சொல்வனம், இசை ஒரு கடிதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ,
நீங்கள் சொல்வனம் குறித்து எழுதியிருந்தது படித்தேன்.உங்கள் வலைப் பக்கத்தில் அது குறித்து நீங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடர்ந்து படித்துவருகிறேன். தற்போது ஒரு பதிவில், நீங்கள் கூறியிருக்கும் கருத்து எனக்கு மிகவும் ஆட்சேபகரமாக இருந்ததால் அதை தெரிவிக்கவே இந்த கடிதம்.
நீங்கள் சொல்வனம் இதழில் வெளிவரும் இசைக்கட்டுரைகள் குறித்து “இசை குறித்த உண்மையாலுமே விஷயத்துடன் கூடிய கட்டுரைகள்”. அப்படி என்ன விஷயங்கள் அதில் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. இசைகுறித்த கட்டுரைகளை மட்டும் நான் கூர்ந்து படித்துவருகிறேன். உண்மையில் சொல்வனம் இதழில் இசை குறித்து இதுவரை வந்துள்ள கட்டுரைகள் அனைத்தும் குப்பை என்று அழுத்திச் சொல்வேன்.
கன்னட கௌளை ராகத்திற்கும், மார்கஹிந்தோளத்துக்கும் மேலோட்டமான வித்யாசம் கூடத் தெரியாத அறிவுஜீவிகள் அதில் இசைத்தெரிவு கட்டுரைகள் எழுதுகிறார்கள். இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம் போன்ற கட்டுரைகள் ப்ளாக் கட்டுரை தரத்திற்கு கூட இல்லை என்பது நிச்சயம்.  ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் என்ற கட்டுரை ஒரு சுயவிளம்பர ப்ளாக் போஸ்ட் தவிர வேறில்லை. இந்திய இசையின் மார்க தரிசிகள் கட்டுரையும் கூட மிக பிழைபட்ட ஒரு கருத்தையே சொல்ல விழைகிறது. இந்தக்கட்டுரைகள் அனைத்துமே மிகவும் தரமற்றதாகவும் இருக்கிறது, மற்றபடி “நேம்ஸ் ட்ராப்பிங்” ல்லும் சுய விளம்பரத்திலும் மட்டுமே ஈடுபடுகிறது. அலங்காரமான வார்த்தைகளை கோர்த்துப்போட்டால் நல்ல இசை விமரிசனமோ, இசை அனுபவக் கட்டுரையோ ஆகிவிடாது. இக்கட்டுரைகள் நிச்சயம் வாராந்தரிகளில் வரும் இசை கட்டுரைகளைவிட எந்த விதத்திலும் சற்றும் உயர்ந்ததல்ல. சாதாரணமாக திருவல்லிக்கேணி மேன்ஷன்களில் வசிக்கும் நண்பர்கள் பொழுதுபோக பேசும் இரவு பேச்சின் போது வெளிப்படும் சராசரி கருத்துக்களே அதில் உள்ளவை.
இதுகுறித்து சொல்வனம் ஆசிரியருக்கும் சிலமுறை கடிதம் எழுதினேன். அதில் சற்றே கோபமும் உண்டு. எழுதுபவர்களின் மின்னஞ்சல் கிடைத்தால் நிச்சயம் அவர்களுக்கும் எழுதுவதாக எண்ணம். ஆனால் சொல்வனம் ஆசிரியர், அக்கட்டுரைகளை எழுதியவர் மிகப்ரபலமான இசை அறிஞர் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டார். அதில் எழுதுபவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள் என்றால் இதை உங்களுக்கு எழுதியதற்காக வருத்தப்படுவேன். எழுதாமல் இருந்திருக்கலாம் என்று.
ஒரு நல்ல இசைக்கட்டுரையை என்னால் எழுதமுடியாது. ஆனால் இந்திய இசை குறித்து திட்டவட்டமான கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவுக்கு நிச்சயம் இசை அறிவு எனக்கு உண்டு. எனவே, சொல்வனத்தில் வரும் இசைக்கட்டுரைகளை உண்மையில் விஷயமுள்ளவை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அவை உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாலேயே பொருட்படுத்தப்படுபவை. மற்றபடி மற்ற கட்டுரைகள் குறித்து கருத்தேதும் இல்லை.

சற்றே ஏமாற்றத்துடன்
ராம்

அன்புள்ள ராம்

உங்கள் கடுமையான கடிதம் வாசித்தேன். நான் முன்னரே சொல்வதைப் போல எனக்கு இசை தெரியாது. தெரிந்த அளவில் அந்த இதழில் வெளிவரும் இசை பற்றிய கட்டுரைகள் உதவியாகவே இருந்தன. நீங்கள் இசை கற்றவர் என தெரியும். ஆகவே உங்கள் தரப்பை புரிந்து கொள்கிறேன். அதை நீங்கள் அக்கட்டுரைகளை எழுதியவர்களிடம் தான் சொல்ல வேண்டும்

நான் வாசித்த வரை சொல் வனம் இதழின் பெரும்பாலான ஆக்கங்கள் பன்முகத் தன்மை கொண்டவையாகவும் பெரும்பாலும் முக்கியமானவையாகவும் தான் உள்ளன. நான் அந்த இணையத் தளத்தை சுட்டிக் காட்டியமைக்குக் காரணமும் அது மட்டுமே

நுண்கலைகளைப் பற்றிப் பேசுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அவற்றில் இலக்கியம்போல ஓர் அறிவார்ந்த தளம் இல்லை. அவை அனுபவம் சார்ந்தவை. ஆகவே சுய அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். கொஞ்சம் அதில் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேசலாம். அதற்கு மேல் இசை ஓவியம் கட்டிடக்கலை நடனம் குறித்துப் பேசுவது கஷ்டம்

அனுபவம் சார்ந்த பேச்சில் எப்போதுமே அந்தரங்கத்தன்மையே அதிகம் இருக்கும். அந்தரங்கத்தன்மை இருக்க இருக்க மாற்றுக்கருத்துக்களும் அதே அளவு வலிமையுடன் வரும். ஒருவருக்கு சிறப்பாக இருக்கும் ஒரு கருத்து பிறிதொருவருக்கு குப்பை என்றும் தோன்றக்கூடும்

ஜெ

முந்தைய கட்டுரைதிரும்புதல்
அடுத்த கட்டுரையாருடைய ரத்தம்: கடிதங்கள்