புதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா

ஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.

என் கதை ஒன்றும் ஜெயமோகன் தளத்தில் (தொலைதல்) வெளியிடப்பட்டுள்ளது. ஜெயமோகனுக்கு என் நன்றி. இக்கதையைப் படித்துவிட்டுப் பலர் என்னிடம் கதையைப் பற்றித் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். இதில் சிலர் என் உறவினர்கள். நான் கதை எழுதுவது இதுவரை அவர்களுக்குத் தெரியாது. என் உறவினர்களிடம் நான் மீண்டும் ஜெயமோகன் வழியாகச் சென்று சேர்ந்திருக்கிறேன், வேறொரு முகத்துடன்.

கதைகளைப் பற்றிய கருத்துகளை யாரும் பகிர்ந்துகொள்வதில்லை என்ற ஜெயமோகனின் ஆதங்கம் நியாயமானது. 12 கதைகளில் நான் நான்கு கதைகளை மட்டுமே வாசித்திருந்தேன். அதுவும் என் நண்பர்கள் எழுதியவற்றை மட்டுமே வாசித்திருந்தேன். வாசிக்காததன் காரணம், அவற்றை உடனே வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படவில்லை என்பதைத் தவிர தனிப்பட்ட வேறு காரணங்கள் இல்லை. அவற்றைப் பற்றி எழுதாததன் ஒரே காரணம், நாம் என்னவாவது சொல்லப்போய் கதை எழுதியவர்கள் அதனைத் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பது மட்டுமே. ஜெயமோகன் தன் தளத்தில் எதிர்வினைகள் வராதது குறித்துக் கூறியதைப் படித்ததும், நிச்சயம் எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இனி கதை பற்றிய என் கருத்துகள்:

உறவு சிறுகதை:

தனசேகர் எழுதிய இக்கதை அதன் தலைப்பைப் போலவே உறவைப் பற்றிப் பேசுகிறது. கணவன் மனைவி உறவின் சிக்கல்கள் நாம் அறிந்ததே. எத்தனையோ கதைகளில் நாம் இவ்வுறவின் சிக்கல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இக்கதை உறவின் சிக்கலைப் பற்றிப் பேசவில்லை. மாறாக உறவு என்பது அன்பை எப்படி அடித்தளமாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்பதைச் சொல்கிறது. மனைவியின் மீது கடும் கோபம் கொண்டு கெட்டவார்த்தை திட்டிக்கொண்டே செல்லும் கணவன், இன்னொரு ஆத்மார்த்தமான இணையின் மூலம் பிரிக்கமுடியாத அன்பைப் புரிந்துகொள்வதுதான் கதை. பொதுவாகவே சிறுகதைகளின் முக்கிய வெளிப்பாடு அதன் நடையில்தான் இருக்கமுடியும். கதை என்ற ஒன்று சிறுகதைக்குத் தேவையே இல்லை என்பதுதான் நிஜம். எனவேதான் பல்வேறு முறை சொல்லப்பட்ட கதைகளும்கூட பல்வேறு வடிவத்தில் வேறுவேறு பாணியில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதினோரு கதைகளுக்குமே இது பொருந்தும் என்றே நினைக்கிறேன். இக்கதைகளின் நடையும் பாத்திர உருவாக்கமுமே முக்கியமானதாகிறது. முதலில் மிக மெல்லியதாகச் சொல்லப்படும் முருகண்ணன் மற்றும் அவரது மனைவின் உறவு, பின்னர் சட்டென விஸ்வரூபம் கொள்கிறது. இந்த இடத்தை வந்தடைய ஆசிரியர் சொல்லியிருக்கும் சில வர்ணனைகளை இன்னும் கொஞ்சம் செறிவாக்கியிருக்கலாம். முதலில் வரும் பல பத்திகள், கண்ணில் பார்த்ததைக் கதை போலச் சொல்லும் வேகமே தெரிகிறது. சிறுகதையின் அமைதி ஆயிரம் விஷயங்களைச் சொல்ல வல்லது.

யாவரும் கேளிர்:

சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதியது. எங்கே சுற்றினாலும் நாம் மீண்டும் வந்தடைவது சாதியாகத்தான் இருக்கமுடியும் என்பதைச் சொல்லும் கதை. மிக நீண்ட விளக்கங்களுக்குப் பின்னர் கடைசியாகக் கதையின் உச்சம் வரும்போது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது போன்ற கதைகள் ஒரே வகையானவை. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சிறுகதைக்கு வெறும் உண்மை மட்டும் போதுமானதில்லை. ஏதேனும் ஒன்றிலாவது புதுமை இருந்திருக்கவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. தொடர்ந்து பரிமாறிக்கொள்ளப்படும் உரையாடல்கூட இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். பொதுவாகவே ஜெயமோகன் தளத்தில் வெளியான கதைகளில், ஒரு சிறிய நிகழ்ச்சியை விவரிப்பதும் பின்னர் அது மூலம் வெளிவரும் உண்மை ஒன்று, அதற்கு ஒப்பாகவோ அல்லது முரணாகவோ அமைவதைப் பார்க்கிறேன். இக்கதையில் வரும் கருப்பினப் பெண்மணியை அப்படிச் சொல்லலாம். கடைசியில் ’டொம்பக்குடி’யை இத்துடன் ஒப்பிடலாம். இதுபோன்ற ஒப்பீடுகள் மீண்டும் மீண்டும் சிறுகதைகளில் சொல்லப்படும்போது அவை மெல்ல க்ளிஷேவாகின்றன. இந்த முரண் என்னும் விஷயம், கவிதையிலும் கதைகளிலும் பாடாய்ப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே இக்கதையின் பலவீனம் என்பது என் எண்ணம்.

காகிதக் கப்பல்

சுரேந்திரகுமார் எழுதியது. முதலில் இது சிறுகதைக்குள் வருமா என்பதே எனக்கு ஐயமாக உள்ளது. உருவகத்தை மனத்தில் ஏற்றிச் சொல்லப்படும் ஒரு கவிதை போல இக்கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் இலங்கை மக்களின் கதை என்று இதைப் புரிந்துகொண்டபோது, இக்கதை வெறும் ஒரு விளையாட்டு முயற்சியாகவே எனக்குப் பட்டது. இதுபோன்ற உருவகக் கதைகள் இத்தனை மேலோட்டமாகச் சொல்லப்பட வேண்டியதன் அவசியம் புரியவில்லை. விலங்குப் பண்ணை போன்ற நாவல்கள் மிக ஆழ/அகலத்தில் இதுபோன்ற உத்தியைக் கையாண்டுள்ளன. (தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள்.) இந்தியா, இலங்கை என்று வெளியே சொல்லமுடியாத அடக்குமுறைச் சூழலில் இக்கதைகள் முக்கியத்துவம் பெறலாம். சுதந்திரத்துக்கு முன்பு மேடை நாடகங்களில் பாடப்பட்ட வெள்ளைக் கொக்குகளே பாடலைப் போல, பாரதியாரின் சிறுகதையைப் போல உருவகத்தில் சொல்லப்படவேண்டிய சூழல் நிலவாதபோது இக்கதையின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.

தொலைதல்

ஹரன்பிரசன்னா எழுதியது. சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

பீத்தோவனின் ஆவி:

வேதா எழுதியது. இக்கதையின் ஆதாரம் எனக்குப் பரிச்சயமுடையதல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் திரையிசைப் பாடல்கள் மட்டுமே. எனவே இதனை ஒரு கதையாக மட்டுமே நான் அணுகினேன். இக்கதையில் எனக்குத் தோன்றியது, ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் தரும் அலுப்பு. ஆங்கிலத்தில் அவை ஒருவேளை மிக யதார்த்தமாக இருந்திருக்கக்கூடும். தமிழில் அவை ஒருவித செயற்கைத்தன்மையுடன் ஒலித்தது போன்ற எண்ணம். அ.முத்துலிங்கம் இதுபோன்ற பல கதைகளை எழுதியுள்ளார். அவர் இந்த செயற்கைத் தன்மையை வெல்வது, வார்த்தைத் தேர்வுகளிலும், நிகழ்ச்சியை விவரிப்பதில் உள்ள முக்கியத்துவத்திலும். அப்படி இல்லாத கதைகள் இப்படித் துருத்திக்கொண்டு அமைந்துவிடும் ஆபத்து உண்டு. அதிலும் இக்கதையில் சில வசனங்கள் மீண்டும் மீண்டும் வந்தது போன்ற நினைப்பு. வாய்விட்டு உரக்கச் சிரித்தாள், யாரிடமும் சொல்லமுடியாது உன்னிடம் சொல்லட்டுமா சொல்லுங்கள் போன்றவை. ஒருகட்டத்தில் அவர் சீக்கிரம் சொல்லித் தொலைத்தால்தான் என்ன என்று எனக்குத் தோன்றிவிட்டது. இவற்றைக் கொஞ்சம் எடிட் செய்தால் கதை க்ரிஸ்ப்பாக இருந்திருக்கும். தேவையற்ற பல விவரணைகள் உள்ளன. சிறிய சிறிய நிகழ்வுகள், சம்பாஷணைகள் என பல விஷயங்களில் மனம் அலை பாய்ந்தது. ஆனால் கடைசியில் அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கதை மையம் கொண்டது என்னவோ இசையில் மட்டுமே. அதை மையமாக வைத்து மட்டும் இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்லியிருக்கலாம்.

வாயுக் கோளாறு:

ராஜகோபாலன் எழுதியது. இக்கதை ஜெயமோகன் போன்ற ஒருவரது தளத்தில் வர எவ்விதக் காரணங்களும் இல்லை. அசட்டு நகைச்சுவை மட்டுமே இக்கதையில் உள்ளது. நகைச்சுவை என்பதை ஒரு கதையில் எந்த அளவுக்கு செறிவுடன் எழுதமுடியும் என்பதை நாம் ஜெயமோகன், அ.முத்துலிங்கம் கதைகளில் பார்த்துவிட்டோம்.

வாசலில் நின்ற உருவம்

கே.ஜே. அசோக்குமார் எழுதியது. முதுமையைப் பற்றி எல்லாருமே எழுதிவிடுவோம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் எல்லா இளைஞர்களும் தங்கள் தாத்தாக்களைத் தாங்களாகவே நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல. தங்கள் பேரன்களையும் தாங்களாகவே நினைக்கப்போகிறார்கள். முதுமையும் குழந்தையும் என்றும் நம்மிலிருந்து விலகி இருப்பவையே என்ற எண்ணமே இக்கதையின் ஆதாரம். அது மிகக் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது. வாசலில் நின்ற உருவத்தை நாம் எப்படியும் உருவகித்துக்கொள்ளலாம். பொதுவாக அதை மரணம் என்றே உருவகிப்போம். மரணம் என்பது எப்போதும் உடன் இருப்பதுதான். அவற்றை நம்மிலிருந்து விலக்கி வைத்திருப்பது நம் நினைவுகளே. அதையே இக்கதையும் சொல்கிறது. அந்த நினைவுகள் கொண்டு வரும் உறவு வெளிப்பட்டிருப்பது நன்றாக உள்ளது. இக்கதையில் எனக்கு சலிப்பு ஏற்படுத்தியது, கதையின் நடை. வலிந்து திணிக்கப்பட்ட ஒருவித சிற்றிதழ் நடையை என் அகம் கண்டுகொண்டது. இது எனக்கு உவப்பானது அல்ல. அத்தோடு, கதையின் நடை 1970களை நினைவுபடுத்தியது. நாம் மறந்துபோன, கோவிலுக்குள் நுழையும்போது சட்டென்று மீண்டு வரும் வௌவால் நெடி போல.

சோபானம்

ராம் எழுதிய கதை. 11 கதைகளில் செறிவான கதைகளாக நான் நினைப்பதில் இரண்டாம் இடம் இக்கதைக்கு. இக்கதையைத்தான் நான் பலமுறை வாசித்தேன். இசை பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் இக்கதை மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. மயில் கழுத்து போல. அதிலும் கான்சாகேப் அறைக்குள் வரும்போது உள்ளே ஒருவர் படுத்திருக்கிறார். பனியனுடன், குடியில். அவர் யாரென்று சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படிச் சொல்லாமல் விட்டதுதான் பலவகை நினைவுகளை எனக்குக் கிளப்பிவிட்டது. கான்சாகிப்பின் ஆல்டர் ஈகோவாகக்கூட அவர் இருக்கலாம் என்று நினைத்தபோது இக்கதை எனக்குப் பிடித்துவிட்டது. அதேபோல, கதையின் முடிவு அதன் நாடகத்தனத்தையும் மீறி எனக்குப் பிடித்துப்போனதன் காரணம், சிங்கப்பெருமாள் கோவிலில் நடக்கும் கான்சாகேப்பின் மரணம். இசை என்னும் தெய்விகம், சூஃபியிஸம் எனப் பல சித்திரங்களை எழுப்பி விட்டது. அவர் மரணத்துக்கு முன்னாலேயே கதை முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், இம்மரணம் நிகழும் இடம் தரும் நினைவுகள் ரம்மியமானது.

கன்னிப்படையல்

ராஜகோபலன் எழுதியது. பலமுறை சொல்லப்பட்ட கதைதான். ஆனால் கதையின் உணர்வுரீதியான நடை இக்கதையை பலம் கொள்ளச் செய்கிறது. பொதுவாக எனக்கு உணர்வுரீதியான கதைகளில் கரைவதில் ஒரு மனத்தடை உண்டு. இக்கதையிலும் அந்த மனத்தடையை நான் உணர்ந்தேன். அதையும் மீறி இக்கதையில் ராமகிருஷ்ணனிடம் பெண்ணின் அப்பா பேசும் வசனங்கள் என்னைக் கரைத்தன என்பது உண்மை. பொதுவாகவே ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கதைகளில் உள்ள உவமைகள், ஜெயமோகனின் கதைகளில் வருவன போல் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரே ஒரு ஜெயமோகன் மட்டுமே இருக்கமுடியும். இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

வேஷம்

பிரகாஷ் சங்கரன் எழுதியது. கதை பலமுறை சொல்லப்பட்டுவிட்ட காலமாற்றம் குறித்ததுதான். ஆனால் கதை சொல்லப்பட்ட விதம், வார்த்தைகளின் தேர்வு, மொழியின் கச்சிதம் என இக்கதையே, இத்தளத்தில் வெளியிடப்பட்ட பதினோரு கதைகளில் என் ரசனையில் என்னை அதிகம் ஈர்த்தது. ஒரு கதையில் வெளிப்படும் இரண்டு விதமான வாசிப்புகளை நாமே கண்டடையும்போது அக்கதை நமக்கு நெருக்கமானதாகிவிடுகிறது. உண்மையான புலியைக் கண்டபின்பு ஆசானின் புலிவேஷம் எடுபடாமல் போகிறது. மறுநாள் ஆசான் இறந்துவிடுகிறார். இதை நேரடியாகப் பொருள் கொள்ளலாம். உண்மையான புலியைக் கண்டபின்பு ஆசானின் புலிவேஷம் எடுபடாமல் போகிறது என்று. இதையே நான் ஆசானின் பார்வையில் பார்த்தேன். உண்மையான புலியைக் கண்டபின்பும் தன் புலிவேஷம் அப்புலியை விஞ்சியதாக இருக்கவேண்டும் என்ற கலைவெறியில் அவர் தோல்வி காண்கிறார். உண்மையான புலி தரும் பயத்தைவிட, தன் கலை தரும் ஆத்மார்த்தம் உயர்ந்ததாக இல்லாமல் போனதற்காக உயிரைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளும்போது, நாம் இதனை இன்னும் நெருக்கமாகப் பார்க்கமுடிகிறது. மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போல கலையை நினைக்கும் ஓர் ஆசான். இக்கதையை, அசோகமித்திரனின் புலிக்கலைஞனை வாசித்தபின்பு மீண்டும் வாசித்தேன். இக்கதைக்கும் புலிக்கலைஞனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. புலிக் கலைஞன் நினைவுக்கு வருவது, அக்கதை வாசகர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மட்டுமே.

வாசுதேவன்

சுனீல் கிருஷ்ணன் எழுதியது. கதை கொஞ்சம் வேகமாகச் சொல்லப்பட்டுவிட்டது போலத் தோன்றியது. மனமாற்றம் இன்னும் தெளிவாக வாசகர்கள் நம்பும் வண்ணம் விவரிக்கப்பட்டிருக்கவேண்டும். தேவையற்ற விவரிப்புகளைக் குறைத்திருக்கலாம். இதுவும் நெகிழ்ச்சியான கதையே. அதில் இக்கதை ஓரளவு வெற்றியும் பெறுகிறது. கடைசி இரண்டு வரிகளில், நான் புரிந்துகொண்டதுபோல, வாசுதேவன் கருணைக் கொலை செய்யப்படுவதாகக் கொண்டால், அதற்கான மனமாற்றம் சரியாகச் சொல்லப்படவில்லை. இது பெரிய பலவீனம். நான் புரிந்துகொண்டது தவறு என்றால், இன்னும் புரியும்படியாகச் சொல்லியிருக்கலாம்!

பயணம்

சிவேந்திரன் எழுதியது. இயக்கத்துக்குச் சென்று இறந்துபோன மகனின் நினைவுடன் பயணம் செய்யும் ஒரு தந்தையின் கதை. தன் மகன் காதலுக்காகப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறார். கடைசியில் இயக்கத்துக்காகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறான். கடைசியில் பீற்றரைப் பார்த்தபின்பு சர்ச்சைப் பார்க்க வந்தேன் என்று அந்தோணிப்பிள்ளை சொல்வது எனக்குப் புரியவில்லை. ஏன் இத்தனை பூடகம் என்று நினைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் வரும் ஆன்றனியின் வசனங்களில் பல தெறிப்புகள் அட்டகாசம். இலங்கைத் தமிழ் இக்கதைக்குக் கூடுதல் பலம்.

பொதுவாகவே எல்லாக் கதைகளிலும் ஒரு எடிட்டரின் தேவை இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து எழுத எழுத இது வசப்படும். சொற் சிக்கனமும் மொழிக்கட்டும் கைப்படும். சொற் சிக்கனுமும் கட்டும் இல்லாத, எழுத்தாளர்களின் முதல் கதைகளும், அவற்றின் நெகிழ்வோடு, வாசிக்க சுகமானவையே. ஆனால் இது எல்லா நேரமும் உதவாது. அதற்குள் எழுத்தாளர்கள் அடுத்தத் தளத்துக்கு முன்னேறவேண்டியது முக்கியமானது.

பின்குறிப்பு: இக்கதைகளை நான் புரிந்துகொண்ட வகையில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். நான் புரிந்துகொண்டதில் பிழைகள் இருக்குமானால், இக்கருத்துகளைப் புறந்தள்ளவும். அனைவரும் தொடர்ந்து எழுதுவது மட்டுமே இப்போது முக்கியமானது, தேவையானது. தொடர்ந்து எழுதுவார்கள் என்று நம்புகிறேன். எழுதுவோம்.

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் விமர்சனங்கள் -ஆர்வி