சாதிக்கட்சிகள்

மதிப்புக்குரிய ஜெ,

நலமா? இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இரு குடும்பங்கள் முழுதாக சிதைக்கப்பட்டிருக்கிறது. பா.ம.க மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பா.ம.க போன்றச் சாதிக் கட்சிகள் எந்த காலக்கட்டத்திலும் நாட்டிற்குக் கேடுதான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் நோக்கி நாம் பாய்வது அர்த்தம்முள்ளதா? சாதி வெறி தூண்டும் கட்சிகளை மட்டும் நாம் எதிர்க்கிறோம் என்பது மீண்டும் அவர்களை ஒருங்கிணைத்துக்கொள்ள மட்டுமே வழி வகுக்குமல்லவா?

நமது எதிர்ப்பை சாதிப் பின்புலத்தில் இயங்கும் அத்தனை கட்சிகளுக்கும் எதிராகப் பதிவ செய்வதுதானே நேர்மையான கருத்து?

நாம் தலித் கட்சிகளையும் கூட அதே கண்ணோட்டத்தோடுதானே அணுகவேண்டும்? ஏன் சாதியச் சாடல்களில் ஒரு பிரிவினரை ( சாதிப் பின்புலத்தில் இயங்கும் கட்சி) கவனத்துடன் தவிர்துவிடுகிறோம்?

ஒரு பிரிவு மக்கள் குழுவாக ஒருங்கிணைந்து அதிகாரப்புள்ளியை நோக்கி நகரும் பொழுது அது மற்ற தரப்பினருக்கு பதற்றத்தை உருவாக்குகிறது. அவர்களை ஒருங்கிணைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. பொதுப்புத்தியில் சாதி விதிகளைவிட, சாதி வேறுபாடுகளைவிட, ஏதோ ஒரு பிரிவு ஒரு குழுவாக இயங்குவதை பயத்துடனும் பாதுகாப்பின்மையுடனும் உணருவதால்தானே தனக்கான ஒரு குழுவை இறுகப்பற்ற வேண்டியிருக்கிறது. இதுதானே சாதியக் கட்சிகளின் பலம், ஆதாரம் எல்லாம்.

அவன் இருக்கும் வரையில் நானும் இருப்பேன் என்பதை வேறு எப்படி எதிர் கொள்ள முடியும்?

இங்கு தலித் கட்சியை குறிப்பிட்டுக்காட்ட காரணம் சில சாதிக் கட்சிகள் எதோ ஒரு புள்ளியில் அவர்களைப் பொதுவான எதிர்தரப்பாக சித்தரிப்பதால் மட்டுமே. மற்றபடி எந்த சாதிக் கட்சியும் அங்கு பொருந்தும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

அன்புடன்
நவீன்

அன்புள்ள நவீன், மிக எளிமையாக யோசிக்கவேண்டிய விஷயம்தான் இது. சாதி போன்ற அடையாளத்துடன் திரள்வதில் இரு வகை உண்டு. அந்த அடையாளத்தாலேயே ஒரு மக்கள்திரள் ஒடுக்கப்பட்டால் அந்த அடையாளத்துடன் திரண்டு உரிமைக்காகப் போராடுவது இயல்பானது. அதுவே ஒரே வழி. தலித்தியக்கங்களின் வழி அதுவே

ஆதிக்கத்துக்காக ஓர் அடையாளத்துடன் திரள்வது நேர் மாறானது. அதன் நோக்கம் வழிமுறை எல்லாமே வேறு. அந்த ஆதிக்கம் பிறரை ஒடுக்குவது, சுரண்டுவது என்ற தளத்திலேயே செயல்படமுடியும்.

முதல் விஷயம் ஜனநாயகத்தின் பலம். இரண்டாவது விஷயம் உண்மையான ஜனநாயகத்தை அழிக்கும். சிறுபான்மையினரை ஒடுக்கும்.

ஆனால் ஆதிக்கத்துக்காக போரிடுபவர்கள் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள் ஆகச் சித்தரித்துக்கொள்வார்கள். ஒருபக்கம் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாகச் சொல்வார்கள். மறுபக்கம் ஆண்டவம்சம் ஆதிக்க குலம் என்பார்கள்.

வேறுபாடு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் ஜனநாயகம் என்பதன் முக்கியமான எதிர்மறைத்தன்மையே அது எளிதில் கும்பல் ஆதிக்கத்துக்கு இடம்கொடுக்கும் என்பதுதான். எங்கே மக்கள் இனம் மொழி மதம் சாதி என திரளாமல் தனிமனிதர்களாக விழுமியங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்களோ அங்கேதான் உண்மையான ஜனநாயகம் இருக்கும்

இங்கே சாதிக்கட்சிகள் ஜனநாயகத்துக்கு எதிரான கும்பல்கள். ஆனால் கும்பல் என்பது திரட்டப்பட்ட வாக்கு. ஆகவேதான் முற்போக்குபேசுபவர்கள்கூட அதைப்பற்றிப்பேசாமலிருக்கிறார்கள்.

ஜனநாயகம் அந்தச் சமூகத்தின் ஜனநாயக உணர்வால் மட்டுமே நீடிப்பதாகும் . இந்தியச்சமூகத்தின் பெரும்பகுதியினர் இன்றும் ஜனநாயகப்பண்புடன் இருக்கிறதனால்தான் இங்கே ஜனநாயகம் வாழ்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவாசலில் நின்ற உருவம் பற்றி…
அடுத்த கட்டுரைவாயுக்கோளாறு பற்றி…