கதைகள் விமர்சனங்கள் -ஆர்வி

இப்படி செய்ய வேண்டும் என்று ஜெயமோகனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நல்ல வாசகர்கள், இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் வேண்டும் என்று அவர் முகாம்கள், குழுமம், விஷ்ணுபுரம் விருது, இலக்கிய விவாதங்களை ஊக்குவிப்பது, எல்லாரும் வழக்கம் போல மவுனமாக இருந்தாலும் (அதுவும் குழுமத்தில் அவர் பல பேருக்குக் கடவுள். யாரும் மறுத்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார்கள்.) தொடர்ந்து “வாங்க பேசலாம்” என்று அழைத்துக் கொண்டே இருப்பது, இவை எல்லாம் மிக அற்புதமான விஷயங்கள். இவர் அளவு இல்லாவிட்டாலும், வேறு சில சமயங்களில், வேறு சில குழுமங்களில் நானும் பலரையும் involve செய்ய வேண்டும் என்று கஷ்டப்பட்டிருக்கிறேன். அடுத்தவர்களின் மவுனம் நம்மை எத்தனை தளர்ச்சி கொள்ளச் செய்யும் என்று எனக்கும் ஓரளவு அனுபவம் உண்டு. ஆனால் இவருக்கு மட்டும் தளர்ச்சி வரவே வராதா என்று வியக்க வைக்கிறார்.

“ஒன்று, பேசத்தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவில்லை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவில்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள்” என்று குழும விவாதத்தில் சொல்லி இருந்தார். அது என்னவோ வாஸ்தவம்தான். நானெல்லாம் படிக்கும் அனுபவத்தை அடுத்தவருக்கு விளக்குவது என்பது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு வந்து கொஞ்ச நாளாயிற்று. ஆனால் அவர் திட்ட ஆரம்பித்த பிறகு அதையாவது சொல்லி வைப்போமே என்றுதான் எழுதுகிறேன். மேலும் நான் சிலிகான் ஷெல்ஃப் தவிர வேறு இணைய தளங்களில் பெரிதாக பங்கெடுப்பதும் இல்லை.

உண்மையைச் சொல்லப் போனால் முதல் கதையான தனசேகரின் உறவு படித்து நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த கதைகளில் நல்ல கூறுகள் இருந்தாலும் நாலு பேரிடம் பேசும் அளவுக்கு என் மனதைத் தொடவில்லை. ஜெயமோகன் தளத்தில் வராவிட்டால் ராஜகோபாலனின் வாயுக் கோளாறு, கே.ஜே. அஷோக் குமாரின் வாசலில் நின்ற உருவம் ஆகியவற்றை நான் படித்திருப்பேனா என்பதே சந்தேகம்தான். இப்போதும் ஜெயமோகன் தார்க்குச்சி போடாவிட்டால் இதை எழுதி இருக்க மாட்டேன்.

முதலில் நான் நல்ல சிறுகதையில் எதிர்பார்ப்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். சிறுகதையைப் படித்து முடித்த பின்னும் கதை முடியாமல் இருப்பது (Lady or the Tiger); தரிசனம் – மனிதனை மனிதனாக அமைக்கும் உணர்ச்சிகள் (பால்வண்ணம் பிள்ளை); மனதில் கேள்விகளை எழுப்புவது (மாஞ்சு); ஒரு காட்சியை அப்படியே கொண்டுவருவது (புலிக்கலைஞன்); புத்திசாலித்தனமான முடிவுகள் (Arthur C. Clarke’s Star). இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவு வருகிறது.

இந்த சீரிசில் வந்தவற்றில் நான் சிறந்த கதையாகக் கருதுவது உறவைத்தான். மனித உறவுகளை அருமையாக வெளிக் கொணர்ந்த சிறுகதை. இரண்டு ஜோடிகளையும் point-counterpoint ஆக கட்டமைத்திருப்பது அருமை. பந்தம் என்பது அலட்சியம் (indifference) ஒன்றைத் தவிர வேறு எதையும் தாங்கும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அது உண்மையோ பொய்யோ, அந்த தியரியை சிறப்பாகக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு சின்னக் கூறும் நகாசு செய்யப்பட்டிருக்கிறது. மேகமலையின் மீது முருகண்ணனுக்கு உள்ள ஈர்ப்பாகட்டும், திடீரென்று சந்திக்கும் அண்ணனாகட்டும், கதை திறமையாக சந்தானத்தின் பிரச்சினையிலிருந்து முருகண்ணனுக்கு மாறுவதாகட்டும், மிக இயற்கையாகக் காட்டப்படுகிறது.

சிவா கிருஷ்ணமூர்த்தியை என்றாவது பார்ப்பேன். இரண்டு அடி போடலாம் என்று நினைத்திருக்கிறேன். :-) பின்னே என்ன, இதே கருவில் நானும் ஒன்றல்ல இரண்டு கதை எழுதி வைத்திருக்கிறேன். ஜெயமோகனே இந்தக் கருவை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறாரே (கேரளத்தில் லோல்பட்டாலும் தன் தங்கை வேற்று ஜாதிக்காரனை மணந்து கொண்டுவிட்டாளே என்று கொந்தளிக்கும் மாணிக்கம்?) இதை எப்படி அனுப்புவது என்று நான் பேசாமல் இருந்துவிட்டேன். மனிதர் அந்தக் கருவை நன்றாக டெவலப் செய்திருந்தார். பாத்திரங்கள், சூழல் ஆகியவற்றை நன்றாக சித்தரித்திருந்தார். ஆனால் அந்தக் கதையை ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாகத்தான் என்னால் பாராட்ட முடிகிறது, வாசகனாக அல்ல. சம்பவங்களில் ஒரு செயற்கைத் தன்மை? தெரிகிறது. அதாவது ஒன்றைக் காட்ட வேண்டும், அதற்காக ஒரு காட்சியைச் சேர்ப்பது. உதாரணமாக அந்தப் பெண்ணின் ஜாதி என்ன என்று கோடிட்டுக் காட்ட வேண்டும், அதனால் ஊர்க்காரரோடு சந்திப்பு; ஊர்க்காரர் என்று தெரிய வேண்டும், அதனால் தடுக்கி விழுந்து அம்மா என்று தமிழில் முனகுவது. யோசித்துப் பாருங்கள், சரியாக அந்தப் பெண்ணை நோட்டம் விடப்போகும் அன்று சில மணி நேரங்களுக்கு முன்னால் அந்தப் பெண்ணின் பூர்வீக ஊர்க்காரரை தற்செயலாகச் சந்திப்பது கொஞ்சம் சினிமாத் தனமாக இருக்கிறது. ஜெயமோகன் என்னை ஒரு முறை கதைச் சம்பவங்கள் நடக்கக் கூடியதா என்று மட்டும் பார், நடப்பதற்கான சாதகக் கூறு அதிகமா குறைவா என்றெல்லாம் பார்ப்பது முட்டாள்தனம் என்று இடித்திருக்கிறார். அதனால் நடக்கவே முடியாத தற்செயல் இல்லை என்பதையும் அழுத்திச் சொல்லி விடுகிறேன்.

காகிதக்கப்பல் கதையே இல்லை. கவிதை. வேறென்ன சொல்ல?

தொலைதல் நல்ல கூறுகள் உள்ள கதை. உண்மையான பாத்திரங்கள். ஆனால் என் கண்ணில் சுவாரசியம் குறைவு. என்னை இழுத்துப் பிடித்து உட்கார வைக்கவில்லை.

வாயுக்கோளாறு இந்த சீரிசில் இடம் பெற்றிருக்கவே கூடாது என்றுதான் சொல்வேன். ஜாஜா கோபித்துக் கொண்டாலும் சரி, பொய் சொல்வதற்கில்லை. அவர் சொல்ல வந்தது – அபத்தம் (irony) – என்ன என்று புரிகிறது. ஆனால் கதை அந்தக் காலத்து குமுதம் விகடனில் வருவது போல இருக்கிறது. அவர் இதை படித்து முடித்த பின்னும் முடியாத கதை, மனித வாழ்வின் அபத்தத்தைப் பற்றி யோசிக்க வைக்கும் என்று நினைத்திருக்கும். ஆனால் அது ஒரு ஜோக் படிப்பது போன்ற விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.

பீத்தோவனின் ஆவி எழுப்புவது நல்ல கேள்வி. ஆனால் கேள்விக்காகத்தான் படிக்க வேண்டும். கதை கொண்டு செல்லப்பட்ட விதம் என்னைக் கவரவில்லை.

வாசலில் நின்ற உருவம் மூலம் அசோக் குமார் என்ன சாதிக்க விரும்புகிறார்? வாசகனிடம் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகிறார்? எனக்கு தொண்ணூறுகளில் சிறு பத்திரிகைகளில் வரும் “அறிவுஜீவிக்” கதைகளை நினைவுபடுத்தியது. அந்த அளவு மோசம் இல்லாவிட்டாலும் நடை வேறு என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. அசோக் குமார் கோபித்துக் கொள்ளக் கூடாது.

சோபானம் கதை ராமைப் பற்றித்தான் யோசிக்க வைத்தது. ராமைப் பொறுத்த வரை இசை என்பது ஒரு mystical அனுபவம் என்று தோன்றுகிறது. அவர் எழுதுவது அந்த அனுபவத்தைப் பற்றி. கான்சாஹிப் அப்படிப்பட்ட mystic-தான். ஆனால் இசையை அந்த இடத்தில் வைக்காத என்னைப் போன்றவர்களுக்கு இந்த அனுபவம் புரியுமா, புரிய வைத்துவிட முடியுமா? செயின்ட்-எக்சூபரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்து நாடோடி ஒருவனை ஐரோப்பிய நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துப் போன அனுபவத்தை விவரிப்பார். அந்த நாடோடியால் இத்த்னை தண்ணீர் வீணாவதைப் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுள் எப்படி இந்த மாதிரி அநியாயம் செய்யலாம் என்று புலம்பிக் கொண்டே இருப்பான். அந்த மாதிரிதான் இவர் தன் இசை அனுபவத்தை மற்றவர்களுக்கு கை மாற்றுவது. அப்புறம் சோபானம் என்றெல்லாம் புரியாத மாதிரி தலைப்பு வைத்தால் எப்படி? நான் சோபனம் என்று நினைத்துக் கொண்டு முதலிரவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு, இது கான்சாஹிபுக்கு சங்கீத சொர்க்கத்தில் முதலிரவு என்கிறாரா என்றெல்லாம் குழம்பினேன்.

கன்னிப்படையல் நல்ல முறையில் எழுதப்பட்ட சிறுகதை. அந்த அப்பாவின் தவிப்பு பிரமாதமாக வந்திருக்கிறது. ஆனால் என் கண்ணில் அந்தப் பெண்ணின் தவிப்பு அழுத்தமாக வெளிப்படவில்லை. அதுதான் ஜாஜாவின் விருப்பம் என்று நினைக்கிறேன்.

வேஷம் சுமார்தான். காட்டுப்புலி நாட்டுப்புலி எல்லாம் வலிந்து புகுத்தப்பட்ட மாதிரிதான் இருந்தது. லங்காதகனம் மாதிரி எழுத வேண்டும் என்று நினைத்து எழுதிய மாதிரி இருந்தது.

வாசுதேவன் கதையில் எனக்கு முதலில் உறைத்த விஷயம் முடிவில் வரும் தெலுகு வசனங்கள்தான். “ஊரிக்கதான்” என்றால் “சும்மாதான்” என்று எல்லா தமிழனுக்கும் எப்படி புரியும்? அப்படி கஷ்டப்பட்டு அதை ஒரு தெலுகு குடும்பம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன? சிறுகதையும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை.

பயணம் சிறுகதையில் நான் மிகவும் ரசித்த விஷயம் இலங்கைத் தமிழ்தான். சிறுகதை எனக்கு சிவாவின் கதையை நினைவுபடுத்தியது. நன்றாக எழுதப்பட்ட சிறுகதை. சிவா, சிவேந்திரன் இருவருக்கும் சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) கை வந்திருக்கிறது.

எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தாலும், வழக்கமான சோம்பேறித்தனம்; அந்த சமயத்தில் பார்த்து கதை எதுவும் சரியாக உருவாகவும் இல்லை. என்றாவது மீண்டும் முழு மனதாக உட்கார்ந்து எழுத மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது. எழுத முடியும் என்று கொஞ்சம் நம்பிக்கையும் வந்திருக்கிறது. :-)

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா
அடுத்த கட்டுரைகதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]