கதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது – கடலூர் சீனு

சில நாட்கள் முன்பு நண்பர் கிருஷ்ணன் ஆண்டான் செக்காவ் எழுதிய ”தி பெட் ” சிறுகதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கும் பல கதைகள் பற்றி சொன்னார் . ஆங்கிலம் அறியாததால் நீங்கள் அரைவாசி உலகை மட்டுமே பார்க்கீறீர்கள் என்று சொன்னார் .

மெய்தான் . அ .ராமசாமி ஒரிடத்தில் குறிப்பிட்டுள்ளார் போலந்து நாட்டு குடிமகன் சமகால மற்றும் முக்கியப் பிரதிகள் அனைத்தையும் தனது போலிஷ் மொழியிலேயே கற்கிறான் . அவர்கள் பிழைக்கும் மொழி எதுவாக இருப்பினும் , அவர்களின் தாய்மொழியில் அனைத்தும் கிடைப்பதால் உலக அறிவுச் சூழலுக்கு அந்த நாடு எந்தப் புள்ளியிலும் பின்தங்கிவிடவில்லை . தமிழில் நிலையை சிந்தித்துப் பார்த்தால் தமிழ் தவிர வேறு மொழி அறியாத என் போன்றோர் ஸ்டீபன் ஹாக்கினின் ”தி கிராண்ட் டிசைன் ” நூலையோ , ஜெயம் குறிப்பிட்ட ராபட் ப்ரூஸ் ப்ரூட் ஆய்வுகளையோ தமிழில் வாசிக்க எண்ணினால் ,[ அதிர்ஷ்டம் இருப்பின் ] நரை திரை கண்டு ,செவி திமிர் வந்து , வம்பர் விழுந்து இரு கண்ணும் இருளும்வரை காத்திருக்கவேண்டும்

சுனில் கிருஷ்ணன் சமீபத்தில் சொன்னார் தமிழில் நேரம் செலவு செய்து மொழிபெயர்ப்பது இனி வீண் வேலை என்று படுகிறது . வாசிப்போர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் வாசித்து விடுவதால் , சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தேவை கருதி மொழியாக்கம் செய்துவிட்டு மற்றவற்றுக்கு சுட்டி அளித்துவிடுவதே சரி எனப் படுகிறது என்று சொன்னார் . இன்றைய போக்குகளை சிந்தித்துப் பார்க்கையில் இன்று தமிழில் தீவிர இலக்கியம் சார்ந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஆளுமைகள் தங்களின் கடமை நிறைவு செய்யும்போது , அடுத்த தீவிரமான இலக்கிய ஆளுமைகள் தோன்றாவிடில் தமிழ் தீவிர இலக்கிய ஓட்டம் தேங்கும் . பண்பாட்டு தொடர்பு அறும் .அது மீண்டும் துளிர்க்க இடைவெளிகளை இட்டு நிரப்ப மொழியாக்க செயல்பாடுகளே இனி உச்சம் பெற வேண்டும் . இச் செயல் நாளைய விவசாயத்திற்கு பாதுகாக்கப்படும் இன்றைய விதை நெல் போல .

நமது இலக்கிய சாதனைகள் உலக அரங்கிற்குப் போகவில்லை எனும் புலம்பலை நிறுத்திவிட்டு , அங்கிருந்து இங்கு எத்தனை சாதனைகளை காதலுடன் ,சமகால பிரக்ஜையுடன் மொழிபெயர்த்தோம் என யோசித்தால் நமது அடிப்படை பலவீனம் புரியும் . பல்வேறு ஓடைகள் இணையாத நதி வற்றிப்போகும் . ஆக இனி வரும் காலம் தமிழில் இங்கிருந்து அங்கு ,அங்கிருந்து இங்கு என அனைத்து தளத்திலும் மொழிபெயர்ப்புப் பணிகள் தீவிரம் அடைய வேண்டிய காலம் .

புத்தக சந்தைகளில் அவதானித்த வரையில் , ஆரோக்ய நிக்கேதனம் , வனவாசி இவற்றுக்கான வரவேற்பு , ருஷ்ய இலக்கியங்களின் மறுவாசிப்பு மீதான எழுச்சி ,[ குற்றமும் தண்டனையும் இரண்டாம் பதிப்பு , சக்கரவர்த்தி பீட்டர் மறுபதிப்பு வந்துள்ளன ] ஆகியவை நல்ல மொழியாக்கங்களுக்கான தேவை புதிதாக உருவாக்கி வருவதைக் காட்டுகிறது . இவற்றுக்கெல்லாம் அப்பால் எது குறித்தும் கவலைப்படாமல் மொழியாக்கம் ஒன்றையே தங்களது தீவிர செயல்பாடாகக் கொண்ட பல ஆளுமைகள் , எந்த ஆரவாரமும் இன்றி , பெரும்பாலும் எந்த அங்கீகாரமும் இன்றி , செயல்பட்டு வருகிறார்கள் . இரண்டாம் இடம் எழுதிய எம் .டி .வாசுதேவன் நாயரை அறிவோம் , அதனைத் தமிழுக்கு தந்த குறிஞ்சி வேலன் அவர்களை , அவரது செயல்பாடுகளை அறிவோமா ?

கே .பி .வினோத் அவர்களின் மகள் 8 வயதே நிறைந்த சைதன்யா , எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய ”கால் முளைத்த கதைகள் ” எனும் நூலை , ஒரு பயிற்சிக்காக மொழியாக்கம் செய்யத்துவங்கி , அதன் தீவிரத்தில் ஈடுபாடு பெருகி ,6 மாத உழைப்பில் அந்த நூல் ”நத்திங் பட் வாட்டர் ”எனும் தலைப்பில் வம்சி வெளியீடாக கொண்டுவந்ததை குறிஞ்சி வேலன் அறிந்தார் . மகிழ்ந்து , ஆயிஷா நடராஜனுடன் இது குறித்துப் பேச ,புதிய நிகழ்வுகள் துவங்கின .

கடலூர் ,பாண்டி ,விழுப்புரம் , என பள்ளி கல்லூரி அளவில் ஆண்டு தோறும் மொழியாக்கப்போட்டிகள் நிகழ்த்தி , புதிய சூழல் ஒன்றினை உருவாக்கிப் பார்க்கும் நிகழ்வு இந்த ஆண்டு முதல் துவங்கியது .புரவலர்கள் பங்களிப்பால் , 7000, முதல் 3000 வரை பரிசுத் தொகை முடிவானது . தேர்வு விதிமுறைகள் கறாராகவே பேணப்பட்டன . இளம் தலைமுறையின் ஆர்வம் ,கண்முன் காணக் கிடைத்தது . கோடிகளைக் கொட்டி செம்மொழி மாநாடு நடத்தி , தமிழ் ஆன்றோர்களும் ,தக்கார்களும் கூடி , நமக்கிட்ட எச்சத்தின் சாரத்தை சீர்தூக்கிப் பார்த்தால் , திரு ,நல்லி ,திரு நா .மகாலிங்கம் போன்றோரால் , நிலைநிறுத்தப் படும் இது போன்ற சிறிய நிகழ்வுகளின் , மேன்மை புரியும் .

குறிஞ்சி வேலன் , மற்றும் அவரது நண்பர்கள்,ஆயிஷா நடராஜன் திரு s r c ,திரு ராஜ்ஜா ,திரு போப்பு,திரு பாவண்ணன் மேலும் ஒத்த சிந்தனை கொண்ட பலர் இணைந்து அறுபடாமல் ”திசை எட்டும் ”எனும் மொழியாக்கக் காலாண்டிதழ் ,நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களைப் புரவலராகக் கொண்டு நடத்தி வருகிறார்கள் . வருடம் தோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு எந்த சார்புமற்ற தேர்வுடன் நல்லி திசை எட்டும் – பாஷா பூஷண் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள் . 2004 அன்று கொல்லப்படுவததில்லை வங்க நாவலை தமிழாக்கம் செய்த சு .கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு முதல் விருதினை அறிவித்து ,துவங்கப்பட்ட இவ்விலக்கியப் பணி இன்று ஒரே மேடையில் 8 மொழிபெயர்ப்பாளர்கள் வரை விருது பெறும்படி , இலக்கிய விழாவாக வளர்ந்துள்ளது .

இவ்வாண்டுக்கான பாஷா பூஷண் விருதுகள் , வாழ்நாள் சாதனையாளராக , டாக்டர் கா செல்லப்பன் , அசடன் நாவலுக்காக எம் ஏ சுசீலா , பதிற்றுப் பத்து நூலினை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த வைதேஹி ஹெர்பட் , ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம் , நுகர்வெனும் பெரும் பசி நூல்களின் மொழிபெயர்ப்பாளர் போப்பு , அஞ்சனை எனும் ஹிந்தி நாவலை மொழியாக்கம் செய்த டாக்டர் எம் ,கோவிந்தராஜன் ,பன்னா லால் பட்டேலின் மனோதிடம் நாவலுக்காக ந .சுப்ரமண்யன் , ஐயப்ப பணிக்கரின் இந்திய இலக்கியக் கோட்பாடுகள் நூலை தமிழாக்கம் செய்த ந .மனோகர் , எஸ் ரா வின் கால்முளைத்த கதைகளை மொழியாக்கம் செய்த செல்வி வி .சைதன்யா , அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு , அவ விழா 18-8-13 அன்று கடலூர் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது.

காலையிலேயே குறிஞ்சி வேலன் அறைக்கு வந்து வினோத் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து விட்டார் . சைதன்யாதான் மொழிபெயர்த்தார் என்பதை உறுதி செய்துகொள்ள தான் சைதன்யாவுக்கு வைத்த தேர்வையும் , அதை சைதன்யா அனாயாசமாக கையாண்ட விதத்தையும் , தேர்வுக்குழுவின் ஒட்டு மொத்த ஈர்ப்பையும் சைதன்யா அள்ளிய விதத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் . காலை நிகழ்வாக சைதன்யாவுடனும் எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனுடனும் , வாசகர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒருங்கமைக்கப் பட்டிருந்தது . காலை சரியான நேரத்தில் எஸ்ரா தனது குடும்பத்தினருடன் அரங்கிற்குள் நுழைந்தார் . நேரடியாக மேடையேறி உடனடியாக அரங்கினருடன் உரையாடலைத் துவங்கினார் .

பெற்றோர்கள் நிறைந்த அவை எஸ்ராவை உண்மையான குழந்தை வளர்ப்பின் சிக்கல்கள் குறித்த கேள்விகளுடன் எதிர்கொண்டது . நான் நிகழ்வு குழுவுடன் வேறு ஏற்பாட்டுக்காக வெளியில் சென்று திரும்பினேன் . கிட்டத்தட்ட 3 மணிநேரம் எஸ்ரா அந்த அரங்கை தனது ஆளுகைக்குள் வைத்திருந்தார் .

பேச்சினிடையே எஸ்ரா குறிப்பிட்டார் ” இரு மொழிகளும் படைப்புத்திறனுடன் கையாளும் ,அமெரிக்காவில் வசிக்கும் 10 பேர் போதும் ,அவர்கள் தங்களது தினத்தில் தினசரி 2மணிநேரம் ஒதுக்கினால் போதும் , தமிழின் முக்கிய ஆளுமைகளை உலகறியச் செய்யும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணமுடியும் . ஆனால் இதை செய்ய முடியாமல் போக அவர்கள் சொல்லும் காரணம் ,”நேரமில்லை ”என்பது .இதோ 8 வயது சைதன்யா , இரவெல்லாம் படப்பிடிப்பு , பகலெல்லாம் பள்ளி இதற்கிடையில்தான் இந்த மொழியாக்கப் பணியை செய்து இருக்கிறார் . அனைத்து தளங்களிலும் சிறப்பாகவே செயல்படுகிறார் . இவரிடமிருந்து தீவிரம் என்பதின் ஆற்றலைக் கற்றுக்கொள்ளலாம் ” என்று குறிப்பிட்டார் .

மதியம் இடைவெளியில் அரங்கம் மொத்தமும் சைதன்யா , தேஜு ஸ்ரீ [சைதன்யாவின் குட்டித் தங்கை ] மற்றும் வினோத்தை சூழ்ந்து கொண்டது . பெற்றோர்கள் மாறி ,மாறி புதுப் புது சந்தேகங்களை வினோத் வசம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வினோத் எந்த பதிலையும் ”ஜெயமோகன் தான் எங்களது ஆதர்சம் என்ற சொற்றோடரிலேயே துவங்கினார் . மதிய உணவிற்குப் பின் சைதன்யாவை நோக்கி ஊடகங்கள் படையெடுத்தன .கேள்விகள் பதில்கள் . வினோத் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் பதறியபடி தவித்துக் கொண்டிருந்தார் .

மாலை ஔவை நடராசன் ,இந்து நடராசன் , ஆயிஷா நடராசன் மற்றும் மூத்த மொழி பெயர்ப்பு ஆளுமைகள் மேடையை நிறைக்க , நடுவில் குட்டி சைதன்யா . பள்ளி கல்லூரி மொழிபெயர்ப்பு பரிசுகள் வழங்கப்பட்டன . பின் மொழி பெயர்ப்பாளர்களுக்கான பாஷா பூஷண் விருதுகள் வழங்கப் பட்டன . சுசீலா அம்மா வர இயலாததால் அவர் சார்பாக விருதினை பாரதி பதிப்பக நிர்வாகி பெற்றுக் கொண்டார் , முக்கிய மொழி பெயர்ப்பாளர்களுக் கிடையே , செல்வி சைதன்யா தனது உயரத்தில் சரிபாதி கொண்ட விருதினை பெற்றுக்கொண்டார் . அரங்கத்தினர் கரவொலியால் அதிர வைத்தனர் .

திரும்பிப் பார்த்தேன் தூரத்தில் சுவரோரம் வினோத் , ஒரு கை மடித்து மறுகையால் வாய் பொத்தி , முற்றிலும் வேறொரு மனநிலையில் சுவரில் சாய்ந்து நின்றிருந்தார் .

விழா இனிது நிறைந்து மேடை இறங்கி தனது நூல்களில் சைதன்யா தனது கையொப்பமிட்டு சில வாசகர்களுக்கு வழங்கினார் . அறைக்கு திரும்பினோம் . வினோத் போதும்டா அன்பாலே மூடிட்டாங்கடா . போதும்டா என்றே புலம்பிக் கொண்டிருந்தார் . அறையில் விடைபெறும் முகமாக குறிஞ்சி வேலன் சைதன்யாவை கொஞ்சிக் கொண்டிருந்தார் . ”இந்தத் தாத்தாவுக்கு இந்தக் குட்டிப் பேத்தி வேறென்ன கதையெல்லாம் சொல்லப் போற?” அவர் கொஞ்சிக் கொண்டிருப்பது அவரது பணியின் நிறைவை அல்லவா .

முந்தைய கட்டுரைகல்வியும் மாற்றுக்கல்வியும் -சங்கீதா ஸ்ரீராம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 3 – மணிவெளிச்சம்