சங்குக்குள் கடல்- கடிதங்கள்

அன்புள்ள ஜே எம்
இப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் உடன் படுகிறேன். உங்கள் நீலிதான் எங்கள் குல இசக்கி.

மேலும் தேசியம், தேசியப்பிரக்ஞை வேறுபாடு பற்றிய கருத்தும் நன்று.

சிவா சக்திவேல்

அன்புள்ள சிவா

நன்றி.

ஒரு உள்ளார்ந்த உணர்வுக்கும் அவ்வுணர்வால் உருவாக்கப்படும் அமைப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்த உணர்வு ஒரு இலட்சியம். அவ்வமைப்பு யதார்த்தம் . யதார்த்தத்தின் எல்லைகளைக்கொண்டு இலட்சியத்தை சுருக்கிவிடமுடியாது

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்கள் திருப்பூர் உரையை மற்றுமொரு முறை வாசித்தேன்.

மிகவும் அழுத்தமாக இந்தியப்பெருவெளியின் ஓரிருப்பைப்பதிவு செய்துள்ளீர்கள்.பண்டைக்காலத்திலிருந்து பண்பாட்டாலும், சிந்தனைகளாலும் ஒன்றுபட்ட ஓர்தேசம் ஆங்கிலேயர்களால் பஞ்சத்தாலும் ஒன்று பட்டோம்.
பாரதியின் தேசிய ஒற்றுமைப்பாடல்களைச் சான்றோடு விளக்குக என்று கேள்வி கேட்டிருந்தால் நானெல்லாம் முன்னமே தமிழில் தேறியிருக்க மாட்டேன். இனி சுகம் தான். இந்த உரையை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டால் போதும், பல்கலை வரை பட்டம் நிச்சயம்.

அனாவசிய முகஸ்துதியை இத்தோடு நிறுத்தி இந்த உரையின் பொருளில் ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன். வேறெந்த நாடும் போலல்லாது, மிகவும் பலதரப்பட்ட அன்னிய அலைகளை இந்த நாட்டின் கரைகள் கை விரித்து வரவேற்றுக்கொண்டது. அந்த அலையின் நீர்த்துகள்களை இது எப்படி தன்னைப்போலவே மாற்றியது? அதெப்படி ஒரு இஸ்லாமியரும் கிறித்தவரும் இது என் நாடு என்று ஆசுவாசம் கொள்ள முடிந்தது? இத்தனைக்கும் ஆதாயம் பார்த்து அவர்களை இந்த நாடு அழைக்கவுமில்லை, தகுதி பார்த்து சிலரை வெளியேற்றவுமில்லை. கடலில் கரைந்த உப்பைப்போல தன் குருதியோடு (டீ.என்.ஏ என்று எழுத ஆசை) கரைத்துக்கொண்ட மாயம் தானென்ன? இதத்தனையும் ஏதோ நேருவும் காந்தியும் மாத்திரம் செய்த செயல் அல்ல என்று எனக்குத்தோன்றுகிறது. பல முறை நீங்கள் எழுதி இருப்பினும் இந்த மதச்சார்பற்ற தன்மை இந்த தேசத்துக்கு வந்த விதத்தை சொன்னால் நன்றாயிருக்கும்.

அன்புடன் ஜெய்கனேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இந்தியாவில் எல்லாக்காலத்திலுமே ஒரு மதச்சார்பற்ற தன்மை இருந்துள்ளது. மூன்று மாபெரும் மதங்கள் இணைந்து இருந்த இந்நிலத்தில் மதப்போர்கள் நிகழ்ந்ததில்லை. உதிரி மதப்பூசல்கள் கூட மிக அபூர்வம். இங்குள்ள மன்னர்கள் அனேகமாக அனைவருமே எல்லா மதங்களையும் பேணியிருக்கிறார்கள். சமண பௌத்தப் பள்ளிகளைக் கட்டிய இந்துமன்னர்களை இந்து ஆலயங்களுக்கு நிதியளித்த பௌத்த சமண மன்னர்களை நாம் தொடர்ந்து காண்கிறோம். கடைசியாக தமிழகத்தை ஆண்ட நாயக்க அரசர்கள் வரை அம்மரபு தொடர்கிறது. வைணவர்களான அவர்கள் பௌத்தப்பள்ளிக்களுக்கு நிதியளித்திருக்கிறார்கள். சமணக்கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். தெந்திருவிதாங்கூரின் எல்லா பழைய கிறித்தவதேவாலயங்களும் இஸ்லாமிய பள்ளிகளும் மன்னர் அன்பளிப்பாகக் கொடுத்த நிலத்தில் உருவானவை

அந்தமரபுதான் தொடர்கிறது

ஜெ

அன்பு ஜெயமோகன்,

“சங்குக்குள் கடல்” என்றும், “பண்பாட்டுப் படலம்” என்றும் நீங்களே குறுக்கியுரைத்த உண்மையை விரித்துரைத்துருக்கிறீர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்ந்து பரந்து விரிந்து கிளைத்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றை அகழ்ந்து குவித்திருக்கிறீர்கள். ஆங்கிலேயர் இந்தியாவை ஓர் ஆள்புலமாக மாற்றுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே “இந்தியா” என்னும் “பண்பாட்டுப் படலம்” மேலோங்கிய வரலாற்றுக்கு Herodotus (கி.மு.484–425), அலெக்சாந்தர் (கி.மு. 356–323), Fa-Hien (399–414), Marco Polo (1254-1324) முதலியோர் சான்று பகர்கிறார்களே!

மணி வேலுப்பிள்ளை

அன்புள்ள மணிவேலுப்பிள்ளை

ஆம், அன்னியர்களின் குறிப்புகளில் இந்தியாவின் நில எல்லை தெளிவாகவே உள்ளது. யுவான்சுவாங்கோ பாகியானோ கூட தனித்தனி நாடுகளுக்கு வரவில்லை. இந்தியாவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். நிர்வாகரீதியாக இந்தியா பிரிட்டிஷாரால் திரட்டப்பட்டது. ஆனால் இந்தியாவை அப்படி தன் குடைக்கீழ் ஆளவேண்டுமென்ற கனவில்லாத இந்திய மன்னரே இருந்ததில்லை. எல்லா மன்னர்களும் இமயம்முதல் குமரிவரை ஆளவே ஆசைப்பட்டனர். தமிழ்ப்பாடல்கள் தமிழ் மன்னர்களை இமையம் வென்றவர்கள் என்கின்றன. சம்ஸ்கிருதப்பாடல்கள் அங்குள்ள மன்னர்களை குமரிவரை வென்றவன் என்கின்றன.அதை ஓரளவு சாதித்தவர் அசோகர்.கிறிஸ்துவுக்கு முன்பு.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானை – வரவிருக்கும் நாவல்
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்