திருப்பூர் உரை கடிதங்கள்

நான் அவினாசி சரவணன். உங்கள் சொற்பொழிவைக் கேட்பதற்காக ஈரோட்டுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்தித்து கவிதைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். உங்கள் சொற்பொழிவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். யாரோ வேண்டுமென்றே எழுதியதை நம்பி நீங்கள் எழுதிவிட்டீர்கள் என்று நினைத்தேன். அந்தச்சொற்பொழிவு அருமையாகவே இருந்தது. ஆனால் பத்து நிமிடம் பேச்சு தொடர்ச்சி இல்லாமல் போவதாகத் தோன்றியது. என்ன சொல்லவருகிறீர்கள் என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக எழுந்து செல்வதைக் கண்டு நீங்கள் குழம்பிவிட்டீர்கள். ஆனால் அதற்கு மழைதான் காரணம். நானே எழுந்துசென்று ஓரமாக நின்றுகொண்டுதான் பேச்சைக்கேட்டேன். பேச்சைச் சுருக்கமாக முடித்துக்கொண்டீர்கள். அந்தப்பேச்சில் நீங்கள் எப்படி முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்கு தெரிந்துகொள்ள ஆசையாக இருந்தது. கேட்டபோது திருப்பூரில் பேசுவதாகச் சொன்னீர்கள்.

திருப்பூரில் உங்கள் பேச்சை கேட்க வந்திருந்தேன். மழைபெய்ததனால் நான் கவிதையை உங்களிடம் ஈரோட்டில் கொடுக்கமுடியவில்லை. திருப்பூரிலும் கொடுக்காமல் வந்துவிட்டேன். நிற்க, திருப்பூரில் உங்கள் பேச்சு அற்புதம். நான் என் வாழ்க்கையில் இப்படி ஒரு பேச்சை கேட்டதில்லை. சாதாரணமாக ஆரம்பித்து மெதுவாக உச்சம் நோக்கி போன உரை. பல இடங்களில் அப்படியே புல்லரிக்க வைத்தது. உயர்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது ஒரு பெரிய பரவசம் வருகிறது. அந்தப்பரவசம் சங்கீதம் கேட்டால்கூட வருவதில்லை. அதுபோன்ற ஒரு பரவசம் அது.

நான் எவ்வளவோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். பெரும்பேச்சாளர்கள் பேசும் சொற்பொழிவுகளைக்கூட கேட்டிருக்கிறேன். சிரிக்கவைப்பார்கள். சில இடங்களில் அபூர்வமான சில தகவல்களைச் சொல்வார்கள். சிலர் உணர்ச்சிகரமாக பேசுவார்கள். ஆனால் நீங்கள் மேடையிலே உருவாக்கியது ஒரு பெரிய தரிசனம். சொற்பொழிவு என்றால் இதுதான். அரங்கிலே இருந்த ஐநூறுபேரும் அப்படியே பிரமைபிடித்தவர்கள்மாதிரி இருந்து பேச்சைக்கேட்டார்கள். பலர் கண்கலங்கியதைக் கண்டேன். நிறையபேர் உணர்ச்சிவசப்பட்டார்கள். பேசிமுடிந்து நீங்கள் உட்கார்ந்தபிறகுதான் சபையில் அசைவே வந்தது. பேச்சுக்கு வந்திருந்த அத்தனைபேரும் உங்கள் பேச்சைப்பற்றி பரவசத்துடன் பேசிக்கொண்டேதான் சென்றார்கள். ’பேச்சுன்னா இதுதான் பேச்சு’ என்று என் அருகே இருந்தவர் என்னிடம் சொன்னார்

ஜெ, நீங்கள் உங்களுக்குப்பேசத்தெரியாது என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் பேசுவதுபோல பேச இன்றைக்கு ஒன்றிரண்டுபேர் கூட இல்லை. தொழில்முறைப்பேச்சாளர்கள் ஒரே பேச்சை திரும்பத்திரும்பப் பேசுவார்கள். ஆகவே சரளமாகப்பேசுவார்கள். ஆனால் பேச்சுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றும். வித்தைகாட்டுபவனை பார்ப்பதுபோல இருக்கும். பேசும் மனிதரும் பேச்சும் எல்லாம் ஒன்றுமாதிரி தோன்றக்கூடிய ஒரு நிலை நான் உங்கள் பேச்சிலேதான் கண்டேன்.

உங்கள் பேச்சு மிகச்செறிவானது. தகவல்கள் நிறைய. ஆனால் அதைவிட புதியதாக ஒரு சிந்தனையை முன்வைக்கிறீர்கள். ஒரு புதிய பார்வையைச் சொல்கிறீர்கள். அதை மேடையிலே சொல்வது அவ்வளவு எளிமை இல்லை. குழப்பமாக ஆகிவிடும். மேடைப்பேச்சாளர்கள் அப்படி ஒரு புதிய சிந்தனையைச் சொல்வது கிடையாது. தெரிந்த விஷயங்களைத்தான் சொல்வார்கள். கேட்பவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தெரியாத விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் அதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். கேட்பவர்கள் கொஞ்சம் கவனிக்கவேண்டும். அப்படி கவனமாக கேட்காவிட்டால் அது புரியாமல் போய்விடும்.

நீங்கள் பேசும் முறையிலே ஆரம்பத்திலே என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரிவதில்லை. ஆனால் புதியதாக ஏதோ சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. சொல்லும் விஷங்கள் நடுவே சம்பந்தப்படுத்த நாம் தேடிக்கொண்டே இருப்பதனால் கூர்ந்து கவனிக்கிறோம். ஒரு இடத்திலே நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.அந்த சமயம் ஒரு பெரிய பரவசம் ஏற்படுகிறது. நம்முடைய மரபிலே உயர்ந்த பரமார்த்திக நிலையிலே சரித்திரப்பிரக்ஞை இருக்கக்கூடாது என்ற கருத்து இருந்தது. அதனால் நாம் சரித்திரத்தை இரண்டாம் பட்சமாக நினைத்தோம் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஒரு பெரிய திறப்பு. அதன்பிறகு பேச்சு எனக்கு ஒவ்வொரு வரியும் ஒரு அடி மாதிரி இருந்தது. அப்படியே கொண்டுசென்று உணர்ச்சிகரமாக ஓர் உச்சத்தை அடைகிறீர்கள். அந்த இடத்தில் அங்கே இருந்த ஐநூறுபேரும் உங்களுடன் ஐக்கியமாகி இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் போன அந்த உச்சம் ஈரோட்டிலே இல்லை. அங்கே அதற்கான சூழல் இல்லை. மழை வந்துவிட்டது. இங்கே பேசு முடிந்ததும் ஒரு சிற்பம் போல மொத்தப்பேச்சும் சரியாக இணைந்திருப்பதைக் காணமுடிந்தது. ஒரு வார்த்தைகூட ஜாஸ்தி இல்லை. ஒரு சிறுகதை மாதிரி இருந்தது. அப்படியே பிரசுரிக்கலாம். அவ்வளவு தெளிவான உரை.

இன்றைக்கு பேச்சைக்கேட்டவர்கள் நிறைய பேச்சைக்கேட்டிருப்பார்கள். ஆனால் இந்தப்பேச்சைத்தான் வாழ்க்கை முழுக்க நினைவிலே வைத்திருப்பார்கள். இதுதான் உங்களுடைய இடம்

சரவணன்

திருப்பூரிலே உங்கள் சொற்பொழிவைக்கேட்க வந்தவர்களில் ஒருவன் நான். ஈரோட்டிலே முழுமையாகப் பேசாமல் போன பேச்சை பேசியதாக என்னிடம் சொன்னிர்கள். நான் உங்களுடன் படம் எடுத்துக்கொண்டேன். உங்கள் ஈரோட்டுப்பேச்சை நான் கேட்கவில்லை. அது நல்லதுதான். ஆதலினால்தான் திருப்பூரிலே இந்தப்பேச்சு நிகழ்ந்தது. கிளாசிக் பேச்சு. இந்த அளவுக்கு அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் ஒர் உரையை நான் கேட்டதில்லை. அங்கே வந்திருந்த் ஒவ்வொருவரும் அபபடித்தான் நினைத்தார்கள். இந்தப்பேச்சை ஒலிவடிவமாகவும் அச்சிலும் வெளியிடப்போவதாக அமைப்பாளர்கள் சொன்னார்கள். கண்டிப்பாக நெடுங்காலம் ஞாபகத்திலே நிற்கப்போகிற உரை இது. அந்த வாய்ப்பு திருப்பூருக்கு வந்தது. நன்றி

ஜெ.எஸ். குமரன்

அன்புள்ள சார்

என்னை நினைவிருக்கும் என நினைக்கிறேன். மகேஷ், திருப்பூரில் இருந்து

நேற்று உங்கள் திருப்பூர் உரை மிகச்சிறப்பாக இருந்தது. புதியவகையில் சிந்திக்கவைக்கக்கூடிய ஒரு பெரிய தொடக்கம். எனக்கும் பிறருக்கும்

சு மகேஷ்

முந்தைய கட்டுரைசாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்
அடுத்த கட்டுரைவெண்கடல் ஒரு கடிதம்