புறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது

அருளை எல்லாரும் ஏற்கனவே சாமி என்றுதான் அழைத்தார்கள். ‘பாவம்லே அவன்… இந்தக் கடப்பொறத்துகாரனுகளுக்கு உள்ள ரோகமாக்கும் இது… வல்ல காற்றோகோளோ வந்தா ஒடனே வீட்டுல இருக்கப்பட்ட பையன்மார சாமிக்கு நேந்துவிட்டுப்போடுவானுக…பின்ன அந்தப்பயலுக்க நரகமாக்கும்’ என்றான் அருமை.

திருச்சபைக்கு என உத்தேசிக்கப்பட்ட அருள் மீசையை நன்றாக மழித்து சட்டைக்காலரிலும் கைகளிலும் பித்தான்களைச் சரியாகப்போட்டு அதை கால்சட்டைக்குள் இழுத்துவிட்டுக்கொண்டு கச்சிதமாக நடந்து கல்லூரிக்கு வருவான். அமைதியாக வரிசையின் ஓரத்தில் அமர்ந்திருப்பான். கவனமாக குறிப்புகள் எடுப்பான். கட்டக்கடைசியில் அத்தனைபேரும் அவனுடைய குறிப்பேட்டை வாங்கித்தான் பிரதி எடுத்தாகவேண்டும். அவனே பாதிப்பேருக்கு எழுதியும் கொடுப்பான்.

கல்லூரியில் ஒவ்வொரு நாலாவது சொற்றொடருக்கும் கெட்டவார்த்தை சொல்லாத ஒரே மாணவன் அவன்தான். யாரையும் லே போட்டுவிடும் சுப்ரமணிய நாடார் கூட ’அருள், நீங்க சொல்லுங்க’ என்றுதான் சொல்வார். அதை எவரும் தவறென உணரவில்லை. யாராவது மரியாதைக்குறைவாக அவனைப்பற்றிச் சொல்லியிருந்தால்தான் கொந்தளித்துக்கிளம்பியிருப்பார்கள். அதற்கும் அருள்தான் அவனுக்கே உரிய சாந்தமான குரலில்,‘சண்டை போடாதீங்கடே…சமாதானமாட்டு பேசுவம். எதுக்குச் சண்டை?’ என்று சமரசம் செய்யவேண்டியிருக்கும்.

அருளின் கடல்புறம் கேரள எல்லையில் கொல்லங்கோட்டுக்கு அப்பால். மற்ற கடல்புறம் பையன்கள் போல அவன் சைக்கிளில் வரவில்லை. முதலிரண்டு வருடங்களும் அவன் வெட்டூர்ணிமடம் சர்ச்சில் இருந்தே கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தான். அதன்பின் ஒருநாள் என்னிடம் வந்து ‘நான் உங்க ஆஸ்டலிலே நிக்க முடியுமா?’ என்று கேட்டான். ‘ரூவா எப்டியாம் குடுத்திடுதேன்…’

‘ஏன் சர்ச்சுல நிக்கல்லியா?’

‘அங்க சில பிரச்சினைகள்…என்னால அங்க நிக்கமுடியாது’

தவறு சர்ச்சைச் சேர்ந்தவர்களிடம்தான் என முடிவுசெய்தேன். ஆகவே அருளை முழுவீச்சாக ஆதரிப்பது என் கடமை. நானே விடுதியில் ஒட்டுண்ணியாக இருந்தாலும் ஒன்றரைமாதத்தில் அதை முற்றாக மறந்து விடுதியில் கலந்துவிட்டிருந்தேன். ‘என்னத்துக்கு பயருதேரு? பேசாம வாரும்…எல்லாம் நம்ம பயக்களாக்கும்’ என்றேன். ஜான் அருளின் முன்னால் உடகாரவே தயங்குவான். அருள் மீதான மதிப்பில் சபை வேறுபாடில்லை.

அருமையிடம் ஓடிப்போய் நடந்ததைச் சொன்னேன். ‘நீரு வாரும்வே சாமி… எடம் சுத்தமாக்கித் தாறேன். திண்ணுட்டு இரியும்’ என்றான் அருமை.

அன்றே தன் டிரங்குப்பெட்டியுடன் அருள் வந்துவிட்டான். எனக்கு ஒரு உண்மை தெரியவந்தது/ அருளிடம் இரண்டே சட்டைகள்தான். அவன் எப்போதுமே வெண்ணிறச் சட்டையும் கறுப்புநிற கால்சட்டையும் போடுவதனால் அவன் நிறைய ஆடைகள் வைத்திருப்பதாக ஒரு பிரமை எனக்கு இருந்தது. அருளின் பெட்டி மிகச்சிறியது. உள்ளே பைபிள் தவிர வேறுசில கிறித்தவநூல்களும் இருந்தன. அவன் கொண்டுவந்திருந்த அந்தோணியார் சொரூபத்தை எடுத்து சுவரில் மாட்டிவைத்தான். சுற்றுமுற்றும் பார்த்தபின் வெளியே சென்று துடைப்பத்தை எடுத்து அறையைக்கூட்ட ஆரம்பித்தான்.

ஜான் பாய்ந்துபோய் துடைப்பத்தை வாங்கப்போனான் ‘விடுங்க சாமி, தூக்கேன்’ என்றான்.

’நாளைக்கு நீ செய்யும்வே’ என்றான் அருள் புன்னகையுடன்.

அவன் கூட்டி முடிப்பதை நாங்கள் சங்கடமாகப் பார்த்து நின்றோம். எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கிவைத்தான். எங்கள் அறையை பலநாட்களுக்கு ஒருமுறைதான் கூட்டிவந்தோம். நிறைய ஆட்புழக்கம் இருந்ததனால் தூசு அடைவதில்லை. படுக்கும்போது அந்த இடத்தில் உள்ள குப்பைகளை பொறுக்கி வீசுவோம். எல்லா இடத்திலும் யாராவது படுப்பதனால் குப்பைக்கு கிடக்க இடமில்லை.

கூட்டிமுடித்ததுமே அருள் சென்று கொல்லைப்பக்கத்தில் அவனுடைய ஆடைகளை துவைக்க ஆரம்பித்தான். அவன் தினமும் துவைக்காமல் அப்படி எந்நேரமும் வெண்மையாக இருக்கமுடியாது.

ஜார்ஜ் அவனிடம் ‘இங்க ஞாயித்துக்கிளமையாக்கும் துணி துவைப்பு….மத்தநாளிலே தண்ணி இல்ல’ என்றான். மோட்டாருக்கு அவன்தான் பொறுப்பு.

‘நாளையிலே இருந்து ஆத்திலே போய் துவைக்கிறேன்’ என்றான் அருள் புன்னகையுடன்.

‘அதுக்குச் சொல்லல்ல….இப்பம் எல்லாரும் இப்பிடி தொடங்கினா செரியாவாதுல்லா?’

‘சரிதான்… ‘ என்றான் அருள்.

மறுநாள்முதல் அவன் தினமும் காலையில் பழையாற்றுக்குச் சென்று குளித்து துவைத்து வர ஆரம்பித்தான். அவன் அதிகாலையிலேயே எழக்கூடியவன். வெளியே நல்ல இருட்டாக இருக்கும்போதே எழுவான். பூனைபோல சத்தமே இல்லாமல் சென்று முகம்கழுவி வந்து முழந்தாளிட்டு நின்று ஜெபம்செய்வான். அதன்பின் இருட்டுக்குள் நடந்து குளிக்கச் செல்வான்.

ஒரே ஒருமுறை நானும் சென்றேன். அதிகாலையில் அத்தனை பறவைகள் தூங்கி எழுந்திருக்கும் என்பது ஆச்சரியமாக இருந்தது. அதைவிட அத்தனை பறவைகள் நகரில் இருக்கின்றன என்பது. அவை கூட்டமாகச் சேர்ந்து எதையோ சொல்லிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. ‘இதுகள்லாம் இங்கயா இருக்கு?’

‘நம்ம கண்ணுக்கு என்ன தெரியும்? ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வளிய கர்த்தாவு உண்டாக்கியிருக்காரு….’ என்றான் அருள்

நல்ல குளிர். கையை கட்டிக்கொண்டு தோள் குறுக்கி நடந்தேன். அருள் குளிருக்குப் பழகியவன். நிமிர்ந்து கைவீசி நடந்தான். எஸ்பி ஆபீஸ் முக்கில் குவிக்கப்பட்ட குப்பைமலையில் மொண்டியும் கருப்பியும் மேய்ந்துகொண்டிருந்தன.

மொண்டியின் பின்பக்கம் அடித்து அதை விலக்கி வழி ஏற்படுத்தி பழையாற்றுக்கு நடந்தோம். ஒழுகிணசேரியில் ஒரே ஒரு டீக்கடை திறந்திருந்தது. வெற்றிலைக்கட்டுகளுடன் நாலைந்துபேர் காத்திருந்தார்கள்.

’ஒரு சிங்கிள் சாத்துவமா?’ என்றேன்.

‘டீ காப்பி குடிக்கியதில்ல’

அப்போதுதான் அதையும் கவனித்ததில்லை என்று புரிந்தது. தனியாகக் குடிக்கத் தோன்றவில்லை.

பாலத்துக்கு அப்பால் எங்கோடி கண்டன்சாஸ்தா கோயில். நடைதிறக்கவில்லை. முற்றத்தில் நாலைந்து பசுக்கள் படுத்திருந்தன. சாலையில் இருந்து சாஸ்தாகோயில் முடுக்குவழியாகத்தான் பழையாற்றுக்கு இறங்கமுடியும். அங்கே இறங்கியபோது சாலை கொஞ்சம் வெதுவெதுப்பாக இருப்பதாகப்பட்டது. அந்தப்பாதையே மாடுகள் செல்லக்கூடியது. சாணிமீது குளம்புகள் மிதித்த தடங்கள். பச்சைச்சாணியின் தழைவாசனை எனக்கு எங்கள் வீட்டு தொழுவை நினைவூட்டியது.

எங்கோடி கண்டன்சாஸ்தாவின் போற்றி தோளில் செம்புக்குடத்துடன் பின்னால் வந்தார் ‘என்னவே, சாமி, இதாரு புதிய சாமியாவே?’ என்றார்.

அருள் ‘என்கூட படிக்க்கான்’ என்றான்.

‘சாமியாப்போறதுக்கு என்னவே படிப்பு? நானும்தான் சாமி. என்னத்த படிச்சேன்? பூவிந்தா நீரிந்தா நான் போறேன் கோவிந்தா – அதாக்கும் நம்ம மந்திரம்…. உம்ம வேதக்கோயிலிலயும் பாதருமாரு அப்பிடித்தான் மந்திரம் சொல்லுவாவ… வேண்டாம் நீரு ஒண்ணும் சொல்லாண்டாம். எல்லாம் எனக்கும் தெரியும்…வே எல்லாம் ஒரே கூட்டம்தாலா’ என்றபடி பின்பக்கம் நடந்துவந்தார்.

அருள் என்னை நோக்கிப்புன்னகை செய்தான்.

‘வே, நீரும் இவர மாதிரி சாமியா?’

‘இல்ல’

‘நல்ல காரியம்… பெண்ணு கெட்டும்வே. இல்லேண்ணா இந்தால வாரும்..இந்துவா மாறினா எம்பிடு பெண்ணு வேணுமானாலும் கெட்டலாம். வாறேரா?’

‘அவன் இந்துவாக்கும்’ என்றான் அருள்.

‘சொயம்பு காரியமா போச்சு…. பின்ன என்னத்துக்குவே காலம்பற இவரு கூட வாறேரு?’

’சும்மாதான்’

போற்றியின் பெரிய பற்கள் முழுக்க வெற்றிலைக்கறை. வாயில் வேப்பங்குச்சியை மென்றுகொண்டு வந்தார். குடத்தை வைத்துவிட்டு குச்சியால் பல்லைத்தேய்த்தார். அருள் துண்டை நிதானமாக உடுப்பதற்குள் பல்தேய்த்து வாய் கொப்பளித்து நீரில் மூழ்கிவிட்டார். நீர் மீது மெல்லிய ஆவி தவழ்ந்தது. விடியாவிட்டாலும் நீருக்குள் இருந்து மென்வெளிச்சம் எழுந்துகொண்டிருந்தது. போற்றியின் அலைகள் என் காலைத் தொட்டன. பின்னால் நகர்ந்தேன்.

போற்றி துண்டை உருவி நீரில் சுழற்றி எடுத்து உடலைத் தேய்க்க ஆரம்பித்தார்.

‘விடியக்காலையில குளிக்கப்பட்டது கொத்தும்கொலையுமா நிண்ணு குளிக்கியதுக்காக்கும். துண்ட கட்டிட்டு குளிக்கணுமானா என்னத்துக்கு காலம்பற வாறீரு?’ என்றார் போற்றி.

அருள் “பளகிப்போச்சு’ என்றான்.

‘உம்ம கர்த்தரு காலம்பற குளிக்கச் சொல்லுதாராவே?’

அருள் புன்னகை செய்தான்.

‘சாஸ்தா சொல்லுதாரா?’ என்றேன்.

‘சொல்லமாட்டாரு. ஆனா பூசாரி குளிக்கியது நல்லதாக்கும்…ரெண்டுதடவண்ணா ரெண்டு. ரெண்டாயிரம் தடவண்ணா ரெண்டாயிரம் தடவ’

‘எதுக்கு?’

‘ஒரு அஞ்சு அஞ்சரைக்கு கோயிலுக்கு வாரும்….வருவானுவ, மூணுசீட்டு முடிச்சவிக்கி, முந்திமாத்தி எல்லா மூஷிகவர்க்கமும். நல்லா பட்டையும் கொட்டையுமா போட்டுட்டு சம்போ சிவசம்போண்ணு……தினம் அந்த மூஞ்சிகளிலே முளிக்கதினாலத்தானே சாஸ்தாவ பளையாத்துத்தண்ணிய கோரிக்கோரி விட்டு குளிப்பாட்டுதோம்….வரட்டாவே?’

அருள் புன்னகைசெய்தான்.

போற்றி நீரை குடத்தில் அள்ளி தோளில் வைத்துக்கொண்டு ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி சென்றார்.

‘நல்ல மனுஷன்’ என்றான் அருள் பல்தேய்த்தபடி.

‘பூசாரிகள் எல்லாருக்குமே ஒரு கசப்பு உண்டு’ என்றேன்.

‘உண்டாவும்போல இருக்கு’ அருள் நீரில் இறங்கினான் ‘ஏசுவே கர்த்தரே’ என்று முனகியபடி நீரை அள்ளி ஜெபம் போல ஏதோ சொன்னபடி மூன்றுமுறை அள்ளி தெளித்தபின் வாய் கழுவினான்.

”இந்துமதத்திலே பைசா கிடைக்காது…அதாக்கும்’ என்றேன்.

’எங்க ஊரிலே அம்ப்ரோஸான்னு ஒரு உபதேசியார் இருந்தாரு… இதேமாதிரித்தான் இருப்பாரு. குளிக்கல்லியா?’

‘வேண்டாம்’

‘ஆறுவரை வந்தாச்சு’

‘குளிருது’ என்று விலகி நின்றேன்.

அருள் சிறிய பார்சோப்பால் தன் சட்டையையும் பாண்டையும் துவைத்தான். கல்லில் அடிக்கவில்லை, கையாலேயே கசக்கி துவைத்தான். அவன் அவற்றை நீரில் அலசிய விதம் புதுமையாக இருந்தது. சட்டையின் இரு தோள்களிலும் பிடித்து சட்டையின் முழு வடிவமும் தெரியும்படி விரித்து நீரில் முக்கி அலசினான். பாண்டையும் அப்படித்தான். அதன்பின் அவற்றை படார் படாரென்று ஏழுட்டுமுறை உதறிவிட்டு சலவைமடிப்பு போல கச்சிதமாக மடித்து கல்மேல் வைத்தான்.

‘ஈரமாட்டுல்லா இருக்கு?’

‘அங்கபோயி காயப்போடலாம்’

அவன் நிரில் மூழ்குவதை, பார்சோப்பால் உடலை தேய்ப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். அவனைப்போல எல்லாவற்றையும் கச்சிதமாக, சரியாகச் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால் அது இந்த ஜென்மத்தில் எனக்கு கைவராது என்றும் தோன்றியது.

அருள் தலை துவட்டியதும் வித்தியாசமாக இருந்தது. முரட்டுத்தனமாக துடைக்காமல் எப்படி முடியைச் சீவி வைப்பானோ அதே கோணத்தில் துணியால் அழுத்தி நீவிக்கொண்டான்.

‘வே அருளு’

‘சொல்லு’

‘நீரு சாமியா?’

‘ இப்பம் ஸ்டூடன்டுல்லா?’’

‘இல்ல, நீரு சாமியா போவப்போறீரா?’

அருள் சில கணங்கள் கழித்து ‘கர்த்தர் அருளிருந்தா’ என்றான்.

‘எதுக்கு?’

‘எதுக்குண்ணு கேட்டா? அதாக்கும் நல்ல மார்க்கம்னு தோணுது’

’நீரு எப்பம் சாமியா போவீரு?’

‘அதிப்பம் சொல்லப்போனா எஸெஸெல்சி பாஸானப்பமே போயிருக்கணும்…. ஆனால் அப்பம் வீட்டில பைசா இல்ல. இங்க நாகர்கோயிலிலே வேலைசெய்து அனுப்புத பணமாக்கும் வீட்டிலே…இந்தவருடம் தம்பி பாஸாகி நாகர்கோயிலுக்கு வந்திருவான்… பாஸானதும் போவ வேண்டியதுதான்’

மேலும் என்னென்னவோ கேட்க நினைத்தேன். ஆனால் அருளை எவரும் ஓரளவுக்கு மேல் நெருங்க முடியாது.

அருள் சட்டையையும் கால்சட்டையையும் ஆற்றிலிருந்து கொண்டு செல்வது சலவைக்கடையில் இருந்து கொண்டுசெல்வது போலிருந்தது. அவற்றைப் பிரித்து மடிப்பு கலையாமல் காயப்போட்டான். சட்டைக்குள் ஒரு குச்சியை விட்டு அந்தக்குச்சியின் நடுவே கட்டிய கயிற்றை காலர் வழியாக எடுத்து கொடியில் கட்டினான். அது ஹேங்கர் போலவே இருந்தது.

நான் என் நாக்கை ஒருநாளும் கட்டுப்படுத்தியதில்லை ‘அருள் நீரு பொண்ணுகள பாப்பேரா வே?’

அருள் என்னை சட்டென்று திரும்பிப்பார்த்தான். பின்பு நேராக உள்ளே சென்றுவிட்டான்.

நடுங்கியவன் மாதிரி நின்றேன். பின்பு அறைக்கு வந்து ஓரக்கண்ணால் ஜன்னல் வழியாகப்பார்த்தேன். அவன் மீண்டும் ஜெபம் செய்துகொண்டிருந்தான்.

வழக்கம்போல அருள் ஆறரை மணிக்கே வேலைக்குக் கிளம்பிச்சென்றான். கல்லூரி விட்டபின் மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டு பத்து மணிக்குத் திரும்பிவந்தான். அரைமணிநேரம் ஜெபம் செய்துவிட்டு சாப்பிட்டுத் தூங்கினான். அவ்வளவு குறைவான நேரம் தூங்கியும் அவனிடம் பகலில் தூக்கக் கலக்கமே இருப்பதில்லை என்பதை கவனித்தேன்.

‘அவன் கர்த்தரிட்ட செபிக்கியதே உறக்கம் வரப்பிடாதுன்னாக்கும்’ அருமை சொன்னான்.

‘ஏன்?’

‘உறங்கினா நல்லநல்ல குட்டிகளாட்டு சொப்பனத்திலே வருவாளுகள்லா?’

‘சீ போலே…அவன் சாமியாக்கும்’

‘லே ஏது சாமிக்கும் சாமானுண்டு பாத்துக்கோ. சொப்பனத்திலே குட்டிக வாறது ஒரு அனுக்ரகமாக்கும்…. நான் சோலிக்குப்போயிட்டு வந்து கிடக்கிறதனால கிடந்தபாடே ஒறக்கம். பின்ன எங்கிண சொப்பனம்? ஊருக்குப்போயி மாடத்தில கெடந்தா பூலோகசுந்தரிமாராக்கும் ஒண்ணு ரண்டு மூணுண்ணு நம்பரு போட்டு வந்து நிக்கப்பட்டது…’

‘பின்ன என்னத்துக்குலே இவன் சாமியாவுதான்?’

‘லே இவனுக சாமியாட்டு ஆவுறது இவனுகளுக்க அப்பனம்மைக்க கணக்குகள் கொண்டுல்லா? சாமிக்கு படிக்கியது கஷ்டமாக்கும். படிச்சு வெள்ளத்துணி கிட்டியாச்சுண்ணு சென்னா காசாக்கும். குடும்பம் வச்சடி வச்சு மேலே கேறிப்போடும்…கடப்பொறத்திலே பாரு, எல்லா பாவப்பெட்ட குடும்பத்திலயும் சாமிமாரு இருப்பானுக…பத்துவருசத்திலே அவனுக வீட்ட எடுத்துக்கெட்டிப்போடுவானுக. அதைக்கண்டு கர்த்தாவே எனக்க பயல நானும் அனுப்புகேன்னு இந்தால ஒரு கிளவி நேந்துக்கிடுவா….’ அருமை சொன்னான்.

என்னை அப்படி ஒருவர் நேர்ந்துவிடுவதைப்பற்றி நினைக்கவே பீதியாக இருந்தது.

‘நேந்துவிட்டா ஒக்காதுண்ணு சொல்லப்பிடாதா?’

‘சொல்லலாம். ஆனா பாவி பாவீண்ணு ஊருல ஏசுவானுக. அம்மையும் அப்பனும் சொந்தக்காரனுகளும் மண்ணவாரி தூத்துவானுக. பின்ன வல்ல தீனமோ ஆக்ஸிடெண்டோ வந்தா இதுகொண்டாக்கும்னு வருத்திவைப்பானுக…’

என்னால் அதன் பின் அருளை ஏறிட்டும் பார்க்கமுடியவில்லை. அவன் தொலைவில் வரும்போதே மறுபக்கமாக நழுவினேன். ஆனால் அவனை எதிர்கொள்ளும் தருணங்கள் மிக அபூர்வமாகவே அமைந்தன. அவனுடைய நேரமும் என்னுடைய நேரமும் ஒத்துவரவில்லை. அவன் படிப்பதும் வேறு பாடம்.

கல்லூரிவிட்டு வந்தபோது யாரோ ஒருபையன் ‘அவந்தான் கூட்டுகாரன். அவனிட்ட கேளுங்க’ என்று சொல்லி ஒரு கிழவியை என்னை நோக்கி ஏவினான். கிழவி அங்கிருந்தே கும்பிட்டபடி வந்தாள். கடற்கரைக்காரி என்பது புடவையை பின்பக்கம் செருகியிருப்பதில், கூந்தலைச் சுருட்டி கொண்டைபோட்டிருப்பதில் தெரிந்தது.

மிக பவ்யமாக என்னை அணுகி கும்பிட்டபடியே நின்றாள். யார் என ஊகிக்கமுடியவில்லை ‘ஆராக்கும்?’

‘அருளு இருக்கானா?’

‘நீங்க ஆரு?’

’அருளுக்க அம்மையாக்கும்’

அருளின் அம்மா அத்தனை வயதானவளாக இருப்பாள் என நினைக்கவில்லை. வாயில் பற்கள் நிறைய உதிர்ந்திருப்பதனால்தான் அந்த வயது தோன்றுகிறது என்றும் உடனே தோன்றியது. அருளின் அம்மாவைப்பற்றி விதவிதமாக கற்பனைசெய்திருந்தேன். என் கற்பனைக்கு அப்பால் பரிதாபமான கிழவியாக இருந்தாள். ஆனால் சில கணங்களிலேயே என் கோபத்தை மீட்டுக்கொண்டேன்.

‘என்னவாக்கும்?’

‘வீட்டுக்கு வாறதில்ல பிள்ள….’

கோபத்தை அடக்கி “பைசா அனுப்புகானா?’ என்றேன்.

‘போனவாரம் அனுப்பினான்’

அதுசரி, அடுத்த தவணையை வாங்கிக்கொண்டு போவதற்கான வருகை. ‘அவன் ராத்திரிதான் வருவான்…வந்தா சங்கதி சொல்லுதேன். அதுவரை இங்கிண இருக்கமுடியாது’ என்று கறாராகச் சொன்னேன்.

‘அவன் இப்பம் சர்ச்சில சோலி செய்யேல்லண்ணு சொன்னாவ’

‘ஆமா அவன் தடிக்கம்பெனியிலயாக்கும் சோலி செய்யுகது’

‘அங்கிண போறதுக்கு வளிதெரியுமா பிள்ள?’

வழியை தவறாகச் சொல்லி திருப்பிவிட்டாலென்ன என்று நினைத்தாலும் அதை என்னால் செய்யமுடியவில்லை. ‘சேல்வேசன் ஆர்மி ஸ்கூளு இருக்குல்லா?’

‘ஓம் பிள்ள….’ என்றபின் ‘எங்கிண இருக்கு?’ என்றாள்.

‘கேட்டுப்பாருங்க…சேல்வேசன் ஆர்மி ஸ்கூலுக்கு பொறத்தால நேசனல் டிம்பர் மார்ட்டுண்ணு ஒரு மரக்கட இருக்கு’

‘என்ன மரக்கட?’

‘நேஷணல்’

‘நேசமணி மரக்கட’

இது சரிவராது என்று ஒரு தாளில் சேல்வேஷன் ஆர்மி ஸ்கூல் பின்பக்கம் நேஷனல் மரக்கடை என்று எழுதி கையில் கொடுத்தேன். ‘இத காட்டி கேளுங்க. சொல்லிக்குடுப்பாவ’

‘செரி பிள்ள…கர்த்தரு தொணைப்பாரு’ கிழவி அந்த தாளைச் சுருட்டி மடியில் கட்டிக்கொண்டு ‘பிள்ள அருளுக்க கூட்டுகாரனா?’ என்றாள்.

‘ஆமா’

‘அவனுக்க கிட்ட பிள்ள சொல்லணும் கேட்டுதா…என்னத்துக்கு சாமியாப்போவணுமிண்ணு சொல்லுதான்? மனசில வல்ல துக்கமும் உண்டாண்ணு கேக்கணும்…அருமந்த குட்டியா பெத்த பிள்ளையாக்கும். சாமியாப்போவணுமிண்ணு அவன் சொன்ன நாளிலே இருந்து சங்கில தீயாக்கும் பிள்ள…ஒருநாள் மனசறிஞ்சு கஞ்சி குடிச்சதில்லை….கோயிலுக்கு போயி சாமியாருகிட்ட சொன்னேன். அவரு விளிச்சு லே இந்தமாதிரி உனக்க அம்மை கண்ணீரு விடுதா, அம்மை கண்ணீர பாக்காம நீ சாமியா வரப்பிடாதுண்ணு சொல்லிப்போட்டாரு…கேக்க மாட்டேன்னு சொல்லுதான்’ அவள் கண்களிலிருந்து கன்னச்சுருக்கங்கள் வழியாக கண்ணீர் தயங்கி பிரிந்து பரவியது ‘பிள்ள சொன்னா கேப்பான், ஒப்பம் வயசுப்பிள்ளையள்லா?’

‘அவனுக்க அப்பன் என்ன சொல்லுகாரு?’

‘பிள்ள என்ன சொல்லுது? அவனுக்க அப்பன் கடலிலே செத்து இப்பம் பதினஞ்சு வருசம் ஆயாச்சுல்லா?’

பெருமூச்சுவிட்டேன். அருள் அதைச் சொன்னதே இல்லை.

‘எனக்கு ஒரு சமாதானமில்ல பிள்ள….இப்பம் எனக்க கண்ணடைஞ்சு மேல போனா எனக்க எஜமானுக்கு என்ன உத்தரம் சொல்லுவேன்? பிள்ளைய வித்தாடி தேவ்டியா கஞ்சிகுடிச்சேண்ணு கேட்டு துடுப்பத் தூக்கிப்பிடுவாருல்லா? பிள்ள நல்ல வாக்கு சொல்லணும்….’

‘நீங்க சொல்லப்பிடாதா?’

’அவனுக்க முகத்தப்பாத்தா சாமியாரு முகமாக்குமே பிள்ள. சாமியாரு முகத்தப்பாத்து பேசுகதுக்கு எனக்கு சங்குறப்பில்ல’

அதன்பின் அருளின் முகம் முற்றிலும் மாறிவிட்டிருப்பதாகத் தோன்றியது எனக்கு. அவன் தன் அம்மா வந்ததைப்பற்றி ஒன்றும் என்னிடம் சொல்லவில்லை. நாங்கள் சந்தித்துக்கொள்ள நேரவுமில்லை. ஆனால் சிலநாட்கள் கழித்து வயிறு கலங்கி காலையில் கழிப்பறை சென்றுவிட்டு வந்தபோது அவன் குளிப்பதற்காகச் செல்வதைக் கண்டு நின்றேன்.

‘சொகமில்லியோ?’ என்றான் அருள்.

’ரெண்டு மட்டம் போச்சு’ என்றேன்.

‘குளிக ஒண்ணும் திங்காண்டாம். அப்டியே விட்டிரு…செரியாப்போவும்’ என்றபடி அருள் நடந்தான்.

அரைக்கணத்தில் முடிவெடுத்து அருள் பின்னால் சென்றேன். ‘நானும் குளிக்க வாறேன்’

‘குளிக்கமாட்டேருல்லா?’ என அவன் புன்னகைசெய்தான்.

‘சும்மா வாறேன்’

‘வாரும்’

ஒழுகிணசேரி வரை என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை. பிறகு ‘அம்மைய பாத்தேன்’ என்றேன்.

‘சொன்னா’

‘சாமியா போவ வேண்டாம் எண்ணு சொல்லணும்னு சொன்னா’

‘அது அவ ஆரைப்பாத்தாலும் சொல்லுவா’ என்றான் அருள் ‘அவளுக்கு சாமியாரு வேணும்…அவளுக்க பிள்ள சாமியாரா போவப்பிடாது’

‘பின்ன என்னத்துக்குச் சாமியா போறீரு?’

‘ சொன்னேன்லா? அதாக்கும் எனக்க பாத’

’ஓ’

எங்கோடி கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து குடத்துடன் போற்றி இறங்கி வந்தார் ‘வே, மத்தவனுக்க காரியம் சொன்னேன்லா அதாக்கும் ரைட்டு …கேட்டு நாளைக்கு விவரமாட்டு சொல்லுதேன்’ என்றார்.

அருள் ‘ பிரச்சினை உண்டா?’

’என்ன பிரச்சினை? பைசா உள்ளவனுக்கு பல பிரச்சின. பைசா இல்லாதவனுக்கு ஒரே பிரச்சினதான்…’ அவர்கள் எதைப்பேசிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. போற்றி தாண்டிச்சென்றார்..

‘நீரு கேட்டேருல்லா பொம்புள நினைப்புண்டான்னு?’

‘அய்யோ அது என்னைய வச்சு கேட்டதாக்கும்’

‘நெனைப்பிருக்குவே …பயங்கரமா நெனைப்பிருக்கு. அடக்க அடக்க அக்கினி மாதிரியாக்கும் வளருகது. பாவத்திலே பிறந்த வம்சம்னு ஆதமுக்க சந்ததிகளப்பத்தி ஏன் சொல்லுதாவண்ணு இப்பம் எனக்கு நல்லா தெரியும்’

ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன்.

‘ஆனா கர்த்தர் அருளாலே மீண்டிரலாம்னு நம்பிக்கை இருக்கு….எனக்கு வேற வளி இல்லவே…என்னால வேற மாதிரி முடியாது’

‘ஏன்?’

‘எனக்க அப்பன் கடலுக்குப்போயாக்கும் செத்தாரு தெரியுமா?’

’ஆமா’

‘அப்பனுக்க ஒப்பரம் போயி செத்தது ஏழாளாக்கும். அந்தக்காலத்திலே அது எங்க கடப்பொறத்திலே பெரிய சாவு…’ அருள் சொன்னான். ‘மூணாம்பக்கம் கடலு துப்பிப்போட்டு. ரெண்டாம் பொழிவளவிலே பிரேதம்கெடக்குண்ணு தெரிஞ்சு ஓடிப்போனம். எல்லாருக்கும் முன்னால ஓடினது நானாக்கும். எனக்க அம்மை அலமொறையிட்டு பொறத்தால ஓடி வாறா… ஓடிப்போயி பாத்தேன். மணலிலே பிடிச்சுப்போட்ட பால்சுறா மாதிரி எனக்க அப்பன் கெடந்தாரு…..எனக்கு முதல்ல அவர பாத்தப்பம் தோணினது ஆசுவாசமாக்கும். மூணுநாளா பொறங்கடலுக்கு போனவங்க என்ன ஆனாங்கண்ணு தெரியாம கெடந்து எரிபிரி கொண்டோம். இந்நா அப்பன் வந்தாச்சுண்ணு முதல்ல நினைச்சேன். அப்படியே நின்னேன். பொறத்தால வந்தவளுக அலமொறையிட்டு நெஞ்சில அடிச்சு அளுறத கண்டப்பமாக்கும் அப்பன் செத்தாச்சுன்னு எனக்க ஆன்மாவுக்கு மனசிலானது’

போற்றி குடத்துடன் வந்து ‘செரி பாப்பம்… பதமாட்டு சொல்லிப்பாக்கேன். கேக்கல்லண்ணா அவனுக்க விதி…என்னவே’ என்றபடி கடந்து சென்றார்.

அருள் என்னிடம் ‘அப்பம் பர்னபாஸுக்க அம்மை ஏசுவடியா ஓடி வந்தா…ரெண்டு கையாலயும் நெஞ்சில அடிச்சு ஏசுவே என்னைய சதிச்சுப்போட்டேரேண்ணு கதறிட்டாக்கும் வாறா. வந்து பிரேதங்கள பாக்கா. மொத்தம் நாலு பிரேதங்க அங்கயுமிங்கயுமா மணலிலே பாதி மூடிக்கெடக்கு. அவ ஓரோ பிரேதமா பாத்துட்டு ஓடுதா. அவளுக்கு அவ மகனுக்க பிரேதமுண்டான்னு மட்டுமாக்கும் பார்வ. போறவளியிலே எனக்க அப்பனுக்க கையிலே ஏறி மிதிச்சுட்டு அந்தால ஓடுதா. அப்பனுக்க கை மணலிலே புதைஞ்சுது. அவரு தலைய ஆட்டுத மாதிரி இருந்தது. எனக்கு ஆத்மாவில ஒரு கல்ல தூக்கி ஆரோ போட்டது மாதிரியாக்கும் அப்பம் தோணினது’

எனக்கு மூச்சுத்திணறியது. மிகக்குறைந்த சொற்களில் சொல்லப்பட்ட சித்திரம் வழியாக மங்கிய சாம்பல் மேகங்களுக்குக் கீழே மழைக்கால மங்கல்நிறம் கொண்ட கடலை, வெண்நுரை கக்கும் அலைகளின் சீற்றத்தை, சிறுதூறல் பரவி ஒளிர்ந்த காற்றை, மென்மணலில் புதைந்துகிடந்த சடலங்களை, கூடிநின்றவர்களின் பதற்றம் மிக்க குரல்களை கதறல்களை எல்லாம் கேட்டேன்.

‘அண்ணைக்கு எனக்க அப்பன சவிட்டிப் போனவ ஒரு அம்மையாக்கும்….பெத்த தீயாலத்தான் அப்பிடி ஓடினா…அவ அண்ணைக்கு என்ன ஜெபிச்சிருப்பா? ஏசுவே தேவனே எனக்க பிள்ளைய தந்துபோடும்னு கேட்டிருப்பா. ஒலகமே அளிஞ்சாலும் அவளுக்கு ஒண்ணுமில்ல….இல்லியா? வே, அது எனக்கு மறக்கமுடியாத காரியமாக்கும். அப்பிடி ஏசுகிட்ட போயி எனக்கு எனக்குண்ணு கேக்குதது பெரியபாவம்ணு தோணிப்போச்சு…கர்த்தருக்கு அது பிடிக்காதுண்ணுதான் இப்பமும் நினைக்கேன்’

‘அதுக்கா சாமியாட்டு போறீரு?’

‘இல்லேண்ணா நானும் அப்படி கேப்பேன்லா?’

ஜானை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொருகணமும் அவன் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும்தான் ஜெபித்தான். தனியாக இருக்கும்போதெல்லாம் ‘ஜான் ஜெபிக்குதது பாவம்னா சொல்லுதேரு?’

அருள் என்னைப்பார்த்தான்.

’எனக்கு என்ன தோணுது தெரியுமா? அவனையும் உம்மையும் கர்த்தருக்கு ஒரேமாதிரித்தான் பிடிக்கும்’

அருள் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் மேலே வந்தபோது எங்கோடி கண்டன் சாஸ்தா கோயில் நடை திறந்திருந்தது. தீபங்கள் எரிய சாஸ்தா உள்ளே எழுந்தருளியிருப்பது சாலையில் இருந்தே தெரிந்தது. கும்பிட்டுக்கொண்டேன்.

‘நீரு சொன்னது செரியாக்கும்’ என்றான் அருள்.

புறப்பாடு1

புறப்பாடு 2

புறப்பாடு 3

புறப்பாடு 4

புறப்பாடு 5

புறப்பாடு 6

புறப்பாடு 7

புறப்பாடு 8

முந்தைய கட்டுரைஜெர்மனியின் நிறம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்