புறப்பாடு 2 – அனலெரி

புறப்பாடு-1 சூழிருள்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான இலவசவிடுதி காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே இருந்தது. மஞ்சள்நிறமான அரசுக்கட்டிடம். மழைக்கறைபடிந்தது. ஒரு பழைய தபாலட்டை என்ற எண்ணம் அதை நினைக்குபோதெல்லாம் வரும். பிரியமான எதுவோ எழுதப்பட்டது. அது பழைமையாகும்தோறும், மூலைமடிந்து கிழியும்தோறும் இன்னும் பிரியமானதாக ஆகிறது.

அதன் அறைகள் அன்றைய கணக்குக்கு அகலமானவை. அறைக்கு இரண்டு இரும்புக்கட்டில்கள். ஒருகாலத்திய ராணுவநீலநிறம் துருப்பிடித்து மறைந்துபோனவை. சன்னல்களுக்கு கட்டளைகள் கிடையாது இரும்புச்சட்டங்கள்தான். அவை சுவரில் துருவேறி ஒட்டியிருக்க கதவுகள் கீல் கழன்று தொங்கி நிற்கும். பலர் அவற்றைச் சேர்த்து கட்டிவைத்திருப்பார்கள். பல சன்னல்களுக்கு கதவுகள் இல்லை. புத்தகங்கள் வைக்க அடுக்குப்பலகையாக பிறரால் பேர்த்து கொண்டுசெல்லப்பட்டிருக்கும். அந்த அறைவாசிகள் பழைய கைலிகளை சன்னல்திரையாக தொங்கவிட்டிருப்பார்கள்.

அறைகளுக்குள் சுவரில் கடப்பைக்கல் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அலமாராக்களில் பெரிய ‘எவர்சில்வர்’ தட்டுகள்., டம்ளர்கள், பழுப்புத்தாளாலோ சோவியத்நாடு இதழின் காகிதத்தாலோ அட்டைபோடப்பட்ட, நுனிசுருண்டு எழுந்த புத்தகங்கள். அறைமூலையில் கசிந்து சில்லிட்டிருக்கும் சிவந்த குடிநீர்ப்பானை மீது அறையை சுருட்டி நீளமான துளியாக்கி பிரதிபலித்துக்கொண்டிருக்கும் டம்ப்ளர்.

சுவர் முழுக்க விதவிதமான கறைகள். மாடியிலிருந்து வந்த மழைநீர் ஊறலில் பூசணம் படிந்து உருவாகும் கறை வளையம்வளையமாக அலங்காரத் திரைச்சீலை போலிருக்கும். மைக்கறைகள். சாப்பாட்டுக்கறைகள். மூக்குசிந்திய கறைகள். அந்தக்கறைகள் நடுவே ‘ உன்னைக் கைவிடுவதில்லை’ என்று சொல்லும் ஏசுவும் ‘யாமிருக்கப்பயமேன்’ என்று கையருளும் செந்தூர் முருகனும்.

அறையுடன் கழிப்பறை இணைப்பு கிடையாது. பொதுக்கழிப்பறைகள் அறைவரிசைக்கு இரு எல்லைகளிலும் பக்கத்துக்கு இரண்டாக இருந்தன. அங்கே குழாயில் தண்ணீர் வராது. கீழே ஒரு சிமிட்டித்தொட்டியில்தான் தண்ணீர் நகராட்சிக்குழாய் வழியாக வந்து தேங்கும். அங்கே மொண்டு துணி துவைக்கும் தண்ணீரை திரும்ப இன்னொரு தொட்டியில் ஊற்றிவிடவேண்டும். அதை அள்ளிக்கொண்டுவந்து கழிப்பறைக்குப்பயன்படுத்தவேண்டும். ஒருவருக்கு ஒரு வாளித்தண்ணீருக்குமேல் எப்போதும் அனுமதிகிடையாது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே துணிதுவைக்க அனுமதி.

அறைக்கு இருவர் தங்கலாம். ஆனால் எல்லா அறையிலும் நான்குபேருக்குக் குறையாமல் தங்கியிருந்தார்கள். அதிகாரபூர்வமாகத் தங்கியிருப்பவர்களின் உறவுப்பையன்கள்தான் அதிகமும். நாகர்கோயிலில் விதவிதமான பட்டறைகளில் வேலைசெய்பவர்கள், கடைகளில் எடுபிடிகளாக இருப்பவர்கள்.ஏராளமான ‘முற்படுத்தப்பட்ட’ பரமஏழைகள் கல்லூரியில் அறிமுகமான நண்பர்களின் கருணையால் அங்கே ஒண்டிக்கொண்டிருந்தார்கள். அதிகமும் தடிக்காரன்கோணம் போன்ற மலைப்பகுதியில் குடியேறியவர்களின் பிள்ளைகள். அங்கிருந்து வந்துசெல்ல முடியாது. இங்கே பணம்கொடுத்துத் தங்குமளவுக்கு நிலையும் இருக்காது.

அன்றெல்லாம் கல்லூரிகளில் தானாகவே தலைமைப்பொறுப்புக்கு வந்த சிலர் இருப்பார்கள். நெல்சனைப் போல. ஒருவன் சிரமப்படுகிறான் என்று கண்டால் ‘லே இஞ்சவாலே…தாளி என்னல முளிக்கே?’ என்று அன்புடன் ‘பிடதி’யில் அறைந்து விசாரித்து பிரச்சினைக்குத் தீர்வு சொல்வார்கள். பொதுவாக அவர்களை எதிர்த்து கருத்துரைக்கும் வழக்கம் இருப்பதில்லை.

பத்தரை மணிக்கே போராட்டம் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள். கும்பல்கள் ஒருதலைராகத்துக்கு கிளம்பிச்சென்றன. அன்றெல்லாம் மீனாட்சி அரங்கில் அந்தப்படம் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது வருடக்கணக்காக. நான் கல்லூரியில் சொங்கிப்போய் இருப்பதைக்கண்டு நெல்சன் என்னை அதட்டிவிசாரிக்க என் அப்பா என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டதாகச் சொன்னேன். ‘சொந்தக்காரனுவ ஆருமில்லியாலே?’ என்றான் நெல்சன்.

இல்லை என்று தலையாட்டினேன்.

‘கையில மோதிரமோ செயினோ மற்றோ உண்டால?’

அதுவும் இல்லை.

‘அப்பம் கையிருப்பு மத்தது மட்டுமாக்கும். அது வெளையல்ல கேட்டியா?. வெளைஞ்சா நல்ல வெலைக்கு வித்துப்போடலாம். நாயம்மாருக்கு இப்பம் நல்ல ரேட்டுல்லா?

கூட்டச்சிரிப்பு. நடுவே தலைகுனிந்து கண்ணீர் மல்கினேன்

‘செரிலே மக்கா…நீ நம்ம ஜான் பயலுக்க முறியிலே நில்லு…உனக்க அப்பன் ஒரு சமாதானத்துக்கு வரட்டு… கிளவன்மார நாம அப்பிடி ஏத்தி விடப்பிடாதுல்லா?’

ஜான் செல்வக்குமாரின் அறையில் அவனுடைய சட்டபூர்வ அறைத்தோழனான நாகமணி தவிர மேலும் இருவர் ஏற்கனவே இருந்தார்கள். பனச்சவிளை சந்திரன். முள்ளங்கினாவிளை அருமைதாசன். என் பையுடன் தயங்கியபடி வர நெல்சன் அதிகாரத்துடன் விடுதிக்குள் சென்றான். சட்டைபோடாமல் லுங்கியுடன் நடமாடிய பையன்களிடம் ‘மாப்ள என்னல …என்ன சோலி” என்றும் ‘மத்தவள இப்பம் காணுகதுண்டா?’ என்றும் ‘வீட்டில லெட்டர் போடுகினுமா?’ என்றும் நலம் விசாரித்தபடி உள்ளே சென்றான்.

நெல்சன் முழுக்கைச் சட்டைபோட்டு , கைகளை இறுக்கமாக புஜங்களில் சுருட்டிவைத்து அதில் ஒரு கைக்குட்டையை செருகியிருப்பான். ஜெ.ஹேமச்சந்திரன் அப்படி வைத்திருப்பார். அவனை தலைவனாக்கியது அந்தச் சிவப்புக்கைக்குட்டைதான். வேட்டியை தொடைவரை தூக்கிக் கட்டியிருப்பான். மீசை இல்லையென்றாலும் இருப்பதாக அவன் நம்புவது பாவனைகளில் தெரியும். மார்த்தாண்டம்பகுதி நாடார்களுக்கே உரிய வகையில் பதினெட்டு வயதிலேயே முன்வழுக்கை ஆரம்பமாகியிருந்தது

ஜான் செல்வக்குமாரின் அறையில் அவன் கட்டிலில் படுத்திருந்தான். நாகமணி இல்லை. மற்ற இருவரும் தரையில் விரிக்கப்பட்ட பாய்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். நெல்சன் கட்டிலில் அமர்ந்து ஒரு சிகரெட்டை ஆசுவாசமாக பற்றவைத்துக்கொண்டு ‘என்னலே மக்கா…எப்டி போவுது காரியங்க?’ என்றான்

ஜான் ‘கர்த்தர் அருளாலே’ என்றான்

‘மத்தவனுக்க பிரச்சினை இப்பம் ஒண்ணுமில்லல்லா….இருந்தா சொல்லிப்போடு . தோளரிட்ட சொல்லி ரண்டு தட்டு தட்டி வைப்பம்’

‘இப்பம் அவன் காட்டில இல்லல்லா…டிரான்ஸ்பர் ஆயாச்சு’

‘எரப்பாளி…’ புகையை ஊதி ‘இது நம்ம பயலாக்கும். இவன் இங்கிண நிக்கட்டும்…’

‘ஓம்’ என்றான் ஜான். ஆனால் என்னை திரும்பிப்பார்க்கவில்லை.

‘பின்ன என்ன காரியங்க? இப்பம் சோலிகள் எங்கயாக்கும்?’

‘கன்யாகுமரியில கெட்டிடப்பணி நடக்குல்லா….அங்க’

‘காண்டிராக்டர் சொன்னத குடுக்கானுகளா? மேசிரி உறிஞ்சுகதுண்டா?’

‘ரெண்டுரூவா எடுப்பான்’

‘ரெண்டுரூவா கணக்காக்கும். அதுக்குமேலே எடுத்தாண்ணா சொல்லு….நவரக்கிளி பிளிஞ்சுபோடுவோம்…. லே இவனுக ஏம்ல இப்பிடி உறங்குகானுக?’

‘ரெண்டாளும் மீனாச்சியில டிக்கெட்டு குடுக்கப்போறானுக’

‘சோ முடியது பன்னிரண்டுக்குல்லா?’

‘தியேட்டர தூத்து துடைச்சு, கக்கூசும் களுவிட்டு வரணுமாம்…. வாறதுக்கு எப்ப்டியும் மூணுமணி ஆவும்’

படுத்திருந்த அருமைதாசனை எட்டி உதைத்தான் நெல்சன் ‘லே தாயளி எந்திரிலே….செத்துல்லா கெடக்கான்’

அருமைதாசன் எழுந்து எச்சில்கோழையை துடைத்து ‘ஆரு?’ என்றான்

‘உனக்க அம்மைக்க கெட்டினவன்…எந்திரிலே எரப்பாளி’

‘சகாவாக்கும்’ என்றான் ஜான்

அருமை எழுந்து லுங்கியை சுற்றிக்கொண்டான். அவன் ஒட்டுமொத்தமாகவே வெளிறியிருந்தான். ‘வணக்கம் தோழர்’

‘லே மீனாச்சிக்காரன் பைசா மிச்சமில்லாம குடுக்கானா?’

‘அதுக்கு குறவில்ல’

‘பின்ன?’

‘நாறச்சொல்லுல்லா சொல்லுகான்? தோலு எரிஞ்சுபோற வார்த்தையாக்கும்’

‘அதிப்பம் அப்பிடி பேசாத எந்த மோலாளி இருக்கான்? கைய நீட்டினா சொல்லு, பாத்திருவோம்’

‘கைய ஒண்ணும் நீட்டமாட்டான்’

‘செரி… வாறேன்….இந்தப்பய இங்கிண நிக்கட்டு. நாயராக்கும்…புக்கு வாசிப்புகள் உண்டு. அடங்கி இருப்பான் கேட்டியா?’

நெல்சனை வழியனுப்ப எல்லாரும் எழுந்தனர். நெல்சன் என்னிடம் எதுவும் சொல்லாமல் நடந்து சென்று வராந்தா எல்லையில் படியிறங்கி மறைந்தான். திரும்ப அமர்ந்தேன். அப்போதுதான் பார்த்தேன். எல்லாரும் என்னைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். ஆழமான அமைதி. முகங்களில் இருந்தது நட்பு அல்ல என்று தெளிவாகவே தெரிந்தது. பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

அருமை என்னிடம் ‘எந்தூருல?’ என்றான். அப்போது அறை அவனுடையது என்று எனக்குத்தோன்றியது. மறுநாள்தான் அவனும் அங்கே அகதிதான் என்று புரிந்தது. ஜான் அதிகாரங்களை விரும்புவதில்லை. நாளில் பெரும்பகுதியை ஜெபம் செய்ய செலவழிப்பவன் அவன்

‘திருவரம்பு’

‘பைசா உண்டும்லா? பின்ன என்ன மயிருக்கு இங்கிண வாற?’

‘அப்பா வீட்டுக்கு வராதேண்ணு சொன்னாரு’

‘பின்ன வல்ல ஓட்டலிலயும் போயி எலையெடுலே….’

தலைகுனிந்து கண்ணீர் மல்கினேன்.

ஜான் ‘ஏசுவே’ என்றான்.

அருமை மீண்டும் படுத்துக்கொண்டான். படுத்தபடி ‘இங்கிண உனக்கு பாயும் தலயணயும் ஒண்ணும் இல்ல பாத்துக்க….நூஸ்பேப்பர போட்டு படுத்துக்க….மத்தவன் பாய எடுத்தா அள்ளையில சவிட்டு விளும். கேட்டியாலே?’

‘ம்ம்’ என்றேன்

அப்படியே அமர்ந்திருந்தேன். ஜான் கையடக்க பைபிளை வாசிக்க ஆரம்பித்தான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கட்டிலில் அமர்ந்திருப்பது அதிகப்பிரசங்கம் என்று பட்டது. ஆகவே தரையில் அமர்ந்துகொண்டேன். என் பையை மடிமீதே வைத்திருந்தேன்.

நாகமணி வந்தான். பீடியின் கடைசி நுனியை சுண்டி வராந்தாவிலேயே வீசிவிட்டு என்னைப்பார்த்தான். ‘லே ஆருல நீ?’

நான் ஏறிட்டுப்பார்த்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஜான் திரும்பிப்பார்த்தபின் மீண்டும் பைபிளில் நீடித்தான்

’தோளர் விட்ட ஆளா?’

‘ம்’

‘கேறிவந்திருதானுவ…’ என முனகியபடி அவன் சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினான். கட்டிலில் படுத்துக்கொண்டான். உடனே அப்படியே தூங்கிவிட்டான். வெளியே மதியவெயில் நன்றாக ஏற ஆரம்பித்திருந்தது. விரிந்த முற்றத்தில் நாலைந்து வேப்பமரங்கள். அவற்றின் நிழல்கள் ஆடும் ஒளியசைவை அறைக்குள் உணரமுடிந்தது. கொடியில் கிடந்த நாகமணியின் மஞ்சள்நிறமான சட்டையின் நிறம் மேலும் பளிச்சிட ஆரம்பித்தது.

சட்டென்று மொத்த விடுதியே உயிர்பெற்றது. நூறு திரையரங்குகள் ஒரேசமயம் படம்விட்டு வாசல் திறந்தது போல ஆரவாரம். வராந்தா வழியாக கால்கள் திமுதிமுவென்று ஓடின. கூச்சல்கள், சிரிப்புகள்.

ஜான் பெரிய எவர்சில்வர் தட்டை எடுத்துக்கொண்டான். நாகமணி கீழே கிடந்த அருமையை மிதித்து ‘லே போலே’ என்றான்

‘போலே..’ என்று எரிந்துவிழுந்தபின் அவன் மறுபக்கம் திரும்பிக்கொண்டான்

நாகமணி ‘லே நடுவு நோவுதுலே போலே’ என்றான்

அருமை மீண்டும் தூங்கிவிட்டான்

நாகமணி எழுந்து லுங்கியை சுருட்டி ஏற்றிக்கட்டிவிட்டு இன்னொரு எவர்சில்வர் தட்டுடன் வெளியே சென்றான்.

சற்றுநேரம் கழித்து ஜானும் நாகமணியும் வந்தார்கள். இருவர் கையிலும் எவர்சில்வர் தட்டுகள் நிறைய சிவப்புநிறமான சோறு பெரிய குவியலாக இருந்தது. அதன்மீது ரத்தச்சிவப்பு நிறமான தேங்காய்க்குழம்பு ஊற்றப்பட்டிருந்தது. நான் முந்தைய தினம் மதியம் சாப்பிட்டதோடு சரி. நடுவே நெல்சன் வாங்கித்தந்த ஒரு டீயும் பருப்பு வடையும்தான்.என் வயிறும் வாயும் நாவும் உயிர்பெற்றன. உடலே எச்சிலாகச் சுரப்பதுபோல உணர்ந்தேன்

அருமையும் சந்திரனும் எழுந்துவிட்டார்கள். சந்திரன் என்னை பார்த்தபின் புருவம் தூக்கி யார் என அருமையிடம் கேட்டான். அருமை வாயை கோணலாக்கி காட்டினான். அவர்கள் சோற்றை தரையில் வைத்தார்கள். அருமையும் சந்திரனும் அவர்கள் தட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.

அந்த விடுதியில் அரசு அளிக்கும் நிதியைக்கொண்டு சமையல் செய்யப்பட்டது. குழம்பு பொரியல் வாரந்தோறும் மீன்,கறி என்றெல்லாம் சட்டம் உண்டு. ஆனால் விடுதிவாசிகளே அதை திருத்தியமைத்திருந்தனர். ரேஷனரிசியில் சமைத்த சோறும் , புளி வத்தல்பொடி உப்பு ஆகியவற்றை தேங்காய்புண்ணாக்குடன் சேர்த்து அரைத்துக்கொதிக்கவைக்கப்பட்ட நீர்த்த குழம்பும் மட்டும்தான். ஆனால் சோறு கொண்டுவரப்படும் தட்டு எதுவோ அது நிறைய அளிக்கப்பட்டாகவேண்டும்.நான்குபேர் ஓரளவு நிறைவாகவே சாப்பிட முடியும்.

சோற்றை அவர்கள் பரிமாறினார்கள். நாகமணி ’லே வந்து தின்னுலே’ என்றான்

நான் ‘எனக்கு சோறு வேண்டாம்’ என்றேன்

‘ஏன்?’

‘பசிக்கல்ல’

‘என்ன கேடு?’

நான் உதட்டைக்கடித்து ’நான் பிறவு… வெளிய சாப்பிடுதேன்…’ என்றேன்

‘வேண்டாம்ணா போ’ என்றான் அருமை.

மெல்ல எழுந்து வெளியே சென்று வராந்தாவில் நின்றுகொண்டேன். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பால்கனிச்சுவரை தாண்டி அப்படியே குதித்தாலென்ன என்று தோன்றியது. அழுகை வந்தது. தொண்டை நீர் துடித்தோடும் குழாய் போல அதிர்ந்தது.

ஐந்து நிமிடங்கள் ஆகியிருக்கும் நாகமணி வெளியே வந்தான். ‘லே வந்து தின்னுலே’ என்றான்

நான் திரும்பாமல் தலைகுனிந்து நின்றேன்

அவன் வந்து என் தோளைத்தொட்டான் ‘செரி மக்கா…வா வந்து சோறத்தின்னு….நான்லா விளிக்கேன்?’

நான் கண்ணீர் மார்பில் கொட்ட தேம்பி அழ ஆரம்பித்தேன். அவன் என்னை தோளோடு அணைத்துக்கொண்டான். ஜானும் அருமையும் வந்து எட்டிபபர்த்தார்கள்.

நாகமணி என்னை அணைத்து உள்ளே இட்டுச்சென்றான். பிடித்து அழுத்தி சோற்றின் முன் அமரச்செய்தான். அவர்கள் நால்வரும் அதுவரை சோற்றில் கைவைத்திருக்கவேயில்லை. நான்கு தட்டுகளிலும் பானையின் மூடியிலுமாக சோறு காத்திருந்தது.

‘தின்னுலே….பசியக் கண்டா எங்கிளுக்கு தெரியாதா?’

நான் சோற்றில் கையை வைத்தேன். அந்தச்சோறு என் தொண்டை வழியாக இறங்கும் என்று தோன்றவில்லை

அருமை கோபமாக ‘அப்பிடி போயி நிண்ணா, மத்தவனுக இஞ்ச சோறு தின்னவேண்டாமா?’ என்றான்

‘செரி விடுலே…’ என்றான் நாகமணி. அவன் தட்டிலிருந்து ஒரு கைப்பிடி அள்ளி என் தட்டில் வைத்து ‘தின்னுலே பன்னத் தாயளி’ என்றான்.

புறப்பாடு-1 சூழிருள்

முந்தைய கட்டுரைசங்குக்குள் கடல்-சில வினாக்கள்
அடுத்த கட்டுரைபெங்களூரில் சந்திப்போம்