கதைகள்- உத்திகள்-கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது தளத்தில் வெளியான பன்னிரெண்டு கதைகளையும் வாசித்தேன். இந்த கதைகளில் ஒரு முக்கியமான பொது அம்சத்தை கவனிக்க முடிகிறது. உங்களது விமர்சன கோட்பாடுகளோடும் வரையறைகளோடும் மிக கச்சிதமாக பொருந்திப்போகிற சிறுகதைகளாகவே இக்கதைகள் இருக்கின்றன. நீங்கள் “புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள்” கட்டுரையில் நவீனத்துவ கதைகளுக்கென்று என்னென்ன அளவுகோல்களை முன் வைத்திருந்தீர்களோ அவற்றிலிருந்து எந்த வகையிலும் விலகி போகாதிருக்கும் இக்கதைகளைக் கொண்டு தமிழ் சிறுகதையின் இன்றைய நிலையை கணிக்க முடியுமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

வடிவரீதியிலான பரிசோதனைகளின்மீது உங்களுக்கு ஈடுபாடு இல்லை என்பது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததே. “ஊமைச் செந்நாய்” தொகுப்பின் முன்னுரையில் “சோதனை முயற்சிகளில் முற்றாகவே ஆர்வம் இழந்துவிட்டேன்” என்று நீங்களே அதை தெளிவாக பதிவும் செய்திருக்கிறீர்கள். இந்த நிலைப்பாட்டை கணக்கில் கொண்டே நீங்கள் பிரசுரித்திருக்கும் கதைகளையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.அனைத்து கதைகளுமே மிகவும் நேரடியாக உணர்வெழுச்சிக்கான கணங்களை நோக்கிய பாதையில் பயணிக்க முற்பட்டிருக்கின்றன. அதனாலேயே சம்பிரதாயமான வடிவத்தில் இருக்கின்றன. இதை என்னால் ஒரு பின்னடைவாகவே பார்க்க முடிகிறது.

இந்த இடத்தில் நான் “ஜீ.முருகன்”ஐயும் “ஜே.பி.சாணக்யா”வையும் நினைத்து பார்க்கிறேன்.

ஜே.பி.சாணக்யாவையும் ஜீ.முருகனையும் வாசித்தபோது எனக்கு கிடைத்த அனுபவம் ரொம்பவே உணர்வுபூர்வமானது.என் அகத்தோடு உரையாடிய எழுத்தாளர்கள் என்றே நான் அவர்களை சொல்வேன்.அவர்களின் கதைகளோடு நான் என்னை நெருக்கமாக உணர்வதற்கு அக்கதைகளின் கட்டமைப்பும் ஒரு முக்கியமான காரணம். வடிவ பரிசோதனையை வெறும் பரபரப்பு என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவொரு வகையான ஆழ் மன ஊடுருவல் என்றே நான் நம்புகிறேன்.
ஜே.பியையும் ஜீ.முருகனையும் ஓரளவுக்கு நன்றாக வாசித்து முடித்த பிறகே அவர்களின் மீதான உங்களது விமர்சனத்தை படிக்க நேர்ந்தது.

\\ சோதனை முயற்சிகளில் இருவகை. ஒன்று, மொழியை திருகியும் பலபடியாக வளைத்தும் எழுதப்படும் சோதனை முயற்சிகள் . இவை பெரும்பாலும் கோணங்கியை முன்னுதாரணமாகக் கொண்டு செய்யப்பட்டன. ஜெ.பி.சாணக்யாவின் கதைகள் இவ்வகையானவை.\\

\\வடிவத்தில் சோதனைகளைச் செய்யும் கதைகள் இரண்டாம் வகையானவை. ஜீ.முருகனின் கதைத்தொகுதிகள் இரண்டாம் ஓட்டத்தைச் சேர்ந்தவை. புதிய வடிவங்களுக்காக முயற்சிசெய்பவை அவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. \\

இந்த கருத்துக்களின் சரித்தன்மை குறித்து பேசுகிற அளவுக்கு என் வாசிப்பு முதிர்ச்சியடைந்தது இல்லை.எனினும் இந்த கருத்துக்களின் வழியே உங்களது தளத்தில் வெளியான கதைகள் ஏன் சம்பிரதாயமான வடிவத்தில் இருக்கின்றன என்பதற்கான காரணத்தை என்னால் யூகிக்க முடிகிறது.

உங்களது விமர்சனக் கருத்துக்களின் மூலம் நான் தெரிந்து கொள்வது,இன்றைக்கு வடிவ பரிசோதனை செய்பவர்களின் கதைகளில் நிறைய பிசிறுகளும் சிக்கல்களும் இருக்கின்றன.எனவே அவை மனவெழுச்சி ஏற்படுத்துவதில்லை.இதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்கூட தொடர்ச்சியாக நீங்கள் வெளியிட்ட பன்னிரெண்டு கதைகளும் வடிவ ரீதியாக ரொம்பவே தட்டையாக இருப்பதனால் அதிகம் பழக்கமான உணர்ச்சி எல்லையைத் தாண்டி அவற்றால் நகர முடியவில்லை என்றே எனக்கு படுகிறது.

அனைத்து கதைகளுமே தெளிவான திட்டமிடலுடன் முடிவு நோக்கியே முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் உச்சம் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட கதியில் தானிருக்கிறது.

0

“வாசலில் நின்ற உருவம்” “வாயுக்கோளாறு” மற்றும் “கன்னிப்படையல்” ஆகிய கதைகளை நான் ஒரு வகையாக பிரித்துக் கொள்கிறேன். இம்மூன்று கதைகளின் பேசுபொருளும் நமக்கு அதிகம் பரிச்சயம் ஆனது. அதிலும் வாயுக்கோளாறு கதையில் வருகிற அலுவல்  சூழலில் புதிதாக ஒன்றுமே இல்லை.அங்கேயே கதை பலவீனமாகிப் போகிறது. “கன்னிப் படையல்” கதையில் வட்டார வழக்கு ரொம்பவே அருமையாக வந்திருக்கிறது எனும்போதும் அந்த காவல் நிலைய காட்சியெல்லாம் தமிழ் சினிமாவிலேயே நிறைய வந்தாகிவிட்டது.“வாசலில் நின்ற உருவம்” கதையை வாசிக்கிறபோது நீதிக் கதைகளுக்கும் நவீன சிறுகதைகளுக்கும் மொழியில் மட்டும்தான் வேறுபாடோ என்று ஐயம் எழுகிறது. இருந்தும் இந்த மூன்று கதைகளும் உண்மையாக இருக்கின்றன. இதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை.

அடுத்து “சோபானம்” “வேஷம்” மற்றும் “பீத்தோவனின் ஆவி” ஆகிய கதைகளை இன்னொரு வகையாக பிரித்து கொள்கிறேன். இம்மூன்று கதைகளுமே வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களின் வாழ்வை பற்றி பேசுகின்றன.

“வேஷம்” கதையை வாசிக்கிறபோது மனதில் “லங்காதகனம்” கதை அநிச்சையாக வேறொரு பக்கத்தில் கிளைவிடத் தொடங்கிவிடுகிறது. இரண்டு கதைகளும் ஏறத்தாழ ஒரே கதைப்பொருளில் அமைந்திருக்கிறபடியால் ஒப்பிடுதலை தவிர்க்க முடியவில்லை. “வேஷம்” கதையில் ஆசானுக்கு இரண்டு வகை சித்திரங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவரது வேஷத்தையும் ஆட்டத்தையும் கண்டு மக்கள் பிரமிக்கிறார்கள். இறுதியில் நிஜப் புலி வந்து போன பிற்பாடு அவரது ஆளுமை சரிவு கண்டுவிடுகிறது. இதில் முதல் சித்திரம் மிகவும் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆசானின் வீழ்ச்சியில் அத்தனை வலு இல்லை. எனக்கு தெரிந்து லங்காதகனத்தில் இருந்த முழுமை இதில் கை கூடவில்லை. ஏனெனில் “வேஷம்” கதையில் ஆசானின் சரிவிற்கு புறச்சூழலையும் – பிரேம் நசீர் படம்- ஒரு முக்கிய காரணமாக ஆசிரியர் முன்வைக்கிறார். அதுவரை ஆசானின் தனிப்பட்ட ஆளுமையில் மட்டுமே கவனம் கொண்டிருந்த கதையின் போக்கு இங்கு தள்ளாட்டம் கண்டுவிடுகிறது.

“வேஷம்” கதையில் முழுமையாக வெளிப்படாத கலைஞனின் அகம் “சோபானம்” கதையில் நேர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டு கதைகளிலுமே உங்களது (ஜெயமோகன் சார்) தாக்கத்தை அப்பட்டமாக உணர முடிகிறது. உங்களது “இரண்டு கலைஞர்கள்” கதையில் வருகிற யுவராஜை இங்கு ஞாபகப்படுத்தி பார்க்கிறேன்.”சோபானம்” கதையில் இன்னமும்கூட கதாபாத்திரங்களின் அமைப்பில் ஒழுங்கும் தெளிவும் இருந்திருக்கலாம். இருந்தும் கதை முழுக்க ஒருவித வெறுமை – புகழைத் தாண்டிய- இயல்பாக படர்ந்திருப்பது ஆசிரியரின் வெற்றியையே குறிக்கிறது.

“பீத்தோவனின் ஆவி” சிறுகதையில் உண்மை போன்ற பாவனை மேலோங்கி இருப்பதாகவே எனக்கு படுகிறது. அந்த வயதான பெண்மணி ஒரு இந்திய சங்கீத கலைஞனின் பாடல் பற்றி சொல்கிறபோது எனக்கு யுவன் சந்திரேகரின் “குள்ளச் சித்தன் சரித்திரம்” நாவலில் வருகிற காட்சியொன்று நினைவுக்கு வந்தது. இதேப்போல் அயல்நாட்டுக்காரர் ஒருவர் இந்திய இசைக் கலைஞனின் நிகழ்ச்சியில் தன்னிலை மறப்பதாகத்தான் அந்தக் காட்சியும் நீளும். ஆனால் அதில் இருந்த கவித்துவ தெறிப்பு இக்கதையில் சுத்தமாக இல்லை. அந்த காட்சிதான் என்றில்லை. யுவனின் வேறு சில சிறுகதைகளிலும்கூட பிற தேசத்தவரின் பார்வையில் இந்தியாவின் கலாச்சார தொன்மையும் இந்திய மக்களின் குணாதிசயங்களும் செறிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. “பீத்தோவனின் ஆவி” கதையை பொறுத்த மட்டும் இது ஒரு தீர்மானமான கருத்தை வெளிக்கொணர்வதற்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

\\சில மணிகளாவது பீத்தோவனாகவே மாறுவது அல்லது சில மணிகளாவது பீத்தோவனின் உலகத்தில் வாழ முடிவது என்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்\\

உண்மையில் இந்த வாக்கியம் கதையில் நிகழ்ந்திருக்க வேண்டியது. ஆனால் அது வலிந்து உண்டாக்கப்பட்டிருப்பது துர்பார்க்கியமே.

“பயணம்” கதை ஈழத் தமிழர்கள் பற்றியது. ஏற்கனவே இங்கிருக்கும் ஈழக் கதை சொல்லிகளான ஷோபா சக்தி சயந்தன் முதலானோர்களின் கதைகள் வேறொரு உயரத்தில் இருக்கும்போது இந்த கதை இன்னமும் ஆரம்ப நிலையைக்கூட தாண்டவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இக்கதையால் பழகிப்போன உணர்ச்சிக்கு அப்பால் செல்ல முடியவில்லை.

“யாவரும் கேளிர்” கதை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி வெகு இயல்பாக தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.கதையின் போக்கில் எந்த தடங்கலும் இல்லை. ஒடுக்கப்பட்ட வலியை சொல்லும்போது இன்னும்கூட உணர்வுபூர்வமாக இருந்திருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. “அறம்” தொகுப்பிற்கு மிகைத் தனம் தேவைப்பட்டது இதனால் தானே. உடன் எல்லாம் சொல்லப்படுகிறது என்கிற எண்ணம் கதையில் லேசாக துருத்திக் கொண்டிருந்தது.

“வாசுதேவன்” கதையின் தொடக்கம் வெகு அட்டகாசமாய் இருந்தது. அதுவும் வாசுதேவன் பற்றிய விவரணைகள் வெகு துல்லியமாக வந்திருக்கின்றன. அந்த மருத்துவரின் கதாபாத்திரம் மட்டுமே தெளிவின்றி இருந்தது. மற்றபடி உயிர் வாழ்தல் என்பதன் அர்த்தம் குறித்த பரிசீலனைகளும் குழப்பங்களும் அறவுணர்வோடு வெளிப்பட்டிருக்கின்றன. கதையின் தொடக்கத்திலிருக்கும் உணர்வெழுச்சி இறுதியில் மொத்தமாக அடங்கிவிடும்போது இயல்பாக கைக்கூட வேண்டிய அமைதி அந்த குழந்தையின் கதாபாத்திரத்தால் சிதறிவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அது கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது.

“தொலைதல்” கதையை பொறுத்த வரையில் சிவபாஸ்கரன் கதாபாத்திரத்தின் புதிர்த்தன்மை கதைக்கு ஒரு புதிய நிறத்தை கொடுக்கிறது.மிக கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட கதை.எனினும் சிவபாஸ்கரனை அதிகம் பேசவிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றாமல் இல்லை.

இந்த வரிசையிலேயே எனக்கு அதிகம் பிடித்த கதை “உறவு”தான். இதில் சொல்லப்பட்டதைவிடவும் சொல்லப்படாத விஷயங்களே அதிகம் கனமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. உறவுகளின் உயிர் தன்மையை கசப்பில் இருந்து அறிந்து கொள்வது ஒரு அக தரிசனம். இதை வலிமையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கதையின் நடையும் மிகவும் இளகி வாசகனை தன்னோடு அணைத்துக் கொள்கிறபடி இருக்கிறது. கதையின் இறுதியில் முருகண்ணன் உடைகிற தருணம் உணர்ச்சிகரமானது என்கிறபோதும் கதையின் உச்சம் அதில் மட்டும் இல்லை. கதை தன் தொடக்கத்திலிருந்தே வலியோடும் துயரத்தோடும் தன்னை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கிறது. இதுவே இந்த கதையின் பலம்.

0

இக்கதைகளில் ஒரு முக்கியமான விஷயம். தற்கால மோஸ்தர் என்கிற வகையில் இருண்மையை மட்டும் சாரமாக கொண்டு இவற்றில் ஒரு கதையும் இயற்றப்படவில்லை என்பது ரொம்பவே சந்தோஷம் தருகிறது.

0

இவை முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே. இவை சரியாக இருப்பதற்கும் தவறாக இருப்பதற்கும் சம அளவில் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை மறக்காமல் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

0

அன்புடன்
விஷால் ராஜா

அன்புள்ள விஷால் ராஜா,

இவை எனக்குப்பிடித்த கதைகள் மட்டுமே. அந்த ரசனைதான் நேர்மையான சரியான அளவீட்டை அளிக்கமுடியும். அதை திட்டவட்டமாக முன்வைக்கிறேன். எந்த ரசனைக்கும் எல்லை உண்டு என்பதையும் சொல்லியபடியேதான் இருக்கிறேன்.

ஆனால் என் ரசனையை குறுகியது , வாசிப்பனுபவம் அற்றது என நீங்கள் மதிப்பிட நினைக்கிறீர்கள் என்றால் அது எனக்கு ஏற்புடையதல்ல. அது உங்கள் தனிப்பட்ட எண்ணம்.

முப்பதாண்டுகளாக இலக்கியவாசகனாகவும், இருபதாண்டுக்காலமாக இலக்கியவிமர்சகனாகவும் செயல்பட்டு வரக்கூடியவன் நான். இலக்கிய ஆக்கத்தின் புதியவகைமைகள், வடிவச்சோதனையின் சாத்தியங்கள் பற்றி ஓரளவு அவதானித்திருக்கிறேன் என்னும் தன்னம்பிக்கை எனக்குண்டு.

தமிழில் வெவ்வேறு புதியவடிவங்களில் படைப்புகளை எழுதியவர்களில் பலரை அனேகமாக நான்தான் முதலில் அடையாளம் கண்டிருப்பேன். விரிவான முதல் கட்டுரையை எழுதியிருப்பேன். ப.சிங்காரம் முதல் கோபி கிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர் வரை. என் இலக்கியவிமர்சனக் கட்டுரைகளில் பாதிக்குமேல் மாறுபட்ட இலக்கிய உத்திகளில் எழுதப்பட்ட ஆக்கங்களை வாசகன் புரிந்துகொள்ள உதவியாக எழுதப்பட்டவை. அதை அறிய நீங்கள் என் இணையதளத்தை வாசித்தாலே போதுமானது.

என்னுடைய புனைவுலகிலேயே எல்லாவகையான வடிவங்களிலும் எழுதியிருக்கிறேன். அத்தனை வடிவ வகைபேதங்களை புதுமைப்பித்தனிடம் மட்டுமே தமிழில் காணமுடியும். ஆனால் நான் உத்திச்சோதனைக்காக எழுதுவதில்லை. எந்த நல்ல எழுத்தாளனும் அப்படி எழுதவும் மாட்டான். நான் உணர்வதைச் சொல்ல அதற்கான வடிவத்தை தன்னிச்சையாகவே தேர்வுசெய்வேன்.

ஆனால் இலக்கியமென்பது வடிவத்தைக்கொண்டு விளையாடும் மூன்று சீட்டாட்டம் அல்ல என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். இலக்கியம் எல்லா நிலையிலும் வாழ்க்கையைப்பற்றிய விமர்சனமும் அவதானிப்பும்தான். வரலாறாக கவிதையாக தரிசனமாக வெளிப்படுவதெல்லாமே வாழ்க்கைதான். உத்தி என்பது அந்த வாழ்க்கையை மிகச்சிறந்த முறையில் முன்வைப்பதற்காகக்த்தான்

ஆகவே ஓர் ஆக்கம் அதன் உத்தியை துருத்திக் காட்டுகிறதென்றாலே அந்த உத்தி தோற்றுவிட்டதென்றே பொருள். அந்த வாழ்க்கைக்கூறை அது உணர்த்திவிட்டதென்றால் உத்தி நம்மை சீண்டாது. அதுதான் உத்தியின் வெற்றி

நீங்கள் சொன்ன எழுத்தாளர்கள் எழுதிய சில கதைகள் எனக்குப்பிடித்திருக்கின்றன. ஆனால் கணிசமானவை வெறும் உத்திகள். அவை புதியவைகூட அல்ல. தமிழிலேயே பலமுறை பலரால் வெற்றிகரமாக இலக்கியத்தில் கையாளப்பட்டவை

ஆம், நீங்கள் சொல்வது சரிதான். குறைவான வாசிப்பின் விளைவான முடிவுகள் நீங்கள் முன்வைப்பவை. இன்னும் வாசியுங்கள். அதன்பின் முடிவுகளுக்கு வாருங்கள்

ஜெ

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

\\ஆனால் என் ரசனையை குறுகியது , வாசிப்பனுபவம் அற்றது என நீங்கள் மதிப்பிட நினைக்கிறீர்கள் என்றால் அது எனக்கு ஏற்புடையதல்ல. \\

என்னுடைய கடிதம் இப்படி பொருள்படுகிற மாதிரி உங்களுக்கு தோன்றியிருக்குமேயானால் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டுமென முதலில் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய வாசிப்பனுபவத்தின் மீது சந்தேகம் கொள்வதற்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது. எத்தனையோ புத்தகங்கள் பற்றி உங்களது தளத்தில் நான் வாசித்திருக்கிறேன். அதன் வழியே எனது புரிதல்கள் பல மடங்கு உயர்ந்திருக்கின்றன. என்னுடைய கடிதத்தில் ஒரு இடத்திலும்கூட உங்கள் விமர்சனக் கருத்து தவறு என்று நான் சொல்லவில்லை. அந்த ஆராய்ச்சிக்குள்ளேயே நான் போகவில்லை.

என்னிடம் இருந்தது வேறொரு சந்தேகம். ஜெயமோகன் தனது தளத்தில் புதியவர்களின் கதைகளை வெளியிடுகிறார் எனும்போது அது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது இயல்பே. உடன் புதியவர்களின் கதைகள் எனும்போது அவை ஒரு வகையில் இன்றைய தமிழ் சிறுகதையின் நிலை குறித்த தெளிவான சித்திரத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது. இப்படியான நிலையில் இந்த பன்னிரெண்டு கதைகளும் சம்பிரதாயமான வடிவத்தில் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே நான் சொல்ல முயன்றேன். உடன் அனைத்து கதைகளும் பழக்கமான முறையில் இருப்பதும் ஒரு பெரிய குறையாக எனக்கு பட்டது.

மனோஜின் “பால்” சிறுகதை காலச்சுவடில் வெளியானபோது அது பற்றி நீங்கள் ஒரு விமர்சனக் குறிப்பு எழுதியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த வரிசையில் ஒரு கதைகூட அது போன்ற முயற்சியாக இல்லாதது துருத்தலாக தெரிந்தது.

மற்றபடி என்னுடைய குறைந்த வாசிப்பனுவம் கொடுத்த அதீத தன்னம்பிக்கையில் எல்லாம் நான் பேசவில்லை என்பதை இங்கு மறக்காமல் பதிவு செய்கிறேன். அப்படியான தொனி என்னுடைய கடிதத்தில் தென்பட்டிருந்தால் திரும்பவும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

விஷால் ராஜா

அன்புள்ள விஷால்,

ஒற்றைவரியில் சொல்கிறேனே. மரபான கதையின் மொழி ,அமைப்பு ஆகியவற்றை எந்தச்சிக்கலுமில்லாமல் சர்வசாதாரணமாக அடையுமளவுக்கு தேர்ச்சி கொண்ட பின்னர்தான் எழுத்தாளர்கள் புதியவகை கதைசொல்லிகளாக முன்னகர்கிறார்கள். அப்படி இல்லாமல் சரளமான மொழியோ வடிவபோதமோ இல்லாமல் ஓர் ஆர்வம் காரணமாக அதைச்செய்பவர்கள் அசட்டுக்கதைகளை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆகவே புதிய எழுத்தாளர்கள் புதிய உத்திகளில் எழுதாதது புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆனால் நான் என் பிரசுரமான இரண்டாவது கதையையே அன்றுவரை தமிழில் எவரும் எழுதாத மொழியில், அமைப்பில்தான் எழுதியிருந்தேன். [படுகை] அக்கதை வெளிவந்தபோது இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா என மூத்த எழுத்தாளர்கள் பலர் பெரும் ஆர்வத்துடன் எதிர்வினையாற்றினர். அப்படி தமிழில் பலமுறை நிகழ்ந்துள்ளது. ஆனால் தெரியாத விஷயம் நான் அதற்கு முன்னர் நூறுகதைகளுக்குமேல் வேறு பெயர்களில் எழுதியிருக்கிறேன் என்பது. என் பதினைந்தாவது வயது முதல். மொழியிலோ அமைப்பிலோ நான் பழகிக்கொள்ள ஏதுமில்லை அன்று.

எழுத ஆரம்பிக்கும்போது உத்திச்சோதனைகளை நோக்கிச் செல்லக்கூடிய எழுத்தாளன் ஒருவகை அசடாகவே நீடிப்பான். அதற்கு ஒரு இருபது பெயர்களை நான் சொல்லமுடியும். எழுத்தாளனுக்கு அவனுக்கென ஒரு வாழ்க்கை, ஒரு அகசிக்கல், ஒரு தத்துவமுடிச்சு இருக்கும். அதை அடையாளம் காண்பது, முடிந்தவரை நேர்மையாக முன்வைக்க முயல்வதுதான் அவன்செய்யவேண்டியது. மரபான முறையில் அதைச் செய்ய முடியலாம். முடியவில்லை என்ற உணர்வு ஏற்படும்போது வேறென்ன வழி என அவன் சிந்தனை ஓடுகிறது. பல இடங்களில் முட்டி மோதுகிறது. ஏற்கனவே இருக்கும் வடிவத்தை எங்கொ உடைத்து வெளியேறுகிறது. அதுவே புதியவகை உத்தியாகிறது. நல்ல எழுத்தாளனின் வழி அதுவே.

ஒரு படைப்பை வாசிக்கையில் வேறு எவ்வகையிலும் அதை எழுதியிருக்கமுடியாது என நாம் உணர்ந்தோமென்றால் மட்டுமே அந்த உத்தி நியாயப்படுத்தப்படுகிறது. கோபிகிருஷ்ணனின் கதை உத்தி அவரது ஆளுமையிலிருந்து பிரிக்கமுடியாதது. விஷ்ணுபுரத்தின் சிக்கலான மெடாஃபிக்‌ஷன் வடிவம் அதை வாசிக்கையில் மிக இயல்பானதாகவே தோன்றும். அதுதான் உத்தி. கதையை கவனம் பெறுவதற்காக உடைத்துத் திரிப்பது அல்ல. அப்படிச்செய்த நல்ல எழுத்தாளன் எவனும் இல்லை

ஆகவே உண்மையான வடிவச்சோதனை மிக அபூர்வமாகவே நிகழக்கூடியது. எழுத்தாளனின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக உருவாகி வரக்கூடியது. ஒரு சூழலில் உள்ள கலைவடிவத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதென்பது எளிய விஷயம் அல்ல. ஆரம்பகட்ட எழுத்தாளர்களின் பயிற்சிக்களத்தில் அது நிகழாது. வலுவான கலைஞர்களின் சவால் அது

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,

நான் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த 12 கதைகளையும் அவற்றுக்கான பின்னூட்டங்களையும் வாசித்து முடித்துவிட்டேன். கடந்த செவ்வாய் கிழமை கூலிம் தியான ஆசிரமத்தில் நடந்த மாதாந்திர இலக்கிய களத்திலும் அந்த புதிய கதைகளில் முதல் ஐந்து கதைகளை முன் வைத்து கலந்துரையாடல் நிகழ்த்தினோம். சுவாமிகள் தலைமையில் அந்த கலந்துரையாடலில் கோ.புண்ணியவான், பாலமுருகன், குமாரஸ்சுவாமி, மணிமாறன், தமிழ்மாறன், மணிஜெகதீசன் போன்ற நண்பர்கள் பல நல்ல ஆழமான விஷயங்களை பேசினார்கள். அக்கதைள் பல்வேறு கோணங்களில் அணுக தக்க நல்ல கதைகள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் எனக்கு வேறு வகையில் சில சந்தேகங்கள் உள்ளன. இச்சந்தேகங்களை நான் இலக்கிய களத்தில் முன்வைக்கவில்லை. காரணம் இலக்கிய களத்தில், முதல் 5 கதைகளை மட்டுமே வாசித்து அவற்றை பற்றியே பேசினோம்.

தற்போது என் கவனம் மொத்த 12 கதைகளிலும் கையாளப்பட்டிருக்கும் உத்தி மற்றும் இலக்கிய கூறுகள் தொடர்பானது. சில நூறு கதைகளில் அந்த பன்னிரெண்டு கதைகளை மட்டும் நீங்கள் முன்னிறுத்துகிறீர்கள் என்றால் நிச்சயம் சிறப்பான காரணம் இருக்கும். சமகால இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையான தாங்கள் சுட்டிக்காட்டும் கதைகள் முன்மாதிரியாக கொள்ளத் தக்கவை என்றே நம்புகிறேன்.
ஆயினும் என் வாசிப்பில், அக்கதைகளில் எதுவும் பின்நவீனத்துவ கதை என்று தனித்து நிற்க வில்லை என்பதே என் கருத்து. நான்-லீனியர் பாணியிலான கதைகளையும் காணவில்லை. முக்கியமாக, நான் அதிகம் விரும்பும் மாந்திரீக  யதார்த்த கதை ஒன்று கூட இல்லை. இச்சூழலை வைத்து நான் மூன்று காரணங்களை ஊகிக்கிறேன்.

1. பின்நவீனத்துவ, நான்-லீனிய, மாந்திரீக யதார்த்த கதைகளை யாரும் உங்களுக்கு அனுப்பவில்லை.

2. அப்படியே அனுப்பியிருந்தாலும் அவை கருத்தாழம் இன்றி இருந்திருக்க வேண்டும்.

3. நான் மேற்சொன்ன பாணி கதைகளில் தங்களுக்கு நம்பிக்கை குறைந்து போயிருக்கலாம். நல்ல சிறுகதைகள் அமைவதற்கு இது போன்ற பாணிகள் எதுவும் தேவை இல்லை என்றும் நீங்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்.

ஒரு சிறந்த நவீன சிறுகதைக்கு உயிரும் உடலும் போல கருத்தும் உத்திமுறையும் இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். ஆனால் மேற்கண்ட 12 கதைகளும் (உத்தி அளவில்), அசோகமித்திரன், வண்ணநிலவன், சா. கந்தசாமி, லா.ச,ரா போன்ற மூத்த தலைமுறை படைப்பாளிகளின் அணுகுமுறையிலிருந்து மாறாமல் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எல்லாம் நேர்கோட்டு கதைகள். வழக்கம் போல திடீர் திருப்பத்துடன் முடிகின்றன. கதை வடிவமும் பழகியதுதான். பலரும் பலமுறை நடந்து பழகிய பாதையிலேயே நடந்து சென்று சிகரத்தை அடைய முயலும் முயற்சியாகவே இக்கதைகளைப் பார்க்கிறேன். புதிய பதைகளை போடும் வேகம் அவற்றில் குறைந்தே காணப்படுகிறது. உலக சமகால இலக்கிய கூறுகளும் புதுமை வெளிப்பாடுகளும் அவற்றில் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து. என் கருத்து பிழையாக இருக்கலாம். தங்கள் மேலான விளக்கம் வேண்டி காத்திருக்கிறேன். நன்றி.

அ.பாண்டியன்
பினாங்கு

அன்புள்ள பாண்டியன்,

பொதுவாக நேர்மையாக எழுத முனையும் ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் செயற்கையாக உத்திச்சோதனைகளில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் சொல்லியாகவேண்டிய வாழ்க்கையைச் சொல்லவே முயல்வார்கள். அதற்கு சூழலில் சாதிக்கப்பட்ட வடிவத்தை கையாள முயல்வார்கள். அந்த வடிவத்தை அடைந்தபின் எழும் ஆழமான போதாமை உணர்வால்தான் அவர்கள் புதிய உத்திகளை நோக்கிச் செல்கிறார்கள்.

இக்கதைகளை எழுதியவர்களுக்குச் பொதுச்சிறுகதைவடிவை அடைவதே சவாலாக இருந்திருக்கும். மேலே செல்வது அடுத்த படிதான் என்று படுகிறது. நடக்கக் கற்றுக்கொண்டபினனர்தானே பறத்தல்?

எனக்கு புதிய உத்திகளில் எழுதப்படும் கதைகளில் மறுப்பு ஏதும் இல்லை. ஆனால் உத்தி காரணமாக பரபரப்பு எதையும் நான் அடைவதுமில்லை. அந்த உத்திமூலம் முன்வைக்கப்பட்ட வாழ்க்கையையே கவனிக்கிறேன். அது நிகழ்த்தப்பட்டிருந்தால் உத்தி இயல்பாகவே நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைப்பற்றிப் பேசவே வேண்டியதில்லை.

ஆனால் , எனக்கு வந்த கதைகளில் உத்திச் சோதனை என நினைத்து எழுதப்பட்ட கதைகள் முதிராமொழியுடன் செயற்கையான பேச்சுப்பாவனையுடன் இருந்தன. ஒரு இயல்பான பொதுச்சிறுகதை வடிவை எழுதமுடியாத போதாமையை உத்திகளைக்கொண்டு சமன்செய்ய முயன்றதாகப்பட்டது. அந்த உத்திகள்கூட தமிழுக்கு மிகப்பழையவை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஒருபாலுறவின் உலகம்
அடுத்த கட்டுரைவாசலில் நின்ற உருவம் பற்றி…