சாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்

அன்பின் ஜெ,

நலந்தானே.

நான் எப்போதுமே தங்கள் சாதி மற்றும் இந்திய சமூகத்தில் அதனுடைய பங்கு குறித்த கட்டுரைகளை மிக முக்கியமான அவதானிப்புகளாக கருதி வருபவன்.. என் பதின்ம வயதுகளிளிருந்தே இருந்தே சாதியும் அதன் சமூகப் பங்கும் குறித்து காந்தி அம்பேத்கர் பெரியார் மற்றும் தமிழ்நாட்டில் ஏனோ அதிகம் கவனம் பெறாத (sanskritisation என்ற ஒரு கோட்பாட்டைத் தவிர ) M .N ஸ்ரீநிவாஸ் போன்ற சமூகவியல் அறிஞர்களின் கருத்துக்களை தொடர்ந்து பயின்று வந்துள்ளேன்.இவைகளெல்லாம் என்னுள் சாதி பற்றிய ஒரு புரிதலை உருவாக்கியிருந்தன.பின் அவற்றுக்கு மிக அருகே தங்கள் அவதானிப்புகள் உள்ளது குறித்து எனக்கு பெரும் உவகையும் லேசான பெருமிதமும் கூட உண்டு. முக்கியமாக “இந்திய சமூகம் சாதிகளாகப் பிரிக்கப்பட்டது அல்ல, மாறாக சாதிகளாகத் தொகுப்பட்டது என்பது,சாதி என்பது நமது பழங்குடிப் பண்பாட்டின் மீது நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் மோதி கலந்து உருவானவை என்பதும் தற்கால ஜனநாயக முதலாளித்துவ சமூகத்தில் சாதி அடையாளம் ஒரு தனிமனிதனுக்கு தேவயில்லை என்பதும் தேவையற்றது என்பதும். தேவையானது தனி மனித சுய அடையாளமே என்பதும்.

இந்தப்பார்வை மிகச்சரியானது என்றாலும்,இதில் அழுத்தம் ஒரு பக்கமே அதிகமாக விழுவது போலும் தோன்றுகிறது.(பண்பாட்டு பக்கமாகவே.)சாதி இன்னொரு பக்கம் சமூக அரசியல் அதிகாரத்தை அடைய உதவும் முக்கிய கருவியாகவும் வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது.அதிகாரமும் செல்வமும் இந்திய சமூகத்தில் தொடர்ந்து ஒரு சில சாதிகளின் வசமே இருந்து வந்துள்ளதும்,அதற்கு அவர்களின் சாதியே அடிப்படையாக இருந்ததும் உண்மைதானே.இந்திய சமூக அதிகார மையங்கள் பல்வேறு சாதிகளிடையே மாறினாலும் பிராமணர்கள் முதலான சில சாதிகளே எப்போதும் அதிகார மையத்தின் அருகிலும் சமூகத்தின் மேல்தட்டிலுமே இருந்து வந்ததைக் காண முடிகிறது.இந்தப் போக்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ,அவர்கள் கொண்டு வந்த மையப்படுத்தப்பட்ட விரிவான ஒரு அரசில் அரசு இயந்திரத்தில் கிட்டத்தட்ட ஏகபோக பிராமண ஆதிக்கத்தை உருவாக்கியதையும் மற்ற பிராமணரல்லாத நிலவுடமை மேல் சாதிகள் அதிகார மையத்திலிருந்து தள்ளியிருக்க நேர்ந்ததையும் காண முடிகிறது. இந்த இடத்தில்தான் பெரியாரின் இயக்கத்தின் முக்கியத்துவம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.பிராமணர்கள் அரசியல் சமூக ஆதிக்கத்துக்கு தங்கள் சாதியை பயன்படுத்துவதை கண்ட பெரியார், பிராமணரல்லாத மற்ற உயர் சாதியினர் தற்காலிகமாக இழந்திருந்த அரசியல் சமூக அதிகாரத்தை,மீட்டெடுக்க கையிலெடுத்த ஆயுதமும் சாதி (பிற்பட்டோர், திராவிட என்ற வழங்கிய) சாதி என்ற ஒன்றுதானே.

ஆனால் அதே சமயத்தில் காந்தி நேரு ,மற்றும் இந்திய இடதுசாரி இயக்கங்களின் முதல் தலைமுறை தலைவர்களின் முயற்சியால் இந்தியாவில் உருவாகி வந்த ஒரு ஜனநாயக குடிமை சமூகத்தில் சாதி ஏற்ற தாழ்வுகளைப் பாராட்டாத ஒரு மத்திய தர வர்க்கம் உருவானதும் சாதி மறையலாம் என்ற ஒரு நம்பிக்கையும் உருவாகி வந்ததாகவே நான் நினைக்கிறேன். இந்த உணர்வு ஏறத்தாழ ஒரு 20 -25 வருடங்கள் சுதந்திரத்துக்குப் பின் நீடித்தது.ஆனால் இந்தப்போக்கு மெல்ல தேக்கமடைந்து,ஒரு சராசரி இந்தியன் (தமிழன் )தன்னை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பதை விட ஒரு குழுவின்(சாதியின் ) அங்கமாக காண்பதே லாபகரமானது என்று நினைக்கவைத்து சாதிகளுக்கு புத்துயிர் அளித்தது நமது இட ஒதுக்கீடு கொள்கையும் போட்டி ஜனநாயக அரசியலும் தான் என்று நினைக்கிறேன்.

நான் எப்பொழுதுமே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆதரவாளன்.இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த பல்வேறு வேறுபாடுகள் நிறைந்த ஒரு பன்மை சமூகத்தில் இட ஒதுக்கீடும், மொழிவாரி மாநிலங்களுமே, இந்திய சிதறுண்டு போகாமலும் நீங்கள் எப்போதும் சொல்லி வருவது போல பல ஆப்ரிக்க நாடுகளைப் போல ரத்தக்களறி ஆகாமலும் அதிகாரப் பரவலுக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.

ஆனால் இட ஒதுக்கீட்டுக்காக நாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணும் முறை அதற்கான அலகு (yardstick )ஒரு வகையில் இடஒதுக்கீடு எனும் மருந்தை சாதி வெறி எனும் நோயாக ஆக்கி விட்டது என்று எண்ணுகிறேன்.இட ஒதுக்கீட்டுக்கு நாம் வைத்திருக்கும் அலகு தனி மனிதன் என்றல்லாமல் குழுக்கள் (சாதிகள்) என்று அமைந்தது மீண்டும் ஒரு தனி மனிதன் தன குழு (சாதி)அடையாளத்தை நாடுவதையே முதன்மையாக்கியது.தன்னை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பதை விடவும் சாதியின் அங்கமாக அடையாளம் கொள்வதையே லாபகரமானது என்று எண்ண வைத்தது.குறிப்பாக BC மற்றும் MBC பிரிவுகள் அரசியல் சட்டத்தில் backward classes என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் backward castes என்றே வழங்கலாயிற்று.மண்டல் கமிஷன் இதை மேலும் ஆழப்படுத்தியது.தமிழக அளவில் அரசியல் சமூக அதிகாரங்களில் கொடிகட்டிப் பறக்கும் தலைவர்கள் கூட தங்கள் பிற்பட்ட, மிக பிற்பட்ட , என்னும் சாதி அடையாளங்களைத் துறக்க விரும்பாததைக் காணலாம். இப்படியிருக்க சாதாரண மக்கள் தங்களை சுய அடையாளம் கொண்ட தனி மனிதனாக அடையாளம் காண்பதற்கான ஊக்கம் (incentive ) இந்த சூழலில் இல்லவே இல்லை. இந்தக் குறைபட்ட இட ஒதுக்கீட்டு முறையை கொஞ்சம் சீரடையச் செய்யும் creamy layerநடைமுறையைக் கூடத் தமிழகத் தலைவர்கள் எவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றனர் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் சாதி குறித்த எந்த உரையாடலிலும் இட ஒதுக்கீட்டின் மோசமான பக்க விளைவுகள் பற்றி ஒரு வார்த்தையைக் கூட நான் கேட்டதில்லை,இப்போதிருக்கும் இந்த இடஒதுக்கீடு தமிழகத்தின் புனிதப் பசுக்களில் ஒன்று.

சாதி ஒழிப்பு குறித்து பேசும்போது அம்பேத்கர் “:எல்லோரும் தலித்துகளை சீர்திருத்துவது குறித்தே பேசுகிறார்களே ஒழிய சாதி இந்துக்கள் திருந்தவேண்டியிருப்பதை பற்றி பேசுவதேயில்லை “என்று குறிப்பிடுவார் .

இந்து சமூகம் என்பது மிகப் பெரும்பான்மையாக இடை நிலை சாதிகளைக் கொண்டதுதான். இன்று அநேகமாக இந்திய அரசியல் சமூக அதிகாரமும் அவர்கள் கையிலே தான் உள்ளது. இந்தியாவின் மாநில முதல்வர்களின் மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் சாதியைக் கொண்டே இதனை நாம் உறுதிபடுத்திக் கொள்ளலாம்.இந்தியாவில் நடைபெறும் சாதி மோதல்கள் மிகப்பெரும்பாலும் இடை நிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் என்றே இருப்பதின் பின்னணியில் நமது குறைபட்ட இடஒதுக்கீடுக் கொள்கையும் அது சாதி அடையாலத்துக்குத் தரும் புத்துயிரும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியவை என்றே நான் கருதுகிறேன்.நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு முறையைப் பற்றி நீங்களும் அதிகமாக எழுதியதில்லை என்றும் தோன்றுகிறது.இது குறித்து தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
அன்புடன்

சுரேஷ், கோவை.

 

அன்புள்ள சுரேஷ்

சாதிகளின் உருவாக்கம், அதிகாரப்போக்கு குறித்த என் கருத்துக்கள் என் ஊகங்கள் அல்ல. நவ மார்க்ஸிய சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டவை. விரிவான சமூகப்பொருளியல் ஆய்வு கொண்டவை.நான் அவற்றை மேற்கோள்தான் காட்டுகிறேன்.

இந்தியச்சமூகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருவகை அரசியல்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. ஒன்று மக்களை தனிமனிதர்களாக, சாதி மத இன மொழி அடிப்படைகளுக்கு அப்பாற்பட்ட தனிமனிதர்களாக உருவகித்து அவ்வாறு அவர்களை உருவாக்க நினைத்த தேசிய இயக்கம். காந்தியும் நேருவும் அதன் முகங்கள்

இன்னொன்று பிரிட்டிஷ் அரசால் முன்வைக்கப்பட்ட அடையாள அரசியல். இந்தியமக்களில் உள்ள போர்ச்சாதிகளை இஸ்லாமியர், சீக்கியர், கூர்க்காக்கள் என அடையாளம் கண்டு அவர்களுக்குச் சலுகை அளித்து தங்களுடன் வைத்திருந்தனர் பிரிட்டிஷார். தேசிய இயக்கம் வலுப்பெற்று எளியமக்களை உள்ளிழுப்பதைக்கண்டபின்னர் சாதிவாரியான இடஒதுக்கீடு என்ற அடையாள அரசியலை அவர்கள் இங்கே அறிமுகம் செய்தனர்.

அடையாள அரசியல் உடனடியாக லாபமளிப்பதாக இருந்தது. சாதி, மதத்தலைவர்களாக இருந்த பிரிட்டிஷ் ஆதரவாளர்களான செல்வந்தர்களுக்குச் சாதகமானதாக இருந்தது. ஆகவே அந்த அரசியலை அவர்கள் ஆக்ரோஷமாக முன்வைத்தனர். அதை காங்கிரஸ் எதிர்த்தது. ஆனால் தலித்துக்கள் விஷயத்தில் அம்பேத்கர் முன்வைத்த நியாயத்தை உணர்ந்து காந்தி அவ்வரசியலை ஒத்துக்கொள்ள நேர்ந்தது.

சுதந்திரம் கிடைத்தபின் அரசதிகாரத்துக்கான போட்டி மட்டுமே அரசியல் என்றானது. இலட்சியங்கள் மறைந்தன. ஆகவே காந்தியும் நேருவும் பேசிய இலட்சியவாத அரசியல் பின்னடைவு பெற்றது. அடையாள அரசியல் இந்தியாவின் ஒரே அரசியலாக ஆகியது. அடையாள அரசியலைப் பேசிய குழுக்களுக்கெல்லாம் காந்தியும் நேருவும் எதிரிகளாக ஆனார்கள். தங்கள் சாதி மத அடையாளங்களை கொண்டவர்களை மட்டுமே மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்கும் ஒரு மன்நிலை வளர்ந்தது. ஈ.வே.ரா இந்தியாவின் இலட்சியவாதமற்ற அடையாள அரசியலுக்காகப் பேசியவர்களில் ஒருவர், அவ்வளவுதான்.

வேறுவழியில்லாமல் காங்கிரஸும் அடையாள அரசியலுக்குப் பணிந்தது. விளைவாக பெரும் இலட்சியவாதிகளான காமராஜ் போன்றவர்கள்கூட காலப்போக்கில் சாதியடையாளம் மட்டும் கொண்டவர்களாக ஆனார்கள். காமராஜ் இல்லை என்றால் இன்றைய கொங்குமண்டலம் இல்லை. ஆனால் கொங்குக்கவுண்டர்களுக்கு காமராஜ் சிவகாசிநாடார்களின் தலைவர் மட்டுமே. இதுவே சமகால இந்தியாவின் பெரும் வீழ்ச்சி.

இன்று இந்த அடையாள அரசியலின் முகமாக அனைவராலும் முன்வைக்கப்படும் அம்பேத்கர் உண்மையில் நவீன ஜனநாயகத்துக்கான கனவையே முன்வைத்தார். அவர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டத்தின் நெறிமுறைகளும் கனவும் அடையாள அரசியலுக்கு எதிரானவை. இடஒதுக்கீட்டை தலித்துக்கள் போன்ற அடித்தள மக்களுக்கான விடுதலைக்கான ஒரு தற்காலிக ஏற்பாடாகவே அவர் முன்வைத்தார். அந்த இட ஒதுக்கீடு குறிப்பிட்ட காலகட்டத்துக்குமேல் செல்லக்கூடாதென்றும், அதன் விளைவுகள் தொடர்ந்து பரிசீலனைசெய்யப்படவேண்டுமென்றும் அவர் நினைத்தார்.

அம்பேத்கர் அடையாள அரசியலின் அபாயத்தை உணர்ந்திருந்தார். குறிப்பாக இந்தியா விடுதலைபெற்றபின் வெறும் அடையாள அரசியலுக்குச் செல்வதை, சமூகமே சாதிகளாகப்பிரிவதை அவர் கவலையுடன் மட்டுமே பார்த்தார். இந்தியாவின் மொத்தச்சாதிகளும் கும்பல்களாகத்திரண்டு அதிகாரத்தை தங்கள் பலத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளும் இன்றைய அடையாள அரசியல் அம்பேத்கரின் கனவுக்கே எதிரானது.

அம்பேத்கர் முழுமையான ஜனநாயக அரசியலை நோக்கிப் படிப்படியாக இந்தியச் சமூகம் முன்னகரவேண்டும் என்றும் அதற்கான வழியில் செய்யப்படும் ஒரு சிறிய சமரசமே தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு என்றும் அவர் நினைத்தார்.

இன்று பிற்படுத்தப்பட்டோர் தங்கள் எண்ணிக்கைபலம் காரணமாக அரசியலதிகாரத்தை அடையாள அரசியல் வழியாக கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு அதன் ஆரம்பகாலப் பலன்களை அளித்துவிட்டு கிட்டத்தட்ட பயனற்றுத் தேங்கிவிட்டது. அடையாள அரசியலால் ஒருங்கிணைக்கப்பட்ட சாதிவெறிமிக்க இடைநிலைச்சாதிகள் இன்று தலித்துகளுக்கெதிரான பெரும் சக்தியாகத் திரண்டிருக்கிறார்கள். அவர்க்ளிடம் போராட தலித்துக்களுக்கு அடையாள அரசியல் முற்றிலும் உதவாது என்ற நிதர்சனம் தெளிந்து வருகிறது.

இன்று நடைமுறையில் தலித்துக்களுக்கான இடஒதுக்கீடு பயனற்றிருப்பது மத்திய அரசு போன்ற துறைகளில் பணியாற்றியவர்களுக்குத்தெரியும். அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படுவதில்லை. அவர்கள் அதிகாரப்பணிகளில் வந்தால்கூட முறையாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட தனித் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பிற சங்கங்கள் மொத்தமும் இருப்பதனால் அவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கான அதிகாரமும் இல்லை.

பிற்படுத்தப்பட்டவர்கள் அதிகாரத்தைப்பிடித்தபின் தங்கள் இட ஒதுக்கீட்டை தாங்களே அதிகரித்துக்கொண்டு செல்கிறார்ர்கள். தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றமே இல்லை. அவர்கள் தங்களில் தாழ்ந்தநிலையில் உள்ளவர்களுக்கு தங்கள் இட ஒதுக்கீட்டுக்குள் மட்டுமே பங்கு கொடுக்கவேண்டும் என்று நம் இடைநிலைச்சாதி அரசியல் எதிர்பார்க்கிறது. பிற்படுத்தப்பட்டோர் அரசியல் தேசிய அளவில் ஒற்றைப்படையாகத் திரள்வதனால் எதிர்காலத்தில் இன்னும் பெரிய நெருக்கடிகள் தலித்துக்களுக்கு வரும்.

இன்று அடையாள ஆதிக்க அரசியலை கையிலெடுத்திருக்கும் இடைநிலைச் சாதிவெறியர்கள் அவர்களுக்கான அடையாள அரசியலின் பிதாவாக அம்பேத்கர் அவர்களை குறிப்பிடுவது போல பெரும் வரலாற்றுச் சோகம் வேறொன்றுமில்லை.

உண்மையில் அம்பேத்கர் பற்றிய என் ஆரம்பகால எண்ணமும் அதுவாகவே இருந்தது. பின்னர் அம்பேத்கரின் நூல்களை நேரடியாக வாசிக்க வாசிக்க அம்பேத்கரின் இலட்சியவாத முகத்தை, ஞானத்தேடலின் முகத்தை தொடர்ச்சியாக மழுங்கடித்து அவரை வெறுப்பை மட்டுமே கக்கிய ஓர் அடையாள அரசியல்வாதியாக இங்கே சிலர் சித்தரித்துவருகின்றனர் என்பதைப்புரிந்துகொண்டேன். சாதாரண அடையாள அரசியல்வாதிகளின் வரிசையில் தொடர்ந்து அம்பேத்கரைச் சேர்ப்பதன் மூலம் இதை அவர்கள் செய்துவருகின்றனர்

இந்த திரிபுக்கு நாராயணகுருவும் ஆளாகியிருக்கிறார். நாராயணகுருவை அவரது முழுமையுடன் முன்வைக்கும் பெரும் கலாச்சார இயக்கங்கள் கேரளத்தில் உள்ளன . ஆனால் தமிழகத்திலும் இந்தியாவிலும் நாராயணகுரு பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் அடையாளமாக மட்டும் முன்வைக்கப்படுகிறார்.

ஒருமுறை ஒரு தலித் அரசியல்வாதி நாராயணகுருவை பிற்படுத்தப்பட்டோர் அரசியலின் முகம் என கடும் கசப்புடன் அடையாளப்படுத்தியபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சாதாரணமல்ல. நாராயணகுருவின் இயக்கத்தால்தான் கேரளத்தில் தலித் எழுச்சியே உருவானது. நாராயணகுருவால் தூண்டப்பட்ட கேரள தலித்தியக்க முன்னோடி அய்யன்காளியின் வாழ்க்கைவரலாற்று நூலை தமிழாக்கம் செய்து கொண்டுவர நான் முன்முயற்சி எடுத்துக்கொண்டது அதனால்தான். [நிர்மால்யா மொழிபெயர்ப்பு. தலித் இயக்கப்போராளி அய்யன் காளி. தமிழினி பிரசுரம். இப்போது எழுத்து பிரசுரம் விரிவான மறுபதிப்பைக் கொண்டுவரவிருக்கிறது]

தலித்துக்களுக்கு இன்றிருக்கும் ஒரேவழி நவீன ஜனநாயகப் பண்புள்ள சமூகத்தின் மனசாட்சியை நோக்கிச் செல்வதுதான். அச்சமூகமே தலித்துக்களின் துணைவர்களாக இருக்கமுடியும். அதற்கு அவர்கள் அடையாள அரசியலில் இருந்து வெளிவந்தாகவேண்டும். அம்பேத்கரின் ஜனநாயக இலட்சியவாதத்தை, ஆன்மீகத்தை நோக்கிச் செல்லமுயலவேண்டும்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்த அடையாள அரசியலுக்கு எதிராக நவீன ஜனநாயக அரசியல் வலுப்பெறவேண்டும். அதற்கு இந்த அடையாள அரசியல் பிற்போக்கானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற புரிதல் பரவலாக உருவாகவேண்டும். இந்த அடையாள அரசியல் பேசுபவர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட மக்களாகவும் தங்களுடையது ஒருவகை முற்போக்கு அரசியல் என்றும் பாவனைசெய்கிறார்கள். அந்த முகமூடி கிழிக்கப்பட்டாகவேண்டும்.

எதிர்காலத்தில் அது நிகழலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைபீத்தோவனின் ஆவி பற்றி…
அடுத்த கட்டுரைதிருப்பூர் உரை கடிதங்கள்