திரு ஜெ,
இந்தியத்தேசியம் பெருங்கற்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லியிருந்தீர்கள். பெருங்கற்கள் உலகம் முழுக்க உள்ளன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவை இந்தியாவில் மட்டும் உள்ளவை அல்ல. ஆகவே உங்கள் வார்த்தைகளுக்கு ஒரு பொருளும் இல்லை.
தமிழ் திரையன்
அன்புள்ள தமிழ்
அற்புதம்! அபாரம்! இந்த அளவுக்கு ஒரு பேச்சைப்புரிந்துகொள்ள இன்று நம்மைவிட்டால் வேறு ஆளில்லை!
என் தலையெழுத்து உங்களைப்போன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்குவதென்பதனால் மீண்டும் சொல்கிறேன். அனேகமாக மீண்டும் சொல்லவேண்டியும் வரும்.
அந்த உரை வரலாறு அற்ற புள்ளியில் இருந்து நம்முடைய வரலாற்றுணர்வு தொடங்குவதைப்பற்றிப் பேசுகிறது. அதாவது ஹோமோ எரக்டஸிடமிருந்து. அதன்பின் பெருங்கற்கள். அதன் பின் குகை ஓவியங்கள்.அதன்பின் மதங்கள் .பின்னர் பேரிலக்கியங்கள். அவ்வாறு அந்த பண்பாட்டுத்தொடர்ச்சி நம் பண்பாட்டின் ஆழத்தில் , நம் ஆழ்மனதில் வரலாற்றுணர்வாக திரண்டு இருந்துகொண்டிருப்பதைச் சொல்கிறது
அந்த விளக்கமுடியாத தன்னுணர்வு எங்கே இந்தியா என்ற நிலப்பகுதியைப்பற்றிய பிரக்ஞையாக ஆகியது என்று அந்த உரை குறிப்பிடுகிறது. அப்படி உருப்பெற்ற காலமே நம் எழுதப்பட்ட வரலாற்றுக்கு வெகுகாலம் முன்பே உள்ளது.நம்முடைய பண்பாட்டுச் சுயம் பற்றிய பிரக்ஞையுடன் அது பிரிக்கமுடியாதபடி கலந்துள்ளது.
நாம் பண்பாட்டை அடையும்போது அதன் ஆரம்பப்புள்ளியில் இருந்தே ஒட்டுமொத்தமாக அடைகிறோம். அதில் இந்த தேசிய அடையாளமும் கலந்துள்ளது. இந்த தன்னுணர்வு நமக்கு ஓர் உணார்வாக உள்ளது. அதை அறிவாக மாற்றிக்கொள்ள உதவியவர்கள் வெள்ளைய அறிஞர்கள். இதுதான் உரையின் சாரம்
ஜெ
ஜெ,
நான் என்னை எந்த நாட்டையும் சேர்ந்தவனாக உணரவில்லை ஒரு மனிதனாகவே உணர்கிறேன். அதை ஒரு பிழையாகச் சொல்லமுடியுமா?
மணிகண்டன் எம்.
அன்புள்ள மணிகண்டன்,
என்னுடைய உரையிலேயே அந்த விஷயத்தை முதலில் தெளிவுபடுத்திவிட்டு முன்செல்கிறேன். ஓர் உச்ச நிலையில் மானுடனாக, அதற்கும் அப்பால் உங்கள் சுயத்தை உணர்வதுதான் மெய்நிலை. ஆனால் மரபையும் பண்பாட்டையும் எல்லாம் விட்டுவிட்ட நிலை அது. மரபும் பண்பாடும் இருக்கும்நிலையில் அங்கே தேசியத்தன்னுணர்வுக்கும் இடம் இருக்கும். இல்லை, நான் மரபு பண்பாடு ஏதுமற்ற ஒரு உற்பத்தியாளன்— நுகர்வாளன் மட்டுமே என்று நீங்கள் சொன்னால் நான் சொல்ல ஏதுமில்லை.
ஜெ
ஜெயமோகன்,
தேசியம் பற்றி நீங்கள் தொடர்ந்து சொல்லிவருகிறீர்கள். தேசியத்தை புனிதமான ஒன்றாகச் சொல்கிறீர்களா? அதை மீறவேகூடாத ஒன்றாகச் சொல்கிறீர்களா?
செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்,
மீண்டும் என் உரையை கவனியுங்கள். தெளிவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டு மேலே செல்கிறேன். தேசம் என்ற நிர்வாக/ அரசு அமைப்பு வேறு, தேசியப்பிரக்ஞை வேறு. நமது தேசியப்பிரக்ஞை தொன்மையானது, வரலாற்றுணர்வுடன் கலந்தது என்கிறேன். இந்தியா என்ற இந்த நிர்வாக அமைப்பு இல்லையென்றாலும் ஒரு பண்பாட்டுத்தன்னுணர்வாக இந்த்ய தேசியம் எஞ்சியிருக்கும். நெடுங்காலம். ஐயமிருந்தால் நீங்கள் பாகிஸ்தானிய இலக்கியத்தை இசையை கவனிக்கலாம்.
அந்த தேசியப்பிரக்ஞையில் நம் தேசத்தின் பகுதியாக இருந்த பலபகுதிகள் இன்று சிதறிச்சென்றுவிட்டன. அந்தப்பிரிவினையின் விளைவாக பெரும்குருதிவரலாறே எஞ்சியது. எவருக்கும் எந்த நன்மையும் எஞ்சவில்லை. சகோதரச்சண்டைகளால் நம் ஆற்றலும் வளமும் அழிந்தன. நாம் அடிமைப்பட்டோம்.
ஆகவேதான் இப்போதிருக்கும் இந்தியதேசம் என்னும் நிர்வாகஅமைப்பு சிதறுவது இன்னும் பேரழிவை உருவாக்குமென நினைக்கிறேன். இந்த நிலத்தில் பல்லாயிரம் வருடத்து மக்கள் பரிமாற்றம் மூலம் எல்லா பகுதிகளிலும் எல்லா மக்களும் கலந்து வாழ்கிறார்கள். மதம் சதி மொழி இன அடிப்படையிலான பிரிவினை மூலம் உலகவரலாறு காணாத அகதிக்கூட்டம் மட்டுமே இங்கே உருவாகும். பிரிவினையை விதைப்பவர்கள் சிலர் அரசியல் ஆதாயம் அடையலாம். மற்ற அனைவருக்கும் பேரழிவே எஞ்சும்.
ஆகவேதான் இங்கே பிரிவினையை விதைக்க எப்போதும் இதன் எதிரிச்சக்திகள் முயல்கின்றன. ஐந்தாம்படைகளை உருவாக்குகின்றன. உக்கிரமான பிரிவினைப்பிரச்சாரங்கள் இங்கே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. நான் அவர்களின் நோக்கம் தீயது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
ஜெயமோகன்
ஜெ,
இந்திய தேசியத்தைப்பற்றி அவநம்பிக்கை கொள்வதே பெரிய பாவம் என்ற மனநிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இந்திய தேசியம் தோற்றுவிட்டது என்ற ஒரு கருத்து உருவாவதோ உருவாக்கப்படுவதோ ஜனநாயகத்தின் ஒரு பகுதி அல்லவா?
கபிலன்
அன்புள்ள கபிலன்,
ஆம். அந்த கருத்து உருவாவதற்கான சுதந்திர ஜனநாயகம் உள்ள தேசம் இது என்ற புரிதலும் கூடவே இருக்குமென்றால் அது ஏற்கப்படவேண்டிய ஒன்றே
இந்தியாவை விமர்சிக்க உரிமை உள்ளவர்கள் இந்த தேசத்துக்கும் மக்களுக்கும் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றியவர்கள். பொதுநல ஊழியர்கள். சுயநலத்துக்காக மட்டுமே வாழ்பவர்களும் சில்லறைகளுக்காக சோரம்போகக்கூடியவர்களும் அல்ல. நாட்டின் குடியுரிமையை விற்று வாழ்க்கையைத்தேடிக்கொள்ண்டவர்களும் அல்ல
ஜெ