யாதெனின் யாதெனின்…

1

இரண்டு நாட்களுக்கு முன்னர் கெ.பி.வினோத் என்ற நண்பர் பார்க்க அலுவலகம் வந்திருந்தார். நல்ல வாசகர். கணிப்பொறித்துறையில் ஒரு நிறுவன மேலாளராக இருக்கிறார். ரயில் டிக்கெட் எடுப்பதற்கான என்னுடைய சிரமங்கள் பற்றிய பேச்சு வந்தது. இணையம் மூலம் பதிவுசெய்யலாமே என்றார் வினோத். அதற்கு கடன் அட்டை வேண்டுமே என்றேன். “என்னது, கடன் அட்டை இல்லையா?” என்று பிரமித்தபின் “சரி பரவாயில்லை. ஒரு வைப்பு அட்டை பெற்றுக்கொள்ளுங்கள். எல்லா வங்கிகளிலும் கொடுப்பார்கள்”. நான் “அதற்கு வங்கியில் பணம் போடவேண்டுமே..” என்றேன். அவர் சற்றுநேரம் வியந்து மாய்ந்துகொண்டிருந்தார். பொதுவாக கணிப்பொறி துறையில் இருப்பவர்களிடம் பிறர் எப்படி உயிர்வாழ்கிறார்கள் என்பதை சொல்லிப் புரியவைப்பது கஷ்டம்.

நான் கனடா போக விசாவுக்காக டெல்லிக்கு நேர்காணலுக்குச் சென்றபோது என் வருட வருமான அறிக்கை மற்றும் மாதச்சம்பள அறிக்கையை கூர்ந்து நோக்கிய செந்தலை அம்மையார் நம்பிக்கையில்லாமல், “இந்த வருமானத்தில் எப்படி உயிர்வாழ முடியும்?” என்றார். “முடியும் என்பதற்கு நான் வாழ்வதே ஆதாரமல்லவா?” என்றேன். சிரித்தாலும் விசா தர மறுப்பு எழுதிவிட்டார். பிறகு மத்திய அரசு பிரசுரத் துறை உதவி இயக்குநராக இருந்த எம்.கெ.சந்தானம் அவர்கள் மூலம் நான் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பதை விரிவாக நிரூபித்து விசா பெற்றேன். எனக்கே அந்த நிரூபணம் உற்சாகமாக இருந்தது.

என் பணியிடத்தை பார்த்த வினோத் “அருமையான அறை. சிக்கலே இல்லாத நிம்மதியான வேலை… உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது…” என்றார். தன்னுடைய வேலையின் ஒவ்வொரு கணமும் எப்படி யானைகளால் இருபக்கமும் அழுத்தப்படுகிறது என்பதை விவரித்தார். கேட்கவே பீதியாக இருந்தது.

என் வேலை நான் விரும்பி தேர்வுசெய்துகொண்ட ஒன்று. இந்தவேலை இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு எழுதியிருக்க முடியாது. இருபத்துமூன்று வருடம் முன்பு வேலை கிடைத்து தொலைபேசி உதவியாளர் பயிற்சிக்கு சென்றபோது பயிற்சியாளர் வேலையை விவரித்தார். அவர் தொலைபேசி உதவியாளராக இருந்து பதினாறு வருடம் வேலைசெய்து மூத்து, மேற்பார்வையாளராக ஆகி, பயிற்சியாளராக பணியாற்றுபவர். அவர் சொன்னார், “இந்த வேலை மிகவும் எளிது. ஒரு சிம்பன்ஸிக்கு இதே பயிற்சியை அளித்தால் அதுவும் இதேவேலையை நன்றாகச் செய்யும்” வகுப்பிலிருந்த தாமஸ் செறியான் எழுந்து கேட்டான், “பதினாறு வருட அனுபவமானால் அது பயிற்சியாளராகவும் ஆகும் இல்லையா சார்?”

இருபத்து மூன்றுவருடங்களாக ஒரே வேலை. மீண்டும் மீண்டும். மூளை மற்றும் மனத்தின் தேவை இல்லாமலேயே புயல்போலச் செய்து முடித்துவிடலாம். அன்றாடம் தேடிவரும் கிராமவாசிகளில் நாலைந்துபேராவது ஆர்வமூட்டுபவர்களாக இருப்பார்கள். எழுந்துபோகும்போது எந்தவிதமான சுமையும் இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் பொதுவாக கண்ணுக்குத்தெரியாத ஊழியனாகவே இருப்பேன்.

இதை பலரும் கவனித்திருக்கலாம், அலுவலகங்களில் சிலர் வருடக்கணக்காக வேலைக்கு வருவது அவ்வப்போதுதான் நமக்குப் புலப்படும், மற்றபடி கவனத்திலேயே விழ மாட்டார்கள். அவர்கள் பொதுவாக மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். என்னை என் அலுவலக வாசலில் வந்து விசாரித்தால் ஊழியர்களில் பாதிப்பேர் தெரியாது என்றுதான் சொல்வார்கள். ‘மெமோ’வுக்குப் பதில் எழுதுவது, விண்ணப்பங்கள் நிரப்புவது, தொழிற்சங்க கூட்டம் தவிர பிற சமயங்களில் என்னை எவருக்கும் நினைவிருப்பதில்லை.

மொத்தத்தில் ‘குறையொன்றும் இல்லை’. எனக்கு பெரிய அளவுக்குப் பணம் எப்போதும் தேவை இருந்ததே இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் எனக்கு பணமுடையே இருந்ததில்லை என்று சொன்னால் என் நண்பர்கள் நம்புவார்கள். நாடோடியாக இருந்த நாட்களிலேயே ஏதாவது எங்காவது செய்தால் கிடைக்கும் பணமே போதுமானதாக இருக்கும். அக்காலத்தில் அச்சகங்களில் பிழை திருத்தும் பணி எளிதில் கிடைக்கும்.

இந்த வேலையில் இருந்து மேலே செல்வதில்லை என்ற முடிவை நான் இருபதுவருடம் முன்பே எடுத்துக் கொண்டேன். அருண்மொழியை திருமணம் செய்யும்போது அதை நிபந்தனை போலச் சொன்னேன். என் பொருளாதார நிலையை இதற்குமேல் தூக்கிக் கொள்ள எதையுமே செய்ய மாட்டேன், இதுவே எனக்கு அதிகம் என. ஒத்துக் கொண்டது பெரிய விஷயமல்ல, இன்றுவரை அதைப்பற்றி மாற்றுக்கருத்து இல்லாமலும் இருக்கிறாள் என்பதே பெரிய விஷயம்.

உடைகள், உணவு, வசதிகள் எதிலும் ‘போதும்,வேண்டாம்’ என்று சொல்லும் மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன். லௌகீக வாழ்வில் நான் பெரிதாக விரும்பி ஆசைப்படும் எதுவுமே இல்லை என்பதே உண்மை. நானே இதை அவ்வப்போது உண்மைதானா என்று கேட்டுக் கொள்வதுண்டு. அன்றைய செலவுக்கு அருண்மொழியிடம் வாங்கும் சிறு தொகை எப்போதுமே மிச்சமாகும். குடி, புகை உட்பட எல்லாவற்றுக்குமே ‘வேண்டாம்’ தான் — முழுமையாக.

அந்த மனநிலைக்கு வந்த பின் அதை ஒரு கோட்பாடாக ஆக்கிக்கொள்ள ஒரு தருணம் அமைந்தது. 1988இல் மலையாள நாளிதழ் ஒன்று தமிழிலும் கால்பதிக்க விரும்பியது. அதன் ஆசிரியராக என்னைப் பணியாற்ற முடியுமா என்று கேட்டார்கள். அன்று நான் தொலைபேசித்துறையின் தற்காலிக அன்றாடக்கூலி ஊழியன். நான் வாங்கியதை விட பன்னிரண்டு மடங்கு அதிக ஊதியம் பரிந்துரைக்கப்பட்டது. பிற வசதிகள். கௌரவங்கள், தொடர்புகள்.

நான் ஆசைப்பட்டேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் எழுத்தாளரிடம் ஆலோசனை கேட்டேன். “இதழாளராக ஆவது உலகியல் ரீதியாக மிக நல்ல விஷயம். ஆனால் எழுத்தாளனாக அது உன் இறுதிமுடிவு. இந்தியாவில் நல்ல எழுத்தாளனாக வந்த இதழாளன் எவரும் இல்லை. நாளெல்லாம் மொழியை இயந்திரத்தனமாகக் கையாளும் ஒருவன் தனக்கென மொழியை உருவாக்க முடியாது. இந்திய இதழாளன் சிந்தனைச் சுதந்திரம் இல்லாமல், முதலாளி இச்சைக்கு ஏற்ப நாளில் பெரும்பகுதியை வெறிபிடித்தது போல உழைத்துச் செலவிடுபவனாகவே இருக்கிறான். அங்கே போய் அழிந்த பலரை நான் அறிவேன்” என்றார்.

என்னால் ஒருவாரம் முடிவெடுக்கவே முடியவில்லை. மனதின் மாயம், நான் அந்த ஆசிரியரை வெறுக்க ஆரம்பித்தேன். அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கினேன். அவ்வெறுப்பு மூலம் அவரது ஆலோசனையை நிராகரிக்கும் முயற்சிதான் அது. ஆனாலும் ஒரு தயக்கம். அப்போது தற்செயலாக குறளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு குறள் கண்ணில் பட்டு மனதில் நின்றது.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

அப்போது அதன் முழு பொருளும் எனக்குப் புரியவில்லை. ஆனால் அது ஒரு விடையாக இருந்தது. வேண்டாம் என்ற முடிவை எடுப்பதே ஆகப் பெரிய சுதந்திரம் என்று தோன்றியது. துணிந்து வேண்டாம் என்றேன். அது ஒருகணம்தான். உண்மையில் அதைக்கடந்தபின்னரே நாம் உறுதியடைகிறோம்.அதற்காக இப்போது எண்ண எண்ண மகிழ்ச்சியே உருவாகிறது. நான் வேண்டாம் என்று சொன்ன அனைத்துமே பின்னர் எனக்கு விடுதலையையும் நிறைவையும்தான் அளித்துள்ளன.

அந்தக் குறளை மீண்டும் மீண்டும் நான் மந்திரம் போல சொல்லிக்கொள்வேன். வாழ்வின் பல தருணங்களில். காலப்போக்கில் நோதல் என்ற சொல் என் நினைவிலிருந்து உதிர்ந்து என்வரையில் ‘யாதெனின் யாதெனின் நீங்கியான் அதனின் அதனின் இலன்’ என்ற வரியாக நீடிக்கிறது.

‘என்ன இது, என்ன இது என நோக்கி ஒவ்வொன்றாக விட்டு விலகியவன் அந்தஅளவு அந்தஅளவுதுயரம் இல்லாதவன்’

என்பது இக்குறளின் பொருள். பரிமேலழகர் ஒரு மேலதிகப் பொருள் அளிக்கிறார். அனைத்தையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுதலே விடுதலை அளிக்கும், ஆனால் ஒவ்வொன்றாக விடுதலும் அந்தந்த அளவுக்கு விடுதலை அளிப்பதே என்றே வள்ளுவர்சொல்கிறார் என்று.

பௌத்தமும் சமணமும் கண்டடைந்த ஞானத்தின் ஒரு விளக்கம்தான் இவ்வரி. ‘திருஷ்ணை’ என்று பௌத்தம் சொல்லும் வாழ்வாசையின் எந்த ஒரு கண்ணியை விட்டாலும் அந்த அளவுக்கு ஒருவன் விடுதலை அடைகிறான். அனைத்தையும் விடுதல் [உபேக்ஷை] முழுமையான விடுதலையை அளிக்கிறது. உலகியலில் மாட்டியுள்ள மனம் உண்மையை அறிய முடியாது. தன் அச்சங்கள், ஆசைகள், தேவைகளுக்கு ஏற்பவே அது அனைத்தையும் காணும். அது நிபந்தனைகள் கொண்ட, எல்லைக்குட்பட்ட ஞானமேயாகும். விடுதலை கொண்ட மனமே முழுமையான உண்மையை அறிய முடியும். பின்னர் இந்தக் கோட்பாடு இந்து மெய்யியலிலும் வலுவாக ஊடுருவியது.

இந்த தத்துவார்த்தமான, முழுமையான பொருள்தளங்களுக்குள் செல்லாமலேயே நான் என் வாழ்க்கை சார்ந்து இதைப் புரிந்துகொண்டேன். இங்கே குறள் என்ற வடிவத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். குறள்பாடல்கள் என்று சொல்வதை விட குறள்சூத்திரங்கள் என்று சொல்வதே முறை. பண்டைய நூல்களில் மூலநூல் தகுதி கொண்ட பேரிலக்கியங்கள் ரத்தினச்சுருக்கமாக வகுத்துக் கூறும் தன்மை கொண்டுள்ளன. குறள், கீதை, உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், திருமந்திரம் போன்றவை. அவை வாசித்து பொருள் அறிய வேண்டியவை அல்ல. மனதில் பதியவைத்து மீண்டும் மீண்டும் ஓயாமல் நெஞ்சுள் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியவை. அதாவது அவை ஒருவகை தியான மந்திரங்கள்.

அவ்வாறு நெஞ்சுள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அவை நம் வாழ்க்கையின் தருணங்களுடன் பொருந்தி நமக்குரிய பொருளை அடைகின்றன. குறளை பலரும் தங்களுக்கான பொருளுடன் சொல்வதை நாம் அவ்வப்போது காண்கிறோம். குறள்வரிகளில் உள்ளது அழியா விவேகம் ஒன்று. அதன் அனுபவப்பொருள் அதன் வாசகன் கண்டடைய வேண்டியதாகும். அப்படிக் கண்டடையும்போதே குறளை நாம் அறிகிறோம் என்று பொருள். அப்போது மட்டுமே குறள் நமக்கு உதவுகிறது.

குறளின் இந்த வரிகளின் அமைப்பே எனக்கு ஒரு மனச்சித்திரத்தை அளிக்கிறது. ஒரு பெரிய அங்காடியில் நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்துச் செல்கிறோம். ஒவ்வொன்றைப் பார்த்ததும் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்து முன்செல்கிறோம். அந்த அளவுக்கு நம் கைச்சுமை குறைகிறது. அந்த அளவுக்கு நாம் விடுதலையாக ஆகிறோம். ‘யாதெனின் யாதெனின்–அதனின் அதனின்’ என்ற வேகமான அடுக்கில் அந்த முன்செல்லும் பயணத்தின் சொற்சித்திரம் உள்ளது.

நாம் வேண்டும் என்று கொள்ளும் ஒவ்வொன்றும் அந்த அளவுக்குநம் சுதந்திரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த விவேகம் துறவிகளுக்கு மட்டும் உரியது அல்ல. அன்றாட குடும்ப, உலகியல் வாழ்க்கையிலேயே இதன் பொருள் அளப்பரியது என்பதை நான் மீண்டும் மீண்டும் உணர்ந்திருக்கிறேன்.  சுதந்திரம் என்ற பணத்தைக் கொடுத்தே எதையும் வாங்கமுடியும் இந்த அங்காடியில்.

ஒருவனுடைய சுதந்திரமே அவனுடைய இன்பத்தின் அடிப்படையாகும். அதுவே அளவுகோல். இந்த வீட்டில் எந்த அளவுக்கு குறைவான பொருள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் நடமாட ஓடிவிளையாட இடம் கிடைக்கிறது.

உலகியல் வழ்க்கையில் முற்றாக மறுப்பது சாத்தியமே அல்ல என்பதை அறிவேன். அடையும் ஆசைவும் அதற்கான விருப்புறுதியுமே வெற்றிகளை உருவாக்குகின்றன. வெற்றிகளே ஆளுமைநிறைவை அளிக்கின்றன. வேண்டும் என்று உள்ளுணர்வு வலுவாகச் சொல்வதை வேண்டுமென்பதே சிறப்பு. எது நம் ஆற்றலின் ஆகச்சிறந்த வெளிப்பாடோ அது நமக்கு வேண்டும்தான். நமது கடமைகள் நமக்கு வேண்டும்தான். குடும்ப உறுப்பினராக, சமூக உறுப்பினராக நமது பொறுப்புகள் வேண்டும். ஏன் , நமது அடிப்படை இன்பங்கள் கூட நமக்கு வேண்டும்தான்.

ஆனாலும் நமக்கு வேண்டும் என்பனவற்றை நாம் அடைவதற்கே கூட வேண்டாமென்று சொல்லும் திடம் தேவையாக ஆகிறது. வேண்டும் வேண்டும் என்ற விசை நம்மை இயக்கும் என்றால் நாம் இழந்துகொண்டேதான் செல்கிறோம். வேண்டாம் என்று சொல்வதற்கான மனநிலையே சுதந்திரத்தின் அடிப்படை. அதுவே நம்மை நாமாக நிலைநாட்டும் வல்லமை.

[அதிகாரம் 35, துறவு , குறள் 341]

மறுபிரசுரம் / முதற்பிரசுரம் Apr 18, 2008 @ 1:09

***

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 13
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43