புறப்பாடு 3 – மணிவெளிச்சம்

புறப்பாடு 2

நானும் வேலைக்குவருவதாகச் சொன்னேன். அருமை ‘ஆரு நீயா? சோலீண்ணா என்னாண்ணு நெனைக்கே? அங்கிண இருந்து புக்குவாசிச்சா உனக்க கொட்டைய எடுத்து சுட்டு திம்பானுவ’ என்றான்

வந்தேதீருவேன் என்றேன். சனி, ஞாயிறுகளில் விடுதியில் அனேகமாக யாருமே இருக்கமாட்டார்கள். எல்லாருமே வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

அன்று நாகர்கோயிலைச்சுற்றி பெரும் கட்டிடங்கள் எழுந்துகொண்டிருந்தன. இரண்டுகாலில் எழுந்து நிற்கமுடிந்தால் வேலைக்கு கூப்பிட்டுவிடுவார்கள். அன்றைய சம்பளம் பதினைந்து ரூபாயும் மதியச்சாப்பாடும். காலை பதினொருமணிக்கும் மாலை மூன்றரை மணிக்கும் கடியும் குடியும் உண்டு.

மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மலைப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சனிஞாயிறு வேலைகள் போக மாலைநேரவேலைகளுக்கும் செல்வார்கள். பரோட்டக்கடைகளில் பாத்திரம் கழுவுவது பரிமாறுவது. கடைகளில் விற்பனையாள் வேலைக்குச் சம்பளம் குறைவு. ஆனால் நள்ளிரவு வரை நிற்கவேண்டும். நள்ளிரவுக்குமேல் சாமான்களை எடுத்து அடுக்கிவைத்து கடைவாசலைக் கூடிவிட்டுத்தான் கிளம்பமுடியும்

மாதம் நூற்றைம்பதுரூபாய் தேற்றிவிடுபவர்களே அதிகம். அதை இரண்டு மூன்று தவணைகளாக ஊருக்கு அனுப்பிவைப்பார்கள். ஊரில் அது பெருந்தொகை. ஒருகுடும்பமே பசியாறும்.இங்கே இவர்களுக்குச் செலவு என்று ஏதும் இல்லை. பீடிக்கான சில்லறை தவிர. விடுதியில் இரவிலோ பகலிலோ படிப்பவர்களை நான் பார்த்ததே இல்லை. பகலில் கல்லூரி வகுப்புகளின் இடைவேளைகளில் அவசரமாக புரட்டிப் படிப்பதுடன் சரி.எல்லா பாடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறக்கூடியவர்கள் என அனேகமாக எவருமே அங்கிருக்கவில்லை

நான் மாலைநேரங்களில் சும்மாதான் இருப்பேன். ஒருகட்டத்தில் ஏராளமானவர்களின் திறனேடுகளை எழுதிக்கொடுக்கவேண்டியதிருந்தது. நான் அறிவியலின் அடிப்படைகளை அறிமுகம் செய்துகொண்டதே அப்போதுதான். அருகேதான் கவிமணி நிலையம் நூலகம். அங்கே சென்று மாலை இருள்வதுவரை வாசித்துக்கொண்டிருப்பேன். ‘என்னல அப்படி செத்து இருந்து படிக்கே?’ என்று கேட்பார்கள். ‘இத படிச்சா வாத்தி சோலி கிட்டுமாலே?’ என்பார்கள். நான் புன்னகைசெய்வேன்.

அருமையை ஒருமாதிரி புரியச்செய்து என்னையும் அவனுடன் கட்டிட வேலைக்குக் கொண்டுசெல்ல சம்மதிக்கச்செய்தேன். எங்களூரில் நான் சில்லறை விவசாயவேலைகளைச் செய்ததுண்டு ஆனால் கட்டிடவேலை அப்படி அல்ல. ஒரு சின்ன பதற்றம் இருந்தது. என்னை எவரும் அவமரியாதையாகப்பேசினால் பொறுத்துக்கொள்ளமுடியாது. ஆனால் விடுதிப்பையன்கள் சிறுவயதிலேயே அதற்குப்பழகியவர்கள். தலித் மாணவர்கள் மட்டுமல்ல அங்கிருந்த நாயர் பையன்கள்கூட. அதை நான் அருமையிடம் சொல்லவில்லை. சொன்னால் அதை வைத்தே என்னைத் தவிர்த்துவிடுவான்.

செட்டிகுளம் ஜங்ஷன் வந்தோம். ‘ஒரு சாய குடிச்சலாம்லே’ என்றான் அருமை. ஒரு டீக்குச் சொல்லிவிட்டு காத்திருந்தோம்

‘நீ இப்பம் என்னெளவுக்குச் சோலி செய்யுதே? கையில சாயைக்கு காசில்லெங்கி சொல்லிப்போடு. நான் தாறேன்’ என்றான் அருமை

அங்கே தங்க ஆரம்பித்தபின்னர் எனக்குச் சோறுபோட்டதுடன் அவ்வப்போது சில்லறையும் அவர்கள்தான் தந்தார்கள். நான் கல்லூரிக்குப்போக சட்டையை எடுக்கும்போது பையில் ஐம்பதுபைசாவோ ஒரு ரூபாவோ கிடக்கும். அதைப்போட்டது யார் என்று தெரிந்துகொள்ளமுடியாது. முதல்நாள் யாரோ தவறாகப்போட்டுவிட்டார்கள் என்று நினைத்து ‘இது ஆருக்க பைசா? எனக்க சட்டையிலே கெடக்கு?’ என்றேன்

‘கொண்டுபோயி வல்ல சாயையோ வெள்ளமோ குடிலே…கெடந்து சாமி ஆடுகான்..தாயளி’ என்றான் நாகமணி. அதன்பின் நான் அந்தப்பைசாக்களை இயல்பாக எடுத்துக்கொண்டேன். எப்போதாவது டீ குடிப்பேன். பொரிகடலை வாங்கித்தின்றபடி ஒழுகிணசேரி வழியாக காட்டுநாயக்கர் குடியிருப்புக்கு ஏறி வடிவீஸ்வரம் வரை நடப்பேன். என்னுடைய எதிர்கால மாபெரும் நாவல்களைப்பற்றி கற்பனைசெய்வேன்.

”எனக்கு பீசு குடுக்க பைசா இல்லல்லா?” என்றேன். அவர்களுக்கெல்லாம் பெரும்பாலும் கல்லூரிக் கட்டணங்கள் இல்லை. உதவித்தொகையும் உண்டு.

அருமை அனுதாபத்துடன் ’உள்ளதாக்குமே….இந்த சர்க்காருபயக்க பாவங்ககெல்லாம் பைசா குடுத்தா என்னலே? தின்னுகானுகள்லா?’ என்றான்.

என் அப்பா இரண்டாம் திருமணம் செய்துகொண்டு சித்தி பேச்சுகேட்டு என்னைத் துரத்திவிட்டுவிட்டார் என்ற கதை அங்கே புழக்கத்திலிருந்தது. நெல்சனுக்கே அப்படித்தான் தெரியும்.

அருமை ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டான். புகையை மூக்குவழியாக ஆசுவாசமாக விட்டபடி ”நீ என்னவாக்கும் மக்கா இருந்து படிக்கே?’ என்றான்.

நான் ‘சும்மா…’ என்றேன்.

‘நேரம்போக்குக்காலே?’

‘இல்ல…இது அறிவாக்கும்’

அவன் என்னை ஓரமாகப் பார்த்து ‘அறிவுண்ணாக்க?’ என்றான்

‘அறிவுண்ணா…இந்த இது இருக்குல்லா…’

‘என்னல வச்சு சவிட்டுதே? என்னல அறிவு சொறிவு?’

நான் குழம்பி ‘அம்பேத்கரு கையிலே புக்கு இருக்குல்லா?’ என்றேன்.

ஒரே கணத்தில் அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ‘அறிவாக்கும், இல்லியா?’ என்றான் மென்மையாக.

‘ஆமா’

‘படிக்கியது கஷ்டமுல்லா?’

‘பளகினா ஈஸியாக்கும்’

‘எடைக்கிடை சாயை குடிக்கணும்லா?’

‘ம்’ என்றேன்

அருமை பீடியை ஆழ இழுத்தபடி ‘அறிவு நல்லதாக்கும்’ என்று சொன்னான்.

நாங்கள் கட்டிட இடத்துக்குச் சென்று சேர்ந்தபோது அங்கே வேலைக்கு ஆட்கள் வந்துவிட்டிருந்தார்கள். வேலை ஆரம்பிக்கவில்லை. கான்கிரீட் மிக்ஸரில் ஒருவன் கிரீஸ் போட்டுக்கொண்டிருந்தான். கூடைகள், மண்வெட்டிகள் , மண்கோரிகள் எல்லாம் சிமிண்ட் நிறத்தில் குவிந்து கிடந்தன. பெண்களும் ஆண்களும் அமர்ந்து வெற்றிலை போட்டு மென்றுகொண்டு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். அத்தனை உல்லாசமாக இருக்கும் ஒரு மக்கள்கூட்டத்தை நான் அதுவரை பார்த்ததில்லை.

அருமை என்னை குஞ்சன்மேஸ்திரியிடம் அறிமுகம் செய்தான். அவர் என்னை ஏற இறங்கப்பார்த்து ‘ஏமான்மாருக்கு இஞ்ச சிமிண்டுசோலி பிடிக்காது’ என்றார்

‘நான் செய்வேன்’ என்றேன்

‘செய்யுமுண்ணா செய்யும்…மத்தவனுக்கு பதினஞ்சு. உமக்கு பந்தரண்டு. சோலி திருப்தியானா கூட்டிக்குடுக்கேன். என்னங்கியேரு?’

அவர் என்னை மரியாதையாகப்பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னைப்பார்த்ததுமே சாதியை ஊகித்ததை வைத்துப் பார்த்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

குஞ்சன் மேஸ்திரி திரும்பி, ‘ஏட்டி இந்நா ஒரு ஏமான் வந்திருக்காரு… காயும் தொளையும் இருக்கப்பட்டவளுக வளைச்சுபோடுங்கடீ’ என்றார். பெண்கள் எல்லாரும் என்னைபபர்த்துச் சிரித்தார்கள்.

வேலை ஆரம்பித்தது. முதலில் எனக்கு அங்கே என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் தறிகெட்டு அங்குமிங்கும் அலைவதுபோலத் தோன்றியது. என்னிடம் செல்லப்பண்ணன் நான் செய்யவேண்டிய வேலையைச் சொன்னார். மணல் அரிப்பதற்கான வலை சாத்தி வைக்கப்பட்டிருக்கும். அதன் மீது மணலை அள்ளி அள்ளி வீசவேண்டியதுதான். அவ்வளவேதான்

‘அவ்வளவுதானா?’

‘செய்யி….பாப்பம்’

நான் முதல் மண்வெட்டி மண்ணை வீசியதுமே செல்லப்பண்ணன் ‘வே, நீரு நம்மாட்டிக்காரருல்லா?’ என்றார்

‘அவருக்கு அங்க கொலேரம் பக்கமாக்கும். தொளிவேலை செய்யப்பட்டவரு’ என்று ராபின்சன் கண்டுபிடித்தார்.

குலசேகரம்பக்கம் வயல் முழுக்க கருங்களிமண். வாழைக்கும் நெல்லுக்கும் மிக உகந்தது. ஆனால் எருமை மட்டும்தான் வயலில் இறங்கமுடியும். காளை இறங்கினால் கயிறுகட்டி எருமையை வைத்து இழுத்து கரைசேர்க்கவேண்டும். கால் புதைந்து தளைபாய்ந்துவிடும். வெட்டித் தாழ்த்திய மண்வெட்டியை மண் உதடுகளால் கவ்விப்பிடித்துக்கொள்ளும். இழுத்துப்பிய்த்து எடுத்து வீசி மறிக்கவேண்டும். மண் முனகியபடி கவ்வலை விட்டுக்கொடுத்தபின் சப்புகொட்டும். வெட்டுபள்ளத்தில் நீர் கசிந்து தேங்கும். எங்களூர் மண்வெட்டிக்காரர்கள் இளமையிலேயே குறைவான உடல்விசையில் மண்வெட்டியைக் கையாள்வது எப்படி என்று கற்றுக்கொண்டிருப்பார்கள்.மண்வெட்டி போடுவதே அழகிய நடனம் போலிருக்கும்.

பதினொருமணி இளங்குடிக்கு அமர்ந்தபோது நான் அவர்களில் ஒருவனாகிவிட்டிருந்தேன். ‘கைய நீட்டும் வே’ என்றார் ராபின்சன்

கையில் தோல் பிய்ந்துவரவில்லை. சற்றே சிவந்திருந்தது, அவ்வளவுதான்

‘சோலி தெரியும்…செஞ்சு பளக்கமில்ல” என்றார் ராபின்சன்

‘எனக்க அண்ணனாக்கும் எல்லா வேலையும் செய்யுகது’ என்றேன்

‘செவந்துபோட்டே’ என்று வடிவுடையா எட்டிப்பார்த்துச் சொன்னாள்.

‘கொடுத்துச்சிவந்த கரம்லா” என்றார் செல்லப்பண்ணன்

‘பிள்ள இஞ்ச என்ன செய்யுது?’ எசிலி ஆர்வமாக கேட்டாள்

‘காலேஜிலே படிக்கேன்’

‘அருவு செலவுக்கு இஞ்ச வாறது என்ன?’

‘ஆமா’ என்றேன்

எசிலியின் மகள் ‘காலேசிலே ஏமான் என்ன படிக்குது?’ என்று கேட்டாள். கரிய ஈறுகளில் பளிச்சிட்ட பற்கள். இரட்டை மூக்குத்தி கொண்ட சிறிய நாசி. சிரிக்கும் கண்கள். கரிய வட்டமுகம்

‘லவ்வுக்காக்கும் படிக்கியது….உனக்கும் படிப்பிச்சு குடுப்பாரு…போறியாட்டீ?’

‘லவ்வுகதுக்கு நான் சொல்லிக்குடுக்குதேன்….ஒரு வாரம் வரச்சொல்லுங்க’

சிரிப்பு. நான் அவள்பக்கம் திரும்புவதையே தவிர்த்தேன்.

பின்னர் என்னிடம் சிமிண்ட் சாந்தை சட்டியில் வெட்டிப்போடும் வேலை சொன்னார்கள். சட்டிக்கு மூன்று மண்வெட்டிச் சீந்து சிமிண்டு. பெண்கள் வரிவரியாக வந்து வாங்கிச் செல்வார்கள். குனிந்து சட்டி விளிம்பைப்பற்றி அவர்களின் தலையில் இருக்கும் சும்மாட்டில் ஏற்றி வைக்கவேண்டும்.

எசிலியின் மகள் பெயர் கிரேசி. அவள் சாந்து எடுக்கும்போது “ ஏமான் லவ்வுக்குப் படிச்சுதா?’ என்றாள்

நான் பதறி பிடியை விடப்போனேன். அவள் சிரித்துக்கொண்டு தூக்கிச்சென்றாள். பின்னர் ஒவ்வொரு வருகைக்கும் என் கண்ணைச் சந்தித்து கண்களாலேயே சிரித்தாள். நாக்கை நீட்டி ஆட்டிக்காட்டினாள்.

அன்றுமாலை வேலை முடிந்தபோதுதான் நேரம் மிகவேகமாக ஓடி அடைந்திருப்பதை உணர்ந்தேன். ஒருநாள் என்பது அவ்வளவு குறுகியது என்பது அப்போதுதான் புரிந்தது. தகரப்பீப்பாயில் நிறைத்து வைக்கப்பட்ட தண்ணீரில் கைகால்களை கழுவிக்கொண்டு துண்டால் துடைத்தபின் வேட்டியைக் கட்டி சட்டையை போட்டுக்கொண்டேன். உடம்பு எடையே இல்லாமல் காற்று நிறைக்கப்பட்டதுபோலிருந்தது

வரிசையாக நின்று மேஸ்திரியிடமிருந்து ரூபாயை வாங்கிக்கொண்டோம். அருமை ரூபாயை பலமுறை எண்ணினான். நோட்டுகளை தூக்கி மாலைவெயிலில் காட்டி ஒளிஊடுருவச்செய்து பரிசோதனை செய்தபின் ஒருநோட்டை மாற்றிவாங்கிக்கொண்டான். எனக்கு இரண்டு ஐந்து ரூபாயும் இரண்டு ஒரு ரூபாயும். நான் ரூபாய்த்தாள்களை நீவி நீவிப்பார்த்தேன். ஐந்துரூபாய்த்தாள்கள் புத்தம்புதியவை.

‘என்னல வச்சுகிட்டு மோந்துபாக்கே? வா’

நாங்கள் நடந்துசெட்டிகுளம் பஸ் ஸ்டாண்டை அடைந்தோம். ‘லே அரும வாலே பரோட்டா திம்போம்’

‘சும்மா கெடலே. பைசா கெடந்து உறுத்துகோ? வாலே’

பேசாமல் நடந்தேன். செட்டிகுளம் ஜங்க்‌ஷனில் மட்டும் இத்தனை கடைகளில் கோழி பொரித்து விற்கிறார்கள் என்ற தகவல் எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. எச்சில் ஊறியதை துப்பிக்கொண்டே இருந்தேன்.

‘மேலு நோவுதாலே?’

எனக்கு உடல் வலிக்கவில்லை. ஆனால் ஒருமாதிரி மிதப்பாக இருந்தது. நடக்கும்போது நீருக்குள் நடப்பதுபோல கால்கள் எம்பின.

‘சிமிண்டுசோலி கஷ்டமாக்கும். மேலுவேதனை உண்டு. அதுக்காக நேரா போயி நாறவெள்ளம் குடிப்பானுக. பின்ன கத்திபோயி வாலு வந்தது மாதிரித்தான். அங்க கிட்டுகத இங்க குடுக்கணும். பின்ன இங்க குடுக்கதுக்காக அங்க சோலி செய்யணும்… செல்லப்பண்ணன் இன்னும் அரமணிக்கூறிலே பைசாவ தீத்துப்போடுவாரு. பிள்ளையளுக்கு ஆறிப்போன அஞ்சு பருப்புவட வேங்கிட்டுபோவாரு…அதாக்கும் குடும்பத்துக்குள்ள மொத்த வரவு’

விடுதிக்குச் சென்றதும் அருமை என்னிடம் ’சிமிண்டோட ரூமுக்குப் போவாத கேட்டியா? சிமிண்டு ரூமுக்குள்ள வந்தா போவாது….இங்கிண குளிச்சுட்டு மேல போவம்”

நான் ‘சரி’ என்றேன்

“துணிகள இங்கிண வச்சுக்க..நாளைக்கு போறப்ப எடுத்துக்கிட்டு போலாம்…’ என்றான் ‘சோப்பு இட்டு குளிக்காத கேட்டியா? தோலு எரிஞ்சுபோடும். துணிய வச்சு தேச்சுக்க…”

‘செரி”

”ரூமில தேங்காயெண்ண இருக்கு…தேகத்தில பூசிக்கிட்டு ஒறங்கினா காலம்பற எரிச்சல் இருக்காது”

ஒரு பக்கெட் நீரில் குளித்தேன். நகக்கண்ணுக்குள் சிமிண்ட் ஏறியிருந்தது. தலைமுடி சிக்குபோல ஒட்டியது. மூக்கைச் சிந்தியபோது சிமிண்ட் வந்தது. துண்டை முறுக்கி உடம்பைத் தேய்த்தேன். நீரைவிட்டு குளித்துவிட்டு வந்தேன். குளிக்குமிடத்திலிருந்து படி ஏறி விடுதியறை வரைக்கும்கூட என்னால் நடக்கமுடியும் என்று தோன்றவில்லை. உடம்பு முழுக்க தூக்கம் நிறைந்து கனத்தது. அறை தொலைதூரத்தில் நீரில் நிற்கும் படகுபோல அசைந்துகொண்டிருந்தது. நான் வைக்கோற்போரில் நடப்பதுபோல கால்களை உந்தி உந்தி சென்றுகொண்டிருந்தேன்.

மணி ஏழுதான் ஆகியிருந்தது. நாகமணியும் சந்திரனும் அறைக்குள் இருந்தனர். நாகமணி கடிதமெழுதிக்கொண்டிருந்தான். சந்திரன் காதருகே சிறிய ரேடியோவை வைத்து பாட்டு கேட்டு காலாட்டிக்கொண்டிருந்தான். காலையில் நான் எழுந்துசென்ற பாயை அப்படியே விரித்து படுத்திருந்தான். அருகே என்னுடைய புத்தகம் குப்புறக்கிடந்தது. மார்க்ஸையும் எங்கல்ஸையும் பற்றிய நினைவுக்குறிப்புகள். நீலநிற அட்டைகொண்ட சோவியத் புத்தகம்.

‘என்னலே, சோலி சொயம்பா? பாத்த நாநூறு மில்லி சாத்தினவன் மாதிரி இருக்கே?’

நாகமணி என்னைத் திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். ஆறாம்கிளாஸ் பையனைப்போல உருட்டி உருட்டி ஒவ்வொரு எழுத்தாக எழுதிக்கொண்டிருந்தான். மலைப்பகுதிப்பையன்கள் எல்லாரும் அப்படித்தான். அவர்கள் எழுதப்பழகியிருக்கவே மாட்டார்கள்.

ஏதாவது சொல்லவேண்டுமென்று நினைத்தேன். ஆனால் என் மனதில் சொற்கள் நனைந்து ஒட்டியிருந்தன. உதடுகள் களைத்து தூங்கியிருந்தன

அமர்ந்தபோதுதான் தரை என்பது எவ்வளவு இனியதென்று புரிந்தது. சமதளம். எதையும் தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பற்றது. எடையற்றது. விரிந்து பரந்தது. மெல்ல படுத்தபோது என் உடலுறுப்புகளெல்லாம் கழன்று தனித்தனியாக பாயில் படிவதுபோலத் தோன்றியது. சந்திரனிடம் நான் சொல்ல நினைத்த சொல் சூடான பானையில் நீர்த்துளி உலர்ந்து மறைவதுபோல அழிந்தது.

உலுக்கப்பட்டு விழித்துக்கொண்டேன். எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. வாய் உலர்ந்திருந்தது. தொண்டையில் மணல் திரண்டிருப்பதுபோல வறட்சி. மேலே எரிந்த நாற்பதுவாட் பல்பு கண்கூசும்படி ஒளிவிட்டது

‘லே…லே எந்திரிலே’

எழுந்து அமர்ந்து சொறிந்துகொண்டேன்

‘சோத்தத் தின்னுட்டுப்படுலே… தாயளி எடுத்துச் சாத்தின மாதிரில்லாலே உறங்குதான்’

அவர்கள் தட்டுகளுடன் அமர்ந்தார்கள். என் அலுமினியத் தட்டில் சோற்றுக்குவியல். ஆனால் என் மொத்த சுயமும் மணல்பொம்மை போல உதிர்ந்தபடி இருந்தது..

‘எனக்கு வேண்டாம்….’ என்றபடி திரும்ப பாயில் சரிந்தேன்.

அருமை எழுந்து என்னை ஓங்கி ஓர் உதை விட்டான். வலிதாளாமல் நான் அலறியபடி எழுந்து அமர்ந்து விட்டேன்

‘தின்னுலே நாயே”

நான் அவனை அர்த்தமில்லாமல் பார்த்தேன். அறைக்காட்சி மெல்ல அலையடிப்பதுபோலிருந்தது. உதைபட்ட கணம் இப்போது அறுபட்டு வெகுவாக அப்பால் சென்றுவிட்டது. இந்தக்கணத்தில் என்னைச்சுற்றி நான்கு முகங்கள்.

”தின்னுலே”

“எளவு, சரக்கு வல்லதும் அடிச்சானாலே?”

“சோலி செய்த சீணமாக்கும்”

நகர்ந்து சோற்றின் முன் அமர்ந்தேன். ஒருவாய் அள்ளி வாயில் வைத்தேன். அக்கணம் வயிற்றுக்குள் இருந்து பல்லாயிரம் கைகள் முளைத்தெழுந்து அந்த கவளத்தைப் பிடுங்கி உள்ளே கொண்டு சென்றன. அள்ளிச் சாப்பிட சாப்பிட சோறு போதவில்லை என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. இவ்வளவுதான் இருக்கிறது. இவ்வளவுதான் மிச்சம்.

தட்டை வழித்துச் சாப்பிட்டேன். நாகமணி அவன் தட்டிலிருந்து ஒரு பெரிய பிடி சோற்றை அள்ளி எனக்குப் போட்டான். நான் அதையும் அள்ளி விழுங்கினேன்

‘இந்தப் பசிய வச்சுக்கிட்டாக்கும் வேண்டாம்னு சொல்லுதான்”

‘சோலி செய்தா வாற உறக்கம்லா”

நான் கையை நக்கிவிட்டு அப்படியே விழுந்து மீண்டும் தூங்கிவிட்டேன்

கண்விழித்தபோது வந்த முதல் எண்ணம் மொத்தக்காட்சியும் நான் ஒருபோதும் உணராத துல்லியத்துடன் இருந்ததுதான். நிறங்கள் மணிவெளிச்சம் உமிழ்ந்தன. பரிமாணங்கள் துலக்கம் பெற்றிருந்தன. என்ன ஆயிற்று? எங்கே இருக்கிறேன்? முந்தைய நாள் மாலை நானும் அருமையும் செட்டிகுளம் வழியாக நடந்தே வந்த நினைவு மட்டும்தான் எஞ்சியிருந்தது. மறுகணம் அந்த பணத்தின் நினைவு

பாய்ந்தெழுந்து சட்டையை எடுத்து பையிலிருந்து ரூபாயை எடுத்துப்பார்த்தேன். இரண்டு புதிய ஐந்து ரூபாய். இரண்டு ஒருரூபாய்..என்னுடைய சொந்த ரூபாய். நானே ஈட்டியது. என்னுடையது மட்டுமேயான ரூபாய்

அந்த நோட்டுகளை மூக்கில் வைத்து முகர்ந்தேன். கன்னத்தில் தேய்த்துக்கொண்டேன். ரூபாய் அத்தனை அழகும் மணமும் கொண்டதாக ஒருபோதும் இருந்ததில்லை. அந்த ரூபாயை செலவுசெய்யமுடியும் என்றே தோன்றவில்லை. அதை இன்னொருவர் கையில் கொடுக்கக்கூட முடியாது

சந்திரன் தரையில் உருண்டுசென்று சுவர் ஓரமாக ஒண்டி தூங்கிக்கொண்டிருந்தான். கட்டிலில் நாகமணி தூங்கிக்கொண்டிருந்தான். அருமையும் ஜானும் இல்லை. ஜான் ஞாயிறு காலைகளில் ஆராதனையை தவறவிடமாட்டான். ரூபாயை மடியில் கட்டிக்கொண்டேன். அதை அறையில் சந்திரன் பெட்டிக்குள் வைத்து பூட்டலாம்தான்.ஆனால் என் உடலிலேயே அது இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

கோபால் பல்பொடி எடுத்து உள்ளங்கையில் கொட்டிக்கொண்டு பல்தேய்த்தபடி வராந்தா வழியாக நடந்தேன். காலையொளியில் வேப்பமரத்தின் பச்சையிலைத் தகடுகள் மின்னின. மணல்பரப்பில் உதிர்ந்த மஞ்சள் வேப்பிலைச்சருகுகள் பொன்னாலானவை போலிருந்தன. என் உடல் முழுக்க இனிய தினவு. இடுப்பில் தொடைகளில் புஜங்களில் இனிய உளைச்சல். நடக்கும்போது என் உடல் முழுக்க சுருள்வில்கள் இறுக்கமாக முடுக்கப்பட்டதாக, என் மூட்டுகள் முழுக்க எண்ணைபோட்டு செம்மையாக்கப்பட்டதாக உணர்ந்தேன்

படிகளில் இறங்கும்போது கிரேசி நினைவு வந்தது. புன்னகைசெய்துகொண்டேன். இன்று அவள் கண்களைத் தவிர்க்கக் கூடாது. அவள் கண்களை நேராக நோக்கி ‘சாயை குடிக்க வாறியாடீ?’ என்று கேட்கவேண்டும். அவளுடைய நாக்கு சிவப்பு அல்ல. மெல்லிய செந்நீலம். ஆனால் கண்பரப்புகளும் பற்களும் மட்டும் என்ன வெள்ளை. உப்புப்பரலின் வெண்ணிறம்

நான் பல்தேய்த்துவிட்டு மேலே வந்தேன். விடுதியில் காலையில் டீ கிடையாது. கருப்பட்டிக்காப்பிதான். பெரிய அண்டாவை கருப்பட்டியும் காபித்தூளும் போட்டு அனல் மேல் வைத்திருப்பார்கள். தளதளத்து மூடியைத் தள்ளிய காப்பியில் இருந்து நான்கு டப்ளர்களுக்குண்டானதை தகரப்போணியில் அள்ளிக்கொண்டேன். காப்பியுடன் அறைக்கு வந்தேன்

அருமை கண்ணாடி நோக்கி தலை சீவிக்கொண்டிருந்தான். நான் நாகமணியை காலைப்பிடித்து உசுப்பி எழுப்பினேன்

“என்னல?’ என்றான்

‘காப்பி இருக்கு”

அவன் எழுந்து காப்பியை டம்ளரில் விட்டு சூடாகவே குடித்தான். சந்திரனை நான் கூப்பிட்டதுமே எழுந்துவிட்டான். காபி வாசனை கிடைத்திருக்கும். காபியை அவனே ஊற்றிக்கொண்டான்

‘அருமை, லே காப்பி குடிக்கியாலே” என்றான் நாகமணி

‘நான் குடிச்சாச்சு”

நான் சட்டையை எடுத்துபோட்டுக்கொண்டு அருமையிடம் ‘”போலாமா?’ என்றேன்

‘நீ வராண்டாம்’ என்றான் அவன் கண்ணாடியைவிட்டுத் திரும்பாமலே

‘ஏன்லே?’ என்று பதற்றத்துடன் கேட்டேன்

‘நீ வந்தா செரிவராது”

”ஏன்?’

‘வேண்டாம்ணு சொன்னேன்ல? ’ என்று திரும்பிச் சீறினான்

‘ஏன்?’ என நான் தொண்டை அடைக்க கேட்டேன்

நாகமணி “ஏம்லே? அவனுக்கு நாலு சக்கறம் கிட்டினா உனக்கென்ன கேடு?’

‘லே நாகம், நீ உனக்க சோலியப்பாரு கேட்டியா? இது சங்கதி வேறயாக்கும்’

‘குட்டிகளிட்ட வெளையாடுகானோ”

‘இவன் அப்பிடிப்பட்ட ஆளொண்ணும் இல்ல”

’பின்ன?’

‘லே, இவன் புக்கு படிக்கப்பட்ட ஆளாக்கும்…நீ கண்டியா…நேத்து இவன் கெடந்து ஒறங்கின ஒறக்கம்? அந்த புக்கப்பாரு.. சப்பின பல்லி மாதிரியாக்கும் கெடக்குது’

நான் பார்த்தபோது என் புத்தகம் அழுந்திக்கிடந்தது. இரவு அதன் மேல்தான் தூங்கியிருக்கிறேன்

‘நான் இனிமே…’ என்று எதையோ ஆரம்பித்தேன்

‘லே, இது செரிவராது பாத்துக்கோ. இது வேற ஏற்பாடாக்கும். அரக்கிலே ஈச்ச இருக்கது மாதிரியாக்கும் இதில கைய வைக்கியது. பின்ன எந்திரிச்சு பறக்கமுடியாது பாத்துக்க’ அருமை சொன்னான் ‘நீ புக்கு படிக்கணுமானா இனி இந்தமாதிரி சோலிக்கு வரப்பிடாது…’

‘அவன் சொல்லுகதில நியாயம் உண்டும்’ என்றான் நாகமணி

‘எனக்கு பீசு அடைக்க பைசா?’

‘ஏல பீசு பதினஞ்சு ரூவாதானே? நான் தாறேன்…. ‘ அருமை சொன்னான்

‘நீ என்ன மயித்துக்கு குடுக்கே? நாலாப்பிரிச்சு குடுப்பம்’ என்றான் நாகமணி

நான் சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தேன்

‘ஆளறியாம வேற வல்ல எடத்திலயும் வேலைக்குப்போறதக் கண்டா வெட்டி வகுந்திருவேன்…கேட்டியாலே?’

’இல்ல’ என்றேன் கண்ணீருடன்.

சிலகணங்கள் அமைதி. ‘அறிவாக்கும்’ என்றான் அருமை.

*

புறப்பாடு 1

புறப்பாடு 2

முந்தைய கட்டுரைகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை கடிதங்கள்