பாலகுமாரன் மேலும் ….

ஜெயமோகன் அவர்களுக்கு,
எழுத்தளர் திரு. பாலகுமாரன் அவர்கள் குறித்த கடிதங்கள் தொடர்பாக என்னுடைய எண்ணங்கள் சில. நானும் அவருடைய நாவல்களை படித்து நிறைய விஷயங்களில் தெளிவு பெற்றவர்களுள் ஒருவன். ராஜேந்திரன், ”பாலகுமாரன் பேசுகிறார்” blog படித்து எழுதிய விஷயங்களில் சில திருத்தல்கள். பாலகுமாரன் திபெத்,சீனா பற்றி எழுதியவற்றில், “இவ்வாறு நடக்கும்” என்று சொல்லியுள்ளாரே தவிர ஒரு மந்திரவாதி போன்று எதையும் எழுத வில்லை. ராஜேந்திரன் எழுதியவை பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் அதை ஒட்டி கூறும் கருத்துக்கள் எனக்கு வியப்பை தருகின்றன. அவர் கருத்துக்களை சரி என்றும் சொல்லவில்லை. (மழுப்பலாக சொன்னதாக தோன்றுகிறது). தவறு என்றும் சொல்லவில்லை (பயமா?) . தாங்கள் பாலகுமாரனின் பதிவுகளை படிக்கவில்லையெனின், படித்துவிட்டு ராஜேந்திரனை ஆதரித்தோ கண்டித்தோ எழுதியிருக்கலாமே? பதிவுகளின் எண்ணிக்கையை ஏற்றிக்கொள்ளும் எண்ணமா?
அதேபோல், “எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதாத இலக்கியத்தால்(!?) என்ன பயன்?” என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு உங்கள் பேனா அமைதியானதும் வியப்பானதொன்றுதான்.
ராஜேந்திரன் அவர்களுக்கு,
சற்றேறக்குறைய எல்லாம் அறிந்தவர் போல் பேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உண்மையிலேயே அவ்வாறான திறமையைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக…
கணேஷ்.

 

அன்புள்ள கணேஷ்

நான் எந்தக்கருத்தையும் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுத முற்படுவதில்லை. அக்கருத்தை அதன் உற்பத்திப்பின்னணியுடன் ஆராய்ந்து என் தரப்பைச் சொல்லவே முற்படுகிறேன். பாலகுமாரன் எழுதும் தளம் குறித்த என் கருத்தை அதற்கான மிக விரிவான பின்னணியுடன் எழுதியிருக்கிறேன். என்னுடைய எழுத்தை படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பலாகுமாரன் எழுத்தைப் படித்து தெளிவுபடுவதற்கு சற்று மேலாகவே கவனம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் நீங்கள் படிக்கலாம்.

புரிந்துகொள்ளும் இலக்கியம் குறித்து நான் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறேன். என்னுடைய கேள்விபதில்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. அவற்றைப் பார்க்கவும். அல்லது நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற நூலை பார்க்கவும்

நன்றி

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்;
திரு.பாலகுமாரன் குறித்து ஒரு வாசகரின் கடிதமும் தங்களின் எதிர்வினையும் படித்தேன்.
பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களை நானும் வாசித்ததுண்டு குறிப்பாக அவருடைய பாக்கெட் நாவல்கள் நல்ல சல்லிசான  விலையில் கிடைக்கக் கூடியவை
நான் திருவள்ளூரில் ஒரு பொறியியற் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் வார இறுதியில் செங்கற்பட்டு திரும்புவேன் சென்னை சென்ட்ரலில்  இறங்கி அங்கிருக்கும் பிளாட்பாரக் கடைகளில் ஒரு புத்தகம் வாங்கினால் ஏழு ருபாய் இரண்டாக வாங்கினால் பத்து ருபாய் திருப்பிக் கொடுத்தால் ரேசலே உண்டு.
செங்கற்பட்டு வரை பிரயாணம் செய்ய இரண்டு நாவல்கள் பத்து ருபாய் கொடுத்து வாங்கி இருக்கையும் கிடைத்தால் பரனூர் வருவதற்குள் படித்து முடித்து விடலாம்.
அவருடையா காதற்பெருமான் என்கிற நாவலைத்தான் முதலில் வாங்கி படித்தேன் அதற்க்கு பிறகு எத்தனையோ நாவல்கள் பெரும்பாலும் ஒரு சில தவிர எதுவுமே நினைவில் இல்லை.
அனால் இன்றைக்கும் காதற்பெருமான் இஷ்டமான ஒரு நூலாகவே இருந்து வருகிறது.
ஒரு விஷயம் சொன்னால் அவருடைய நாவல்களை படிக்கும் போது தவறாமல் இடம் பெறுகிற சொற்கள் அலட்டல்,துல்லியம்,வீம்பு, இந்த சொற்கள் இல்லாமல் குறிப்பாக அலட்டல் என்கிற சொல்லை பயன்படுத்தாத ஆன்மிக கட்டுரை அவர் எழுதியதாக இருக்க முடியாது.
நான் அவருடைய எழுத்துக்களைப் வாசித்து கிட்டத்தட்ட இரண்டு வருடமாகிறது ஆனால் அவருடைய எழுத்து நடையை இன்னமும் நினைவு கூற முடிகறது பெரிய மாற்றங்களை இந்த இரண்டு வருடத்தில் அடைந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
பொதுவாகவே சில விதிவிலக்குகளை தாண்டி எழுத்தாளர்கள்  பலரும் தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வது தவிர்க்க முடியாததாக ஒரு சூழல் உள்ளது.
ஆனால் எந்த அளவோடு நிறுத்துகிறார்கள் என்பதை தான் பார்க்க வேண்டி உள்ளது.
பாலகுமாரனின் எழுத்துக்கள் அய்ந்தாம் வேதம் என்று அவருடைய உதவியாளர் எழுதியதையும் அதை அவருடைய நாவல் முகப்பிலே கிட்டத்தட்ட ஒரு அணிந்துரைக்கான முக்கியத்துவத்தோடு பிரசுரம் செய்யப்பட்டதையும் பலரும் படித்திருக்கலாம்.
நீங்களே உங்களுடைய கட்டுரைகளில் குறிப்பிட்டுருப்பதை போல நம்முடைய மரபில் குருமார்களை ஆசிரியர்களை பணிதல் மரபு.
ஆனால்  பணிவை  ஒரு மரபின் தொடர்ச்சியாக பார்ப்பதை தாண்டி அந்த புகழ்ச்சியில் ஈடுபட்டு தன்னுடைய ஆளுமையை இழக்க அந்த படைப்பள்ளி தயாரானால் அவரை என்னவென்று சொல்வது?
பொதுவாகவே
ஆன்மிக நோவேல்களை புகழ்பவர்கள் அவர் எழுப்புகிற அத்தனை தருக்கங்களும் கிட்டத்தட்ட ஆங்கிலத்தில்   Argument in a circle அந்த வகையை சார்ந்தவை.
இந்த தேவையற்ற தன்னுடைய படைப்பு திறனை உறிஞ்சி விடக்கூடிய அசௌகர்யங்களை அறிந்தே ஏன் அனுமதிக்கிறார் எனபது தான் புரியவில்லை.
அவருடைய தாயார் ஒரு தமிழாசிரியை ஆக தமிழ் இலக்கிய அறிமுகம் அவருக்கு உண்டு அவர் எழுத ஆரம்பித்த காலத்தில் நல்ல இலக்கியவாதிகளின் நட்பும் நெருக்கமும் அவருக்கு கிடைத்தது என அவர் எழுதியே அறிகிறேன் அவருக்கு ஒரு ஆன்மிக வழிகாட்டியும் குருவுமான ஒருவரின் வழிகாட்டுதல் கிடைத்திருக்கிறது
இவ்வளவும் எல்ல எழுத்தாளனுக்கும் கிடைத்து விடுவதில்லை தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள கிடைத்த அத்தனை சந்தர்பங்களையும் அவர் தவற விட்டது துரதிர்ஷ்டமே.
ஆனால் ஒரு மகாகலைஞன் சந்தர்பங்களால் மட்டுமே மலர்ந்து விடுவதில்லை நான் ஒரு எளிய வாசகன் என்னுடைய தொழிலிலும் சொந்த வாழ்கையிலும் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை போக்கும் வடிகாலாகத்தான் வாசிப்புப் பழக்கத்தை மேற்கொள்கிறேன்.ஆனால் அவருக்கு கிடைத்திருக்கிற  அத்தனை கவனமும்  சரியல்ல என்றே படுகிறது.
அன்புடன்
சந்தோஷ்

முந்தைய கட்டுரையாருடைய ரத்தம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னையில்…