திருப்பூர் உரை-கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக, திருப்பூரில் தாங்கள் ஆற்றும் உரைகள் மிகுந்த அழகும், அறிவார்ந்த தகவலும், செறிவும் கொண்டவையாக அமைகின்றன. இதற்கு முன், விஜயதசமியன்று “அணையாவிளக்கு” என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையும் மிகுந்த ஒளி பொருந்திய ஒன்று.

‘சங்குக்குள் கடல்’ உரை என்னை முழுமையாகவே தனக்குள் இழுத்துக் கொண்டது. அந்த உரை முழுவதையும் என் தம்பிக்கும் வாசித்துக் காண்பித்தேன். இது போன்ற விழாக்களில் ஒரு அரசியல் தலைவரையோ, ஒரு உயர் அதிகாரியையோ அழைக்காமல் ஜெயமோகன் போன்ற எழுத்தாளரை உரையாற்ற அழைத்த, விழா அமைப்பினரின் முதிர்ச்சி பாராட்டுக்குரியது. உங்களைப் போன்ற பல்துறை அறிவு கொண்ட ஒரு எழுத்தாளரால்தான் இந்திய சுதந்திரத்தோடு வரலாறு, தத்துவம், குலதெய்வங்கள், நிலவியல்,வேதங்கள், மதம், இலக்கியம், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளை இணைத்துப் பேச முடியும். மற்ற எவரை அழைத்திருந்தாலும், வரலாறு பற்றி மட்டுமே பேசிச் சென்றிருப்பார்கள். அவ்வகையில், உங்கள் உரையைக் கேட்ட அவையினருக்கு அன்றைய நாள் மிக முக்கியமான நாளாக அமைந்திருக்கும்.

மிக்க அன்புடன்,
கணேஷ்
சிங்கப்பூர்

ஆசிரியருக்கு,

அருமையான உரை. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் வைக்கப்படும் வெறுப்பின் குரலுக்கும், அகண்ட பாரத மதவெறி கூச்சல் சார்ந்த போலி தேசிய உணர்வுக்கும் நடுவே ஜனநாயகம் என்பது வளரக்கூடியது , அதனை வளர்க்க வேண்டிய பொறுப்பு , பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும் என தோன்றும். உங்கள் உரை அதனை நன்றாக முன் வைக்கின்றது.

மதிப்புக்கு உரிய நண்பர் ஒருவர் சுதந்திர தினம் குறித்து சற்று மாறுபட்ட கருத்துகளை சுட்டி இருந்தார்,
அவருக்கு சொன்ன பதில் இது. இதை நான் எழுத உங்கள் எழுத்து பெரும் காரணம்.

சுதந்திர தினத்தில் பிள்ளைகளுக்கு சொல்வது என்ன?

சுதந்திர தினம் என்பது இந்திய அமைப்பின் மத சார்பற்ற ஜனநாயகம் என்ற நெடியபயணத்தின் தொடக்கப்புள்ளி. மக்கள் சட்டபடி மக்கள் உரிமைகள் எனும் உன்னதக் கருத்தாக்கத்தின் வழி பயணம் தொடங்கியது. அந்தப் புள்ளிக்கு முன் இருந்த காலனி ஆதிக்கம், அதற்க்கு முன் இருந்த நில உடமை
அமைப்பு போன்றவை தாண்டும் கனவுகளை நோக்கிய புதிய தடம் அன்று தொடங்கியது. 60 ஆண்டுகளாய் பயணிக்கின்றோம். செல்ல வேண்டிய தொலைவு நெடும் தூரம். நம் குழந்தைகளிடத்து தனி மனித சிவில் உரிமைகள், ஜனநாயக செயபாடுகள், சட்ட அமைப்பு , அரசியல் அமைப்பின் முக்கியம் குறித்து உரையாட இது ஒரு தினமாக அமையலாம்.

ஜாதி, மதம் வழி வரும் மானுடப்பிளவுகளுக்கு உரையாடல் வழி பதில் உண்டாக்க இன , மொழி வழி பிரிவினை கோஷங்களுக்கு திறன் கிடையாது, அவை பிளவை இரட்டிப்பாக்கும். அரசியல் அமைப்பு சார்ந்த உயர் ஜனநாயக விழுமியங்களே ஜாதி, மதம் சார்ந்த மானுட பிளவுகளை உரையாடலுக்கு உட்படுத்த முடியும். மனிதரில் பிறர் எனும் எண்ணம் இயல்பானது, ஜாதி, மதம் இல்லையென்றால் வேறு ஏதாவது ஒன்றை வைத்து பிறரை உண்டாக்கிக் கொள்வோம். நமக்கு இங்கு தேவை பிறரை
விலக்கி வைத்தல் அல்ல, பிறரோடு மரியாதையை உண்டாக்கிக் கொள்ளுதல் , உரையாடல் மொழியை உண்டாக்கிக் கொள்ளுதல் போன்றவையே. நமக்கும், பிறர் என்று
நம்மால் அடையாளப்படுத்தப்படும் நபர்களுக்கும் இடையே உள்ள பொது புள்ளிகளை அடையாளம் கண்டு வளர்த்து எடுப்பதே இங்கு முக்கியம்.

ஜனநாயகத்தை , சுதந்திரத்தை ஜாதி மத தலைவர்களோ , அப்பாவி மக்கள் மீது அத்து மீறும் காவல் துறை சார்ந்தவர்களோ, முறை தவறும் அரசியல்வாதிகளோ ஏன் வரையறுக்க விட வேண்டும்? பெண்கள் நல உதவி செய்த சின்ன தாயோ, சகாயமோ, அசாமில் ஆயிரம் மரங்களை நட்டு பெரும் காட்டை தனி நபராக உருவாக்கிய மனிதரையோ, அமுல் உருவாக்கிய
குரியானோ, கல்வியின் அவசியம் தெரிந்த காமராஜோ, சட்டம் அமைப்பின் அவசியம் உணர்ந்த அம்பேத்கரோ, உத்தரரகாந்தில் உயிரை பயணம் வைத்து மக்களை மீட்ட ராணுவ நண்பர்களோ ஏன் வரையறுக்க கூடாது? சேலத்தில் தனி மனிதராக ஏரிகளை தூர்வாரும் விழிப்பை கொண்டு வந்து 100க்கணக்கான நண்பர்களோடு செய்து காட்டியவர் உண்டு. இது போல்
கோடி நினைவுகளால் சாத்தியமானதே இந்தியா. இன்றைய சுதந்திர தினம் மத சார்பற்ற ஜனநாயகம் நோக்கிய நெடிய பாதையின் ஒரு மைல் கல்லே.

அன்புடன்
நிர்மல்

அறம் கதைகள் வந்த காலகட்டத்தை நினைவுபடுத்தியது. நூறு நாற்காலிகளும், வணங்கானும் படிக்கப் படிக்க வந்த கண்ணீர் இன்றும்.

நன்றி

பாலா

 

முந்தைய கட்டுரைசங்குக்குள் கடல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவன்முறை ஒரு வினாவும் விடையும்