புறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்

அவ்வளவு தொலைவிலிருந்து ஒருவன் வந்து படிக்குமளவுக்கு எங்கள் கல்லூரியில் என்னதான் சொல்லிக்கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மாரிமுத்து அவன் ஊருக்குச் செல்ல இரண்டு பேருந்துகள் ஏறவேண்டும். திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி குண்டல் என்ற ஊரில் ஓர் அத்துவானக்காட்டில் இறங்கி, அங்கேயே ஒருமணிநேரம் நின்று இன்னொரு பேருந்தில் ஏறி எங்கோ இறங்கி மேற்கொண்டு நடந்து செல்லவேண்டும்.

ரத்தச்சிவப்பான மண்ணை திருச்செந்தூர் பயணத்தில் பார்த்ததுண்டு என்றாலும் அங்கே இறங்குவது அதுவே முதல் முறை. நீலியம்மன் கோயிலில் ஆடறுத்த மறுநாள் களம் அப்படித்தான் கிடக்கும். பனைமரங்கள் எல்லாம் நல்ல கரிக்கறுப்பு. கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் நின்ற பனைமரங்கள் தலைவாரி சீவப்படாத கிறுக்குப்பெண்கள் போல நின்றன. காற்றில் அனைத்தும் சேர்ந்து ஓலமிட்டன.

சிவந்த தரையில் பெரிய அரைவட்டங்களை வரைந்தபடி காற்றிலாடி நின்றன உடைமுட்செடிகள். நடுவே சிவந்த ரத்தகாயம்போல பாதை. செம்மண் மென்மையாக பசும்சதைபோலவே இருந்தது. அதில் காலடிகளே இல்லை. அலையலையாக காற்றின் பதிவுகள்தான். மாரிமுத்து ‘இன்னும் கொஞ்ச தொலைதான்’ என்றான்.

‘எப்டிலே நீ வளி கண்டுபிடிக்கே?’ என்றேன்.

‘ஏன்? இங்க வளி நல்லாத்தானே இருக்கு. எரட்டப்பனைக்கு அந்தால லெஃப்டுல திரும்பினா நேரே போகவேண்டியதுதான்”

‘அந்தாலயா?’

‘ஆமாலே…பாத்தா கண்ணுதெரியல்லியா?’

‘எனக்கு எல்லாமே ஒண்ணுமாதிரில்லா தெரியுது”

‘வெளங்கிரும்…இந்த வெட்டவெளியிலே கண்ணு தெரியல்ல… உங்கூர்ல எங்க பாத்தாலும் மரம்தாலா….எனக்கு காட்டுக்குள்ள நிண்ணதுமாதிரில்லா இருக்கும்’

கல்லூரியில் எலிகளைப்போல கூசி முதுகு வளைத்து ஓரமாக ஒதுங்கி மேலே கண் தூக்காமலேயே செல்கிறவர்கள் அவர்கள் சொந்த ஊரில் வேறுமாதிரி இருப்பதைக் கண்டேன். அருமை அவனுடைய ஊரில் ஒரு குட்டி இளவசரசன் மாதிரி இருந்தான். மாரிமுத்து தேரிக்காட்டில் வந்திறங்கியதுமே தன் கைகால்கள் மீதிருந்த கட்டுகளை பட் பட்டென்று அறுத்தெறிந்து நிமிர்ந்து கால்வீசி நடந்தான். அவன் சுதந்திரமாக இருக்கிறான் என்பதற்கான ஆதாரம் அவ்வப்போது அவன் நான்கு பக்கமும் அனிச்சையாக துப்பிக்கொண்டது.

கல்லூரி ஒரு விசித்திரமான வட்டம். அங்கே வரக்கூடியவர்களில் தொண்ணூறுசதவீதம் பேரின் தன்னம்பிக்கையை நிரந்தரமாக முறித்துவிடுகிறது. அவர்களால் எந்த கண்களையும் ஏறிட்டுப்பார்த்துப் பேசமுடிவதில்லை. எந்த இடத்திலும் எழுந்து தன்னை முன்வைக்கமுடிவதில்லை. அதிலும் அன்றெல்லாம் கல்லூரிகளில் வந்து அமர்ந்து பெஞ்சில் பின்பக்கச்சூடு படியும் முன்னரே நேரடியாக ஆங்கிலத்தில் வகுப்பெடுக்க ஆரம்பிப்பார்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி. ஆங்கிலத்திலேயே பதில். ஆங்கிலத்திலேயே திட்டு.

நாகர்கோயில் மாணவர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் பதில் சொல்லமுடியும். செல்வின்ராஜ் சாதாரணமாகவே ஆங்கிலத்தில்தான் பேசுவான். உயர்தர மூக்குக்கண்ணாடி போட்டிருப்பான். கண்ணாடி போட்ட அனைவருமே ஆங்கிலம் பேசினார்கள். அவர்கள் அனைவருமே கிரிக்கெட் அல்லது டென்னிஸ் விளையாடினர். கல்லூரிக்கே டென்னிஸ் ராக்கெட்டுடன் சைக்கிளில் வந்தார்கள். கல்லூரி முடிந்ததும் மைதானத்தில் பந்தை ஓடி ஓடி அடித்தனர். தவறியபோது ’கிறைஸ்ட்!’ என நாசூக்காக சலித்துக்கொண்டு ராக்கெட்டை வீசி தலையாட்டினர். அவர்களுடன் எங்கள் பிரின்ஸிபாலும் ஆங்கிலத்துறைத் தலைவரும் சேர்ந்து விளையாடினர்.

ஆனால் ஒரு நாளில் ஏழுமணிநேரம் ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கும் என்னால் நான்குவார்த்தை ஆங்கிலத்தில் சொல்லிவிடமுடியாது. ஆங்கிலத்தை ஒரு பகட்டான வெள்ளைக்காரியாக நினைத்துக்கொண்டேன். ‘சோ நைஸ்…தேங்க்யூ’ என்று சொல்லக்கூடியவள். ஆனால் அதற்கு அர்த்தம் தள்ளிப்போடா கறுப்புநாயே என்பதுதான்.

கல்லூரியில் உள்ள மௌனப்பெரும்பான்மை ஆங்கிலத்தை வெறுத்தது. கல்லூரியில் எஸ்.எஃப்.ஐ கிளையை ஆரம்பிப்பதற்காக வந்த தோழர் டானியல், கார்ல்மார்க்சைப்பற்றிச் சொன்னபோது ‘அந்த தாடிமயிரான் இங்கிலீஸுகாரனாலே?’ என்று என்னருகே அமர்ந்து மெல்லியகுரலில் கேட்டான் மாரிமுத்து. அவனும் விடுதியில்தான் தங்கியிருந்தான். ஊரில் நாங்கள் மலைத்தீ வந்து முடிந்தபின் மலைக்குச்சென்று பொறுக்கிவரும் கரிக்கம்பு மாதிரித்தான் இருந்தான். கருகி எரியாமல் எஞ்சிய குச்சி எங்களூர் மழையையும் ஈரத்தையும் தாங்கி நெடுநாள் உழைக்கும். தொளியில் ஊன்றி குழை சவிட்ட மிக உதவிகரமானது.

வருடக்கடைசியில் ஆங்கிலப்பாடங்களை அப்படியே ஒன்றாக்கினார்கள். பொருளியல், வணிகவியல் மாணவர்களைச் சேர்த்த அவியல் வகுப்பில் மாரிமுத்துவும் நானும் திடீரென்று ஒரே வகுப்புக்குரியவர்களானோம். அன்றைக்கும் ஷேக்ஸ்பியர் நாடகம் படிக்காமல் பட்டம்பெற முடியாது. எங்களுக்கு இருந்தது வெனிஸ் வணிகன். அதை கல்லூரி முதல்நாளே வாசித்துவிட்டேன். மற்றவர்கள் கடைசி வரை வாசிக்கவில்லை.

சரம்சரமாக பேராசிரியர் பொழிந்துகொண்டிருந்த வகுப்பில் மதியநேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்குமேலேதான். அவ்வளவு கவனமாக கற்கவேண்டியவை அல்ல என்பது கல்லூரிக்கணக்கு போல. சட்டென்று ’நண்பா இது படுக்கை நேரம் அல்லவே?’ என்றார் பேராசிரியர். திடுக்கிட்டு வாயைத்துடைத்தேன். ஆனால் பேராசிரியரின் சாக்பீஸ் சென்று விழுந்தது மாரிமுத்து மீது. அவன் பதறி எழுந்தான்.

“ஆகவே போர்ஷியா என்ன செய்தாள் என்று தயைகூர்ந்து விளக்க முடியுமா நண்பனே ?’ என்றார் பேராசிரியர்.

‘அவள் ஆணின் உடைகளைப் போட்டாள்’ என்று மாரிமுத்துவின் ஆன்மா உத்தேசித்ததை நானும் அங்கிருந்த வாயுள்ள ஊமைகள் அனைவரும் உணர்ந்தனர். ஆனால் அவன் “ஷி புட்டு புட்டு’ என்றான்.

“வாட் புட்டு? கொழாய் புட்டு?’ என்றார் பேராசிரியர். முன்வரிசையில் கண்ணாடிக்காரர்கள் பயங்கரமாக வெடித்துச் சிரித்தனர். எஞ்சிய வகுப்பு திகைத்து அமர்ந்திருந்தது.

பேராசிரியர் கரும்பலகையில் ஒரு குழாய்ப்புட்டின் படத்தை வரைந்தார். ”திஸ் இஸ் குழாய்ப்புட்டு…..ஸோ வாட் யூ வாண்ட்? சம்பா ரைஸ் புட்டு ஆர் வைட் ரைஸ் புட்டு?’

சிரித்தாகவேண்டுமென்பதை புரிந்துகொண்டு மொத்த வகுப்பும் சிரித்தது. பேராசிரியர் அவரும் மகிழ்ந்து சிரித்தார். ‘ஸிட் டவுன் பிளீஸ்’

மாரிமுத்து அமர்ந்துகொண்டான். பேராசிரியர் போஷியாவின் சாகஸங்களில் இறங்கினார்.

வகுப்பு முடிந்து பேராசிரியர் சென்றதும் முன்வரிசைப்பையன்கள் எழுந்து பின்னால் திரும்பிப்பார்த்தார்கள். ஸ்டீபன் ‘ஹல்லாவ்’ என்று அழகிய ஒலியுடன் சொன்னான் ‘ஸோ யுர் நேம் இஸ் புட்டு ஹியராஃப்டர்’

மற்றவர்கள் சிரித்தார்கள். அவர்கள் சென்றபின் ஊமையர்களும் ஒவ்வொருவராக அடுத்த வகுப்புக்குச் சென்றார்கள். மாரிமுத்து அருகே அமர்ந்தேன். அவன் என்னை பார்க்காமல் புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.

”லே விடுலே, அந்தாளு அப்டித்தான்’

அவன் முரட்டுத்தனமாக ‘போலே தாயளி’ என்றான்.

‘லே’ என எதையோ ஆரம்பிப்பதற்குள் அவன் சீறி அழ ஆரம்பித்தான்.

அந்த அழுகையை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இதற்குப்போய் அழுகையா? வகுப்பில் சுசீந்திரம் கோபுரச்சிலை மாதிரி பெஞ்சுமேல் ஏறி நின்றவர்கள் உண்டு. கோழி வந்து மேலே விழுந்தது போல புத்தகத்தால் எறியப்பட்டவர்கள் உண்டு. எவரும் எதையும் பொருட்படுத்தியதேயில்லை. பொருட்படுத்த ஆரம்பித்தால் கட்டுப்படியாகாது.

அவன் அழுது முடித்தபின் “லே நம்ம கிளாஸு மாடியிலயாக்கும்….போலாமா’ என்றேன்.

அவன் கண்ணீரை முழங்கையால் துடைத்தபடி ‘லே, நான் போறேன் நான் இனிமேக்கொண்டு படிக்கல்ல’ என்றான்.

‘எங்க?’

‘தேரிக்காட்டுக்கு’

‘போயி?’

‘போயி பனமட்ட வெட்டுதேன்.. முள்ளு சொமக்கேன்…இங்க நிண்ணு நாறுகதுக்கு அது மானமுள்ள சீவிதமாக்கும்… லே, இந்த நாயிங்க நம்மள எதுக்குலே கடிக்க வருது? செறுக்கிவிள்ளைய இனி என்னமாம் சொன்னா அப்படியே கல்ல எடுத்து தலமண்டைய பேத்திருவேன்”

‘லே அவனுக பெரியாளுக…வேண்டாம் கேட்டியா?’

‘என்னல பெரியாளுக? பெரியாளுகண்ணு சொன்னா என்ன தங்கத்தில உருட்டியா வச்சிருக்கானுவ? நல்ல மண்டயடி குடுத்தா தானா அடங்குவானுக…’

‘அதெல்லாம் அடிக்கமுடியாதுலே…அவனுகளாக்கும் ராச்சியம் ஆளுகது’

“என்னல மயிரு ராச்சியம்? லே நாங்க ஆருண்ணு நினைக்கே? ஆருண்ணுலே நெனைக்கே? நாங்க பாண்டிய வம்சமாக்கும். வடுகப்பட நாட்டை பிடிச்சப்ப நாங்க அவனுகளுக்கு கப்பம் குடுக்கமுடியாம தேரிக்காட்டில குடியேறினோம். அங்கிண ஒருத்தனுக்கும் தலவணங்காம மானமா வாழ்ந்தோம்…லே, தேரிக்காட்டு பனைய பாத்திருக்கியா? உங்கூரு தென்னமரம் இல்ல பாத்துக்க… நிமுந்து நிண்ணா கருங்கல் தூணாக்கும்…’

‘அதுசெரி.. ஆனா இது நாகருகோயிலாக்கும்”

‘எங்கியானாலும் பாளையருவாளுக்கு கருக்கு ஒண்ணுதாம்ல…சீவினா சீவினதுதான் பாத்துக்க…தாயளி இனி எவனாவது வாயில சிரியும் கொண்டு வரட்டு… அப்பம் நீ பாப்பே’

ஆனால் நாங்கள் மாடிப்படி ஏறும்போதே ஹரிஹரசுப்ரமணிய அய்யர் வந்தான். கண்ணாடிக்கும்பலில் இருக்கும்போது பெரிய குரல்வளையும் சோடாப்புட்டியுமாக கோமாளியாக இருப்பவன் தனியாக வரும்போது ஒரு பிரபுவாகத் தெரிந்தான். வழி விட்டு ஒதுங்கினேன்.

‘ஹாய் புட்டு… வாட்ஸ் யுர் க்ளாஸ் மேன்?’

மாரிமுத்து ‘திஸ்…அப்……’ என்றான். பதறி ‘டாப் கிளாஸ்’ என்று திருத்திக்கொண்டான்.

ஹரிஹரசுப்ரமணிய அய்யர் சிரித்துக்கொண்டே ‘ஃபனி’ என்றபடி கீழிறங்கிச் சென்றான். அங்கே சிவதாணுப்பிள்ளை அவன் ஆஸ்டின் காரை கிளப்பி இவனுக்காக காத்திருந்தான்.

மௌனமாக மேலே சென்றோம். என்ன பேசினாலும் மாரிமுத்து என்னை அடிப்பான் என்று அறிந்திருந்தமையால் ஒன்றுமே சொல்லவில்லை. மாரிமுத்து தனக்குள் ஆழ்ந்தவனாக வந்தான். வகுப்பை அடைந்ததும் பெருமூச்சு விட்டு ‘வாறன் மக்கா…ஆஸ்டலிலே பாப்பம்லே’ என்றான்.

ஆங்கிலப்பேராசிரியர் மறுநாள் வகுப்புக்கு வந்ததும் ‘வெல் அவர் புட்டு இஸ் ஹியர்” என்று சொல்லி சிரித்தபடி கண்ணாடிக்காரர்களின் சிரிப்பை எதிர்பார்த்தார். அவர்கள் சிரிக்க ஆரம்பித்ததும் மற்றவர்களும் சிரித்தோம். பேராசிரியர் வகுப்பை கலகலப்பாக நடத்த மாரிமுத்துவை பயன்படுத்திக்கொண்டார். ‘கமான் மேன், வாட் யூ மீன் பை புட் இட் ஆஃப்?’

மாரிமுத்து எழுந்து நடுநடுங்கினான். கைகள் டெஸ்க்நுனியில் பற்றி அதிர்ந்தன. தொண்டைக்குழி ஏறி இறங்கியது. ஒரு கண் விசித்திரமாகச் சிமிட்ட தலை வெட்டுக்கிளி போல ஆடிக்கொண்டிருந்தது. முதல்வரிசை ஆரவாரம் செய்தது. பேராசிரியர் ‘”சைலன்ஸ் ப்ளீஸ் ‘ என அடக்கியபின் ‘கமான்’ என்றார்.

‘புட்டு மீன்…’

‘மை குட்னெஸ்…நவ் ஹி இஸ் ஈட்டிங் புட்டு வித் ஃபிஷ்!’

ஹரிஹரசுப்ரமணிய அய்யரும் ராஜப்பாவும் செல்வினும் கிட்டத்தட்ட எழுந்து பின்னால் திரும்பிப்பார்த்துச் சிரித்தார்கள். மாரிமுத்து தலைகுனிந்து நின்றான். அழக்கூடாது என அவன் தன்னை இறுக்கிக்கொள்வது தெரிந்தது. அவன் சட்டென்று வெறிகொண்டு கத்துவான் என்றும் ஒருவேளை அவன் இடுப்பில் பாளையரிவாளே இருக்கும் என்றும் கற்பனை செய்தேன்.

‘ஃபைன்..மிஸ்டர் புட்டு .ஸிட் டவுன்…ஓக்கே, வி கேன் ஸ்டார்ட் நவ்’’ பேராசிரியர் வகுப்புக்குத் திரும்பினார்.

அதன்பின் மாரிமுத்து கல்லூரி வட்டாரத்தில் புட்டு என்றே அழைக்கப்பட்டான். ஆசிரியர்களிடையே பரவி எல்லா ஆசிரியர்களும் அவனை புட்டு என்றார்கள். எங்களில் எவரேனும் புட்டு என்று சொன்னால் மாரிமுத்து வெறிகொண்டு அங்கே அப்போது அவன் கையில் என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு தாக்கவருவான். ஒருமுறை சதானந்தனும் அவனும் வேட்டிகள் உரிந்து விழ கட்டிப்புரண்டு சண்டையிட்டார்கள்.

ஆனால் இரண்டுமாதங்களுக்குள் தன்பெயர் புட்டு என்று மாரிமுத்துவே நடைமுறையில் ஒப்புக்கொண்டான். பாம்பே சர்க்கஸின் ஒரு புலிக்கு ஜண்டுபாம் என்று பெயரிட்டிருந்தார்கள். எப்படி அது ஒப்புக்கொண்டது என்று நினைத்ததுண்டு. ஆனால் பெயர்களை பிறர்தான் போட்டு நம் மீது சுமத்துகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.

விடுதியில் அலக்ஸாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கெட்டீர்ஸ் வாசித்துக்கொண்டிருந்தபோது மாரிமுத்து அருகே வந்து அமர்ந்து ‘லே இங்கிலீஸாலே?’ என்றான்.

‘ஆமா’

‘இம்பிடு பேஜையும் நீ வாசிப்பியா?’

‘ஆமா…இந்தா இது வரைக்கும் வாசிச்சாச்சு’

”பின்ன ஏன்ல நீ இங்கிலீசு பேசுகதில்ல?’

‘எனக்கு இங்கிலீஷ் தெரியும்லே..ஆனா வாயில வரல்ல பாத்துக்க’

‘வாயில வரல்லண்ணா?’

நான் ஒரே ஒருமுறைதான் கல்லூரியில் ஆங்கிலம் பேசினேன். மதன்குமாரிடம் ‘ஹூ இஸ் ஃபார் ஃபர்ஸ்ட் பீரியட்?’ என்று கேட்டேன். அவன் என்னை கண்ணாடிச்சில்லுவழியாக நோக்கி ‘வெல்ல்ல்… ’என இழுத்து ’உச் பீயியேட்?’ என்றான். திகைத்து நின்றபின் ‘அயாம் ஸாரி’ என்று சொன்னேன். ‘தட்ஸ் ஃபைன் யஹ்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். அதன்பின் ஒருவருடம் அவனை எங்கே கண்டாலும் பதுங்கிக்கொள்வேன்.

மாரிமுத்து கொஞ்சம் அந்தரங்கமாக “ இங்கிலீசு வாயில வர என்னல செய்யணும்?’ என்றான்.

உன் அப்பனுக்கு பணம் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ”வீட்டில இங்கிலீசு பேசணும்…’ என்றேன்.

‘வீட்டிலயா?‘ என்றபின் சிரித்து ‘எங்க ஆயா நல்லா இங்கிலீஷ் பேசுவா…ஒருநாள் வீட்டுக்கு வா’ என்றான். ‘லே இவனுக பேசுத இங்கிலீசு நல்ல இங்கிலீசாலே?’

‘சிலரு நல்லா பேசுகானுக…ஆனா கன்யாகுமரிக்கு வாற இங்கிலீஷ்காரனுக வேறமாதிரி பேசுகானுக’ என்றேன்.

மாரிமுத்து ’அவனுக இங்கெ என்னத்துக்குலே வாறானுக? வெயிலுல நிண்ணு தோலு புண்ணாப்போவுதுல்லா?’ என்றான்.

‘லே அது அவனுகளுக்க தோலுக்க நெறமாக்கும்’

‘செவல நெறமா?’

‘ஆமா’’

‘லே செவலநெறத்திலயா மனுசன் இருப்பான்?’

‘ஆமாலே…அவனுக அதைத்தான் சாதியிலே கூடின நெறமுண்ணு நெனைக்கானுக’

‘அவனுக கூடின சாதிதானே? சாதிகூடின செவல பாசையில்லா பேசுகானுக?’

பனைமரங்கள் ஆரோக்கியமான எருமைக்கூட்டங்கள் போலத் தோன்றின ‘லே இதில கள்ளெடுப்பிகளா?’

‘இதெல்லாம் சர்க்காரு பனையாக்கும். கள்ளெடுத்தா நம்ம எல்லெடுத்துப்போடுவானுக’’

’பின்ன?’

”என்னலே பின்ன?’

‘இல்ல வேஸ்டுல்லா?;

‘அதிப்பம் காட்டிலே காட்டெருமை கெடக்கு. அதுக்கெல்லாம் பாலுகறந்துட்டா இருக்கானுவ?’

நான் அந்தக்கோணத்தில் யோசித்ததே இல்லை.

பனைமரங்களுக்கு அப்பால் வீடுகள் தெரிந்தன. ஆனால் அவற்றை வீடுகள் என ஒரு கணம் கழித்தே உணரமுடிந்தது. பனை ஓலைக்கூரைகள் போட்ட குட்டையான சிறிய குடிசைகள் அவை. அவற்றின்மீது செம்மண் படலம் மூடியிருந்ததனால் சிறிய குன்றுகள் என்றுதான் பட்டது. அங்கிருந்து நான்கு நாய்கள் ஓடிவந்தன. சின்ன நாய்கள். பெரிய காதுகளும் செம்மண்நிறமான உடலும் கண்ணாடிக்கற்கள் போன்ற கண்களும் கொண்டவை. சில்லென்ற சத்தம். சள் சள் சள் என்று.

அவை மாரிமுத்துவை அடையாளம் கண்டுகொண்டன. ஒன்று என்னைப்பார்த்து உர்ர்ர் என்றது. மாரிமுத்து ‘ம்ம்’ என்றதும் அவனைநோக்கித்திரும்பி வாலை ஆட்டியது. நான்கு நாய்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு நடனமிட்டன. ஒருநாய் அவன் முன்னால் சென்று பக்கவாட்டில் நின்று வாலை ஆட்டியபடி நடுங்கியது.

‘இங்க மொத்தம் பத்து வீடாக்கும்’ என்றான் மாரிமுத்து. ”எல்லாம் நம்ம சொக்காரனுகளும் அருவக்காரனுகளும்….ராப்பகலா சண்டைதான்’

மாரிமுத்துவின் வீட்டில் யாருமே இல்லை. வீட்டுக்கு பனைமட்டையால் படல்செய்து கதவு அமைத்திருந்தார்கள். அதை கயிறால் கட்டிவைத்திருந்தது. அவன் அதைத்திறந்து உள்ளே சென்றான். சிறிய சதுர வடிவ அறைக்குள் ஒரு ஓரத்தில் பனம்பாய்கள் சாய்க்கப்பட்டிருந்தன. அடுக்கடுக்காக பானைகள் நின்றன. ஒரே ஒரு லாந்தர் விளக்கு. வேறு எதுவுமே இல்லை.

‘பைய இங்க வச்சுக்கோ’ என்றான்.

‘இங்க யாருமில்லியா?’

‘காட்டுக்குப்போயிருப்பாவ…. அந்திவெட்டு உண்டுல்லா?’

எந்த வீட்டிலும் ஆளில்லை. அக்கானிகாய்ச்சும் பெரிய தகர டின்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. பனைமட்டைகள் குவிக்கப்பட்டிருந்தன. அருகே சாம்பல் அணைந்த கல்லடுப்புகள்.

மாரிமுத்து உள்ளிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். தகரப்பாத்திரத்தில் ஒரு செம்பு தண்ணீர். ‘இங்க தண்ணி கொஞ்சம் தட்டுப்பாடாக்கும். கொஞ்சமா குடிச்சுக்க” என்றான்.

’முகம் களுவ?’

‘உனக்க முகத்தில என்ன காக்கா பேண்டுச்சா? இப்பம் என்னத்துக்கு களுவுதே?’

அதுவும் சரிதான். தண்ணீரைக்குடித்தேன். தண்ணீர் மிகக் கனமாக இருந்தது. இரும்பை நக்கியதுபோன்ற ஒரு நாக்கூசல்.

‘இங்க உள்ள தண்ணியிலே கரண்டுசத்து உண்டும்…குடிச்சா தொண்டையிலே குளிரு நிக்கும்’ என்றான் மாரிமுத்து.

அவன் சட்டையைக் கழற்றிவிட்டு அங்கே கிடந்த விறகுகளை எடுத்து அடுக்கினான்.

பனைமரங்கள் நடுவே ஒரு பெரிய சாம்பல்நிற நாய் நடந்துவருவதைக் கண்டேன். தனியாக தலையைத் தொங்கப்போட்டபடி வந்தது. நீளமான நாய். வால் பின்பக்கம் கிடையாக நீட்டபப்ட்டிருந்தது. ஒட்டிய வயிறு, நீளமான கால்கள். தலை கனத்து நீண்டு தெரிந்தது. சிறிய மடிந்த காதுகள். அருகே இன்னொரு அதே வகை நாய்.

‘லே மாரி அதென்னலே நாய்?’

‘அது காரியும் கறுப்பனும்…அப்பனுக்க நாய்களாக்கும்…அப்பன் வாறாரு”

“அது என்ன நாய்?’

’கோம்பை…நீ பாத்ததே இல்லியா?’

’இல்லல”

இருநாய்களும் தொங்கிய தலையுடன் வீட்டை நெருங்கின. பின்பக்கம் மாரியின் அப்பா தோளில் காவடிபோல முருக்குத்தடியை வைத்து அதன் இருபக்கமும் தகரபீப்பாய்களை தொங்கவிட்டுக்கொண்டு பக்கவாட்டில் உடல்திருப்பி சிறிய ஓட்டமாக வந்தார். அவருக்குப்பின்னால் அவன் அம்மா பெரிய விறகுச்சுமையுடன் வந்தாள்.

நாய்கள் வந்தபோது நான்கு செவலைகளும் அவற்றை நோக்கி ஓடின. செல்லமாகக் குரைத்தபடி அவற்றின் மோவாயை முகர்ந்து வாயோரமாக நக்கின. ஆனால் கோம்பைகள் செவலைகளை பொருட்படுத்தவேயில்லை. செவலைகள் பின்னால் வந்துகொண்டிருந்தவர்களை நோக்கி ஓடின.

கோம்பைகள் பேசாமல் வந்து ஓர் உடைந்த பானையில் வைக்கப்பட்டிருந்த நீரை ளக் ளக் ளக் என்று குடித்தன. மோவாயில் நீர்வழிய ஓரமாகச்சென்று அமர்ந்துகொண்டன. என்னை அவை பொருட்டாக நினைக்கவில்லை. அவை அருகே வந்ததும் பயத்துடன் எழுந்து குடிசைவாசலில் நின்ற நான் அவை திரும்பிக்கூட பார்க்கவில்லை என்பதைக் கண்டு திரும்பவந்தேன்.

மாரியின் அப்பா நெருங்கி வந்தார். அவரது மூச்சொலிகூட கேட்கவில்லை. நிழல் வருவதுபோல அவ்வளவு சத்தமில்லாமல் வந்து அந்த இரு பீப்பாய்களையும் இறக்கிவைத்தார். இரண்டிலும் அந்திச்செத்து அக்கானி பூச்சிகள் மிதக்க வெண்கலங்கலாக நுரைத்து நின்றது. சுண்ணாம்புவீச்சம் வந்தது. மாரியின் அம்மா பின்னால் வந்து விறகை போட்டுவிட்டு “ஆருலே மாரி?’ என்றாள்.

‘கூட்டுகாரனாக்கும்’

‘ஓ’ அவள் என்னை நெருங்கி ‘வாங்க தம்பி’ என்றாள். மாரியின் அம்மா அவ்வளவு இளமையாக இருப்பாள் என எதிர்பார்க்கவில்லை. என்னைவிட அரையடி உயரம் குறைவு. பனைமரத்தின் நிறம். மெலிந்த தோள்கள். கரிய நரம்போடிய கைகள்.

மாரியின் அப்பா முருக்குத்தடி கிடுக்குபெட்டி சுண்ணாம்புபெட்டி எல்லாவற்றையும் குடிசையின் எரவாணத்தில் தொங்கிய கயிற்றில் மாட்டினார். முற்றத்தில் வந்து இடுப்பிலிருந்த துண்டைக்கழற்றி சத்தமாக ஏழெட்டுமுறை உதறினார். அழுக்கான கோவணம் மட்டும் உடுத்திருந்தார். உடலெங்கும் கரிய மயிர். துண்டை முறுக்கி உடம்பை உரசி உரசித் துடைத்தார். முதுகுவழியாகப்போட்டு இழுத்தார். அதுதான் அவரது குளியல் என ஊகித்தேன்.

அதன்பின் அருகே சாய்க்கப்பட்டிருந்த நார்க்கட்டிலை எடுத்து முற்றத்தில் போட்டுக்கொண்டார். அது அவரே பனைமரப்பிளாச்சுகளை பனைநாரால் கட்டி செய்தது என தெரிந்தது. அதில் கால்களை ஏற்றிவைத்து அமர்ந்துகொண்டு பாளைஅரிவாளால் தன் காலைச் செதுக்க ஆரம்பித்தார். மரத்தைச் செதுக்கித்தள்ளுவதுபோல குதிகாலை செதுக்கி வீசினார். செருப்பு போடாமல் இந்த முள்காட்டில் நடப்பதற்கான கால்கள்.

மாரியின் அம்மா வீட்டுக்குள் சென்று சட்டிகள் பானைகளை எடுத்துக்கொண்டு சென்று அடுப்பருகே வைத்தாள்.

‘சொல்லிட்டு வரப்பிடாதா மக்கா? முசலு பிடிக்கச்சொல்லியிருப்பேனே…’

’சட்டுண்ணு தோணி வந்தேன்’ என்றான் மாரி.

மாரியின் அப்பா பாளை அரிவாளை வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து வானத்தை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பால் மேலும் பலர் பனையேறிவிட்டு திரும்புவது தெரிந்தது. ஒரு கிழவி நன்றாகக் குனிந்து கூன்முதுகின்மீது விறகுடன் வந்துகொண்டிருந்தாள். அவள் மாரியின் வீட்டுக்கு முன்வந்து விறகைப்போட்டுவிட்டு என்னிடம் ‘ஆருலே?’ என்று கண்மேல் கை வைத்து கேட்டாள்.

‘ஆயா, நாகருகோயிலுகாரனாக்கும். நம்ம கூட்டாளி’

‘ஓ..; என்றாள் கிழவி.

‘எனக்க அப்பனுக்க அம்மை’ என்றான் மாரி. ‘வயசு எம்பது தாண்டியாச்சு’

‘வாற சித்திரைக்கு எம்பத்தேளு’ என்றாள் ஆயாள். ‘இந்தப்பனையெல்லாம் நாம்பாத்து வளந்ததுல்லா? எங்க ஒடையோனுக்க கையப்பிடிச்சு இங்கிண வந்தப்ப இதெல்லாம் செம்மண்ணுத்தேரி…. தெனம் காலம்பற பனங்கொட்ட பொறுக்கி செம்மண்ணிலே நட்டு நட்டு வைப்போம்….’

அன்றைக்கு அங்கே அவர்களுடைய ஒரே ஒரு குடிசைதான். அன்றைக்கு தேரிக்காட்டில் பனை குத்தகைக்கு எடுக்கமுடியும். கருப்பட்டியாக்கி சந்தைக்கு கொண்டுபோய்விற்று வாழ்க்கை. தன்னந்தனியாக பனங்காட்டில் வாசம்.

‘ நான் பனமூட்டு எசக்கி மாதிரியாக்கும் பிள்ள’ என்றாள் ஆயாள். ”பாளயருவா இருக்குறப்ப நமக்கென்ன பயம்?’

ஆயாள் என்னிடம் என்னுடைய குடும்பம் பற்றி விரிவாக விசாரித்தறிந்தாள். சாராயம் குடிப்பது தவறு என அறிவுறுத்தினாள்.

’நான் குடிக்கியதில்ல ஆயா”.

ஆயாள் ’பிள்ள வந்திருக்கு… நேரம்காலத்துக்கு ஒரு கஞ்சிய காச்சுதாளா பாரு… நிண்ணு சில்ப்பட்டமுல்லா காட்டுதா தட்டுவாணி நாயி’ என்று மருமகளை கண்டித்துவிட்டு குனிந்துகொண்டு உள்ளே சென்றாள்.

‘ஆமா…இங்கிண அவுத்துப்போட்டு ஆடுதாவ…காத அறுத்து நாய்க்குப்போட்டிருவேன்…அறுவாணி’ என்று மிக மெல்ல முணுமுணுத்தாள் மாரியின் அம்மா.

பத்து குடிசைகளுக்கும் ஆள்வந்துவிட்டதை கண்டேன். எல்லா கொல்லைகளிலும் அடுப்புகள் எரிய ஆரம்பித்தன. பனைமண்டைகளுக்கு அப்பால் சிவந்து தெரிந்த வானம் அணைந்தபோது தழலின் வெளிச்சம் அதிகரித்தது.

பத்துவீடுகளில் மனிதர்கள் வாழும் சத்தமே இல்லை. ஓரிரு பேச்சுகள், சில முணுமுணுப்புகள். அனேகமாக எல்லா ஆண்களும் நார்க்கட்டில்களை தூக்கி முற்றத்தில்போட்டுக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சிலர் பீடிபிடித்தார்கள். அவர்களின் முகங்கள் அந்த செவ்வெளிச்சத்துளிக்கு அப்பால் மெலிதாக எழுந்து அணைந்துகொண்டிருந்தன. கைக்குழந்தைகள் இரண்டுமூன்று முற்றத்தில் விளையாடின. இளம்பெண்கள் சிலர் நடமாடினார்கள்.

ஆயாள் வெளியே வந்தாள். என்னிடம் ஒரு பெரிய பொருவிளங்காயை தந்து ‘தின்னு மக்கா’ என்றாள்.

’அய்யய்ய என்ன அத வந்தவருக்கு குடுக்கே? தம்பி அது வேண்டாம்…கஞ்சி இந்நாண்ணு கொதிச்சிரும்’ என்றாள் மாரியின் அம்மா.

‘என்னது ?’என்றேன்

‘லே இது ஈசலாக்கும்…பனங்கா தவுண கருப்பட்டி போட்டு இடிச்சு சேத்திருக்கு’ மாரி சொன்னான்.

முகர்ந்துபார்த்தேன். வசீகரமான மணமாக இருந்தது. ‘ நான் தின்னுதேன்’ என்றேன்.

‘முன்ன தின்னிருக்கியளா தம்பி?’

‘ஆமா’ என்று பொய் சொன்னேன். ஆனால் அவர்கள் கற்பனைகூட செய்யமுடியாதவற்றை எல்லாம் எங்களூர் காட்டில் தின்றுபார்த்தவன் நான்.

அதை முதலில் கொஞ்சம் தயங்கித்தான் கடித்தேன். பிறகு விரும்பிச் சாப்பிட்டேன். நல்லெண்ணையும் தேங்காயும் கலந்ததுபோல இருந்தது. மழைக்காலம் எழுந்ததும் தேரிக்காடே ஈசலால் மூழ்கிவிடும். ஈசல் மேகம். ஈசல் மழை. ஈசல்புயல். சாலையில்செல்லும் பேருந்துகள் முன்னகர முடியாது. அப்போது விளக்கு கொளுத்தி வைத்து வலைபோட்டு ஈசலைப்பிடிப்பார்கள். சிறகுகளை உதிர்த்து நன்றாகவெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்வார்கள். பனங்கொட்டைக்குள் உள்ள வெண்பருப்பை துருவி அதனுடன் வறுத்த கேப்பையைச் சேர்த்து இடித்த மாவை பனைவெல்லத்துருவல் சேர்த்து உருட்டி பானையில் சேமித்தால் வருடம் முழுக்க உணவாகும்.

‘பிடிச்சிருக்காலே?’

‘ஆமா’ என்றேன்.

‘இன்னொண்ணு திங்குதியா?’

‘ஓ’

இன்னொன்றைத் தின்றுகொண்டிருந்தேன். ஆயாள் ‘பளங்காலத்திலே எட்டுருண்டயும் ஈட்டியும் இருந்தா யுத்தம் ஜெயிச்சுப்போடலாம்ணு பேச்சு’ என்றாள்.

அக்காலத்தில் போர்வீரர்களுக்கு அதுதான் ரேஷன் ஒரு உருண்டை ஒருநாள் உணவு. மடியில் கட்டிக்கொண்டு போருக்குச் செல்வார்களாம்.

கஞ்சி தயாராகியது. சுட்ட கருவாட்டுடன் அதைச் சாப்பிட்டோம். மாரியின் அப்பா அதே கட்டிலில் அப்படியே அமர்ந்து கஞ்சியை குடித்தார். மாரி பக்கத்துவீட்டுக்குச் சென்று ஒரு நார்க்கட்டில் இரவல் வாங்கி வந்தான். அதை வீட்டின் மறுபக்கம் போட்டுக்கொண்டோம்.

அங்கிருந்து பார்க்கையில் இரு கோம்பைநாய்களும் மாரியின் அப்பாவும் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டேன். செவலைகள் செம்மண்ணில் பறித்த குழிகளில் சுருண்டு தூங்கிவிட்டன.

’அப்பா ஏன் எங்கிட்ட பேசல்ல?’ என்றேன்.

‘அவரு பேச மாட்டாரு’

‘ஏன்?’

‘இங்க எல்லாரும் அப்பிடித்தான். பேச்சு கொறைவு….’ என்றான் மாரி சுருக்கமாக.

அதற்குமேல் அதை விளக்கமுடியாது என்று எனக்கும்பட்டது.

”அப்பன் கோவக்காரராக்கும்… எப்பம் அடிப்பாருண்ணு தெரியாது..பாளையருவாளால ஒருத்தன வவுந்திருக்காரு’

‘பிறவு?

‘ஆளு சொக்காரன்தான்…நாலுவருசம் பாளையங்கோட்ட பாத்துட்டு வந்தாரு… ’

நான் கோம்பையைப் பார்த்தேன். இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் அவற்றுக்குள் சரியான செய்தித்தொடர்பும் இருந்தது.

‘இந்த கோம்பைநாய் நம்மூர்லே வளருமா?’

’அங்க என்னத்துக்கு? இது வேட்டைநாய்லா?’

கோம்பைநாய் கடிக்கவே கடிக்காது என்றான் மாரி. குரைக்கவும் செய்யாது. வீட்டுக்காவலுக்கு கொஞ்சம்கூட உதவாது. முயல்வேட்டைக்கான நாய் அது. அதை தேரிக்காட்டில் வளர்ப்பது பாம்புபயத்தால்தான்.

‘இங்க பாம்பு உண்டா?’ என்று காலை மேலே தூக்கினேன்.

‘பெரும்பாம்புகூட உண்டு….சத்தம்போடாம வரும்…எட்டடி மூர்க்கன்னு ஒரு பாம்பு உண்டு. ஆனையைக்கொல்லுத வெஷமாக்கும்’

‘கோம்பை பாம்பை பிடிக்குமா?’

‘பின்ன? நூறு எரநூறடி தூரத்திலே வந்தாலே மோப்பம் பிடிச்சுப்போடும். ஒருநாய் நேரா போய் முன்னால நிக்கும். பாம்பு அதைப்பாக்குறப்ப மத்தநாய் சங்கப்புடிச்சிரும்.”

எழுந்து கோம்பைகளைப் பார்த்தேன். நாய்களா நாய்ப்பொம்மைகளா என்று ஐயம் வரும்.

மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தையே பார்த்தேன். பனைமண்டைகள் நடுவே அரைவட்டமான சாம்பல்நிற வெளி. பனையோலைகள் அசைய மென்மையான காற்று. அப்பால் என்னென்னவோ பறவைகள் ஏதேதோ ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. டுப்டுப்டுப் என்று பனைமரத்தில் பனைமட்டையால் அடிப்பதுபோலக்கூட ஒரு பறவை ஒலியெழுப்பியது.

மறுநாள் விழிக்கும்போது என் மீது மெல்லியபடலமாக செம்மண் பரவியிருந்தது. எழுந்து உடலை உதறியபோது சுத்தமாக மண் உதிர்ந்தும் விட்டது. ஆனால் வாயில் மண் இருந்துகொண்டே இருந்தது. பல்லை சேர்த்தபோதெல்லாம் நரநரவென்று மண் கடிபட்டது. துப்பிக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பிராந்தியத்தில் நான்கு செவலை நாய்களும் நானும் தவிர எவருமே இல்லை. செவலைகள் என்னை நோக்கி கள்!கள்!கள்! என்று குரைத்தன. பின்னர் ஒருநாய் ஐயத்துடன் வந்து முகர்ந்து பார்த்தது. ஒருமாதிரி பரதேசித்தனமான மூக்கு. ஓங்கி அள்ளையில் ஓர் உதை விடலாமா என நினைக்கச்செய்யும் நெளிவுகுழைவு.

கட்டிலிலேயே அமர்ந்திருந்தேன். அத்தனைபேரும் விடியற்காலையில் எழுந்து தேரிக்காட்டுக்குள் பனைஏறவும் விறகு பொறுக்கவும் கிளம்பிவிட்டிருக்கிறார்கள் போல. வீட்டுக்குள் ஒரு பனைநார்பெட்டி மூடி வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்தேன். உள்ளே இரண்டு ஈசலுருண்டைகள். ஒரு அலுமினியச்செம்பில் ஆறிப்போன கருப்பட்டிக் காப்பி.

அதைச்சூடுபண்ணி குடித்து உருண்டைகளைத் தின்றேன். பனைமரக்காட்டுக்குள் கொஞ்சதூரம் சென்றேன். செவலைகள் கூடவே வந்தன. எதைப்பார்த்தாலும் கள்கள்கள். போ போ என்று துரத்தினேன். கையைத் தூக்கியதை ஒருவகை விளையாட்டு என்று கொண்டு எம்பிக்குதித்தன.

கொஞ்சதூரம் சென்றபோது வழிதவறினால் என்ன செய்வதென்ற ஐயம் எழுந்தது. தேரிக்காட்டில் குடிக்கத்தண்ணீர் இல்லாமல் பல்லிபோல சப்பி பாடமாக கிடப்பதைப்பற்றி கற்பனை வந்ததுமே திரும்பிவந்து அமர்ந்துகொண்டேன். அந்தச் செவலை நாய்களை பிடித்து வாயைக்கட்டி எங்காவது போடவேண்டும்போலிருந்தது. ஒரே மாதிரி கள்கள்கள். ஒருநாய் கொஞ்சம் சமனப்பட்டதும் அடுத்தற்கு கடமையுணர்ச்சி பீறிட்டுவிடும்.

நாய்கள் குரைத்தபடி ஓடின. கூடவே வாலையும் சுழற்றின. எழுந்துபார்த்தபோது சைக்கிளில் இருவர் வருவது தெரிந்தது. ஒருவர் காக்கிச் சீருடை அணிந்திருந்தார். சைக்கிள்கள் மிகமெல்ல மண்ணில் புதைந்துதான் வந்தன. சிலகணங்கள் அவை அப்படியே நிற்பதுபோல இருந்தது.

சைக்கிளை சீருடைக்காரர் நிலை போடும்போது மற்றவர் அப்படியே சாய்த்துவிட்டு என்னை நோக்கி வந்தார். நாய்கள் கூட்டமாக குரல்கொடுத்தபடி அவரை நோக்கி ஓட அவர் பின்னடைந்தார். சைக்கிளை நிறுத்தியவர் கீழே கிடந்த கல் ஒன்றை எடுக்க நான்கு நாய்களும் ஊளை போட்டுக்குரைத்தபடி என்னை நோக்கி வந்து எனக்குப்பின்னால் நின்றபடி எம்பிக்குதித்து ஆக்ரோஷமாக குரைக்க ஆரம்பித்தன. ஊளையும் உறுமல்களும் கலந்த குரைப்பு. ஏதோ குழறிக்குழறிச் சொல்வதுபோல, மன்றாடுவதுபோல. கூடவே அதட்டலும் எச்சரிக்கையும் வசைகளும் கலந்ததுபோல.

செவி அடைத்தது. திரும்பி அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவற்றை துரத்தினேன். சிதறி ஓடி நாலா பக்கமும் நின்று மேலும் உக்கிரமாகக் குரைத்தன. சீருடைக்காரர் கையில் கல்லுடன் வர, மற்றவர் அருகே வந்து “ஆருவே வீட்டில?’ என்றார்.

’இங்க இப்ப ஆளில்ல’ என்றேன்.

‘நீரு ஆருவே?’

‘நான் வெளியூரு’

‘இங்கென்ன செய்யுதீரு?’

‘சும்மா… இங்க ஃப்ரண்டப்பாக்க வந்தேன்’

‘இது சர்க்காரு எடமாக்கும் தெரியும்ல?’ அவர் அரசதிகாரி என ஊகித்திருந்தேன் ‘…இது ஃபாரஸ்டு நெலமாக்கும்’

‘இல்ல’ என்றேன். ’இங்க என் ஃப்ரண்டு மாரி…’ என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘ம்ம் ம்ம் …எடத்தக்காலிபண்ணும்…இங்கெல்லாம் வரப்பிடாது’

‘ஃப்ரண்டு இப்ப வந்திருவான்’

‘எங்க போயிருக்காவ?’ என்றார் சீருடைக்காரர். அவரது மேல்வரிசைப்பற்கள் நீட்டி நின்றன. கொஞ்சம் இதமான ஆள் என்று தோன்றியது.

‘எனக்கு ஒண்ணும் தெரியாது… இப்பதான் எந்திரிச்சேன்…” இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று தோன்றியது.

‘அந்த நாயிங்கள தொரத்தும்வே…செவியடைச்சுல்லா போவுது’ என்று அந்த அதிகாரி என்னை அதட்டினார்.

‘போ…ஏ போ’ என்று குச்சியை சுழற்றினேன். இன்னும் ஓசை அதிகரித்தது.

மறுபக்கம் அக்கானிடப்பாக்களை காவடியாகக் கட்டியபடி இரண்டுபேர் வந்தார்கள். வெள்ளைச்சட்டைக்காரரைப் பார்த்ததும் ஒருவர் சுமையை தரையில் வைத்து அங்கேயே நின்றுவிட்டார். ஒருவர் கொஞ்சதூரம் வந்து டப்பாக்களை வைத்துவிட்டு தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து முகம்துடைத்தபடி அருகே வந்தார்.

‘நீரு இங்க இருக்கேரா வே?’

‘ஆமா’

‘உமக்க பேரு என்னவே?’

‘அணஞ்சபெருமாளு..’ அவர் அதிகாரியின் பார்வையைச் சந்திப்பதை தவிர்த்தார்.

‘இது ஃபாரஸ்டு எடமாக்கும்….இங்க இருக்கிறது சட்டவிரோதம்…தெரியும்ல?’

அவர் ஓரக்கண்ணால் தொலைவில் நிற்பவரைப் பார்த்தார்.

‘குடிலுகிடிலு ஒண்ணும் இங்க இருக்கப்பிடாது….மனசிலாச்சா?’

தூரத்தில் நின்றவர் வேகமாக அருகே வந்தார். அவரால் பேச முடியவில்லை. கையை பலமாக ஆட்டி விக்கி விக்கி ”அது …இஞ்ச இது நாங்க குடிகெடக்குத எடமாக்கும்….பத்துநாப்பது வருசமா….நாங்க…ரூலு இருக்கு நாங்க’ என்றார்.

‘ரூலு பேசுதீரா வே? நேத்து காட்டுல தீயப்பத்தவச்சது நீருல்லாவே?’

‘இல்ல இல்ல’ என்றார் அவர்.

‘நீருண்ணு சொல்லுதேன்…கோர்ட்டுல வந்து இல்லேண்ணு சொல்லும்…ரூலா வே பேசுதீரு? வே ரூலுண்ணா என்னாண்ணு தெரியுமாவே? வே, சுயம்பு கேட்டேரா வே ரூலுபேசுதான் காட்டான்…ரூலு பேசுவோமா வே? பேசுமா வே?”

நான் மெல்ல பின்னகர்ந்து எனக்குச் சம்பந்தமில்லாதது போல குடிசைவாசலை அடைந்து நின்றேன். நாய்கள் என்னைச்சூழ்ந்து நின்று குரைத்தன. அவர் அந்த அளவுக்கு கோபம் கொண்டு சமநிலை இழக்க நாய்களின் நிறுத்தாத குரைப்பும் காரணம் என்று தோன்றியது.

தொலைவில் அக்கானி டப்பாக்களை தோளில் காவடி கட்டி தூக்கியபடி மாரி வருவதைக் கண்டேன். அவன் அங்கிருந்தே கவனித்துவிட்டான். நாய்கள் அவனை நோக்கி ஓடின. அவன் அவற்றை நோக்கி ஏதோ சொல்ல அவை அமைதியாகி வாலாட்டியபடியும் துள்ளிக்குதித்தபடியும் வழிமறித்து குழைந்தபடியும் வந்தன.

மாரி அருகே வந்தான். தலையில் கட்டிய துண்டை எடுத்து அக்குளைத் துடைத்தபடி “.வாட் இஸ் ஹியர் தி பிராப்ளம்?’ என்றான்.

அதிகாரி அரைக்கணம் தடுமாறிவிட்டார். அவர் பார்வை என்னை வந்து தொட்டுச்சென்றது. ‘ஹூ ஆர் யூ?”

‘திஸ் இஸ் அவுர் லேண்ட். ஹூ ஆர் யூ? ப்ளீஸ் டெல் மீ’

அதிகாரி ‘அயம் ஃபாரஸ்டு ஆபீசர்’ என்றார். ’சீனியர்’ என்று சேர்த்துக்கொண்டார்.

‘ஐயம் மாரிமுத்து…ஐயம் ஸ்டடியிங் நாகர்கோயில். கையிலே பேப்பர் என்னமாம் இருக்காவே?’

‘என்ன பேப்பர்?’

‘எங்க கையிலே சொசைட்டி பேப்பர் இருக்கு…இது நாங்க சட்டபூர்வமா குடிகெடக்குத மண்ணாக்கும்.’

‘இது சர்க்காரு லேண்டு’

‘அதுக்குண்டான பேப்பரோட வாரும்…சும்மா ஆளில்லாதப்ப வீட்டுக்குள்ள ஏறி பைசாவ எடுத்தீருண்ணு சொன்னா கம்பி எண்ணுவீரு’

’ஆருலே பைசாவ எடுத்தது? லே’ .

’பி கேர் ஃபுள் டாக்’ என்றான் மாரி கறாராக. ‘இவன் எனக்க ஃப்ரண்டாக்கும். நாகர்கோயிலிலே எனக்க கூட படிக்கான். இவனாக்கும் சாட்சி’

‘வே சுயம்பு வாரும்வே…இவனுகளிட்ட நமக்கென்ன பேச்சு?’அதிகாரி சட்டென்று திரும்பி நடந்தார். ‘’படிச்ச திமிருலே ஆடுதானுக…ரூலு என்னாண்ணு நாம காட்டிக்குடுப்பம்வே”:

‘பேச்சு வேண்டாம்னுதான் சொல்லுதேன்….இனிமே கேறி வந்தேருண்ணு சொன்னா பொம்புள கேஸாக்கும்…’’ மாரி பின்னால் கூவிச்சொன்னான்.

அதிகாரி ஒன்றும் பேசாமல் சைக்கிள் பக்கம் சென்றுவிட்டார். சுயம்பு, மாரியைப்பார்த்து ரகசியமாகப் புன்னகை செய்துவிட்டு அவர் பின்னால் சென்றார்.

அவர்கள் சைக்கிளில் ஏறிச் செல்வதை மாரி சிலநிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தான். திரும்பி என்னிடம் ‘முப்பத்தாறு வருசம் கைவசம் வச்சிருந்த அவகாசத்துக்கு எல்லா பத்திரமும் இருக்கு….வாறானுக’ என்றான்.

விக்கிப்பேசியவர் ‘அப்பன் எங்க பிள்ள?’ என்றார் பிரியமாக.

‘வாறாரு’ என்றபின் மாரி என்னிடம் ’லே அப்பன் உனக்கு முசல் பிடிக்கவாக்கும் போயிருக்காரு….” என்றான்.

புறப்பாடு1

புறப்பாடு 2

புறப்பாடு 3

புறப்பாடு 4

புறப்பாடு 5

புறப்பாடு 6

புறப்பாடு 7

புறப்பாடு 8

புறப்பாடு 9

முந்தைய கட்டுரைபுறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது
அடுத்த கட்டுரைஃபுகோகா ஒரு கடிதம்