அன்புள்ள ஜெயமோகன்,
உங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே முடியாது. ஈரோட்டில் நீங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக எழுதியதைப் படிக்கையில் என்னுள் எழுந்த வருத்தம் சொல்லில் அடங்காதது.
நீங்கள் கண் முன் கிடக்கும் வைரம். ஆனால் கவனிப்பார்தான் இல்லை. தமிழர்கள் பொய்யர்களின் பின்னால், அயோக்கியர்களின் பின்னால் நடந்தே அழிந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு உங்களின் அருமை எப்படித் தெரியும்?
இந்தப் பேச்சு நிச்சயம் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும். பள்ளிகள் தோறும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படல் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆயிரத்தில் ஒரு குழந்தையாவது இதனைப் படிக்கும். தன்னைப் பற்றியும், தன் தேசத்தைப் பற்றியும் கூறப்படும் அவதூறுகளை அக்குழந்தை துணிவாக எதிர்கொள்ள இந்தப் பேச்சே ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த அற்புதமான, வாழ்நாளில் ஒருவருக்குக் கிடைக்கு ஒரு மிக அபூர்வமான ஒரு உரையை என் போன்றவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அதற்கு என் நன்றிகள்.
அன்புடன்,
நரேந்திரன்.
அன்புள்ள ஜெ,
‘சங்குக்குள் கடல்’ திருப்பூர் சுதந்திரதின உரையை வாசித்தேன். காலத்தில் மிகநீண்ட பயணம் சென்று வந்த உணர்வு. ஒரு தனிமனிதன் தான் ‘இருப்பதாக’ உணரும் தன்னுணர்வு பிறரால் அவனுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டு வருவதல்ல, பிறப்புக்கும் முந்தையது அந்தத் தன்னுணர்வு. அதுவே கருப்பை புகுந்து உடலை எடுத்துக் கொண்டு வளர்கிறது. நம் வரலாறும் அப்படித்தான். இன்னொருவர் சொல்லியே நாம் அதை உணர்வதில்லை. நமக்கு முன்னமே அது உருவாகி நம்மையும் சேர்த்துக்கொண்டு பெருகுகிறது. நமது பண்பாடு மற்றும் பழக்கங்களினால் ஒவ்வொருவரும் அதன் வேரைப் பற்றியபடி இருக்கிறோம். வரலாற்றுப் பிரக்ஞை, தேச உணர்வு ஆகியவற்றிற்கு வேதாந்தத்தின் கோணத்தில் எத்தனை அருமையான விளக்கம். நான் மீண்டும் மீண்டும் அந்தப் பகுதியை படித்துக் கொண்டே இருக்கிறேன். நினைவுகளும், வாழ்க்கைகளும், அனுபவங்களும், தரிசனங்களுமாக துளித்துளியாக சேர்ந்து இன்று எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்!
ஐரோப்பாவில் இனவாதமே தேசியவாதமாக வளர்ந்தது. அதன் அடிப்படையிலேயே தன் தேசமும், இனமும் உயர்ந்தவர்கள் என்றும் பிறர் அனைவரையும் தங்களை விடக் கீழானவர்களாகவும், தங்களால் ஆளப்பட வேண்டியவர்களாகவும் கருதி, மற்றவர்களைக் கொன்று தங்கள் தேசத்தை வளப்படுத்தினர். ஆதிக்க வெறி வளர்ந்து இரண்டு உலகப் போர்களில் அடித்துக் கொண்டு நொந்தபிற்பாடு இன அடிப்படையிலான தேசியவாதத்தின் விஷத்தன்மையை உணர்ந்தனர். அதை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தியா போன்று அந்நிய சக்திகளிடம் அடிமைப்பட்ட நாடுகள் நிலமை அப்படி அல்ல. அவை தன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுதலும், தேசிய உணர்வு பெறுதலும் அவை அடிமை மனோபாவத்தில் இருந்து மீண்டெழுந்து தாம் பிறரைவிடத் தாழ்ந்தவரில்லை என்று சுயாபிமானம் பெறுவதற்கு அவசியமானது என்றே கருதுகிறேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் போன்ற ஞானிகளும் இதன் காரணமாகவே நம் மக்களை நோக்கி நமது பண்பாட்டு வேர்களையும் அதன் பெருமைகளையும் விளக்கினார்கள். உறக்கத்தில் இருந்து விழிக்கச் சொன்னார்கள். இந்த அடிப்ப்டையான வேறுபாட்டைக் கூட அறியாமல், நான்கு செண்ட் நிலத்தில் கட்டிய தன் வீட்டிற்கு பலமாக காம்பவுண்டு கட்டிவிட்டு, இந்திய தேசக் கட்டுமானத்தையும், அதன் பண்பாட்டையும், ரத்தம்கொட்டிப் பெற்ற சுதந்திரத்தையும் சபிப்பவர்கள் நம் முற்போக்குகள்.
வெவ்வேறு நிலப்பகுதிகளையும் ஒரே பண்பாடு என்னும் நாரில் கட்டிய ஒன்றுபட்ட தேசம் தான் இந்தியா என்பதை சுதந்திர தின நன்னாளில் உங்கள் உரை மக்கள் மனதில் குறிப்பாக இளம்பிள்ளைகளிடம் சேர்த்து நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.அது அவர்களை தலைநிமிர்ந்து எழவைக்கும்.
மனமார்ந்த நன்றிகள் பல, ஜெ.
-பிரகாஷ் சங்கரன்.
ஜெயமோகன்,
திருப்பூரில் உங்கள் உரையைக்கேட்டவர்களில் நானும் ஒருவன். அந்த உரையை காணொளியாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். அவசியம் வரவேண்டும். உரை மிக நிதானமாக அறிவார்ந்த விவாதமாக ஆரம்பித்து படிப்படியாக உச்சகட்டத்தை அடைந்தது. என்னைப்பொறுத்தவரை எனக்கு அது பெரிய திறப்பு. நான் எப்போதுமே தேசம் பண்பாடு போன்ற பிரிவினைகளை தாண்டி யோசிக்கவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அது ஒரு விசேஷ நிலை மட்டுமே என்றும் அதனுடன் முரண்படாமலேயே நாம் நம்முடைய சாமானியதளத்தில் நம் தேசம் நம் முன்னோர் நம் பண்பாடு பற்றிய சுய உணர்ச்சியுடன் இருக்கலாமென்றும் சொன்னீர்கள். ஒரு பெரிய நல்லாசான் வந்து நின்று சொன்னதுபோல இருந்தது. உங்கள் குருநாதர்களை வணங்குகிறேன்
நாம் வாசிக்கும் வரலாறுக்கும் நமக்கும் என்ன் சம்பந்தம், சாமானியனுக்கு இந்த வரலாறெல்லாம் எதற்கு என்றெல்லாம் நான் யோசித்த்துண்டு. எல்லாவற்றுக்கும் அந்த உரையில் பதில்கள் வந்தபடியே இருந்தன. வரலாறு உள்ளேதான் உள்ளது என்றும் என்றாவது ஒருவன் நான் யார் என்று கேட்டுக்கொள்ள ஆரம்பித்தால் அவன் வரலாறு வழியாகவே அதைக் கண்டுகொள்ள முடியும் என்றும் சொன்னீர்கள். அதிலிருந்தும் மேலே ஒரு பயணம் உள்ளது. வரலாறற்ற பயணம். அதை முதலிலேயே சொல்லிவிட்டு மேலே சென்றது சிறப்பு.
பெருமாள்
ஜெ
உரை அபாரமாக இருந்தது..கூர்ந்து கவனிக்கப்பட்டது..ஜெ க்கு ஒரு பேச்சு பாணி அமைந்துவிட்டது..நான் அவருடைய புதுகோட்டை உரை, திருப்பூர் உரை, மதுரை கல்லூரி உரை, விஷ்ணுபுர விருது உரைகள் என சிலவற்றை தொடர்ந்து நேரில் கேட்டவன் எனும் முறையில் எனக்கு இந்த உரை செறிவாகவும் முக்கியமாகவும் பட்டது..ஜெ ஒரு ஓவியனைப் போல் பிரம்மாண்டமான கான்வாசில் முதலில் ஆங்காங்கு சில வண்ண தீற்றல்களை வைத்தப்படி செல்கிறார், ஒட்டுமொத்தமாக அடந்த ஓவியம் இறுதியில் உருக்கொள்ளும் போது தொடர்பற்ற தொடக்க புள்ளிகள் போல் தோன்றுபவை பிரம்மாண்டமான ஓவியத்தின் செழிப்பான அங்கமாகி விடுகிறது..
முதன் முறை ஜெ உரையை கேட்ட மானசாவிடம் கேட்டேன் ..எப்படி இருந்தது என்று ..சிறப்பாக இருந்ததாக சொன்னாள்..ஜெ சொன்னவற்றை பற்றி விவாதித்தபடியே ஊர் திரும்பினோம்..நிறைவாக இருந்தது.
சுனீல் கிருஷ்ணன்