«

»


Print this Post

வேஷம், உறவு கடிதங்கள்


வேஷம் சிறுகதை குறித்து:

பல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை.
கதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை. ஆசானின் வாய்மொழி மூலமாகவோ, அல்லது அவருடைய களியாட்டத்தில் ஏற்படும் மனவோட்டங்கள் மூலமாகவோ அதை இன்னும் விவரித்திருக்கலாம். அதற்கு எதிர்ப்பதமாக வரும் அசல் புலியை குறித்த ஊராரின் பயம் உருவாவது, அதை அவர்கள் சொல்லக் கேட்ட கதைகள் மூலம் வளர்த்தெடுப்பது பின்னர் கொல்லப்பட்ட புலியை கண்டு அடங்குவது வரை உள்ள நிகழ்வுகள் மிகவும் நன்றாக விவரிக்கப்பட்டிருப்பது அதற்கு கூடுதல் அழுத்தை கொடுக்கிறது. இன்னொரு வாசகர் சொன்னது போல செத்துக் கிடக்கும் புலியை தொட அஞ்சுவது அந்த படிமத்திற்கு (உண்மை புலியோடு சேர்ந்து ஆசானின் களியும் உண்டாக்கிய) ஊராரின் மேல் உள்ள தாக்கத்தை உணர்த்துவதாக தோன்றவில்லை. மாறாக அவர்கள் அது வரை அனுபவித்த யதார்த்த புலியால் உருவான பயத்தின் மிச்சம் மட்டுமே.
அப்படி வாசித்தால், ஆசான் இறப்பது என்பது வேறொரு விதத்தில் பல கேள்விகளை விட்டுச் செல்கிறது. ஒரு மாபெரும் வீழ்ச்சியின் காரணமாக அவர் உயிரைத் துறக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வீழ்ச்சியின் காரணமென்ன என்பது மாறுபடுகிறது. கலையில் உன்னதத்தை அடைய முடியவில்லை என்பது தான் அவ்வீழ்ச்சி என்றால் அது ஏன் குறிப்பிட்ட அந்த களியாட்டத்தில் நடை பெற வேண்டும்? ஆசானின் மனதில் தன் புலியாட்டத்தின் உச்சகட்ட சாத்தியம் என நினைத்தது அதைப் பார்ப்பவர்களின் கைதட்டல்களையும், பயபக்தியையும் சார்ந்தே இருந்திருக்கலாம். அந்த நிலையில் அவர் புலியாக ஒவ்வொரு முறை புதர்களுக்குளே மறைந்து ஓடும் பொழுதும் அடுத்த நாள் கிடைக்கும் பேரும், புகழும், ராஜ மரியாதையும் தூக்கிக் கொண்டே ஓடியிருக்கலாம். இந்த முறை அவற்றின் ஆதாரமான ஊர்க்காரர்களின் பயம், அசல் புலியினால் வந்த யதார்த்தத்தால் வெல்லப்பட்டு விட்டது. கலையில் தான் நிகழ்த்திய உன்னத கணங்கள் என அவர் நினைத்துக் கொண்டிருந்தது மொத்தமும் மற்றவர்களின் ஒப்புதல்கள் மட்டுமே என்பதை அவர் அறிந்த கணமாக அது இருந்திருக்கலாம். கலை என்பது கலைக்காக மட்டுமே என்று தான் கட்டி உயர்த்திய கோட்டை வெறும் வேஷம் என்ற உண்மையை உணர்ந்து உயிரை விட்டிருக்கிறார் என்று வாசித்துக் கொள்கிறேன்.
ஊருக்குள் வந்த உண்மைப் புலியை ஆட்டிறைச்சி வைத்து பொறியில் சிக்க வைத்து கொல்கிறார்கள். அந்த புலிக்கு அந்த ஆட்டிறைச்சி போட்டிருப்பது வேஷம் என்று தெரியாது. அதைப் போலவே ஆசானுக்கு தன் வாழ்க்கையை அர்பணித்த கலை தானே அறியாமல் போட்ட ஒரு வேஷம் தான் என்பது தெரியாமல் போய்விட்டது. எப்போது அது வேஷமாக மாறியதோ அந்த நிமிடம் ஆசான் புலியும் இறந்து விட்டது. அதனால் தான் நிஜ ஆட்டுக்குட்டியை கடித்து விட்டு ஓடுகையில் முன் போல ரத்த குப்பியை கடித்து கடைவாயில் வழிய விடவில்லை ஆனால் அவர் தான் அணிந்த வேஷத்தை “ருசித்து” இறக்கும் பொழுது வாயில் ரத்தம் வடிந்து கிடக்கிறார் (அந்த வேஷத்திற்கு முன்னால் வழியும் ரத்தம் உண்மையானதாகவே இருந்திருக்க வேண்டும்).
ஜெமோவின் லங்காதகனம் போன்ற ஒரு சூழ்நிலையை கதைக்கு ஆசிரியர் வைத்திருந்தாலும், இது லங்காதகனம் கூறும் கதைக்கு எதிர்ப்பக்கமாக பயணிக்கிறது என்று பார்க்கிறேன். உன்னதத்தை அடையும் தருணத்தை உணர்த்துவது ‘லங்காதகனம்’, உன்னதம் என்ற மனமயக்கத்திலிருந்து இறங்கி வரும் தருணத்தை உணர்த்துவது ‘வேஷம்’.
பிரகாஷ் சங்கரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முத்துக்கிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இப்பொழுது தான் உங்கள் தளத்திற்கு பல நாட்கள் பின் வந்து சேர்ந்தேன். தத்துவம் குறித்த இன்ன பிற நூல்கள் கொஞ்சம் தீவிரமாக படித்து முடித்து விட்டு உங்கள் தளத்தை தட்டினால் இப்படியொரு இன்ப அதிர்ச்சி. இதற்கு முன்னர் ஷான்பாக் அவர்களின் கதைகளை மட்டுமே படித்த எனக்கு பெரும் உற்சாகமாக இருந்தது.

இப்பொழுது உறவு படித்து முடித்து எதாவது எழுதணுமா இல்ல மனசில ஊறப் போட வேணுமான்னு யோசிக்கும்போது இந்தப் பதிவுக்கு வந்தேன்.

உறவு குறித்த என்னுடைய பதிவு
நம் குழந்தை என்றால் எந்த ஊனமும் எந்த சிறு குறையும் நம் கண்ணுக்கு பெரிய அளவில் தெரிவதில்லை.
அதனை நாம் பார்க்கும் விதம் வேறு. அதுவே நமக்கு அந்நியமான ஒருவருக்கு சிறிய குறை இருந்தாலும் எதனை நல்ல மனம் கொண்டிருந்தாலும் அது இயல்பாக ஏற்றுக் கொள்ள கடினம் தான்.

இம்மாதிரி நெருங்கியவர்களின் வலி மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவமே அதன் பொருட்டு வரும் இயல்பான எதிர்கொள்ளலே அந்த வலி உருவானதற்கான பொருளோ என்று கூட தோன்றுகிறது.

இந்தக்கதை அந்த காரண காரியத்தைத்திருப்பிப் போடுவதாகப் பார்க்கிறேன். ஒரு வேளை அப்படியொரு விஷயத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும்போது தான் அந்த உறவே உறவாகிறது என்று தோன்றுகிறது.

நாம் நம்முடைய சிறிய அனுபவம், நம் சமூகம், நம் குடும்பம் வளர்ந்த முறை. பூர்வ ஜன்ம வாசனை (இது குறித்து digression வேண்டாம் :) இவை மூலமாக நாம் ஒரு நிலைப்பாடு எடுக்கிறோம்.

தமிழ் சமூகம் இப்படித்தான். நம் கலாசாரத்தில் இவை ஏற்றவை. இவை ஏற்க முடியாதவை என்று. ஒரு மனிதனுக்கு மேல் இருக்கும் போது அது ஒரு கூட்டமே. கூட்ட மனப்பான்மையை அப்படியே விழுங்கிவிட்டே இங்கு வாழ்கிறோம்.

உதாரணம்: பல நாத்திகர்கள் நடுவில் இருக்கும்போது அவர்களோடு ஒத்துப்போதல்.
ஆத்திகர்கள் இருக்கும்போது அந்த நம்பிக்கை மனதில் ஊன்றி இருத்தல். அறிவியல் கூட்டத்தில் இருக்கும் போது அந்த வேஷம் போடுதல் என்று அறிந்தோ அறியாமலோ பல கருத்துகளை விழுங்கியே வாழ்கிறோம்.

இலக்கிய கூட்டத்தில் இருக்கும் போது இலக்கிய புலி போல உணர்தல். அந்த கூட்டத்தை விலக்கினால் வேறு எதையோ தேடி வாழ்தல். என்று நாம் நாமாக இருப்பது அரிது.

நமக்கு தெய்வாம்சமாக அல்லது இயற்கையாக ஏற்படும் சில விஷயங்கள் (நம்மை புரட்டிப்போடும் விஷயங்கள்) நாமாக எல்லோரிடமும் தம்பட்டமோ முன்னறிவிப்போ இல்லாமல் நமக்கே நமக்கென நம் ஸ்வபாவம் உந்தி தள்ளி நாம் ஏற்கும் விஷயங்களே நாம் யாரென தீர்மானிக்கின்றன.

மற்ற எல்லாமே வெறும் வெளி வேஷம். அத்தகைய வேஷங்களை தரித்து நாமாக இருக்க விழையச் செய்யும் கதையாக உறவைப் பார்க்கிறேன்.

முருகேசு இங்கே செய்தது த்யாகமோ அல்லது இரக்கம் குறித்தோ அல்ல. ஒரு இயல்பான ஏற்றுக்கொள்ளல்.

அத்தகைய பல்லாயிரம் அனுபவங்களின் வாயிலாகவே அறிவு முதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த உலகில் உள்ள அனைவரின் பாலும்
அந்த இயல்பான ஏற்றுக்கொள்ளும் கரங்கள் விரிகிறது. அப்படி இயல்பாக ஏற்படும் வரை அது ஒரு பம்மாத்து.

இந்த கதை மூலம் அந்த இயல்பு நிலையை அடைய இன்னொரு படி ஏற்படுத்தி கொடுத்ததற்கு தனசேகருக்கு நன்றி.

அன்புடன்
ஸ்ரீதர்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/38477/