ரப்பர் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!

நாகர்கோயில் சென்று விட்டீர்களா?

ஈரோடு புத்தக திருவிழாவில்தான் ரப்பரை வாங்கினேன். உங்களின் முதல் நாவல் என்றாலும் இப்போதுதான் படிக்க முடிந்தது. முதலில் படித்திருந்தால் ரப்பரின் சாரத்தை புரிந்து கொண்டிருப்பேனா என்பது ஐயமாக இருக்கிறது. வலிமையான உயிர்கள் போராடி தம் இருப்பை தக்க வைத்துக் கொள்கின்றன. மனிதனுக்கும் அது பொருந்தும். பெருவட்டரின் வாழ்க்கை அதையே கூறுகின்றது. ஆனால் செல்வம் சேர்ந்த பெருவட்டரின் தோட்டவீட்டில் ஆன்மீக தேடல், இறையின் முன்னால் தன்னை சமர்ப்பித்தல் எதுவும் இல்லை. அதுவே வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது. அங்கு வந்து ஓவியத்தை பார்க்கும் லாரன்ஸ் எண்ண ஓட்டங்கள் மூலம் அது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

தோட்ட வீட்டில் ஒவ்வொருவரின் இயல்புகளும் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்கள் சமநிலைக்காக போராடுகிறார்கள் பிரக்ஞை இன்றி. எபனின் மரணம் திரேசை பாதிக்காவிட்டாலும் அவளின் செயல்கள் பெருவட்டரை பழிவாங்கும் நோக்கில், பெருவட்டரின் வீழ்ச்சியை குறி வைத்தே இயங்குகின்றன. ஆழ்நிலையில் அவள் மனதில் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் அவள் அழகை யாரும் ஆராதிக்காததும் காரணமாக இருக்கலாம். லிவியின் இயல்புகள் தவறானவை என்பது மருத்துவர் ராமின் பார்வையில் முதலிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. செல்லையா மன நிலை, பெருவட்டர் விவசாயியாகவும் இல்லாமல், தேர்ந்த வியாபாரியாகவும் இல்லாமல் குடும்ப பெருமையை மீட்கப் போராடும் ஒரு மனிதரின் மன நிலையையே காட்டுகிறது. அவரால்தான் வீழ்ச்சி ஏற்படுதாகத் தெரிந்தாலும் அவரின் எண்ண ஓட்டங்கள், தன்னை அறியும் எந்த முயற்சியிலும் அவர் ஈடுபடவில்லை என்பதை காட்டுகின்றன. ஏதாவது செய்து வீழ்ச்சியை தடுக்க முடியாதா என்பதிலே அவரின் செயல்கள் இருக்கின்றன.

பிரான்சிஸ் அப்படி அல்ல. அவன் தன்னை அறிந்து கொள்ள எப்போதுமே தேடலில் ஈடுபடுகிறான். எனக்கு பிங்கலனின் நினைவு வந்தது. குற்ற உணர்வுடன் இருக்கும் நிலையில் லாரன்ஸ் கூறும் பைபிள் வசனம் அவனை மன எழுச்சியுறச் செய்கின்றது. எனக்கு பைபிள் வசனத்தை விட, பிரான்சிஸ் சொல்லும் படிப்பு இல்லாட்டியும் கையும் காலும் இருக்கே என்ற வார்த்தைகள் நெகிழ்ச்சி அடைய செய்தது. விவசாயம் செய்ய உடலுழைப்பு என்ற காரணியின் முக்கியத்தை உணர்ந்த ஒருவன் என்பதால். எல்லா தொழில்களை விடவும் மனம் ஒன்றி செய்வது, உடலுழைப்பு, கண்காணிப்பு விவசாயத்தில் அதிகம். மனம் சார்ந்தது. ஆனால் மன எழுச்சி, விலை பொருளை நஷ்டத்துக்கு விற்கும்போது எதிர் மறையாக மாறும் வாய்ப்புதான் அதிகம். இந்த வகையில் பிரான்சிசின் விவசாயம் குறித்த நம்பிக்கை, நாவல் படித்ததால் ஏற்பட்ட மன சோர்வை போக்கியது. பிரான்சிஸ் உண்மையான மகிழ்ச்சி என்பதை களங்கமற்ற சிறுவர்களை ஆற்றங்கரையில் பார்க்கும் போது அறிந்து கொள்கிறான். கவித்துவம் வெளிப்படும் இடம் இதுவே என்று நினைக்கிறேன். சிறு விஷயங்கள் எப்போதும், பெரிய செயல்களின் வெளிப்பாட்டுக்கு காரணமாக அமைகின்றன. இந்த நாவலின் காரணமாக, காரில் வரும் ஒரு இளைஞன் கையாட்டுவது, நீங்கள் “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” என்ற வரிகள் கொற்றவைக்கு காரணமாக இருந்தது நினைவுக்கு வருகிறது.

பெருவட்டரின் ஆளுமை மிக நுட்பமாக ஒவ்வொரு செயலிலும் காட்சியிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. காட்டை திருத்தப்போகும் இடத்தில அவர் காட்டும் முனைப்பு, பிரான்சிஸ் கொள்ளும் மன எழுச்சி இரண்டும் ஒன்றுதான். மரபாகவே பிரான்சிஸுக்கு அந்த முனைப்பு அருளப்பட்டிருக்கிறது. பெருவட்டர் குற்ற உணர்ச்சியில் திளைப்பதாக நான் எண்ணவில்லை. அவரின் எண்ணமெல்லாம் பிரான்சிஸ் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பததுதான். பிரான்சிஸ் லாரான்சிடமும் ராமிடமும் விவசாயம் செய்ய ஒப்புக்கொள்ளும்போது பெருவட்டரின் உயிர் பிரிவதாக குறியீடாக காட்டப்படுகிறது.

ரப்பரில் phenol derivatives வேதிப் பொருட்கள் மிக அதிகமாக இருப்பதால், அதன் வேரில் நுண்ணுயிர்கள் எண்ணிக்கை பாதிக்கபடும், பூச்சிகள் விரட்டப்படும், மற்ற தாவரங்கள் அருகினில் வளராது (allelopathy). Biodiversity மிகவும் பாதிக்கும் தாவரங்களில் இதுவும் ஒன்று. அதையும் லாரன்ஸ் மூலமாவே ராமுடன் உரையாடலின் வழியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் ரப்பரை ஒரே ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நண்பன் தமிழினியன் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, அவனை சந்திக்க சென்று, பிறகு நாங்கள் அனைவரும் பேச்சிப் பாறை அணைக்கு செல்லும் வழியில் பார்த்தேன். வரிசையாக காயமடைந்த ராணுவ வீரர்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் காட்சியை நானும் இப்போது உணர்கிறேன்.

குஞ்சிமுத்து விஸ்வரூபம் அடைந்து தன்னை வெளிப்படுத்துவது “சோற்றுக் கணக்கு” தான். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்னை எழுச்சியுறச் செய்தது. நீதி உணர்வுக்கு சாப்பிட்ட உணவு ஒன்றே காரணமாக இருக்கிறது. குஞ்சிமுத்துவின் அந்த ஆன்மீக நிலையை அடைய கூடத்தில் இருக்கும் ஓவியம் காரணமாக இல்லை, எத்தனை கோடி பேருக்கு அந்த ஓவியத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மன நிலை, ஓவியத்தின் சாரத்தை ஏற்கும் நிலையில் இருந்திருந்தால் தோட்ட வீடு அந்த வீழ்ச்சி அடைந்திருக்காது அல்லவா?

தங்கம் எனக்கு நீலியாகவே காட்சி அளிக்கிறாள். படிக்கும்போது, நீலி இல்லாமலிருப்பது எனக்கு குறையாகவே தெரிந்தது. முழுமையாக படித்த பின்னர் அவளும் ஒரு நீலிதான் என நான் உணர்ந்தேன்.

ஜெயமோகனின் புன்னகைக்கும் வரிகள் ரப்பரில் இல்லை. குளம் கோரி பேசுவது டீ கடையில் இருந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் எனக்கு மன வருத்தத்தையே தந்தது. ஆகாயப் பறவைகள் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை என்ற வரிகள் லாரன்ஸ் வெளிப்படுத்தும் இடம் இந்த நாவலின் மையம் என நினைக்கிறேன். ஆதிவாசிகளின் தேவை குறைவு. அவர்களும் விதைப்பதும் இல்லை. அறுவடை செய்வதுமில்லை. தேவையான பொருட்களை மட்டும் காடுகளில் சேகரிக்கிறார்கள். அறுவடை செய்வதற்கும் தேவைக்கு பொருட்களை தேடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

நன்றிகள் பல!

தண்டா

முந்தைய கட்டுரைஃபுகோகா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபுறப்பாடு 11 – துறக்கம்