வெண்கடல் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் வெண்கடல் தொகுப்பைப் படித்து முடித்தேன். கடவுளைக் கண்ட பக்தனின் உன்னத நிலையை என் மனம் அடைந்தது. தங்கள் கதைகள் என்னுள் எற்படுத்திய வாசிப்பனுபவத்தை நான் மூன்று நிலைகளாகக் காண்கிறேன். ஒன்று மனதை இலகுவாக்கி வானில் பறக்கும் போது ஏற்படும் பரவச நிலை. இரண்டாவது பாரத்தால் மனம் கனத்து துக்கம் கசிய பூமியில் புதைத்த நிலை. மூன்றாவது இயல்பாய் இம் மண்ணின் மீது ஆசுவாசம் கொள்ளும் நிலை. இக் கதைகள் ஏற்படுத்தும் மனவெழுச்சி இலக்கியம் என்ற கலையின் வீச்சை உணரச் செய்வதாக இருக்கிறது. தற்போது வெளியாகும் பல சிறுகதைகள் இத்தகைய பங்கை ஆற்றுகின்றனவா என்பது சந்தேகத்திற்குரியது. எல்லாக் கதைகளையும் பிழை என்ற மெல்லிய சரடு இணைப்பதாக உணர்கிறேன். பிழையும் திருத்தமும் இக்கதைகளின் ஊடாக பின்னிப் பிணைந்திருக்கின்றன.

இக்கதைகள் மூலம் கிட்டும் அனுபவங்கள் வாசிப்பின் அற்புதத் தருணங்களாகும். இக்கதைகளின் கதைகூறு முறையும், கருப்பொருளும் பல்வகையாய் அமைந்து இத்தொகுப்பை வசீகரமும் வாசிக்க ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. இக்கதைகள் முடியும் இடத்தில் நம் மனதின் பயணம் தொடங்குகிறது என்பது இக்கதைகளின் முக்கிய அம்சமாகக் காண்கிறேன்.

அம்மையப்பம், வெறும்முள் ஆகியன மிகச் சிறந்த கதைகள். இரண்டும் இருவேறு துருவங்களில் நிகழும் கதைகள். அம்மையப்பம் இம் பூமி மீது நிதர்சனமாக நிகழும் கதையாகக் கண்டாலும் அது நம் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள் அற்புதமானவை. கலைஞன் என்பவன் சில்லறை விசயங்களைச் செய்பவனல்ல என்றாலும் அவனது ஜீவிதத்திற்கு அத்தகையவற்றை அவன் செய்ய நேர்கிறது. அப்படி அவன் செய்யவது என்பது கடைசியில் கோணலாய் முடிந்து போகிறது. ஆனால் தன்னில் லயித்து அவனாகப் படைக்கும் போது அது அற்புதமானதாகிறது. ஆனால் அவன் செய்யும் மேலான படைப்பின் மீது நாம் அக்கறை கொள்வதில்லை. இறைவன் நம் முன் தோன்றினாலும் நாம் அவனையும் இத்தகைய சில்லறை விசயங்களுக்கே பயன்படுத்துவோம் எனும் நம் அறிவீனத்தை என்னவென்பது?

அம்மையப்பம் கதைக்கு நேர்மாறானது வெறும்முள் கதை. கனவின் சாயலில் பின்னப்பட்ட வசீகரம் கொண்ட கதை. நாம் அறியாத ஒரு கற்பனையின் மனவெளியில் நம்மை சஞசரிக்கவைக்கும் கதை. எங்கோ கண்காணா தேசத்தில் நம்மை நாடோடியாய் அலை வைக்கும் கதை. மதுவும் போதையும் நம் மனம் முழுதும் நிரம்பியதாய் மன மயக்கத்தைத் தரும் கதை. அவற்றினூடாக ஆன்மீகத் தேடலை அறிவுறுத்தும் கதை.
வெண்கடல் தொகுப்பு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களுடன் பகிர ஆசைப்பட்டதன் விழைவே இக்கடிதம். மீண்டும் பிறிதொரு வாசிப்பில் இக்கதைகளை இன்னும் நுட்பமாக புரிந்துகொள்ள இயலும் என்று நம்புகிறேன்.
தங்கள் அன்பன்
கேசவமணி

முந்தைய கட்டுரைதிருப்பூர் உரை கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிப்படையல் பற்றி…