முதல் எதிர்க்குரல்

இந்த நாவலுக்கான கருவை அளித்தவர் இருவர். முதல்வர், திரு.வி.கல்யாணசுந்தரனார். அவரது சுயசரிதையில் இந்தியாவில் நடந்த முதல் தொழிலாளர் வேலைநிறுத்தமான பின்னி ஆலை வேலைநிறுத்தம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இருபதாம்நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகமெங்கும் தொழிற்சங்க இயக்கம் ஆரம்பித்தது இந்தியாவில் 1890ல் அமைந்த மும்பை மின்ஹண்ட்’ஸ் தொழிலாளர் அமைப்பு [Bombay Millhand’s Association] . 1095ல் கல்ககத்தா அச்சகத்தொழிலாளர் சங்கம் அமைந்தது [Printers’ Union formed in Calcutta ] . 1907 மும்பை தபால் ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல தொழிற்சங்கங்கள் அங்கிங்காக உருப்பெற்றன. அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக அகில இந்தியத் தொழிற்சங்கக்கூட்டமைப்பு [All India Trade Union Congress] உருப்பெற்றதுடன் இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம் உருவாகியது.

மும்பைத்தொழிற்சங்க இயக்கத்தால் தூண்டப்பட்ட பி.பி.வாடியா சென்னைவந்து இங்கே தொழிற்சங்க இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க முயன்றார். சென்னையின் முக்கியமான சைவப்பேச்சாளரும் சீர்திருத்தவாதியுமான திரு வி கல்யாணசுந்தரனார் அவருடன் இணைந்தார். அன்றைய தலித் இயக்கத்திலும் நவபௌத்த இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சிங்காரவேலு செட்டியார் அவருடன் சேர்ந்தார் .. அவர்களுடன் சர்க்கரைச் செட்டியாரும் இணைந்துகொள்ள சென்னையில் 1918ல் சென்னைத்தொழிளாளார் சங்கம் என்ற அமைப்பு [Madras Workers Union ] உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின்கீழ் திரட்டப்பட்டவர்கள் அன்று சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய இருபெரும் நூற்பு மற்றும் நெசவாலைத் தொழிலாளர்கள்

ஜான் டெஃப் பின்னி (John Deaf Binny) என்கிற ஆங்கிலேயர், ராபர்ட் டென்னிஸன் (Robert Dennison) என்ற பங்குதாரருடன் சேர்ந்து 1799 இல் பின்னி அன்ட் டென்னிஸன் கம்பெனி என்ற பெயரில் ஒரு நூற்பாலையை ஆரம்பித்தார். 1812 ல் இது பின்னி அன்ட் கோ வாக மாறியது. ஆரம்பம் முதல் சிறிய ஆலையாகவே இது இருந்தது. 1870களின் பெரும்பஞ்சகாலத்தில் பல்லாயிரம் பட்டினி அகதிகள் சென்னைநகரை முற்றுகையிட்டபோது மிகமிகக்குறைந்த கூலிக்கு ஏராளமான தொழிலாளர் கிடைத்தனர். அவர்களைக்கொண்டு தொழில்நடத்துவது லண்டனில் ஆலைநடத்துவதை விட பலமடங்கு லாபம் அளித்தது. விளைவாக பின்னி மில் நிறுவனம் சட்டென்று பிரம்மாண்டமாக வளர்ந்தது . 1870யில் பக்கிங்ஹாம் (Buckigham), கர்நாடிக் (Carnatic) என்ற பெயர்களில் இரு பஞ்சாலைகள் பெரம்பூரில் நிறுவப்பட்டன.

இந்த நூற்பு நெசவு ஆலைகளில் பணிந்லை கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. கங்காணி அடிமைமுறை நிலவியது. மிகமிக குறைந்த ஊதியம். சிறுவர்கள் பெண்களுடன் குடும்பமே ஆலைகளில் வேலைசெய்தால்கூட பட்டினி நீங்காத நிலை. மிக மோசமான பணிச்சூழலில் தொழிலாளர் இறப்புவிகிதமும் அதிகம். இந்த பஞ்சாலைத்தொழிலாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரட்டிய சென்னை தொழிலாளர் சங்கம் அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்தது.

இந்திய அளவில் பிற தொழிற்சங்கங்கள் சிறிய அளவிலான உரிமைகளுக்காக முதலாளிகளுடன் பேரம்பேசுவதிலேயே குறியாக இருந்தபோது சென்னைத் தொழிளாளர் சங்கம் 1921ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி வேலைநிறுத்தம் ஒன்றை அறிவித்தது. இந்தியாவின் முதல் தொழிற்சங்க வேலைநிறுத்தம் என்று இந்தப்போராட்டம் கருதப்படுகிறது.

தமிழக அரசியலில் உள்ள முக்கியமான அரசியல் முரண்பாடு ஒன்று வெளித்தெரிந்த ஒரு சந்தர்ப்பம் இந்தப்போராட்டம். அதைப்பற்றி இங்கே அதிகம் பேசப்பட்டதில்லை. அல்லது ஒருதலைபட்சமாக, வரலாற்றுப்புரிதலின்மையுடன் பேசப்பட்டுள்ளது. பின்னி ஆலை வேலை நிறுத்தத்தை அன்றைய காங்கிரசும், நீதிக்கட்சியும், இடதுசாரிகளும் ஆதரித்தார்கள். ஆனால் தலித் தலைவராக இருந்த எம்.சி.ராஜா தலித்துக்கள் அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கைக்கு ஏற்பவே எம்.சி.ராஜா அப்படி அறிவித்ததாகச் சொல்லப்பட்டது.

பின்னி ஆலைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தலித்துக்கள். பிறர் இடைநிலைச்சாதியினரும் முஸ்லீம்களும். போராட்டத்தில் தலித்துக்கள் வேலைக்குச் செல்ல அதை பிற ஊழியர்கள் தடுத்தனர். தலித்துக்களுக்கு போலீஸ் காவல் அளித்தது. இடைநிலைச்சாதியினர் கல்வீசி கலவரத்தில் இறங்கினர். போலீஸ் அவர்களை தாக்கியதில் இடைநிலைச் சாதியைச்சேர்ந்த ஏழுபேர் இறந்தனர்

சென்னை தொழிலாளர் நடுவே ஏற்கனவே கடுமையான தீண்டாமையும் சாதிய ஒதுக்குதலும் இருந்தது. இந்த நிகழ்வு அவ்வெறுப்பைப் பற்றவைத்தது. பின்னி ஆலைத்தொழிலாளர்களில் உள்ள தலித்துக்கள் பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு தனியாகவே குடியிருப்புகள் அமைத்திருந்தனர். அப்படிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று புளியந்தோப்பு. அது 1870களின் பெரும்பஞ்சத்தில் குடிபெயர்ந்து வந்த தலித் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குடியேறிய இடம். இடைநிலைச்சாதியினர் புளியந்தோப்பு குடியிருப்பு மீது தாக்குதல்தொடுத்தனர். நூற்றுக்குமேல் குடிசைகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன. ஏராளமானவர்கள் இறந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடைசிவரை உறுதிப்படுத்தப்படவில்லை. புளியந்தோப்புக்கலவரம் என்று அதற்குப்பெயர். அதைப்பற்றி திருவிக விரிவாக அவரது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

இம்முறை, இந்தியவரலாற்றில் முதல்முறையாக, தலித்துக்கள் திருப்பித்தாக்கினர். பெரம்பூரில் உள்ள பின்னி ஆலை ஊழியர்களின் குடியிருப்புகள் மீது தலித் குழுக்கள் பதில்தாக்குதல் நடத்தினர். புளியந்தோப்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் கடுமையான காவல்போடப்பட்டது.

காங்கிரஸும் நீதிக்கட்சியும் பின்னி ஆலைத்தொழிலாளர்களின் வேலைநிறுத்ததை தீவிரமாக ஆதரித்ததனர். நீதிக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டியார் சென்னை தலித் குடியேறிகளால் சூழப்பட்டுவிட்டது என்றும் அவர்களை சென்னை மாநகர எல்லைக்கு வெளியே குடியமர்த்த வேண்டுமென்று கோரினார். தலித்துக்கள் ஒரே இடத்தில் திரளாக வசிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்களைப்பிரித்து சிறுசிறு சேரிகளாக குடியமர்த்தவேண்டும் என்றும் ஆலோசனை சொன்னார். எல்லா நீதிக்கட்சியினரும் தலித்துக்களுக்கு எதிராக கடுமையான கருத்துச் சொன்னார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் பொதுவாக தலித்விரோத உணர்ச்சிகள் கொண்டிருந்தார்கள் என்று ஊகிக்க இடமுள்ளது. ஆனால் காந்தி பின்னி ஆலைத் தொழிலாலர் நடுவே ஆற்றிய உரையில் [The Hindu, 17-9-1921]

“தங்கள் சகோதரர்களில் ஒரே ஒருவருக்கு எதிராகவும் தாமே வன்முறையைப் பயன்படுத்துவதைவிட தொழிலாளர்களின் முனைப்பில் தொய்வு ஏற்படுத்தும் நடவடிக்கை வேறு எதுவும் கிடையாது. ஒரு சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள் என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், நம்மில் தாழ்ந்தவனுக்கும், குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கும்கூட சுதந்திரமாக முடிவெடுத்து செயல்படுத்தும் உரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த 3000 சகோதரர்களுக்கும் நீங்கள் எந்த இடையூறும் செய்யக் கூடாது, அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் நீங்கள் அன்பு காட்ட வேண்டும் என்றும்கூட நான் வலியுறுத்துகிறேன். எப்படியானாலும் அவர்ளை கடுஞ்சொற்களால் வையக் கூடாது. அவர்களிடம் சென்று பணியில் சேரக்கூடாது என்று வற்புறுத்தவும் வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்”

-என்று அழுத்தமாக வேண்டுகோள் விடுத்தார்.

அந்த வேண்டுகோள் செவிகொள்ளப்படவில்லை. அன்று தமிழக அரசியலில் நீதிக்கட்சியே வலுவாக இருந்தது. இந்திய அரசியலில் காந்தியின் இடம் அன்று வலுவாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் பின்னாளில் அவரது ஆயுதமாக விளங்கிய அகிம்சைப்போராளிகளான சத்யாக்கிரகத்தொண்டர்களின் அணி அப்போது உருவாக்கப்படவில்லை என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.

ஆங்கில ஆட்சிதான் சென்னையில் நீடித்தது என்றாலும் நீதிக்கட்சியினர் தலித்துக்களை பெரும்பாலும் சென்னையின் மையத்தில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றிபெற்றார்கள். புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லீம்களை குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. . இன்று அது ஒரு முஸ்லீம் குடியிருப்பு.

இந்த தகவல்களை விரிவாக யூஜின் இர்ஷிக் [Eugene F. Irschick ] எழுதிய ‘தென்னிந்தியாவில் அரசியல், சமூக மோதல்: பிராமணர் அல்லாதார் இயக்கமும் தமிழ் பிரிவினை வாதமும் 1916- 1929’ [Politics and Social Conflict: in South India: NonBrahmin Movement and Tamil Separatism 19161929 , University of California ] என்ற புகழ்பெற்ற நூலிலும் அதையொட்டி ஆ.சிவசுப்ரமணியம் எழுதிய பின்னி ஆலை வேலைநிறுத்தம் 1921 என்ற நூலிலும் காணலாம்.

தலித் அரசியலும் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடத்தேசிய அரசியலும் கொள்ளும் முரண்பாடு அதன் ஆரம்பப்புள்ளியிலேயே இவ்வாறு வலுவாக வெளிப்பட்டுவிட்டபோதிலும் பிற்காலத்தில் இச்செய்திகள் பலவாறாக திரிக்கப்பட்டும் மறுவிளக்கம் அளிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் அம்முரண்பாடு மழுங்கடிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில் எம்.சி.ராஜா ஆங்கிலேயரின் அடிவருடியாகவும் துரோகியாகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் அன்றுவரையிலும் பிறகும்கூட நீதிக்கட்சியினர் உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதையும்,எம்.சி.ராஜாவேகூட நீதிக்கட்சியில் பணியாற்றியவர் என்பதையும் கருத்தில்கொண்டால் பல குழப்பங்கள் வருகின்றன. அன்றைய அரசியல்சூழலில் மறைக்கப்பட்ட சில விஷயங்களை கருத்தில்கொண்டால் மட்டுமே நாம் எம்.சி.ராஜாவைப் புரிந்துகொள்ளமுடியும்

தொண்ணூறுகளில் ஆ. சிவசுப்ரமணியம் அவர்களின் நூல் மிகவும் கவனம்பெற்றிருந்தது. காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமி அதற்கு எழுதிய ஒரு பாராட்டுமதிப்புரையே காரணம். அந்நூலை வாசித்தபின் நானும் எம்.சி.ராஜா பற்றி பரவலாக இருந்த எதிர்மறை எண்ணத்தையே கொண்டிருந்தேன். அப்போதுதான் 1997ல் சென்னையில் தலித் ஆய்வாளரான அன்பு பொன்னோவியம் அவர்களைச் சந்தித்தேன். உண்மையில் சென்னையில் அன்றிருந்த அரசியல்சூழலைப்பற்றிய உண்மையான, அனேகமாக மறைக்கப்பட்ட ஒரு சித்திரத்தை அவர் வழியாக அறிந்தேன். என்னைப்பொறுத்தவரை அது ஒரு பெரிய திறப்பு.

சென்னையை மையமாகக் கொண்டு உருவான முதல் அரசியலியக்கம் என்பது உண்மையில் தலித் அரசியலே. கர்னல் ஆல்காட்டின் முயற்சியால் தலித் கல்விக்கான இயக்கமாக அது ஆரம்பித்தது. ஆல்காட் தலித் சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கவும் அது ஒரு சீர்த்திருத்த- போராட்ட இயக்கமாக மாறவும் முன்முயற்சி எடுத்தார். இரட்டலைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போன்றவர்கள் தலித் அரசியலின் முகங்களாக பிற்பாடு உருவாகி வந்தனர்.

ஆனால் ஆல்காட்டின் வருகைக்கு முன்னதாகவே, 1870களின் தொடக்கத்திலேயே, தலித் உரிமைக்கான குரல் சென்னையில் ஆங்காங்கே உருவாக ஆரம்பித்திருந்தது என்றார் அன்பு பொன்னோவியம். அதற்கான அடிப்படைச் சிந்தனைகளை உருவாக்கியவர்கள் என பதினைந்துக்கும் மேற்பட்டவர்களை அன்பு பொன்னோவியம் குறிப்பிட்டார். இரட்டமைலை சீனிவாசன்,அயோத்திதாசர் போன்றவர்களுக்கே அவர்கள்தான் வழிகாட்டிகள்.

அந்த அரசியல் உருவாவதற்கான சூழல் சென்னையில் அமைந்தது. கூட்டம் கூட்டமாக தலித்துக்கள் சென்னையில் குடியேறி சேரிகளில் வாழ ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு சார்ந்த அமைப்புகளில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. விளைவாக கல்வியும் கிடைத்தது. ஆகவே உரிமைகளைப்பற்றிய விழிப்புணர்வு உருவானது. கூடவே இன்னொன்றும் உண்டு. 1870களின் பெரும் பஞ்சங்களில் தலித் மக்கள் லட்சக்கணக்கில் செத்துக்குவிந்தபோது ஒட்டுமொத்த இந்தியசமூகமே அவர்களை கைவிட்டது என்ற கோபமும் ஆங்காரமும் அவர்களிடம் இருந்தது.

பின்னர் காங்கிரஸ், நீதிக்கட்சி அரசியல்கள் உருவாகி வந்தன. தலித் அரசியல் சென்னைக்கு வெளியே செல்லமுடியவில்லை. ஆகவே அது மெல்ல பின்னடைவுபெற்று படிப்படியாக தனியடையாளத்தை இழந்து பிற அரசியல்களுடன் இணைந்துகொண்டது. காலப்போக்கில் அப்படி ஒரு அரசியலியக்கம் இருந்ததே மறக்கப்பட்டது. கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு கழித்து மீண்டும் தமிழகத்தில் தலித் அரசியல் தலையெடுத்தபோதுதான் அவ்வரசியலின் முன்னோடிகள் மீண்டும் சமூகநினைவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

தலித் அரசியல் பிறசாதியினரின் அரசியலுக்கு எதிரானதாகவே இருந்தது. காங்கிரஸிலும் நீதிக்கட்சியிலும் பின்னர் திராவிட இயக்கத்திலும் எல்லாம் அது முற்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் அரசியலை விட்டு வெளியேதான் இருந்தது. பின்னி வேலைநிறுத்தம் முழுக்கமுழுக்க இடைநிலைச்சாதி அரசியலின் விளைவு. அந்த இடைநிலைச்சாதியினராலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு அவர்களைவிட பிரிட்டிஷாரே மேல் என்ற எண்ணம் இருந்தது. பின்னி மில்லின் வேலை நிலை மிக மோசமாக இருந்தது, ஆனால் கிராமங்களில் இருந்த தலித்துக்களின் நிலை அதைவிட மோசமாக இருந்தது என்றார் அன்பு பொன்னோவியம்.

இந்நாவலுக்கு கருவை அளித்த இரண்டாமவர் அன்பு பொன்னோவியம். இதற்கு விதையாக அமைந்த ஒரு விஷயத்தை அவர் இந்தவிவாதத்தின்போதுதான் சொன்னார். இந்தியாவின் முதல் தொழிற்சங்கப்போராட்டம் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் நடத்தியதுதான் என்றார். 1876ல் ஐஸ் ஹவுஸின் கடைசி நாட்களில் நடந்த போராட்டம் முழுக்கமுழுக்க தலித்துக்களால் நடத்தப்பட்டது. அது இடைநிலைச்சாதி கங்காணிகளாலும் பிரிட்டிஷ ஆட்சியாளர்களாலும் உயர்சாதி குத்தகைதாரர்களாலும் நசுக்கப்பட்டது என்றார். அதைப்பற்றி திருவிக ஓரிரு வரிகள் செவிவழிச்செய்தியாக கேட்டதைச் சொல்லியிருக்கிறார். மேலும் ஆவணங்களுக்காக தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார் அன்பு பொன்னோவியம்.

அந்தப்போராட்டம் பற்றிய கசப்பான நினைவுகள்தான் எம்.சி.ராஜா போன்றவர்களை இடைநிலைச்சாதிகளின் போராட்டங்களில் இருந்து விலகி நிற்கச்செய்தது என்றார் அன்பு பொன்னோவியம். பிரிட்டிஷ் ஆதரவாளர்களான ஜஸ்டிஸ்கட்சியினர் பின்னி வேலைநிறுத்தத்தை ஆதரித்தது அவர்களின் சாதியடையாள அரசியலின் அடித்தளமான இடநிலைச்சாதியினரின் போராட்டம் அது என்பதனால்தான்.

அதைப்புரிந்துகொள்ளாமல் எம்.சி.ராஜா தொழிலாளர் துரோகி என இடதுசாரிகள் குத்திய முத்திரை நீடித்துவருகிறது என்றார். அதை நீக்கும்படியாக தனது நூல் இருக்கும் என்றார். அயோத்திதாசர் உள்ளிட்ட தலித் தலைவர்கள் சிலர் அந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருக்கலாம் என்றும் சொன்னார்.அந்நூல் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை.

அந்த முதல் உரிமைப்போராட்டத்தை கற்பனையில் விரிவாகச் சித்தரிக்கும் மன எழுச்சி ஒருமுறை நண்பர் வே.அலெக்ஸிடம் பேசிக்கோண்டிருக்கையில் எழுந்தது. அந்தக்காலகட்டத்தை கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறேன். அந்த மனநிலைகளையும் அக்கால அரசியலையும் புனைவால் சென்று தொட்டிருக்கிறேன்.

உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். மறுபக்கம் நம்முடைய நீதியுணர்ச்சியும் அவர்களைக் கைவிட்டதென்பதும் வரலாறே. நாம் அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் அந்த அழிவுக்குக் கூட்டுப்பொறுப்பேற்றாகவேண்டும். இந்நாவல் ஒருவகையில் அனைவரையும் அந்தக் கூண்டில் நிறுத்துகிறது. எங்கே நம் நீதியுணர்ச்சியை நாம் இழந்தோம் என இன்றாவது மறுபரிசீலனைசெய்துகொள்ளவேண்டும். வரலாற்றில் அணையாது கிடக்கும் அந்த அனல்மீது நம் சமாளிப்புகளையும் வெட்டித்தர்க்கங்களையும் அள்ளிப்போட்டு மூடிவிடக்கூடாது.

அதற்கு அப்பால் இது முதல் உரிமைக்குரலின், ஒடுக்கும் வரலாற்றுக்கு எதிராக எழுந்த அடிமையின் முதல் முஷ்டியின் கதையும் கூட

இதைவெளியிடும் ஏ.அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி. அடித்தள மக்கள்எழுச்சியின்மீது பெரும்காதல் கொண்டிருந்த, வாழ்நாளெல்லாம் அதையே எழுதிய என் ஆசான் பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இந்நாவலை சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்

ஜெ

93,சாரதா நகர்
பார்வதிபுரம்
நாகர்கோயில்
629003

[email protected]
www.jeyamohan.in

[எழுத்து பிரசுர வெளியீடாக வரவிருக்கும் வெள்ளையானை நாவலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைபுறப்பாடு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவணிக எழுத்து – இலக்கியம் – முரண்பாடு