கைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]

[அர்விந்த்குமார் சச்சிதானந்தம் மூலவடிவம் ]

கடந்த இரண்டு மாதத்தில் நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கியிருக்கிறேன். ஒரு வருடத்திற்கு சுமார் ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவழிக்கிறேன். கைக்குட்டையை வைத்து நான் பாய்மரக்கப்பல் செய்யவில்லை, எல்லாரையும்போலத்தான் பயன்படுத்துகிறேன்

“பத்திரம்டா! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்த கைகுட்டையை என் யுனிபார்ம் ட்ரௌசரோடு சேர்த்து ஊக்கை குத்தும் போது. அழகான பூ போட்ட வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூ போட்ட கைக்குட்டை உபயோக படுத்தவில்லை. யாரும் உபயோகப் படுத்தவிடவில்லை. பூ போட்ட கைகுட்டைகளும் குடைகளும் பெண்களுக்கு மட்டுமே உரித்தானவையென்று சொல்கிறார்கள். ஆனால் பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிகின்றன.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த ராமஜெயத்தை எல்லாரும் அழும் வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்த கைக்குட்டை ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல இயலவில்லை. நண்பர்கள் என்னை ஒதுக்கி வைத்திடுவார்களோ என்ற பயம். வீட்டிலும் ஒரு நாள் பூ போட்ட புடவையை முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்த தழும்பு இன்னும் என் வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கிறது.

சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது விளக்குமாற்றில் அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்து சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். “ஒரு கைக்குட்டையை தொலச்சதற்க்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.’’ “எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி!”

ஒவ்வொரு முறையும் கைக்குட்டையை தொலைத்து விட்டு நான் ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாட தொடங்கிவிடுவாள்.

அம்மா அடிக்கும்போது அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும்.மூச்சு இரைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது…பொருள தொலைச்சதுக்கு பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும், என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதை சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிவிடும். “……..பொட்ட புத்தி உனக்கெதுக்குடா!” . நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்பு தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

பெரும்பாலும் அம்மா எதற்காக அடிக்கிறாள் என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்த காரணங்களுக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.“ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களை காண தாளாமல் நான் அவள் கால்களை கட்டிக் கொள்வேன்.“இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா! நீ அழாத!”.

அக்காவின் பூ போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லி சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடிய கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரி காம்பே…”

அந்த கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேலை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம் ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று என பல வகையான கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைதான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்ட கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள்.

இருதினங்களுக்குமுன் அக்காவிற்கு கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்கு தெரியாமல் நான் எடுத்து வைத்துக் கொண்டேன். புடைவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றை பார்த்தால் என் மனம் கட்டுப் பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குபின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

ஒரு நாள் அவள் மாங்காடு கோவிலுக்கு சென்றிருத்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்து சுற்றிக் கொண்டேன். அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைகாக அடிக்கிறாள்.

அம்மா பெரும்பாலும் பிச்சைக்காரிகளுக்கு கொடுப்பதற்காகவே தன் பழைய புடவைகளை எடுத்து மூட்டைக் கட்டி வைத்திருப்பாள். அவள் இல்லாத போது அதிலிருந்து சில புடவைகளை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்வேன். நிறைய புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதை கண்டு பிடிக்க இயலாது.

என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை. அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம்.
.
“அப்பா வறார்டா….!” அம்மா ஒருமுறை சொன்னாள் எனக்கு எந்த சந்தோசமும் ஏற்ப்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

அம்மா ஏதோ வத்தி வைத்திருக்கிறாள். அப்பா நிறைய பரிசு பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையை திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவை பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.“பை மாறி போச்சா! அக்காகிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு”

பின் அவர் கொடுத்த எந்த பொருட்களும் என்னை கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

அப்பா எதற்க்காக வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டனர். நான் அறையினுள் நுழைந்தால், பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகதான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது.

அம்மா மலிவு விலை கைக்குட்டைகளை வாங்குவதைக் கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்ப தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” இன்றுவரை நான் விலைமதிப்புள்ள கைக்குட்டைகளை வாங்குகிறேன்

“அக்கா கல்யாணம்டா….”

இதற்கு தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன்.. வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தன.. தினம் தினம் விருந்தாளிகள் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்து தெருவில் ஒரு லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப் பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு அழைத்து செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள் ! வகை வகையான ஆடை அலங்காரங்கள் ! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்கு தெரிந்தது. என் வயது பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நிறைய பெண்கள். என்னுடன் விளையாடியப் பெண்கள் எல்லாரும் வளர்ந்துவிட்டிருந்தனர். நான் அவர்களுடன் சென்று சேராமல் தூரத்தில் நின்றே பார்த்துக்கொண்டிருந்தேன்

ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்திருந்தாள். நான் கிரிக்கெட்டில் நேரம் செலவழித்ததால் என் சித்தி பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம் நான் திடிரென ஒட்டாமல் போனதை அவள் ஒரு பெரிய அதிசயம் போல் தன் தோழிகளிடம் விவரித்துக் கொண்டிருந்தாள்.

“என் தம்பிய பாத்தீங்களா…பெரிய மனுஷன்…நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”

தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். என்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

“ஏண்டி கல்யாண பொண்ணே! நீ உன் வேலைய பார்த்துகிட்டு போ…உன் தம்பிக்கு பத்து வயசுதான்…ஆனா.. ” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கி சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும் கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த வீட்டிற்க்கு சென்று விட்டாள். வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளும் ஒவ்வாருவராக சென்றுவிட்டனர்.

கசைசியாகச் சித்தியும் பெண்ணும் சென்றனர். “அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்ப துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

வெட்கத்துடன் சித்தி மகள் “போயிட்டு வறேன் பெரியம்மா!” என்றவாறே என்னை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்.

“மொட்டை பைய்யன் மாதிரி ஆடாத…வீட்ல அடக்கமா இரு.“ அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

ஆட்டோ மறையும் வரை கலங்கிய கண்களுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் அக்கா .மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகி போய்விடுவாள். அப்பா மீண்டும் வெளிநாடு போக போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி என்னை சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது.

அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று சொன்னார். நிச்சயம் அம்மா சொன்னதுதான்.

. ”நான் துபாய்க்கு போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசிற்க்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவன பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

எனக்கு கண்கள் மீண்டும் இருட்டின. நான் அப்போதுதான் ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்க்குள் என் பன்னிரெண்டாம் வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப் படுகிறது.

“மாதம் ஒரு முறை நீங்க வந்து பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனை கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்த தாளில். அப்பா உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்து சென்றார். நான் அழுதுக் கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை. திடிரென்று அங்கு அமைதிக் குடிக்கொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுக்கொண்டார். நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

“என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார்.

கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும் மலர்ந்திருந்தது. அப்பாவின் மீது பாசம் கூடிவிட்டது எனவும் சொல்லலாம். அன்று முழுக்க பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். எதிலும் எனக்கு நாட்டமில்லை. என் கவனம் முழுக்க அப்பா வாங்கி தந்த அந்த பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது..

ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால் எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையை கோதியவாறே சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

போவதற்க்கு முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். என்னை பற்றிதான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை இரண்டு முறை திரும்பி பார்த்தது எனக்கு என்னவோ போல் இருந்தது.

பெண்களின் சகவாசமேயின்றி பள்ளிப் படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு கூச்ச சுபாவம் குடிக்கொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்த பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிற சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்த பெண்களின் ஆடைகளை பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கிதான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்கு சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.“நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறிமாலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

“இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா

கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனை கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்து கருப்பின் வேலையோ என எண்ணி கோவிளுக்கெல்லாம் அழைத்து சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளை தொலைக்கும் பணியினை நான் செவ்வென செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து கைக்குட்டைகள்வாங்கிடுவேன்.ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன் ….

அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,“ நீ வேணும்னேதான் தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.

அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம்.பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது. புதியகைக்குட்டையை வாங்க அருகிலிருக்கும் கடைக்குள் உடனே நுழைந்துவிடுவேன்.

சம்பாதிக்க தொடங்கியப்பின் ஒரு முறை கடையில் சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.“சார்! இது உங்களுக்கா!” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.“இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான்!” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.

“ஓ! மாறி போச்சா…வேற எடுத்திட்டு வரேன்” என்று வேறொரு கைக்குட்டையை வாங்கிவந்தேன்.

நான் நினைத்திருந்தால்,அது எனக்கு தான் என்று தைரியமாக சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னை பார்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது.

“அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்த புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க”

என் மனைவி. நான் ஏதோ அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்ப தான் ஆசை” என்பாள் வெகுளியாக.

“உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள்.

பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

அவள் குழந்தையை என்னிடம் தந்துவிட்டு புடவையை நோக்கிக் குனிந்தாள். மெத்துமெத்தென்ற கைக்குழந்தை. ஒரு சிறிய பட்டுக்கைக்குட்டைபோல. நான் அதை என் முகத்தோடு சேர்த்துக்கொண்டேன். அதன் மென்மையான வயிற்றில் மூக்கை உரசினேன்.

முந்தைய கட்டுரைகைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்
அடுத்த கட்டுரைஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்