கைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்

அன்புள்ள திரு. ஜெயமோகன்

வணக்கம்

நான் அரவிந்தகுமார் சச்சிதானந்தம், பொறியாளராக வேலை பார்த்துவிட்டு இலக்கியத்தின் மீதிருக்கும் ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு, இன்று முழு நேர படைப்பாளியாக முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்.

இத்துடன், Transvestism பற்றி நான் எழுதிய கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும் என்ற சிறுகதையை இணைத்துள்ளேன்.

தாங்கள் வாசித்து பார்த்து, தங்களின் கருத்துக்களை பதிவு செய்யவும்.

மிக்க நன்றி

அரவிந்த்குமார் சச்சிதானந்தம்

அன்புள்ள அர்விந்த்குமார்,

சிறுகதை எழுதுவதற்கான உந்துதலுடன் இருப்பதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

1. இச்சிறுகதையின் சிறப்பு அடிப்படையில் ஒரு நல்ல கதைக்கருவை வாழ்க்கையில் இருந்து அவதானித்து எடுத்திருப்பதில் உள்ளது. அது உங்களை நல்ல சிறுகதையாசிரியராக அடையாளம் காட்டுகிறது.

2. ஆனால் இச்சிறுகதை இப்போது நல்ல சிறுகதை அல்ல. தமிழின் நல்ல சிறுகதைகளை வாசித்திருந்தீர்கள் என்றால் உங்களால் நான் சொல்லவருவதை உணர்ந்துகொள்ள முடியும். ஆகவே சிறுகதை எழுதுவதற்கான அடிப்படைத்தகுதி தொடர்ந்து இலக்கியங்களை வாசிப்பதும் மனதுக்குள் அவற்றை ஆராய்ந்துகொள்வதும் ஆகும். நீங்கள் எழுதும் கதை தமிழின் இதுவரையிலான சிறுகதை மரபிலிருந்து ஒரு அடி முன்னால் நகர்வதாக இல்லாதவரை அதற்கு எந்த உண்மையான இலக்கியமதிப்பும் இல்லை

இச்சிறுகதையின் பிரச்சினைகள் என்ன?

1. இச்சிறுகதை மிகவெளிப்படையாக எழுதப்பட்டுள்ளது. இலக்கியப்படைப்பு வாசகனிடம் பேசவோ அறிவுறுத்தவோ வாதிடவோ முயலக்கூடாது. வாசகனின் கற்பனையை தூண்டிவிடவேண்டும். கதையில் உள்ளவற்றை விட அதிகமாக வாசகன் கற்பனைசெய்துகொள்ளச் செய்யவேண்டும். அப்படி வாசகன் கற்பனைசெய்து விரிவாக்கம் செய்துகொள்ள என்ன தேவையோ அதற்குமேல் அக்கதையில் ஏதும் இருக்கக்கூடாது. ஆகவே ”குறைவாகச் சொல்லி அதிகமாக சொல்லாமல் விடும் கதையே நல்ல கதை”

2. இந்தக்கதை நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்கிறது. தலைப்பே கதையின் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. இந்தக்கதைக்கு ‘கைக்குட்டை’ என்றோ ‘வண்ணங்கள்’ என்றோ தலைப்பு வைத்திருந்தால் கதையின் நுட்பம் அதிகரித்திருக்கும். இந்தப்பிரச்சினை டிரான்ஸ்வெஸ்டிசம் என நீங்கள் ஏன் சொல்ல வேண்டும்? அது என்ன என்று வாசகனே புரிந்துகொள்ளட்டுமே. ஒருவேளை வாசகன் அவனுடைய அனுபவத்தால் இன்னும் அதிகமாகக்கூட புரிந்துகொள்வான் இல்லையா?

3. இப்படி அடையாளப்படுத்துவதனால் வாசகன் இந்தப்பிரச்சினை இந்த மனச்சிக்கல் என்பதை மட்டுமே புரிந்துகொள்வான். ஆனால் வெறுமே கைக்குட்டைகளைப்பற்றிய கதை என்ற அளவிலேயே இருந்திருந்தால் வாசகன் ஆணுக்குள் உள்ள பெண்மை, ஆணின் தாய்மை என எவ்வளவோ தளங்களில் புரிந்துகொள்ள முடியும் இல்லையா?

4. கதையையே விளக்கி விளக்கி எழுதியிருக்கிறீர்கள். ஒரு கதையை எழுதியபின் அக்கதையில் மிக அவசியமாக இல்லாத அனைத்தையும் வெட்டிவிடுவது ஒரு நல்ல பயிற்சி. இக்கதையில் கல்வியைப்பற்றி, மக்களின் மனநிலையைப்பற்றி பொதுவான கூற்றுக்களாக வரும் எல்லா வரிகளும் தேவையற்றவை. கதையின் கருவை கதைக்குள்ளேயே விரிவாக விவரித்திருப்பது மிகமிகப்பிழையானது

5. இக்கதையில் ‘நீங்கள்’ என வாசகனை விளித்துப்பேசுவது தேவையற்றது. அந்தவகைக்கதைகள் பழையவை. மேலும் இக்கதையில் அதற்கான அவசியமே இல்லை

6. இக்கதையை ஒரு நல்ல சிறுகதையாசிரியன் எப்படி எழுதியிருப்பான்?

அ. கதை கைக்குட்டைகள், வண்ணங்கள் பற்றியதாக மட்டுமே இருக்கும்படி அமைத்திருப்பான். மேலோட்டமான பார்வையில் ஒருவனுக்கு கைக்குட்டை, அதன் மென்மை மற்றும் வண்ணங்கள் மீதான ஈடுபாடாக மட்டுமே கதை இருக்கும். அவனுக்கு இப்போது எப்படி கைக்குட்டை பிடித்திருக்கிறது, அந்த ஆர்வம் எப்படி வந்தது என்று மட்டுமே இருக்கும்

ஆ. அவனுக்கு பெண்களின் உடைமீது ஓர் ஆர்வம் இருந்தது என்பது மிகச்சில வரிகளில் கதையில் சொல்லப்பட்டிருக்கும். அந்த ஆசை குடும்பத்தால் ஒடுக்கப்படுவதும் மென்மையாகச் சொல்லப்பட்டிருக்கும்

இ. கைக்குட்டை பெண்மை, குழந்தை இரண்டுடனும் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு கவித்துவ மையம் நோக்கிச் சென்றிருக்கும். அதாவது ஒரு கதை ஒரு பிரச்சினையை ஒரு களத்தை காட்டியிருந்தால் அதிலிருந்து அடுத்த நகர்வு நிகழ்ந்திருக்கவேண்டும். அந்த நகர்வையே சிறுகதையின் உச்சம் அல்லது முடிச்சு அல்லது முத்தாய்ப்பு என்கிறோம். அது நிகழவில்லை என்றால் அது சிறுகதை அல்ல, கதைதான்.’

கதையை நான் மறு அமைப்பு செய்திருக்கிறேன் பாருங்கள்

இதுதான் இக்கதை என்பது இல்லை. இது இக்கதையின் ஒரு வடிவச்சாத்தியம் மட்டுமே. கதையில் அடையவேண்டிய முதல்கட்ட வடிவம் இது. மேலதிக வடிவ அழகுகளும் நுட்பங்களும் ஆசிரியனின் கற்பனை சார்ந்தவை. அதாவது கதையின் வடிவ இலக்கணம் அதை அறிந்து மேதமையால் மட்டுமே தாண்டிச்செல்லப்படவேண்டியது

கதைத்தொழில்நுட்பம் மிக அவசியமான ஒன்று. எந்தக்கலையிலும் இவ்விரு தளங்களும் உள்ளது. ஒன்று தொழில்நுட்பப்பயிற்சி இன்னொன்றும் அகத்தூண்டல். அகத்தூண்டல் உங்களுக்கு உள்ளது. ஆகவே தான் இவ்வளவு நீளமாக எழுதினேன். தொழில்நுட்பத்தை வாசிப்பு மூலம் கற்றுக்கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

மறுகட்டமைப்பு செய்யப்பட்ட கதையை வாசித்தேன். நிறைய விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக, இது போன்ற கதைகளில், Monologue-ஐ தவிர்ப்பதன் அவசியத்தையும், வாசிப்பவர்களின் கற்பனைக்கே கதையை விட்டு விட வேண்டிய அவசியத்தையும் புரிந்து கொள்ள தங்களின் கருத்து உதவுகிறது.

இந்த கதைக்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி. தங்களின் விரிவான கருத்து எனக்கு நிச்சயம் பயன்படும்.

அரவிந்த்

முந்தைய கட்டுரையாவரும் கேளிர் பற்றி…
அடுத்த கட்டுரைகைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]