திருப்பூர் உரை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
உங்களின் திருப்பூர் உரை “தேசமென்னும் தன்னுணர்’வை வாசித்தேன். இதற்கு முன் இவ்வளவு விஷயங்களை வாசிப்பவர்களுக்கு தரக்கூடிய பேச்சை/உரையை கேட்டதில்லை.

ஒரே உரையில் சுதந்திரம், ஜனநாயகம் , பண்பாடு , தொல்பொருள் , வரலாறு, சைவ சித்தாந்தம் , சுயம் அறிதல் , இனகுழுக்கள் , குலதெய்வம் இன்னும் பல…

படித்து முடிக்கும் பொழுது, இவ்வளவு விசயங்களையும் ஒவ்வொன்றாக இணைத்து எப்படி ஒருவரால் பேச முடியும் என்ற பிரமிப்பிலிருந்து விடுபட முடியவில்லை.
நீலியைப் பற்றி பேசும்போது எதைச் சொல்ல வருகிறார் என்று ஒரு நிமிடம் குழப்பம். ஆனால் எவ்வளவு எளிதாக ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி தேசம் என்னும் தன்னுணர்வு என்ற தலைப்பை புரிய வைத்து இருக்குறீர்கள்!!.

‘என்ன சுதந்திரம் பெற்றோம்’ என்று சலித்துக் கொள்பவர்களுக்கு இந்த ஒரு வரி – “முரண்படுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றோம்” போதும். இதைப் படிக்கும் பொழுது ஒரு வாக்கியம் நியாபகத்திற்கு வருகிறது –
“To know the value of one-second: Ask a person Who has survived an accident”

நன்றி , இந்த ஒரு உரையை எங்களுக்கு அளித்ததற்கு.

இந்த உரையின் ஒலி வடிவத்திற்காக ஆவலுடன் உள்ளேன்.

இப்படிக்கு,
ராஜி

அன்புள்ள ஜெயமோகன் சார் வணக்கம் ,
தங்களை திருப்பூரில் நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி .அந்த நிகழ்ச்சி நாள்முழுவதும் நடந்ததால் அரங்கு நிறையோதோ என்ற எண்ணம் எனக்கு இருந்தது .அதே போல தங்கள் உரை நிறைய பேர் உள்வாங்க இயலாமல் போகுமோ என்ற எண்ணமும் எனக்கு இருந்தது .ஆனால் இவை எல்லாம் தவிடு பொடியானது .என் வாழ்வில் மறக்க முடியாத உரை .யாரும் தலையை கூட திருப்ப முடியவில்லை .தொடர்ந்து வந்த தகவல்கள் தங்கள் அடைந்த தரிசனங்களால் அடைந்தது என்பதால் அதற்கு ஒரு சக்தி இருப்பதை என்னால் உணர முடிந்தது .என் அலைபேசியில் உரை முழுவதும் பதிவாகி இருக்கிறது .திரும்பவும் இரண்டுமுறை கேட்டுவிட்டேன் .இந்த வகை உரைகளை தங்களிடம் நான் கேட்டது இல்லை .எனவே நான் தங்களிடம் நேரில் கூறியது போல முற்றிலும் எதிர்பாராதது .தங்கள் மூலம் மேலும் பல தரிசனங்கள் கிடைக்கும் என்று எண்ணுகிறேன் .

சி.மாணிக்கம்
செஞ்சேரிமலை

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு……..

திருப்பூரிலிருந்து சரவணக்குமார் [ சான்றோன் ]……

திருப்பூரில் தங்கள் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது……தங்களை சந்திக்கும்வாய்ப்பும் கிடைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி…… ஈரோட்டில் தங்கள் மேடைப் பேச்சு , அது தொடர்பான தங்கள் வருத்தம்…..இணையத்தில் அது தொடர்பான அக்கப்போர்களை கவனித்து சற்றே குற்ற உணர்ச்சியில் இருந்தேன்……[ தங்கள் பேச்சை ஒருவரும் புறக்கணிக்கவில்லைஎன்றும் , மழை காரணமாகவே கூட்டம் கலைந்ததாகவும் , ஈரோடு கதிர் என்பவர் தங்களை புண்படுத்த அதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டதாகவும் ஈரோடு நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்……] இயல்பாகவே தங்களின் மேடைப்பேச்சை கேட்க நான் ஆர்வமாக இருந்தேன்… ஈரோடு சம்பவத்துக்குப்பிறகு தங்கள் பேச்சை தவிர்க்கவே கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்….

தங்கள் மனப்புண்ணுக்கு எங்கள் ஊர் மருந்தாக இருந்திருக்கும் நம்புகிறேன்…உண்மையில் அது ஒரு அற்புதமான அனுபவம்….. நான் மட்டுமல்ல கூட்டத்தில் ஒருவர் கூட அசையவில்லை. சுதந்திரம் குறித்த பல சந்தேகங்களுக்கு தங்கள் பேச்சில் பதில் கிடைத்தது……சொல்லப்போனால் , தாங்கள் குறிப்பிட்டதைப்போல ,நானும் அந்த வெள்ளையர் – கொள்ளையர் எதுகை – மோனை மனப்போக்கு உள்ளவன்தான்…அதுவும் கடந்த ஒன்பதாண்டுகால காங்கிரஸ் ஆட்சி என்னை விரக்தியின் எல்லைக்கே தள்ளி விட்டது….. உண்மையில் சுதந்திரம் என்ன தந்தது என்பதை உணரவைத்தீர்கள்…….நன்றி.. நம்முடைய வரலாறு என்ன என்பதை பொட்டில் அடித்தாற் போல் உணர வைத்தீர்கள்…….சபை தங்கள் பேச்சை முழுமையாக உள்வாங்கியது என்பதற்கு , சரியான இடங்களில் எழுந்த பலத்த கரகோஷமே சாட்சி………. தங்கள் குல தெய்வம் பற்றிய விவரணைகள் என்னை என் பால்ய காலத்துக்கு அழைத்துச்சென்றது…. மதுரை மீனாட்சியம்மன் முன் நிற்கும் போது , என்னுடைய குல தெய்வத்தின் முன் நிற்கும் உணர்வை நான் அடைந்திருக்கிறேன்….

பாரதத்தின் எல்லை…..தமிழகத்தின் பரப்பளவு குறித்த தங்கள் விளக்கங்கள் முழுமையானவை….. உரையை சற்று விரைவாக முடித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்….இன்னும்சற்று நேரம் பேசியிருக்கலாமோ என்று தோன்றியது…….இரவு நெடுநேரம் உறக்கம் வரவில்லை,… நாம் என் நம் வரலாறு குறித்து எந்த அறிவும் இல்லாமல் இருக்கிறோம் என்று கேட்டுகொண்டேன்……ஒரு வேளை நம் கல்வி அமைப்பும் ஒரு காரணமோ?

எது எப்படி இருப்பினும் , தாங்கள் இதுபோல் இன்னும் பல மேடைகளில் …பேசவேண்டும்…ரசிகர்களின் எதிர்வினை குறித்து அதிகம் கவலைப்படவேண்டாம்….ஒரு பத்துப்பேருக்கு தங்கள் பேச்சில் உள்ள விஷயங்கள் முழுமையாக சென்றடைந்தால் அதுவே போதுமானது…… காரணம் , நேற்று முன்தினம் முதல் இப்போது வரை நான் பல நண்பர்களிடம் தங்கள் உரை பற்றிய விபரங்களை பகிர்ந்துகொண்டேன்…….. நல்ல விஷயங்கள் மெதுவாகத்தான் பரவும்….ஆனால் அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாகம் அபாரமானது…….. அந்த அளவில் தங்களின் மேடைபேச்சு எங்களுக்கு மிக முக்கியமாது ……

மீண்டும் நன்றி….

இப்படிக்கு

சரவணக்குமார் [ சான்றோன் ]

அன்புள்ள ஜெயமோகன்,

நம் இணையதளத்தில் வெளியாகியுள்ள திருப்பூர் உரை படித்தேன்.

ஒரு பருப்பொருளை பகுத்துக்கொண்டே சென்று அணுவை தாண்டுவதும், தொகுத்துக்கொண்டே சென்று பிரபஞ்சத்தை தரிசிப்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றபோதும், அதை கண்டடைந்து, தெளிவாக பகிவோர் நம்மில் மிகச்சிலரே.

வரலாறென்பதை/சுதந்திரமென்பதை உள்ளிருந்தும் உணரலாம்; நம்மிலிருந்தும் தொடங்களாம் என்பதை இதைவிட உத்வேகமாக சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. மிக்க நன்றி.

வெ கண்ணன்
பெங்களூர்.

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் மேற்கண்ட தலைப்பில் தாங்கள் திருப்பூரில் சுதந்திரதினவிழா வில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவத்தை படித்தபின் என்னவென்று சொல்ல இயலாத ஒரு பெருமித உணர்வு என்னை ஆட்கொள்கிறது.நானும் இந்த சுதந்திர இந்தியாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களை வாழ்ந்து விட்டேன்.நாளுக்குநாள் எங்கும் எதிலும் ஒரு வெறுமையான (நிராசையான) உணர்வே மேலோங்குகிறது.இருப்பினும் நமக்க்கும் இப்படிப்பட்டஉண்மையான வரலாறு இருக்கிறது என்று தங்கள் உரையின் மூலம் அறிந்தபின்,உள்ளபடியே மனதில் ஒரு எழுச்சி தோன்றுகிறது.எத்தனையோ தலைவர்களின், அறிஞர்களின் உரைகளை கேட்டும் படித்தும் இருந்தும்,அதில் எதிலும் சொல்லப்படாத/எழுதப்படாத உண்மை நிகழ்ச்சிகளை இந்த நன்னாளில் தங்கள் உரை மூலமே மட்டும் நேரில் அறிந்ததில் உள்ளபடியே திருப்பூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.(கொடிகாத்த குமரன் பிறந்த ஊர் அல்லவா அது).

அன்புடன்,

அ.சேஷகிரி

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைவேஷம் பற்றி…