துதிபாடிவட்டம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு, வீரா எழுதுவது.

“துதிபாடி வட்டம் தேவையா ?“ என்ற கட்டுரை படித்தேன். ஒருவரின் கேள்வியைப் பயன்படுத்திக் கொண்டு மிக முக்கியமான ஒரு விஷயத்தை விளக்கியுள்ளீர்கள். படு தெளிவான விளக்கம். நேரெதிர் கருத்துக் கொண்டவர்கள் தத்தமது கருத்துக்கு நேர்மையாக இருப்பின் அவர்களும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதைச் சுட்டியிருக்கிறீர்கள். (உ.ம் :கேசரி வலதுசாரி, அவரிடமிருந்து வந்த அனைவருமே இடதுசாரிகள்.) அதற்கு எவ்வளவு மனநேர்த்தியும் அறிவுத்திறனும் தேவையென்பதை நினைக்கும் போது என் சிந்தனை மேலும் விரிவுகொள்கிறது. நான் இன்னும் பின்தங்கிய படிநிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன். அந்த மேலான நிலைக்கு மனமும் அறிவும் சாத்தியப்பட இனி முயல்கிறேன்.

நன்றி.

ப்ரியமுடன்
-வீரா

அன்புள்ள வீரா,

நேர்மையான மாற்றுத்தரப்பின் அடையாளம் ஒன்றே. அது தன் எதிர்ப்பை நேர்மையாக முன்வைக்கும். ஒருபோதும் எதிர்த்தரப்பை திரிக்காது. அவமதிக்காது. அந்த நிலையில் நாம் வெறுக்கக்கூடிய ஒரு கருத்துத்தரப்பு என்று ஒன்று எங்குமில்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

துதி பாடிகள் பற்றிய கடிதத்திற்கு உங்களின் பதில் சிறப்பாக இருந்தது . ஆனால் சமீப காலங்களில் நீங்கள் ஏன் இவ்வளவு கோபம் கொண்டு ஒருவரை மதிப்பிட (ஈரோடு பேச்சு பற்றியதும் கூட ) வேண்டும் என்று தோன்றுகிறது . “ஏற்கனவே தோல்வியடைந்த மனிதர் நீங்கள்”, “அப்படியே வாழ்க்கை ஓடி முடியும். வேறு வழியே இல்லை. வாழ்த்துக்கள்” இந்த வரிகளை வாசிக்கும் பொழுது இன்றைய காந்தி மற்றும் அறம் சிறுகதை தொகுப்பை எழுதிய ஆளுமையா இவ்வாறு சக மனிதனையும் வசை பாடுகிறார் என்று தோன்றாமல் இல்லை .என்னளவில் இது சற்று அதிகமாகவே தோன்றியது.

உங்களிடம் என்னைக் கவர்ந்தது உங்களின் வெளிப்படையான பேச்சும் ,எழுத்தும் தான் ,உதாரணமாக கூடங்குளம் மற்றும் இளவரசன் தற்கொலை போன்றவற்றில் உங்களின் அச்சமற்ற கருத்து ,வேறு எந்த எழுத்தாளரும் முன் வந்து தமிழ்ச்சூழலில் கருத்து தெரிவிக்க பயப்படும் நிலையில் ” என் நிலைப்பாடு இது தான்” என்று ஆணித்தரமாக சொல்வதே.

பள்ளிகளில் படிக்கும் பொழுதும் சக மாணவனிடம் சண்டை வந்தால் ,என்னுடைய சகோதரனுடன் சண்டை வந்தாலும் ” டேய் நீ இந்த வருஷம் பெயில் ஆயுடுவேடா ” என்று விளையாட்டாக சொல்வதுண்டு அது அந்த நிமிடத்தின் உணர்ச்சியின் உச்சம் ,அடுத்த நாள் “டேய் நேத்து சக்திமான் பார்த்தியா ,சண்டை எப்படி ” என்போம் . இப்பொழுதும் அந்த உணர்சிகளின் உச்சிகளை தொடத் தோன்றும் ஆனால் நான் படித்த புத்தகமும் ,பார்த்த ஆளுமைகளும் ,கேட்ட இசையும் ,பார்த்த காடுகளும் அந்த உணர்சிவசப்படுவது தேவை இல்லை என்கின்றன .நான் பார்த்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர் ,சமீபத்தில் அசோகமித்திரன் அந்த சிரிப்பு ஒன்றே போதும் நான் அனைத்தையும் கண்டுவிட்டேன் இது என்ன என்பது போல் தோன்றும் .

அமைதி காக்க வேண்டியதில்லை ஆனால் இவ்வளவு கடுமை தேவையா ?.

முரளி சித்தன்

அன்புள்ள முரளி

நீங்கள் சொல்வது உண்மைதான், அது சற்று அதிகப்படியான கோபம்.

ஆனால் அந்தக்கடிதமே போலிமுகவரி கொண்டது. ஆகவே அதை ஒரு மனிதராக அல்ல ஒரு பொது அடையாளமாகவே கொள்கிறேன். நான் எழுதியது அந்தத் தனிமனிதரைப்பற்றி அல்ல. அவர் பிரதிநிதிகரிக்கும் ஒரு மனநிலையைப்பற்றி

இன்று இது ஒரு வழக்கமாகவே ஊறிவிட்டிருக்கிறது. பொதுவெளிக்குத் தன் கருத்துக்களுடன் வரத்துணிவின்றி போலி அடையாளங்களை உருவாக்கிக்கொண்டு வசையும் ஏளனமுமாக எதையாவது சொல்லிக்கொண்டிருப்பது. தமிழில் மிகமிகக் குறைவாகவே நிகழும் கருத்துச்செயல்பாடுகளைப் பொறுப்பில்லாமல் ஊடுருவி சிதைக்கமுடியல்வது

இதில் உள்ள அற்பத்தனம் இதைச்செய்பவர்களுக்கு எவ்வளவு கடுமையாகச் சொன்னாலும் புரிவதில்லை. இதை ஒரு திறமையாக, அறிவுத்தகுதியாக நினைத்துக்கொள்கிறார்கள்.கருத்துச்செயல்பாடு என்பது எப்போதும் நேரடியானது. முரண்பாடுகளும் சரி விவாதங்களும் சரி. அதில் வெற்று நக்கல்களுக்கும் அர்த்தமில்லாத வாதங்களுக்கும் இடமில்லை

இந்தக்களைகள் தமிழில் எதைப்பற்றியும் உரையாடமுடியாத ஒரு நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. என் கோபம் அதன்மீதே

மாற்றுத்தரப்பு, எதிர்ப்பு ஆகியவை சினத்துக்குரியவை அல்ல. ஆனால் சிறுமை என்றுமே சினத்துக்குரியது. அச்சினமே எழுத்தாளனின் அறம்

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 6 – தூரத்துப்பாலை