்பென்று அடைய அவன் உடனே கிளம்பி சென்றுவிட்டான்.

என்கையில் காசு ஓட்டம் ஆரம்பித்தபின் நானும் அருமையும் இரு டீக்கடைகளிலும் கணக்கு வைத்துக்கொண்டோம். டீயை ஊதி ஊதிச் சுழற்றிக் குடிப்பதில் அருமைக்கு தனி ஆனந்தம் இருந்தது. பாதிக்காசுக்கு வெறும் டம்ளரைச் சுழற்றிக்கொள் என்று கடைக்காரன் சொன்னால்கூட சம்மதித்துவிடுவான் என்றான் நெல்சன். மொண்டி கறக்க வரும் நேரம் நாங்கள் டீ குடித்துக்கொண்டிருப்போம்.

நெய்யின் ரகசியம் என்ன என்று அருமை கேட்டான். ‘லே போங்கலே… கச்சோடம் நடக்குத எடத்தில நிண்ணு நாறப்பேச்சு பேசாம’ என்று பாய் கையை தூக்கி கத்தினார்.

நான் அதன்பின் மொண்டியை கவனிக்க ஆரம்பித்தேன். மொண்டி மணிமேடைமுதல் எஸ்பி ஆபீஸ் வரையிலான இடங்களில் மட்டுமே வாழக்கூடியது. பால்கொடுக்கும் கடமைக்காகத்தான் அது மீனாட்சிபுரம் வருவது. அவ்வளவு தூரத்துக்குள் இருபதுக்கும் மேற்பட்ட பரோட்டாக்கடைகளும் டீக்கடைகளும் இருந்தன. நான்கு குப்பைமேடுகள். எஸ்பி ஆபீஸுக்கு நேர் எதிரில் உள்ள குப்பைமேடு மிகப்பெரியது. பெரும்பாலான பகல்நேரம் அங்குதான் இருக்கும். கூடவே கறுப்பாக ஒரு தோழி.

மொண்டியின் ஒரு கொம்பு உடைந்திருக்கும். இன்னொரு கொம்பு கண்ணை நோக்கி வளைந்திருக்கும், கொம்பிலிருந்துதான் அதற்கு அப்பெயர் கிடைத்திருக்கும் என்று தோன்றியது. குப்பைக்கூடையில் கொட்டப்படும் எதுவும் மொண்டிக்கு உணவுதான். புளித்துப்புழுத்த தோசைமாவு, நாறிப்போன சட்டினி. ஆனால் ஒருநாள் அதிகாலையில் அவள் ஆலமரத்தடிமுக்கில் உள்ள சாக்கடையோரம் பிள்ளைகள் போட்டுவிட்டுப்போன மலத்தை அவர்கள் எழுவதற்காகக் காத்திருந்து நக்கி உண்பதைப்பார்த்தேன்.

அருமையிடம் சொன்னபோது ‘பாவம்ல அதுக்க கும்பிச்சூடு அதுக்கு’ என்றான்.

இருந்தாலும் ஒரு பசு இதையெல்லாம் தின்பதென்றால். ’ஏ பத்துநாள் சங்குவெந்தா நீயும் திம்பே நானும் திம்பேன்…. சீவனுண்ணா என்னாண்ணு நினைக்கே? வைவிளு என்ன சொல்லுது? சீவ அக்கினியிண்ணில்லா? அக்கினி அப்பிடியாக்கும். எரிச்சுப்போடும் பாத்துக்கோ’

அதன்பின் மொண்டியைப்பார்த்தபோது பாவமாகத்தான் இருந்தது. ஆனால் மொண்டி நன்றாக கொழுத்து உருண்டு இருக்கும். வயிறு எப்போதும் ஒருபக்கம் பெரியதாக இருப்பதனால் நடையே சற்று குடைசாய்ந்திருக்கும். அது வீட்டுமுன்பு வந்து நின்றாலே கல்லைத் தூக்கி வீசுவார்கள். எறி பட்டால்கூட மெல்ல காதை ஆட்டிவிட்டு பெருமூச்சுடன் திரும்பி நடக்கும்.

மரக்கடையில் ஃபர்னிச்சர் தூக்கி லாரியில் ஏற்றும் உடனடி வேலைக்குச்சென்று எட்டு ரூபாய் கூலி பெற்று நள்ளிரவில் நானும் அருமையும் திரும்பிவந்தோம். சாரல் மழை இருந்ததனால் கடைகள் எல்லாமே மூடப்பட்டுவிட்டன. கடைக்காரர் வீட்டிலேயே சுக்குக்காபி போட்டு எடுத்துவந்து தந்து சமாளித்துக்கொண்டதனால் கடியும் குடியும் அமையவில்லை. பசியில் குமட்டல் வரும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

மழைபிடித்துக்கொண்டது அருமை ‘லே ரூவா நனைஞ்சிரும்லே’ என்று சொல்லி ஓடிப்போய் கடைகளின் ஒட்டுத்திண்ணையில் ஏறி நின்றான். கடைகளின் ஒட்டுத்திண்ணைகளில் எவரும் அமரவோ படுக்கவோகூடாதென்று செய்யபப்ட்டிருந்த விசித்திரமான ஏற்பாட்டை அப்போதுதான் பார்த்தேன். செங்குத்தான ஆணிகள் பதிக்கப்பட்ட பலகைகளை வரிசையாகப் பதித்து வளையம் வழியாக கம்பிபோட்டு ஓரத்தில் பூட்டி வைத்திருந்தார்கள். இரு கம்பிகள் நடுவே இருந்த இடைவெளி இடத்தில் கால்களை வைத்துக்கொண்டு அருமை நின்றான்.

‘லே அந்தால எடமிருக்குலே’

அதை கண்டுபிடிப்பதற்குள் நனைந்துவிட்டேன். அங்கே நின்றபோது முதல் ஒருநிமிடத்துக்கு சௌகரியமாக இருந்தது. அதன்பின் தொடையிடுக்கு வலிக்க ஆரம்பித்தது.

மொண்டியும் தோழியும் மழையில் உடல் சிலிர்க்க வந்தன. அவை வருவது நாங்கள் நிற்கும் இடத்தை நோக்கி என்று தெரிந்தது. ‘லே இதுக இங்கிணயாக்கும் பதிவாட்டு நிக்கப்பட்டதுண்ணு நினைக்கேன்… ” அருமை சொன்னான்.

“இங்கிண எப்டிலே நிக்கும்”

“ நீயும் நானும் கால வச்சிருக்கம்லா…இந்த எடவெளியில நிக்கும்ணு நினைக்கேன்”

“ இதிலயா…இதில எப்டிலே பசுவு நிக்கும்? நாலு காலு எடவெளி வேணும்லா? ”

“நிக்கும்…இல்லேண்ணா இங்க எதுக்குலே வருது?”

மொண்டி அருகே வந்து எங்களைப் பார்த்தது. இருளில் அதன் கண்கள் மின்னின. அத்தனை குளிர்ந்த ஒளியை நான் ஒருபோதும் கண்டதில்லை.

‘கண்ணப்பாத்தியாலே?’ என்றேன்.

ஒரு கணம் அவை கண்களல்லாமல் ஆயின. அதன்பின் பசு உடல் சிலிர்த்துக்கொண்டது. குனிந்து மூச்சுவிட்டபோது கெட்ட வாசனை அடித்தது.

’பசுவு ஏம்லே இப்டி நாறுது?’

’கெதிகெட்டா எல்லாம் நாறும்லே…நீ வா…இது அதுக்குண்டான எடம்லா…’

’ரூவா?’’

’இந்தா இதில வச்சுக்கோ ’ அருமை ஒரு பிளாஸ்டிக் தாளை எடுத்து அதற்குள் ரூபாயைச் சுருட்டி வைத்தான். வேட்டியை இழுத்துக்கட்டிக்கொண்டு ‘கர்த்தருக்கு ஜெயமேய்’ என்று கூச்சலிட்டுக்கொண்டு மழையில் ஓடினான். நான் ஒருகணம் தயங்கிவிட்டு ஓடினேன்.

சற்றுக்கழித்து நின்று திரும்பிப்பார்த்தேன். இருபசுக்களும் அந்த முள்பரப்பில் நிற்பதைக் கண்டேன். ‘லே அரும ரெண்டும் கேறி நிக்குதுலே’

’அதுக்கு ஒரு கொளம்பு வைக்குத எடம்போரும்லே… மனுசனுக்குண்டான எடம் அதுக்கு வேண்டாம்லா?’

அன்று இரவு வெளியே பெய்யும் மழையை கேட்டபடி அதை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி முள்ளைப்போட்டு வைக்கும் எண்ணம் யாருக்கு வந்திருக்கும்? எப்படி அதைப்பற்றி யோசித்திருப்பான். ஆசாரியை வைத்து முள்ளை அடித்து பத்திரமாக வைத்திருக்கிறான். அந்தப்பலகைகளை நாள்தோறும் எடுத்து அடுக்கி சேர்த்து பூட்டி வைத்துவிட்டுப்போகிறான். ஆச்சரியம்தான். அதைப்பற்றி ஒரு கதை எழுதமுடியும் என்று தோன்றியது. ஆனால் அதை எங்கே கதையாக்குவது என ஒரு வடிவமும் கிடைக்கவில்லை. தூங்கிவிட்டேன்.

விடுதியில் பல பையன்கள் பாலே குடிப்பதில்லை. ஜான் எப்போதுமே பாலில்லாத டீதான். ஏன் என்று கேட்டேன். மலைச்சாதிக்கார்கள் பால் குடிக்கமாட்டார்கள் என்றான் அருமை. ஏன் என்று கேட்டால் அவர்கள் எருமையை தெய்வமாக நினைப்பவர்கள், எருமைக்குட்டியின் பாலைக் குடிப்பது பெரிய பாவம் என்று நினைக்கிறார்கள் என்றான்.

அது உண்மைதான் என்று கண்டுகொண்டேன். மலைக்கார மாணவர்களில் எவருமே பால் குடிப்பதில்லை. அதனால்தான் விடுதியிலேயே பால் கிடையாது.

ஜானிடம் ‘நீ பாலு குடிச்சதே இல்லியா?’ என்றேன்.

‘பாலு மாட்டுக்க சலமாக்கும்’ என்றான். எனக்கே குமட்டியது. மேற்கொண்டு பாலைக்குடிக்க என்னாலும் முடியாது என்று பட்டது.

‘பாலு பசுவுக்க கண்ணீராக்கும்’ என்றான் நாகமணி.

‘ஆரு சொன்னா?’

’அப்பன். பாலைக்குடிச்சா மலங்கூளியம்மையும் குளிகன்சாமியும் சபிச்சுப்போடும்’

‘பிள்ளியளுக்கு பால் நல்லதாக்கும்’

‘பிள்ளியளுக்கு அன்னப்பாலு இருந்தா பின்ன என்னத்துக்குலே மத்தபாலு?’

மேற்கொண்டு பாலை நியாயப்படுத்தும் சொற்றொடர்கள் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் நானும் பால் இல்லாத டீ குடிக்க பழகிக்கொண்டேன். முக்கியமான காரணம் மொண்டியின் சாப்பாட்டுப்பழக்கம்தான். மொண்டி போல பதவிசான, அறிவான பசுவே அதையெல்லாம் சாப்பிடுகிறதென்றால் எருமையா பசுவா என்று அதற்கே சரியாகத் தெரியாத கறுப்பி எதைத்தான் தின்னாது?

அய்யப்பனிடம் நான் ‘உம்ம பசு கண்டதையும் தின்னுதுவே’ என்றேன்.

‘கண்ணுபோட்டாச்சா? சீவிக்க விடமாட்டியளாலே? ஏல சீவிக்க விடமாட்டியளாலே? உம்மாண கேக்கேன். நான் நாலு சக்கறம் சுருட்டி முந்தியில வச்சா உமக்கென்னவே குண்டியில வத்தல தேச்ச மாதிரி இருக்கு? இல்ல கேக்கேன்…. கண்ணப்போட்டு கண்ணப்போட்டு அதும் வாயிமண்ணாப்போச்சா…. இன்னி அது திங்குதத நானும் எனக்க பிள்ளையளும் வாரித்திங்குதோம். அப்பம் நெறையுமாலே உனக்கெல்லாம்? வாறானுக…ஏலே மனுசன் தின்னுகான்லே… ஏலே நான்லாம் தவிடு திண்ணு வளந்த பயலாக்கும்…. ஓணத்துக்கு தவிடு தின்னிருக்கேன்லே… இப்பம் சூடுகஞ்சியிலே ஊறுகாய தொட்டுட்டு குடிக்கோம்லா.. உனக்கெல்லாம் எரியுமே…’

அரைமணிநேரம் கழித்து அவன் போனபின்னர் அருமை ‘ஏன்வே கெடந்து கொமையுதாரு?’ என்றான்.

‘மொண்டி கறவ நிப்பாட்டிப்போட்டுல்லா?’ என்றார் பாய்.

‘ஓ’

‘அது இவனுக்கு அடிச்ச ஒரு லாட்டறியாக்கும்….அது கறக்கத் தொடங்கி வரிசம் நாலாச்சு’

‘உள்ளதா?’

‘பின்ன நல்ல நயம் புண்ணாக்குல்லா திங்குது? ரெண்டுமாசத்தில குட்டிய கசாப்புக்கு போட்டுட்டான். அண்ணைக்கு முதல் இந்நா இந்த வாரம் வரை அந்த பிஞ்சுபோன  வைக்கோலுகுட்டிக்காக்கும் பாலு ஊத்திக்கிட்டிருக்கு…. சட்டுண்ணு இது செரிப்படாதுண்ணு மனசிலாக்கிப்போட்டு போல’

‘வாறதில்லியா?’

’வரும்… வந்து நிண்ணு நல்லா மாறி மாறி நக்கும். இவன் தண்ணிய அடிச்சு அடிச்சு உரிச்சு உரிச்சு பாப்பான்… ஊத்து இல்ல…. அதுக்கும் ஒரு கணக்கு உண்டுல்லா? பசுவுண்ணா பாலுதொட்டிண்ணு நினைச்சுப்போட்டான் அய்யப்பன். அவனுக்க பெஞ்சாதி இப்பம் மினுமினுண்ணாக்கும் இருக்கா… சில சங்கதிகள் நம்ம காதுக்கும் வந்து விளுந்துச்சு… பின்ன நமக்கென்னத்துக்கு ஊரு காரியம்? நாம உண்டு நம்ம தொளிலுண்டு …ஏது?’

அய்யப்பனை மறுநாள் மணிமேடையில் பார்த்தபோது பக்கவாட்டில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். அவனுக்கு உலகம் மீதே கடும் கோபம் இருப்பது தெரிந்தது.

அருமை ‘பாவம்லே….அந்த அளவுக்கு அறிவில்ல…அவனுக்க சீவிதம் தெளிஞ்சுபோச்சு…அப்படியே கடைசிவர பால வித்துட்டு சீவிக்கலாமுண்ணு நினைச்சுப்போட்டான்’ என்றான்.

நாலைந்து நாட்கள் கழித்து ஒருநாள் கவனித்தேன். மொண்டி அப்பகுதியில் காணப்படவில்லை. கறுப்பி மட்டும் நடந்து சென்று குப்பைத்தொட்டிக்குள் தலைவிட்டது.

‘லே, மத்தவன் கசாப்புக்கு புடிச்சு வித்துப்போட்டானாலே?’

‘சேச்சே….அது இனியும் குட்டிபோடும்லா:?

‘இவன் மோணையனாக்குமே’

மாலையில் அருமை அவனே ’உள்ளதுபோல இந்த மொண்டி எங்கல போச்சு?’ என்று கேட்டான்.

‘எடத்த மாத்தியிருக்குமோ?’

’அப்பிடி எடத்த மாத்தாதுல்லா?’

ஒரு சுற்று அப்பகுதியைச் சுற்றி வந்தபோது கண்டுபிடித்தோம். எம்.எஸ்.பி பங்களாவின் பூட்டிய இரும்புவாசலின் அருகே பலவகையான ஜவுளிக்கடைக் குப்பைகள் குவிக்கப்பட்ட பெரிய சிமிண்ட் தொட்டிக்கு முன் மொண்டி நின்றிருந்தது. அந்தப்பகுதியையே சொந்தமாக வைத்திருந்த செட்டியார் ஒருவரின் பங்களா அது. இருபது வருடங்களாக வாரிசுரிமைப்போரில் பூட்டியே கிடந்தது. பெரிய இரும்பு கிராதிக் கதவு மீது குத்துக்கம்பிகள் வேல் வேலாக நீட்டி நின்றன. அது பாதி மண்ணில் புதைந்து நின்றது. சைக்கிள் சங்கிலி போட்டு பூட்டிய பூட்டு துரும்பேறியிருந்தது. ஆனால் கீழே இரண்டுகம்பிகள் உடைக்கப்பட்டு உள்ளே குனிந்துபோக வாசலிருந்தது. பெரிய மரச்சன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமே உடைந்திருந்தன.

மொண்டி எதையோ தின்றுகொண்டிருக்கும் அசைவு தெரிந்தது. ஆனால் மெலிந்திருந்தது. வயிறு ஒட்டி கடைப்பள்ளங்கள் தெளிவாகத் தெரிந்தன. பின்பக்க எலும்பு மேடாக நின்றது.

‘இஞ்ச என்னல திங்குது?’

அருகே போனபோது தெரிந்தது. அது தின்றுகொண்டிருக்கவில்லை. நக்கிக்கொண்டிருந்தது. அய்யப்பன் கொண்டு அலைந்த அந்த வைக்கோல்கன்றுக்குட்டி. கால்களை காணவில்லை. உரச்சாக்கை பைபோல தைத்து உள்ளே வைக்கோலைத் திணித்துச் செய்திருந்தான். தொழில்நுட்பத்திறனுடன் முதுகுப்பகுதியில் பழைய ரெக்ஸின் வைத்திருந்தான். அதைத்தான் மொண்டி ஆசையாக நக்கிக்கொண்டிருதது.

‘அப்பம் அதாக்கும் காரியம்…. இது இங்கிண நிண்ணு ராப்பகலாட்டு நக்குது’ என்றான் தொம்மை.

‘மேயப்போவாதா?’

‘கண்டா அறியிலாமே….எப்பிடியும் மூணுநாளா ஒண்ணும் தின்னிருக்காது…இதுக்கெல்லாம் தலைக்குள்ள இருக்கப்பட்டதும் பச்சப் பாலாக்கும்’

அருமை, மொண்டியின் பின்பக்கம் கையால் அறைந்து ‘போ ஏ போ…போ சவமே..போ’ என துரத்தினான். அந்த கன்றுப் பொம்மையை கையில் எடுத்தான் ‘நல்லாத்தான்ல செய்திருக்கான். அய்யப்பன் ஆளு கிண்ணனாக்கும்’ சுற்றுமுற்றும் பார்த்தபின் எம்.எஸ்.பி பங்களாவின் கம்பிவேலிக்கு அப்பால் தூக்கிப்போட்டான்.

‘லே அங்க போடுதே?’

‘அங்கிண எத்திப்பாரு…காந்திக்க காலத்திலே உள்ள குப்பையாக்கும் உள்ள…’

திரும்பும்போது அருமை அந்த பங்களாவைப்பற்றிச் சொன்னான். ‘ராத்திரி ஒரு பன்னிரண்டு மணி களிஞ்சா இங்கிண இல்லாத ஆட்டமும் களியும் இல்ல பாத்துக்க. நயம் எலை கிட்டும்’

மறுநாள் காலை நான் கண்விழித்ததே ஞானராஜ் ஓடிவந்து விடுதியில் சொன்ன செய்தியைக் கேட்டுத்தான். பதறியடித்து ஓடியபோதே நான் அழுதுகொண்டிருந்தேன். எம்.எஸ்.பி பங்களாவின் முன்பக்கம் சிமிண்ட் குப்பைத்தொட்டி மீது மிதித்து ஏறி மறுபக்கம் குதிக்கமுயன்ற மொண்டி, இரும்பு வேல்களில் ஒன்றில் கழுவேறி அமர்ந்திருந்தது.

புறப்பாடு1

புறப்பாடு 2

புறப்பாடு 3

புறப்பாடு 4

புறப்பாடு 5

புறப்பாடு 6

புறப்பாடு 7

முந்தைய கட்டுரைபஞ்சமும் ஆய்வுகளும்
அடுத்த கட்டுரைபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்