புறப்பாடு 7 – கையீரம்

’லே, கிறிஸுமஸுக்குப்போவல்லியாலே?’ என்று அருமை கேட்டான். மலைப்பகுதிப் பையன்கள் ஒருமாதம் முன்னரே கிறிஸ்துமஸுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட்டிருந்தனர். சீட்டுகள் பிடிக்கப்பட்டன. பலநாட்கள் சீட்டு பிடிப்பதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். ஜான் ஒரு காகிதத்தில் எல்லாருடைய சீட்டுக்கணக்கையும் எழுதிவைத்திருந்தான். சீட்டு நடத்திய லூர்தும் ஞானமணியும் காதில் பென்சிலும் கையில் நோட்டுமாக புருவங்களை கவலையுடன் தூக்கியபடி வராந்தாவில் நடக்க சீட்டு பிடிக்கவேண்டியவர்கள் அதைவிடக் கவலையுடன் பணிந்து பின்னால் சென்றார்கள்.

அருமை சீட்டை எடுத்த அன்று மிதந்து அலைந்தான் ‘என் ஏசுவுக்குச் சொல்வேன் துதி மங்களம்!’ என்று திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்தான். ஜான் பைபிளுக்குள் இருந்து ஏராளமான சிறிய துண்டுத்தாள்களை எடுத்து அவற்றின் ஒட்டுமொத்தத்தை இன்னொரு துண்டுத்தாளில் குறித்தான். அதை மேலுமொரு தாளில் அவன் குறிப்பான் என்பதில் ஐயமில்லை. சந்திரன் கணக்குவைத்திருக்கும் பொறுப்பை ஜானிடம் விட்டுவிட்டவனாதலால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிடைத்த நேரமெல்லாம் தூங்கிக்கொண்டிருந்தான்.

நவம்பர் வாக்கில் வடசேரி சாலியத்தெருவுக்கு அருமை ஒரு குழுவையே வழிநடத்திச்சென்றான்.போகிறவழியில் அண்ணாசிலை முன்னால் ஒரு வடை டீ அவனுடைய கணக்கில். சாலியத்தெருவில் சாமியப்பனின் தறியில்தான் அருமை வழக்கமாகத் துணி எடுப்பது. மொத்தமாகப் பேசி வேட்டிகள் துண்டுகள் மற்றும் கண்டாங்கிச் சேலைகளுக்கு முன்பணம் கொடுத்தோம். எனக்கு மட்டும் ஒரு வேட்டிக்குச் சொன்னேன். ‘ஆலிலைபோருமா இல்லேண்ணா கொடி வேணுமா?’ என்றார் சாமியப்பன். எனக்கு அது புரியவில்லை

”கொடி போரும்வே…அவன் அறிவுள்ள ஆளாக்கும்’ என்றான் அருமை. வேட்டியின் கீழ்நுனி சுட்டிதான் பேசப்பட்டது என திரும்பும்போது அறிந்தேன். அருமை மொத்தமாக தேவைகளை குறித்து அனைவரிடமும் சிறு தொகையும் வசூல் செய்திருந்தான். அருமையின் பேரம் பேசும்திறன் முன் பலமுறை சாமியப்பன் கண்கலங்கிவிட்டார்.

அருமை வேட்டியின் குணநலன்களை நுணுக்கமாக ஏற்கனவே ஆராய்ச்சி செய்திருந்தான். குண்டஞ்சிண்ணாக்க அது குண்டஞ்சியாட்டு இருக்கணும்…சும்மா ஒருமாதிரி ஓலைமுடையுத மாதிரி இருந்தா போராது”

“ தொளிலுகாரனாக்கும்…” என்றார் சாமியப்பன்

அருமை “ துணி நிண்ணு ஒளைக்கணும்…அங்கிண நல்ல முள்ளுள்ளதாக்கும்…கிளிஞ்சா பிறவு நீரு கிளிவீரு, மனசிலாச்சா?’ என்றான்

‘அதிப்பம் கிளியாம துணி உண்டா?’

‘கிளியப்பிடாதுவே….சோலிசெய்து உண்டாக்கின காசாக்கும்… கிளியாத துணி நெய்யும்வே’

‘செரி, நெய்யுதேன்…திருச்செந்தூரான் தொணை’

‘என்னது?’

‘இல்ல , செந்துரான்தானே தொணை’

நாள் நெருங்க நெருங்க, அருமை அனேகமாக தினமும் சென்று சாலியத்தெருவையே பதற்றத்துக்குள்ளாக்கி மீண்டான். சாமியப்பன் சொல்லப்பட்ட நாளை பலமுறை நீட்டினார்.‘பாவு காயல்ல கேட்டுதா?’ அதன்பின் ‘வீட்டிலே ஒரு இடுப்பு நோவு… ரெண்டுநாள் கெடந்துபோட்டா’ உண்மையில் கிறிஸ்துமஸுக்கும் தீபாவளிக்கும் வரும் வரும்படியைக்கொண்டுதான் அவரே வாழவேண்டும்.

கடைசியில் ஒருநாள் அவரே அழுக்குத்துணியில் கட்டப்பட்ட ஜவுளிப்பொதியுடன் விடுதிக்கு வந்தார். வராந்தாவில் அவர் அதை வைத்ததும் ஏராளமான முகங்கள் சூழ்ந்து கொண்டு பார்த்தன. ‘லே துணிவந்திருக்குலே’

அவர் மந்திரப்பொட்டலத்தை அவிழ்ப்பதுபோல மர்மமான மென்மையுடன் அவிழ்த்து துணிகளை எடுத்து பரப்பினார். வேட்டிகள், துண்டுகள் எல்லாம் செங்கோறை நிறமானவை. பாவாடைத்துணிகளும் கைலிகளும் நீலமும் சிவப்பும் கலந்தவை. பச்சைத்துணியின் மரச்சீனிக்கிழங்குப்பசையின் வாசனையுடன் கலந்த வேப்பிலை வாடை.

சாமியப்பா ஒவ்வொரு துணியாக பார்த்து எடுத்து வைத்தார். அவற்றில் அவர் நூலால் சில அடையாளங்கள் தைத்திருந்தார். தலையில் கட்டிய முண்டாசை நீக்கி முகத்தைத் துடைத்தபின் துண்டுத்தாளில் இருந்து பெயர்களை வாசித்து அவர்களுக்கு துணிகளைக் கொடுத்தார். அவர்கள் அதை வாங்கிக்கொள்ளும் முகபாவனை எனக்கு ஆச்சரியமூட்டியது. மகிழ்ச்சியே இல்லை. பயத்துடனோ துக்கத்துடனோ குழப்பத்துடனோ வாங்கிக்கொள்வதுபோல. அவர்களில் பலருக்கு சிறுவயதில் புதிய துணி அணிந்த அனுபவமே இருக்காது. புதிய துணி என்பது சற்றே தகுதிக்கு மேற்பட்டது என்று நினைத்தார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதில் ஏதோ தவறு அல்லது பாவம் இருக்கிறது என்று எண்ணினார்கள் என்றும் பட்டது

ஜான் துணிகளை முகத்துடன் சேர்த்துக்கொண்டான். ‘ஏசுவே ராசாவே’ என்றான்

”அப்பம் காரியங்க மொறபோலே….புத்தனுடுத்து புள்ளகுட்டிகளோட கொலம் வெளங்கி வாளணும்” என்றார் சாமியப்பா. “…மிச்சம்பைசாவ குடுத்தா நானும் என் பிள்ளையளுக்க காரியங்கள பாப்பேன்”

அருமை ‘இரும்வே…பாக்காண்டாமா?’ என்றான். துணிகளை அங்கேயே பிரிந்த்து உதறி சோதனைசெய்தான்.

‘லே புத்தன் துணியிலே’ என்றான் நாகமணி.

‘பாக்கணும்லே…தறியில சிக்கி அருவு கிளிஞ்ச துணியானா பின்ன இவருகிட்ட சொல்ல முடியுமா?’’

‘அதெல்லாம் குடுப்பமா?’ சாமியப்பா சொன்னார்.

ஆனால் அனைவரும் அவரவர் துணிகளை சோதனைசெய்ய ஆரம்பித்தனர். கையால்நீவிப்பார்த்தனர். முகர்ந்து பார்த்தனர்.

அருமை மின்விளக்குக்கு முன் துணியை பிடித்துப்பார்த்தான் ‘வே, பாவு நெருக்கம் குறவுபோல இருக்கே…ஒளைக்குமா?’

‘கண்ணாணை…திருச்செந்தூரு தேருமாதிரி ஒளைக்கும்’

”அப்பனுக்காக்கும் இந்த துணி…” என்றான் அருமை. ‘கொறேநாளாட்டு சொல்லுகாரு புத்தன் குண்டஞ்சி வேட்டி வேணுமுண்ணு”

‘நெறம் நிண்ணா யோகமாக்கும்……’ என்றான் நாகமணி ஒரு கண்டாங்கியை பார்த்தபடி.

‘மலையிலே என்னத்துக்குலே நெறம்? அங்கிண காட்டில இல்லாத நெறமா?’

‘பிள்ளையளே, எனக்க பைசா மிச்சத்த குடுத்தியள்னா போவேன்லா?’

‘செரி ,கடசியா என்னவே கேக்கேரு?’ என்றான் நாகமணி

‘அது சொல்லி உறப்பிச்சதாக்குமே…இப்பம் என்ன பேச்சு?’

‘இப்பம் ரொக்கமுல்லா குடுக்கம்…பாத்து சொல்லும்’ நாகமணி சொன்னான்.

அருமை ‘லே…பேசின பணத்த குடுக்கப்பட்டதாக்கும் யோக்கியம்…’ என்றான் ‘இந்தாரும்வே…பிள்ளையளுக்கு கொண்டுபோயி வல்ல நல்லதும் வேங்கிக்குடும்…கர்த்தரு பிறப்புல்லா?’’

‘செந்தூரான் தொணையிருப்பான்’ என்று அவர் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

அருமை தன் மடியை அவிழ்த்து ஒரு ஐந்து ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான் ‘வச்சுக்கிடும்…பிள்ளையளுக்கு நாலு வடை வேங்கிட்டுபோவும்’ என்றான்

‘புண்ணியமுண்டு’ என்றார் சாமியப்பா

அன்று அறையில் சுவர்கள் ததும்பும்வரை கிளர்ச்சி இருந்தது. அருமை உரக்க ‘பொன்னேசு திருவடிக்கு சுபமங்களம்‘ என்று பாடியபடி அர்த்தமில்லாமல் சுற்றிச்சுற்றி வந்தான். அவனால் தன்னுடைய டிரங்குப்பெட்டியை ஒழுங்காக அடுக்கமுடியவில்லை. பரபரவென்று துணிகளை அள்ளி உள்ளே போட்டான். திரும்ப அள்ளி வெளியே வைத்தான். சரிதான் என்று கழிப்பறை சென்றுவந்தான். நானும் நாகமணியும் கட்டிலில் படுத்துக்கொண்டு அதை வேடிக்கைபார்த்தோம்.

சந்திரன் ‘லே, இவன் கடசியிலே வெறும்பெட்டிய கொண்டுட்டுப்போவான் பாத்துக்க’ என்றான்

‘உனக்க அம்மைக்க தாலிய அறுக்க…செள்ளைய நவுத்திருவேன் பாத்துக்க’

ஜான் பொறுமையாக எல்லா துணிகளையும் நீவி அடுக்கினான். அவற்றின் நடுவே பொருட்களை செருகி கச்சிதமாக எல்லா இடத்தையும் நிரப்பினான். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது அருமை அடுக்கி முடித்தாலும் ஜான் முடிக்கப்போவதில்லை என்று. அவனுக்கு திருப்தியே வரவில்லை.

துணிக்காகத்தான் அதுவரை காத்திருந்தார்கள். மறுநாளே அருமையும் ஜானும் கிளம்புவதாகச் சொன்னார்கள். அதற்கு அடுத்தநாள் சந்திரனும் நாகமணியும்.

ஜான் ஒரு பெரிய சாக்கு நிறைய ஏதோ வாங்கி வைத்திருந்தான். பாத்திரங்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நாகமணி ‘லே இத எங்கிணயாம் தூக்கி வைலே. தட்டிட்டுல்லா இருக்கு’ என்று நகர்த்தியபோது டப்பா ஒலிவந்தது

‘அது என்னது பாத்திரமா?’ என்றேன்

‘லே இதெல்லாம் டப்பா…மலைக்கு கொண்டுட்டுப்போறான்….’

‘என்ன டப்பா?’

‘பல எடங்களிலே சொல்லி வச்சு வேங்கியிருக்கான். மருந்துடப்பா’

அந்த சாக்கை அவிழ்த்துப்பார்த்தேன். பலவகையான மாத்திரைடப்பாக்கள். பிளாஸ்டிக் டப்பாக்களும் தகரடப்பாக்களும். சாதாரண கோப்பை அளவுள்ள டப்பாக்கள் அடியில் இருந்தன

‘மலையில இதுக்கு பொன்னுவெலையாக்கும்’ என்றான் நாகமணி.

“ மளை பெய்யுத ஊருல்லா… ரூவாயும் தீப்பெட்டியும் ஈரமடிக்காம போட்டுவைக்க டப்பாவேணும்லா?’

”வீட்டுக்குள்ளயா?’ என்றேன்.

அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஜான் ‘எல்லாருக்கும் ஓரோண்ணு குடுக்கணும்…நாகருகோயிலிலே இருந்து வாறேண்ணு சொல்லி சொந்தக்காரனுக பாக்கவந்திருவானுக’ என்றான்.

‘லே நீ கிறிஸுமஸுக்கு போவல்லியாலே?’

‘அவனுக்கு ஓணமுல்லா….ஏமான்மாரு ஓணத்துக்கு எலையிட்டு பாயசம் குடிப்பானுக’

”நானும் போறன்…சந்திரன் போனதும் போறேன்’ என்றேன்.

‘எங்க?’

‘இங்க ஒரு அக்கா வீடு இருக்கு…அங்க நிப்பேன்’

விடுதி ஐந்துநாட்களுக்கு விடுமுறை. சமையல் இருக்காது. ஓட்டலில் சாப்பிட காசு வைத்திருந்தேன்.

அன்றிரவு முழுக்க ஜானும் அருமையும் தூங்கவில்லை. அருமை பெருமூச்சுவிட்டுக்கொண்டு புரண்டு புரண்டு படுத்தான். பிறகு எழுந்து பெட்டியைத் திறந்து துணிகளை எடுத்துப்பார்த்தான். கண்ணை திறந்து பார்த்தேன். முற்றத்து விளக்கின் ஒளி சன்னல்வழியாக வந்தது. அதில் ஜான் பைபிள் படித்துக்கொண்டிருந்தான். அருமை பெட்டியிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து மெல்ல வருடிக்கொண்டிருந்தான். மென்மையாக. கைக்குழந்தையை வருடுவதுபோல.

என் பார்வையை அருமை உணர்ந்தான். திரும்பிப்பார்த்தான். ‘லில்லிக்குட்டி’ என்றான். முகம் மலர்ந்திருந்தது. கண்களில் விளக்கின் ஒளி.

பெருமூச்சுடன் மூடிவிட்டு என்னருகே வந்து படுத்தான் அருமை. ‘சின்னவயசிலே எப்டி இருப்பா தெரியுமா? ஆத்துக்குள்ள கருங்கல்லு கிடக்கும்லா? கறுப்பா மொளமொளண்ணு உருண்டையாட்டு.. தூக்கிட்டு அலைவேன்.’

அவர்கள் எவருமே தங்கள் குடும்பங்களைப்பற்றிச் சொன்னதே இல்லை என்பதை நினைவு கூர்ந்தேன். என்னிடம் சொல்லவில்லை என்றல்ல. எவரிடமும் சொல்வதில்லை. வீட்டைப்பற்றி ஒருவருக்கொருவர்  சொல்லிக்கொள்வதேயில்லை. சொன்னால் பிரச்சினைகளைப்பற்றி மட்டும்தான் சொல்லவேண்டியிருக்குமோ என்னவோ.

அருமை ‘வீட்டில அம்மையும் மூணு தங்கச்சிகளும் உண்டுலே… அப்பன் பனையிலே இருந்து விளுந்து கெடப்பாக்கும்… ஏளுவரியமாச்சு…’ என்றான்.

என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். அருமை ‘கர்த்தராகிய ஏசுவே ‘ என ஆரம்பித்து அதிவேகத்தில் ஒரு ஜெபத்தைச் சொன்னான். கண்ணை மூடிக்கொண்டான். ஆனால் பிறகெப்போதோ கண்விழித்தபோது அவன் மீண்டும் அந்த பெட்டியை துழாவி துணிகளைப்பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

மறுநாள் கிளம்பும்போது அருமை என்னிடம் ‘லே வாறியாலே? எங்கிளுக்க ஊரிலே கிறிஸ்மஸுக்கு சவிட்டுகளி உண்டு’ என்றான்.

‘சவிட்டுகளிண்ணா?’

‘அது ஒரு நல்ல களியாக்கும். அடிமுறையா களியாண்ணு சொல்லமுடியாது…வாறியா?’

‘இங்க -’

”நீ இங்க இருக்கவாக்கும் பிளான் போடுதே. இங்க தனியா இருந்தா செரிவராது…வாறியா?’

”செரி வாறேன்” என்றேன்.

”குடிலு வீடாக்கும்”

நான் ஒன்றும் சொல்லவில்லை. உள்ளே சென்று என் உடைகளை பைக்குள் எடுத்து வைத்துக்கொண்டேன். செல்லும்வழியில் கிரேட்டஸ்ட் பேக்கரிக்குச் சென்று என்னிடமிருந்த பதினைந்து ரூபாய்க்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டேன். அன்றெல்லாம் சாதாரண மாடர்ன் பிரட் அபூர்வமான தின்பண்டமாக கிராமப்புறங்களில் கொண்டாடப்பட்டது. மூன்று பிரட்டும் ஒரு பெரிய கேக்கும் வாங்கினேன்.

‘லே என்னத்துக்குலே?’ என்றான் அருமை

‘இருக்கட்டும்லே…ஒரு வீட்டுக்குப்போறதுல்லா?’

முள்ளங்கினாவிளைக்கு கருங்கல் சென்று அங்கிருந்து மேலே செல்லவேண்டும். கருங்கல்லே ஒரு கிராமம். ஆனால் அருமையின் கிராமத்துக்கு முள்ளங்கினாவிளையின் பேருந்து நிறுத்துமிடம்தான் ’டவுன்’அங்கிருந்து ஒற்றையடிப்பாதையில் நான்கு மைல் நடந்தால்தான் அவனுடைய குடியிருப்புப்பகுதி.

நெடுங்காலம் வெறும் மேட்டுப்பொற்றையாகக் கிடந்த செம்மண்நிலம். செம்மண் என்றால் முட்டம் பகுதியிலுள்ளது போன்ற மென்மையான மண் அல்ல. கூழாங்கற்கள் செறிந்த சொறிப்பாறைப்பொடி போன்ற மண். வெறும் மரச்சீனிவிளைகள்தான் அங்கெல்லாம். பத்திருபது வருடங்களாகத்தான் மக்கள் குடியேறி குடிசைகட்டி அதன்பின் மண்சுவர்கள் எழுப்பி குடியிருப்புகளாகப் பெருகிக்கொண்டிருந்தார்கள்.

முள்ளங்கினாவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆளுயரமான நட்சத்திரம் செய்து வைத்திருந்தார்கள். பெரிய கட்டுமரங்களை சிலுவைபோல வைத்தது போலிருந்தது அந்த நட்சத்திரம். கோயிலுக்கு முன்னால் திருப்பிறப்புக் குடில் கட்டப்பட்டிருந்தது. கியாஸ்விளக்குகள் வந்து இறங்கியிருந்தன. சட்டை போடாத மெலிந்த சிறுவர்கள் அப்பகுதியில் மனக்கிளர்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

மரச்சீனிவிளை நடுவே சென்ற ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றோம். ‘பாம்பு இஷ்டத்துக்கு உண்டு பாத்துக்கோ…. இந்நேற்றுகூட ஒரு பயல கடிச்சுப்போட்டு”; என்றான் அருமை.

‘பிறவு?’

‘பிறவு என்ன? போக்குதான்….கடிச்சா ஒண்ணும் செய்யமுடியாது’

‘ஆஸ்பத்திரி?’

’ஆஸுபத்திரி கருங்கல்லிலே இருக்கு…”

கருங்கல் தலைக்குமேல் எங்கோ, மேகங்களுக்குள் இருப்பதாகப் பட்டது.

சீக்கிரத்திலேயே இருட்டிவிட்டது. மரச்சீனிவிளைகள் இருட்டுக்குள் கடல்போலத் தெரிந்தன. நடுவே பனைகள் காற்றில் உறுமிக்கொண்டிருந்தன.

“இங்க தெங்கு இல்லியா?’

‘தண்ணி குறவில்லா? சானலுவெள்ளம் உள்ள இடங்களிலே தெங்கும் வாளையும் உண்டு…இங்கிண பனைதான் கூடுதலு”

நாங்கள் அருமையின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது ஏழுமணிகூட ஆகியிருக்காது. ஆனால் அங்கே அது நள்ளிரவு. அருமையின் வீட்டுத்திண்ணையில் கண்ணாடிக்குப்பியில் துணியைத் திரியாகப்போட்டு ஏற்றப்பட்ட ஒரே ஒரு மண்ணெண்ணை விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அதன் சுடர் காற்றில் நடனமாட குடிசை திரைச்சீலைபோல ஆடியதாகத் தோன்றியது. முதலில் ஆடுதான் எங்களை அறிந்தது. ப்ர்ர்ர் என்று சொல்லி காதுகளை படபடவென்று அடித்தது

அருமையின் அம்மா விளக்குடன் முற்றத்துக்கு வந்தாள். “ஆரு?’

‘எடி அம்மா…இது நானாக்கும்”

அருமையின் அம்மா முன்னால் வந்தாள். அவளுக்கு பின்னால் வருவது திகிலைக்கொடுத்தது.

‘இவன் எனக்க கூட்டுகாரனாக்கும். ஒப்பரம் காலேஜிலே படிக்கான்’

‘ஓ….வா பிள்ள”

அவன் அம்மா என்னை கூர்ந்து பார்ப்பதைக் கண்டேன். என்னை அவர்களால் மதிப்பிடமுடியவில்லை.

திண்ணையில் அமர்ந்தேன். தென்னந்தடிகளை நட்டு கட்டப்பட்ட சற்றே பெரிய குடிசை அது. திண்ணை மண்ணால் செய்யப்பட்டு சாணி மெழுகப்பட்டது. சுவர்களும் மண் குழைத்து செய்யப்பட்டவை. மொத்த வீட்டையே அருமையின் அம்மாவும் அப்பாவும் அவர்கள் கைகளால் செய்திருக்கலாம் என்று தோன்றியது. மறுஎல்லையில் ஆடு ஒட்டுத்திண்ணையில் ஏறி நின்றுகொண்டிருந்தது. அதன் கண்களில் விளக்குச்சுடர்கள்.

திண்ணையில் அருமையின் அப்பா படுத்திருந்தார். அவரிடமிருந்து எண்ணைவாடையும் சிறுநீர்வாடையும் கலந்து வந்தது. ”ஸ்தோத்திரம் பிள்ள” என்றார் அவருக்குப்பின்னால் கதவினருகே மூன்று முகங்கள் தெரிந்தன. அருமையின் தங்கைகள். கடைசிப்பெண்ணுக்கு எட்டுவயதிருக்கும்.

’அப்பா, இவன் ஏமானாக்கும். நாயரு”

அருமையின் அப்பா “ஆரானாலும் கர்த்தருக்க கருணை வேணுமில்லா” என்றார்.

அருமையின் அம்மா என்னை புரிந்து கொண்டார். அவர் ஏதோ கண்ணைக்காட்டியிருக்கவேண்டும். மூன்று முகங்களும் சுனைக்குள் மீன்கள் அமிழ்வதுபோல இருட்டுக்குள் மறைந்தன. கொண்டுவந்திருந்த பலகாரங்களை அருமையின் அம்மாவிடம் கொடுத்தேன்.

அவர் முகத்தில் அனிச்சையாக வந்த சுளிப்பு என்னை உள்ளூரச் சுருங்கச் செய்தது. “என்னத்துக்கு?’ என்றார். கைகூட நீளவில்லை.

‘பிள்ளியளுக்கு குடுடீ” என்றான் அருமை

அருமையின் அம்மா வாங்கிக்கொண்டார்கள். முகம் இன்னும் அதிகமான சங்கடத்துடன் இருந்தது. பெரிய ஒரு அவமதிப்புக்கு ஆளானவள்போல.

அவர் உள்ளே சென்றதும் நானும் அருமையும் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்துகொண்டோம். அருமையின் அப்பா “ஏமான் ஒப்பரம் படிக்குதா?’ என்றார்

‘இல்ல அவன் வேற… என்க்க படிப்பு பீஏல்லா?’ என்றான் அருமை

‘பிள்ளேன்னு சொல்லணும்….ஏமான்னு சொல்லாண்டாம்” என்றேன்.

அவர் ஒன்றும் சொல்லவில்லை. அருமை ‘இங்கிண் ஒரு நல்ல விஷயம் உண்டுண்ணா கொசு கெடையாது… மேட்டுப்பொற்றையானதினாலே தண்ணி நிக்காதுல்லா? நல்ல காத்தும் வரும். நான் இங்கிண உறங்குத உறக்கம் எங்கியும் உறங்குகதில்ல” என்றான்.

‘வயறு நெறைஞ்சா வாளக்குளியிலயும் கெடந்து ஒறங்கிலாம்” என்றார் அருமையின் அப்பா.

“லே, நீ சோறு தின்னியாலே?’அருமையின் அம்மா கடுமையான குரலில் கேட்டாள்.

‘இல்ல…என்ன இருக்கு?’

‘மீனும் கெளங்கும் இருக்கு….நீ வாறேண்ணு செல்லி குட்டியவிட்டு சூரமீன் வேங்கினேன்….கஞ்சியுமுண்டு”

“எடு”

அவள் என்னை கண்காட்டியிருக்கவேண்டும். அருமை “தின்னுவான்.. நீ கொண்டு வாடீ” என்றான்.

சற்று நேரத்தில் இரு மண்பாத்திரங்களில் கஞ்சியும் வாழையிலைக்கீற்றில் மீனும் மயக்கியகிழங்கும் வந்தன.

“அப்பா சாப்பிட்டாச்சா?’ என்றேன்.

‘ ராத்திரி ஒண்ணும் குடிக்கியதில்ல….வயிறு கலங்கினா எந்திரிக்கக் கஷ்டம் பாத்துக்கிடுங்க”

கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தேன். குமரிமாவட்டத்தின் உணவின் சுவை எல்லா சாதியிலும் ஏறத்தாழ ஒன்றுதான். நெடுநாட்களுக்குப் பின்னர் சுவையான உணவு . அது என்னை முழுமையாக ஆட்கொண்டது.

ஆனால் தற்செயலாக கண்ணைத் தூக்கியபோது அருமையின் அம்மாவின் கண்களைப்பார்த்தேன். அதில் தெரிந்த உணர்ச்சி என்னை கூச்சம் கொள்ளச்செய்தது. அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்தது. ஆனால் எதற்காக?

அருமை பேசிக்கொண்டே இருந்தான். சவிட்டுகளி பற்றி. இளமைக்கால கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப்பற்றி. சட்டென்று மெல்லிய பேச்சொலிகளை உள்ளே கேட்டேன். அவன் தங்கைகள் துணிகளைப்பார்க்கிறார்கள். மிகமிக மெதுவாக பேசிக்கொள்கிறார்கள். அக்கணம் எனக்கு எல்லாமே தெளிவாகியது. அவர்களின் அந்தரங்கமான உலகுக்குள் வந்து அமர்ந்திருக்கிறேன். இந்நேரம் அவர்கள் அருமையை கட்டித்தழுவியிருக்கலாம் கஷ்டங்களைச் சொல்லி அழுதிருக்கலாம். துணிகளைக் கொண்டாடியிருக்கலாம். சண்டைகள்கூட வெடித்திருக்கலாம்.

காலையிலேயே கிளம்பினாலென்ன என்று யோசித்தேன். அது மரியாதையாக இருக்காது. அருமை புண்படுவான். ஆனால் அவன் அம்மாவும் அப்பாவும் உள்ளூர மகிழ்ச்சிதான் அடைவார்கள். அருமையிடம் பின்னர் சொல்லிக்கொள்ளலாம். அருமை எதையும் புரிந்துகொள்ளக்கூடியவன்தான். ஆனால் எப்படிக்கிளம்புவது? அருமை எங்காவது போயிருக்கும்போது மெல்ல சொல்லிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

அன்றிரவு மரவள்ளித்தோட்டம் நடுவே உயரமாக கட்டி எழுப்பபட்டிருந்த மாடக்குடிலில் நானும் அருமையும் தங்கினோம். டிசம்பர் மாதக் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தது. அருமை வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த இரு போர்வைகளை எடுத்தான். அதில் குறைவான ஓட்டை உள்ளதை என்னிடம் கொடுத்தான்.

‘விடியவிடிய பேசிக்கிட்டே இருக்கணும்லே’ என்றான் அருமை. ஆனால் ஐந்தே நிமிடத்தில் அவன் தூங்கிவிட்டான்.

காற்று அலையடித்த மரவள்ளித்தோட்டத்தையும் மெல்லிய நிலா நின்ற வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சரியாகப்புரியாத ஒரு அவமானத்துக்கு ஆளானதுபோல ஒருகணமும் தெரியாமல் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதுபோல மறுகணமும் தோன்றிக்கொண்டே இருந்தது. அன்று முதல்முறையாக என் பிறப்பின் பாரத்தை உணர்ந்தேன். ஒருவன் ஒரு சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தாலேயே பாரமுள்ளவன் ஆகிவிடுகிறான். பாவத்தின் பாரம்தான். முன்னோர்கள் செய்த பாவங்கள். சலுகையுள்ளவனாக, பரிசீலிக்கப்படுபவனாக, பாரபட்சத்தின் பலனை அனுபவிப்பவனாக இருப்பதன் பாவம். அவற்றை அவன் நிராகரிக்கமுடியாது. இல்லை என பாவனைசெய்ய முடியாது. வாழ்நாளெல்லாம் அதற்காக மன்னிப்பு கோரியபடியேதான் இருக்கவேண்டும். அதுதான் நியாயம். நான் கம்யூனிஸ்டு வகுப்புகளில் மட்டும்தான் அந்த பாரத்தை சிலசமயம் உணர்ந்திருக்கிறேன். அதை ஒருமுறை ஜே.ஹேமச்சந்திரன் சொல்லவும் செய்தார்.ஆனால் ஜே.ஹேமச்சந்திரனும் திவாகரனும் மன்னிப்பு கோரவேண்டியதில்லை. அவர்கள் அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்துவிட்டார்கள்.

என்னதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என்ற வியப்பு ஏற்பட்டது. தர்க்கபூர்வச் சிந்தனை சலிக்கையில் பகற்கனவுகளுக்குச் செல்வது என் வழக்கம். ஜே.ஹேமச்சந்திரனை விட எம்.என்.கோவிந்தன்நாயரை விட சாகசங்கள் செய்தேன். என்னை போலிஸ் துரத்தியது. சுட்டுக்கொன்றது. தூக்குமரத்தில் ஏறினேன்.

காலையில் என்னருகே அருமை இல்லை. கண்விழித்து எழுந்தேன். மரவள்ளிச்செடிகள் காலையில் சின்னப்பிள்ளைகள் போல புத்துணர்ச்சியுடன் இருப்பவை. மிட்டாய்க்காக நீட்டப்பட்ட பல்லாயிரம் குழந்தைக்கரங்கள் போல இலைகள். மாடத்தில் இருந்து குதித்து மெல்ல வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே யாருமில்லை என்றால் பையை எடுத்துக்கொண்டு அப்படியே கிளம்பிவிடலாம் என்று நினைத்தேன்.

திண்ணையில் அருமையின் அப்பா இல்லை. என் பையும் இல்லை. திண்ணை அருகே நின்று உள்ளே பார்த்தேன். உள்ளே ஒரே அறைதான். பக்கவாட்டில் ஒரு சிறிய சாய்ப்புதான் சமையலறை. கருகிய கூரை ஆங்காங்கே பிய்ந்து உரச்சாக்கால் அடைக்கப்பட்டிருந்தது. கூரைநுனி என் நெற்றியைவிட தாழ்ந்திருந்தமையால் குனிந்துதான் பார்க்கவேண்டியிருந்தது “அருமை! அருமை!’ என்று கூப்பிட்டேன்.

அருமையின் தங்கை எட்டிப்பார்த்தாள். உடனே உள்ளே ஓடிவிட்டாள். அவள் கண்களிலும் அதே வெறுப்பைத்தான் பார்த்தேன். வெறுப்பா? இல்லை. ஒரு தள்ளுதல். போ என்ற சொல்லை ஒரு பார்வையாக ஆக்கினால் அப்படி.

சற்று நேரம் கழித்து அருமையின் அம்மா பக்கவாட்டில் வந்து நின்றார்கள். “என்ன?’ என்றார்

‘இல்ல……’

”அருமை அவன் அப்பன குளிப்பாட்டக் கொண்டு போயிருக்கான்…”

அது அங்கே இருந்த கிணற்றடியாகத்தான் இருக்கும். திரும்பும்போது அருமையின் அம்மா ‘’கருப்பட்டிக்காப்பி இட்டிருக்கு” என்றார்.

”நான் இப்பம் வாறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன்

அருமையின் அம்மாவின் பார்வை எனக்குப்பின்னால் இருந்தது. போ என்ற பார்வை. அப்படி என்னதான் செய்துவிட்டேன்?

அருமையின் அப்பா கிணற்றடியில் ஒரு பெரிய கல்லில் கோவணத்துடன் அமர்ந்திருந்தார். அருமை கமுகுப்பாளை கோட்டிச் செய்த தோண்டியால் நீர் இறைத்து அவர் மீது ஊற்றிக்கொண்டிருந்தான்.

‘வாலே…காலம்பற பாத்தேன். நல்ல ஒறக்கம்” என்றான் அருமை.

‘இங்க நல்ல ஊத்து என்ன?’ என்றபடி சட்டையைக் கழற்றினேன்.

‘தண்ணியக் குடிச்சுப்பாரு…இனிக்கும்’

நான் அருகே சென்றதும் அருமையின் அப்பா என்னை சிறிய கண்களால் கூர்ந்து பார்த்தார். அவரது ஒருகையும் காலும் சூம்பி வளைந்திருந்தன.

‘அப்பன் சோப்பு போடுகதில்ல….செம்மண்ணு போட்டு களுவுவாரு….சோப்பு போட்டா தோலு பொரிஞ்சு வரும்” என்றான் அருமை “அந்த செம்மண்ண அவருக்க முதுகில தேயிலே”

குனிந்து செம்மண்ணை அள்ளியபோது அருமையின் அப்பாவின் கண்களைப்பார்த்தேன். திடுக்கிட்டு மண்ணை தரையில் போட்டேன்.

‘ஏம்ல?’

‘இல்ல தண்ணி எறைக்கேன்….”

‘ஏன்?’

இல்ல இது நரம்புரோகமாக்கும். பயமா இருக்கு’’

‘செரி இந்தா”

நீர் இறைத்து ஊற்றினேன். என்னுடைய நீருக்குக்கூட அவரது உடம்பு எதிர்ப்பு தெரிவிப்பதை உணர்ந்தேன்.

அருமை அவரை துடைத்தபின் அப்படியே தூக்கிக்கொண்டான். ‘லே நில்லு… இப்பம் வாறேன். குளிப்பம்”

அவன் திரும்பி வரும்போது நீரை அள்ளி அள்ளி விட்டுக்குளித்துக் கொண்டிருந்தேன். அந்த தண்ணீர் என்னுடைய சஞ்சலத்தைப் போக்கிவிடும் என்பதுபோல அந்த கேக்குகளையும் ரொட்டிகளையும் வாங்கிக்கொண்டு வந்திருக்கக்கூடாது என்று தோன்றியது.

அருமை திரும்பி வந்தான். ‘குளிச்சிட்டு வாலே…ஒரு நல்ல சுத்து போவம். இங்கிண பல எடங்க இருக்கு. கள்ளடிப்பியா?’

”குடிப்பேன்”

“கள்ளுகுடிச்சா தெற்றில்ல… சாராயம் கெடுதலாக்கும்” என்றான் அருமை “உச்சைக்கு கோளி அடிக்கச் சொல்லியாச்சு… கோளிக்குளம்புக்கு மருச்சீனிமயக்கினது பஸ்டு சோடியாக்கும்”

அருமை உற்சாகமாக இருந்தான். உடம்பை மண் போட்டு தேய்த்ததில் நீரை அள்ளி விட்டுக்கொண்டு தலையை ஆட்டியதில் வாயில் நீர் விட்டு வாழையை நோக்கி சீறி துப்பியதில் எல்லாம் உற்சாகம் தெரிந்துகொண்டிருந்தது. அந்த உற்சாகத்தில் என் மனநிலை மாற்றத்தை அவன் கவனிக்கவில்லை.

ஈரத்தலையுடன் வீட்டுக்குச்சென்றோம். அருமையின் அப்பா திண்ணையில் பாயில் கோவணத்துடன் இருந்தார். அவன் அம்மா கையில் புதுத்துணிப்பையுடன் நின்றிருந்தாள். என்னைப்பார்த்ததும் துணிப்பையை அருமையின் அப்பாவின் அருகே வைத்துவிட்டு பின்னகர்ந்து உள்ளே செல்லும் வாசலில் நின்றாள்.

“வேட்டி குண்டஞ்சியாக்கும்…வடசேரியிலே சொல்லி வேங்கினது” என்றான் அருமை.

அருமையின் அப்பா பையை எடுத்து உள்ளிருந்து வேட்டியை உருவினார். சற்று முன்னகர்ந்து வேட்டியை பார்த்தேன். அதை அப்போதுதான் நல்ல வெளிச்சத்தில் பார்க்கிறேன். மயில்கழுத்து நிறத்தில் சுட்டியும் கரையும் போட்ட மென்மையான வேட்டி. அந்த மயில்கழுத்துநிற கரையில் இருந்து கண்களையெ எடுக்கமுடியவில்லை என்னால்.

அருமையின் அப்பா கையில் விரித்த வேட்டியுடன் என்னைப்பார்த்தார் ‘பிடிச்சிருக்கா?’ என்றார்.

முகம் மலர தலையாட்டினேன். அதை வருடிப்பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் அப்போது இருந்தது.

‘வேணுமா?’

நான் இரண்டாவது மகனாகப்பிறந்தவன். ஒருபோதும் ஒருவருக்கும் கொடுத்துப் பழகியவனல்ல. உலகமே எனக்குக் கொடுக்கவேண்டுமென்று நினைத்து வளர்ந்தவன். பிடித்த எதையும் எவருடையதானாலும் அடம்பிடித்து அழுது மன்றாடிப் பெற்றுக்கொள்பவன். எங்கள் வம்சத்திலேயே பெரிய ‘பக்கி’ நான்தான் என்பாள் அம்மா. நான் மேலும் முகம் மலர்ந்து ‘ஆமா’ என்றேன்.

‘இந்தா பிள்ள’ என்று அவர் அதை நீட்டினார்.

மறுகணம்தான் அய்யோ என்ன செய்திருக்கிறேன் என்ற திகைப்பு வந்தது. அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அருமையின் அம்மாவைப்பார்த்தேன். அவர்கள் முகம் முழுமையாக மலர்ந்திருப்பதைக் கண்டேன். அருமையும் சிரித்துக்கொண்டிருந்தான்.

அந்த வேட்டியை வாங்கிக்கோண்டேன். அதைத்தான் அன்று கிறிஸ்துமஸுக்குக் கட்டிக்கொண்டேன். மதியம் அருமை வீட்டில் கறிக்குழம்பு சாப்பிட்டேன். அருமையின் அம்மா கறியையும் கிழங்கையும் கையால் பிசைந்து என் தட்டில் வைத்த்தார்கள். கோழியின் கால் எலும்பை ஊதி உள்ளிருப்பதை எடுத்துத் தந்தார்கள். அவர்கள் குடும்பத்துடன் நானும் தேவாலயம் சென்றேன்.

கிறிஸ்துமஸ் முடிந்து திரும்பும்போது மரச்சீனிவிளை எல்லை வரை அருமையின் அம்மாவும் வந்தார்கள். என் கையைப்பிடித்து ‘அம்மையாக்கும்ணு நினைச்சுக்க பிள்ளை…இடைக்கிடை வரணும் கேட்டியா?’ என்றபடி என் கையில் ஈரமான வெம்மையான அரைரூபாய்நாணயத்தை வைத்தாள்.

புறப்பாடு1

புறப்பாடு 2

புறப்பாடு 3

புறப்பாடு 4

புறப்பாடு 5

புறப்பாடு 6

முந்தைய கட்டுரைஉருது தேசம்
அடுத்த கட்டுரைஇரணியல் கொட்டாரம்