«

»


Print this Post

கதைககள் கடிதங்கள் [பின்னூட்டங்களுடன்]


அன்புள்ள ஜெ,

புதியவர்களின் கதைகளைப் பற்றி. காலம் தாழ்ந்த எதிர்வினை.மன்னிக்கவும்.செவிட்டில் அடிக்கிற மாதிரி சொன்னால் தான் உறைக்கும் போல, என்ன செய்ய.
இது கதைகளைப் படித்து என் மனதிற்கு தோன்றிய கருத்துக்கள் தான். என் புரிதலில் போதாமை இருக்கலாம். ஆனால் இப்போது என் மனதில் பட்டதை அப்பிடியே சொல்வதுதான் ஆசிரியருக்கு செய்யும் நியாயம் என நினைக்கிறேன்.

இதுவரை படித்த கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தனசேகரின் உறவு. சற்றும் பாசாங்கற்ற கதை. வாசகனை பின்னே மூச்சிரைக்க ஓடி வரச்செய்யும் கதை. ஒரு நல்ல கதையின் முக்கியக் கூறுகளில் ஒன்று அது கதை – ஒருவர் எழுதியது – என தெரியக்கூடாது என நான் எண்ணுவதுண்டு. இது அவ்வகையைச் சார்ந்தது. இரண்டாம் பத்தியிலேயே நம்மை மேகமலைக்கு கூட்டிச் சென்று நிறுத்துகிறார். முருகண்ணனைப் பற்றிய வர்ணனை, அவர் சொல்லும் சிறு சம்பவங்கள், மலையடி ஊரில் நடக்கும் சங்கதி அனைத்தும் authentic ஆகஉள்ளது. செறிவான கதை, மிகை என ஒரு வரி கூட இல்லை.
கதையில் விதிக்கப்பட்ட உறவுகள் (முருகண்ணன் – அவர் குடும்பம், சந்தானம் – முருகண்ணன் கட்டி வைத்த மீனாட்சி – மாமனார், இரவில் பேருந்து நிலைத்திரு அருகே தூங்கும் பெண்கள் – குடிக்கும் கணவர்கள்) அனைத்தும் தழை அறுந்து ஓடுவதும், தானாக, எதேச்சையாக அமைந்த உறவுகள்(முருகண்ணன் – சந்தானம், மலையடி உறவுகள், முருகண்ணன் – “காதலி”)கூடி வருவதும் ஒரு நல்ல முரண். இதை சற்றே விரிவு செய்து உறவு என்பது விதிக்கப் பட்டவை மட்டும் அல்ல; நம் சுற்றத்தின் ஆரம் என்பது நம் மனதின் விரிவு மற்றும் தற்செயல் (serendipity) சம்பத்தப்பட்டது என எனக்குத் தோன்றியது. ஆனால் இது இல்லாமலேயே கதை அற்புதமாக அமைந்துள்ளது.

வேதாவின் பீத்தோவனின் ஆவி எனக்கு அவ்வுளவாக ரசிக்கவில்லை. இரு காரணங்கள்; ஒன்று கதைக் கட்டுமானம் மற்றொன்று அதன் சேதி. சேராவிற்கும், சிவாவிற்குமான உரையாடல் சற்றே செயற்கைத் தனமாக இருக்கிறது. சேரா, சிவா தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவனை எழுப்பி பேசுகிறாள்.பின்னர் சில வரிகள் கழித்து “நீ தூங்கிக் கொண்டிருந்தாள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, வேறு இடம் செல்கிறேன்” என்கிறாள்.
அதே போல் பின்னர் சேரா அவள் பிரச்சினையை சொன்ன பின்னரும், அதற்கு சிவாவின் பதிலுக்குமான இடைவெளியில் பல பீடிகைகள் இரு தரப்பிலும். நீ சொல்லத்தான் வேண்டும், நீங்கள் கோபப்படக் கூடாது என இருவரும் குறைந்தது தலா இரு முறையாவது கூறுகிறார்கள். இடையில் “மானுட இருப்பின் துயர்”, “கால வெளியின் தனிமையில் உறைந்து” போன்ற பழகிய சொல்லாடல்கள்.

இது கதையின் நம்பகத்தன்மையை அடித்துவிடுகிறது. வாசகன் கதையை வாசிக்கும் தோறும் தொடர்ந்து கதையை விட்டு விலகி, கதையாசிரியரின் மனதிற்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதிய எழுத்தாளர்கள் என்று சொன்னால் கேட்கவே வேண்டாம்.
அவனை அதட்டி கதையின் பால் கவனத்தைத் திரும்பச் செய்வது ஆசிரியரின் வேலை இல்லையா?
(நீங்கள் ஓரிடத்தில், ஆசிரியருக்கு அந்த சலுகையை அளித்து, வாசகன் கதையைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறியது நினைவுக்கு வருகிறது. இருந்தாலும் எழுத்தாளரின் பங்கும், குறிப்பாக புதிதாக எழுதுபவர்கள், இதில் இருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது)
இந்தக் கதையின் சேதி – இதனுடன் உடன்படுகிறேன் என்று சொல்ல முடியாது. கட்டாயம், கதையின் சேதியுடன் வாசகர் அனைவரும் உடன்பட வேண்டும் என்று இல்லை. இருந்தாலும் எனக்குத் தோன்றியது: சேரா ஒரு சர்க்கஸ் புலிதான் அவள் சொல்வது போல. தொழில்நுட்பம் தான் கற்றிருக்கிறாள். ஒரு அசல் இசையைக் கேட்கும் போது துன்பம் வரலாம்தான். ஆனால் இரு விஷயங்கள். ஒன்று இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் துன்பம் மட்டும் இல்லை பரவசமும் சேர்ந்துதான் வருகிறது. எந்த ஒரு கலைஞனுக்கும் இதுவரை தான் அனுபவித்திராத, தான் கற்பனை செய்திராத, தான் மேலானது என என்னும் படைப்பைக் காணும் பொழுது எழுவது ஒரு மிகப் பெரிய பரவசம் தான். இரண்டு சேராவின் கேள்விக்கான விடை. அவள் அவளுடையதை விட பல மடங்கு மேலானதொரு கலையைக் கண்டுவிட்டாள். அப்படிஎனில் அவள் இது வரை வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன? அவள், அவளின் கலையின் பால் கொண்டிருந்த காதலும், அதில் அவள் அடைந்த இன்பமும். அது ஒன்றே போதும் அவளின் இது வரையிலான கலை வாழ்க்கையை நியாயப்படுத்த என்பதே எனக்குத் தோன்றுவது. அவள் புதிதாகக் கண்ட கலையின் மேன்மையை ஏற்றுக்கொள்வது தான் நியாயமான செயலாக இருக்கும். ஆசிரியர் “பிறர் இயற்றிய இசை என்றும், நாம் இயற்றிய இசை என்றும் அகங்காரம் கொள்ள என்ன தேவை இருக்கிறது” என சொல்வது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. அந்த தான், தன்னுடையது என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் கலை எழுமா எனத் தெரியவில்லை. கலை என்பது ஒருவன் அவனையும், அவன் கண்ட உண்மைகளையும் வெளிப்படுத்துவதுதானே? நீங்கள் இதைப்பற்றியும் நிறையக் கூறியிருக்கிறீர்கள்.

ராஜகோபாலனின் கதை பற்றி ஏற்கனவே சில வாசகர்கள் கூறிய கருத்து தான் எனக்கும். மறுபடியும், நீங்கள் சொன்னது போல் கற்பு என்பது இரண்டு கால்களுக்கு நடுவில் இல்லை.
சிவாவின் கதை பரவாயில்லை எனத் தோன்றியது.

சில கதைகளை மற்றொரு முறை வாசித்தால் தான் சொல்ல முடியும். வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

எதிர்வினைகள் குறித்து உங்களுக்கு ஆச்சரியம் என்பது தான் எனக்கு ஆச்சரியம். உங்களுக்கு கடிதம் எழுதியவர்களைக் குறிப்பிட்டீர்கள். அவர்கள் அனைவரும் எழுத்தாளர்கள். இங்கே எழுத்தாளர்களே எழுதி அவர்களுக்குள்ளேயே வாசித்துக் கொள்ள வேண்டியதுதான் போல. குழும நண்பர்கள் எழுதாமல் இருப்பதற்கு ஆரம்பத் தயக்கம் தான் முக்கியக் காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
“மழைக்கால ஈசல்” என நீங்கள் வேறு, சில மக்களை விரட்டி அடித்திருக்கலாம் :-)

அன்புடன்
கார்த்தி
கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/38445

10 comments

Skip to comment form

 1. jeyamohan

  அன்புள்ள ஜெ ,

  எதிர்வினைகளை வாசித்து வருகிறேன். அந்த இறுதி இரண்டு வரிகள் தெலுங்கில் வந்தது குறித்து வரும் கடிதங்களை வாசித்து வருகிறேன். பலருக்கும் அது தடையாக இருக்கிறது என அறிகிறேன். சண்முகம் போன்ற வாசகருக்கு கூட இக்கதை அனுபவ கதையாக நின்றுவிடுகிறது, அதன் தரிசனம் புலப்படவில்லை என்கிறார் ..கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..உச்சகட்டமாக – அந்த வரிக்காகத்தான் முதலிலேயே தெலுங்கு வருகிறதா என கேட்கிறார்கள் சிலர்…
  அந்த வரியை நான் திட்டமிடவில்லை.. ஒரு அசல் அனுபவத்தை புனைவாக ஆக்க முயன்றேன்..தெலுங்கு நாயக்கர் பின்புலத்தை உணர்த்தவே அந்த எளிய தெலுங்கு கொச்சைகள்..அவை ஒருவகையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எண்ணினேன்…அவ்வரிகள் வலிய திணிக்கப்பட்டது அல்ல…அந்த பின்புலத்தில் பிறந்து வளரும் குழந்தை அப்படித்தான் சொல்லும் என எண்ணினேன்..

  இதை தமிழில் மாற்றுவதால் நல்லது நடக்கும் என்றால், மாற்றிக்கொள்ளலாம்..

  என்ன செய்யலாம் ..

  அன்புடன்
  சுனில்

  அன்புள்ள சுனில்

  ஒரு கதையில் என்ன வருகிறதோ அதுதான் கதை. வாசகர்களுக்காக கதையை மாற்றக்கூடாது. அந்தக்கதை ஒரு வாழ்க்கை நிகழ்வுபோல. நிகழ்ந்துவிட்டது. நிகழ்ந்தவற்றை மாற்றும் உரிமை மனிதர்களுக்கில்லை

  சும்மாதான் என்று அதற்குப்பொருள் என்று கேட்டுத்தெரிந்துகொள்ளட்டுமே. எவ்வளவோ ஆங்கிலக்கதைகளில் ஸ்பானிஷ் சொற்களும் பிரெஞ்சுச் சொற்களும் வருகின்றன

  ஜெ

 2. jeyamohan

  அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

  சுனீல்கிருஷ்ணனின் வாசுதேவனை வாசித்தேன்.அவருடன் முகநூலில் உரையாடியதன் சுருக்கத்தை எழுதுகிறேன்.கதையை நான் ஒரு வேறு முடிவுடனேயே வாசித்தேன்.மருத்துவர்கள் கைவிட்டபின் வாசுதேவனை இயலாமையால் தாய் தந்தை கைவிட்டுவிடுவார்களோ என்ற பதட்டம் வாசிக்கும் போது இருந்தது.தெலுங்கு புரியாவிடினும் முடிவை புரிந்துகொள்ள முடிந்தது.தெலுங்கை வீட்டுமொழியாகக் கொண்ட நண்பரை தொலைபேசியில் அழைத்து கதையை வாசிக்குமாறும்.அதில் வரும் தெலுங்கு வசனங்களின் அர்த்தத்தை கூறுமாறும் கூறினேன்.

  மனிதன் எவ்வளவு திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முயன்றாலும் எதிர்பாராமைகள் அவனை தூக்கி சருகு போன்று வீசிவிடுகின்றன என்பதுதான் கதை வாசித்த பின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.தேன்மொழி சின்னராஜ் கதை குறித்த தனது கருத்தில் கூறியுள்ள பாடல் கதையின் உணர்வு தரும் வீச்சை மேலும் அதிகப்படுத்திவிட்டது.

  விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை நோக்கி அன்னை கேட்பது – ” ஏண்டி இப்படி பண்ற..அடி வேணுமா” அதற்கு குழந்தையின் பதில் ” சும்மாதான்”.இதை அவ்வாறே தமிழில் எழுதியிருந்தால் முடிவின் கனம் மனதை பெரிதாக தாக்கி இருக்காது என்றே எனக்கு படுகின்றது.

  இந்தக் குழந்த மட்டும் ஏதோ விளையாடிகிட்டு இருந்துச்சாம்.

  பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்து கொண்டிருந்தாள்.

  இந்த இரண்டுவசனங்களின் பிறகு புரியாமல் வரும் அந்த இரண்டு தெலுங்கு வசனங்களும்தான் மனதை அதிரவைத்தன.

  எனக்கு தெலுங்கு புரியாதபடியால் எப்படி அர்த்தம்கொண்டேன் தெரியுமா?

  தாய்:என்னடி செய்திருக்கிறாய்? குழந்தை:முறிச்சுத்தா

  அந்த இறுதி வசனங்களை தமிழில் எழுதியிருந்தால் எனது கற்பனைக்கான இடைவெளி குறைந்திருக்கும்.

  சிவேந்திரன்

 3. jeyamohan

  http://tlbhaskar.blogspot.in/2013/08/blog-post.html
  பாஸ்கர் லக்ஷ்மன் சோபனம் மற்றும் பீத்தோவன் ஆவி குறித்து எழுதியுள்ள பதிவு..

 4. karthi

  வாசுதேவன் கதை சொல்ல வருவதாக எனக்குத் தோன்றுவது, குழந்தையின் கையில் கிடைத்த பொம்மை போலத்தான் இயற்கையின் கையில் கிடைத்த மனிதன் என்பதுதான். குழந்தை அதன் விருப்பத்திற்கு விளையாடித்தீர்க்கிறது, இயற்கையைப்போல. ஆனால் அதனிடம் கள்ளம் கபடம் இல்லை. எனவே ஒரு மரணத்திற்குப் பின் மிகுந்த சோகம் கொண்டு, ஏதோ ஒரு சக்தியிடம் மன்றாடுவது எல்லாம், குழந்தையிடம் சென்று ஏன் பொம்மையை உடைத்தாய் என்று கேட்பதைப் போலத்தான். குழந்தை அதைத்தான் செய்யும், ஏனென்றால் அதான் அதன் இயல்பு. அது போல் தான் இயற்கையும். குழந்தையைப் போல இயற்கையை அறிந்தவர் வேறு யாரும் இல்லை. அந்த மரண வீட்டிலும் குழந்தை குதூகலமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது.
  நல்ல கரு தான். ஆனால் இன்னும் செறிவாக, நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கலாம்.

 5. அருண்

  இதந்தக்கதைகள் நூல்வடிவில் வருகின்றனவா?

 6. அருண்

  இன்னொரு. போட்டி அறிவித்து கதைகளை வெளியிடலாமே. மேலும் சில எழுத்தாளர்கள் வந்தால் நல்லது. அல்லவா

 7. jeyamohan

  அன்புள்ள அருண்

  இந்தக்கதைகள் நற்றிணை வெளியீடாக ’புதியவாசல்’ என்ற பேரில் வருகின்றன. நான் முன்னுரையும் குறிப்பும் எழுதியிருக்கிறேன்

  இன்னொரு வரிசை கதைகள் வெளியிடலாம். நண்பர்கள், வாசகர்கள் எழுதட்டும். வாசிக்கக்கிடைத்தகதைகள் பெரும்பாலும் மிகச்சதாராணமானவை

  ஜெ

 8. jeyamohan

  னிதனின் பொருளாதாரச் சிக்கல்கள் உறவைத் தீர்மானிக்கினறன என்பது உண்மைதான் என்றாலும் சில சமயம் அதையும் மீறி உடல் மற்றும் மனத்தேவைகளும் உறவை நிர்ணயிக்கின்றன என்பதை தனசேகரின் உறவின் கதை சொல்கிறது. கதையின் உறவு என்ற தலைப்பு இரண்டு பொருள்பட அமைந்து கதையை நடத்திச் செல்கிறது.

  சாதாரணமாகவே மனிதன் சந்தேகபுத்தி உள்ளவன். எனவே இப்படியான ஒரு சூழ்நிலை கொண்ட மக்கள் வாழும் இடத்தில் அந்த சந்தேகம் கதைசொல்லிக்கு எழுவது இயல்பு. ஆனால் முருகண்ணனோ இத்தகைய சந்தேகத்தைக் கடந்தவராக சித்தரிக்கப்பட்டு ஒரு மேலான மனநிலையில் இருப்பதைக் கதைசொல்லி காண்பதாகச் சொல்வதன் மூலம் அவனின் சந்தேகத்தை அற்பமானதாக்குகிறார் அவர். அந்த மலையைப் பார்த்து வியப்பதும், சிறுநீர் கழித்தபின்னரும் மோனத்தின் ஆழ்ந்தவராகக் அவரைக் காட்டியிருப்பதும் அவர் பாத்திரத்தை நமக்குத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. கதையைப் படித்து முடித்ததும் முருகண்ணனும் அந்த மலையும் நம் மனதில் நிலைத்து நின்றுவிடுகிறார்கள்.

  தனசேகரின் உறவின் கதை வெறும் உறவை மட்டும் சொல்லவில்லை. அந்த உறவுக்குப் பின்னால் இருக்கும் மனிதனின் உயர்ந்த உள்ளத்தையும் காட்டுகிறது.
  kesavamanitp.wordpress.com x
  [email protected]

 9. THENMOZHI CHINNARAJ

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

  புதியவRகளின் கதைகள் தொடர்பாக சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  பீத்தோவனின் ஆவி : இந்தக் கதை இரண்டு தளங்களிலிருந்து வெளிப்படுவதாகவே
  உணர்கிறேன். ஓன்று இசை என்ற கலையைப் பற்றிய உணர்வைப் பற்றியது, மற்றது இரு வெவ்வேறு நாகரிகம், நாடுகள் , வாழ்க்கைச் சூழ்ல், வயது வேற்றுமை, பால் வேற்றுமை என்ற எல்லைகளைத் தாண்டி, எதிர்பாராத சூழ்நிலையில், இடத்தில், கணத்தில் இரு மனிதர்களிடையே நடைபெறும் பகிர்தல் என்ற உணர்வு.

  திரு கார்த்தி அவர்களின் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இக்கதையை புரிந்து கொள்ளக் கூடிய தளங்களை விளக்குகிறேன் .
  “செயற்கையான , பல பீடிகைகளுடனான உரையாடல் ”
  “புதியவர்களுடன் அறிமுகமாகும் போது வானிலையைத் தவிர வேறெதைப் பற்றியும் பேசக்கூடாது , அவர்களாகவே வேறு விஷயங்களைப் பற்றி பேசும் வரை- இது என் ஆங்கில ஆசிரியை கற்பித்தது ”
  என இதற்கான பின் புலத்தை கதாசிரியர் அழகாக விளக்கிவிட்டார் . மற்றவர்களின் அந்தரங்கத்தில் , தனிமையில் , குறிக்கிடாத நாகரிக பின்புலத்தில் நடக்கக் கூடிய உரையாடலாக மிக அழகாகவே கதாசிரியர் அமைத்துள்ளார் . இலேசான அறிமுகத்துடன், பின் அறிவுக்கூர்மையுடன் வெளிப்படும் சிறு நகைச்சுவை உணர்வுடன் உரையாடலை இருவருக்குமிடையே எளிதாக்கியபின் கதைக்கான கனத்த செறிவுடன் முடிகிறது.

  ஒரு சராசரி வாசகன், சிறந்த படைப்புகளையும் செவ்வில்க்கியங்களையும் படித்தபின், தன் அறிவின் விசாலத்தையும், மொழியின் ஆற்றலையும் வளர்த்துக் கொண்ட பின் ஒரு எழுத்தாளனாக மாறுவதே மலர்ச்சியல்லவா ? அது தானே அவனை நிறைவடையச் செய்யும் ?படைப்பூக்கம் என்பது மனிதரில் இயற்கையாகவே உள்ளது தானே
  சேரா அதை அடைய துடிப்பது நியாயம் தானே ?
  “தான் தன்னுடையது என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் கலை எழுமா எனத் தெரியவில்லை “
  என்கிறார் கார்த்தி – தான் என்பது மறந்து இந்தப் பிரபஞ்சமாக மலர்வதிலேயே கலை எழும்.
  சிகரம் ஏற ஏறத்தான் உச்சி தெளிவாகும். அடுத்த தளத்திற்கான தவிப்பு அது.

  இளைஞர்களுக்கே உரித்தான மேம்போக்கான உரையாடலுடன் ஆரம்பித்து, அப்பெண்ணின் மன பாரத்தைத் தன் தோளில் தாங்கி, முடிவில் அவளைச் சிறுமியாகக் கருதி பார்த்து நின்ற தாயுமானவனாய் அவ் இளைஞன் மாறுவதை மிக எளிய உரையாடல் மூலம் நகர்த்திச் சென்ற கதாசிரியரின் திறன் என்னை வியக்க வைக்கிறது.

  இந்த என் கருத்துக்களை வாசிப்பவர்கள் சரியாக புரிந்தது கொள்வார்களா என்ற தவிப்பும் பதட்டமும் , ஆயிரம் பிரார்த்தனைகளும் எனக்கே உண்டெனில் கதை எழுதிய
  புதியவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கூறத் தேவையில்லை, வாசகர்கள்
  அவர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும் .

  திரு சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வேண்டுகோள் , அர்த்தம் நிறைத்ததாகவும் , அர்த்தமற்றதாகவும் ஆனா இரண்டு புள்ளிகளுக்கிடையே ஆன வாழ்வின் சாரத்தை மிக அழகாக விளக்கும் அவ் வார்த்தையை தயவு செய்து மாற்ற வேண்டாம்.
  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

 10. karthi

  அன்புள்ள தேன்மொழி சின்னராஜ்,

  நான் முன்வைப்பது குற்றச்சாட்டுகளை அல்ல, ஒரு வாசகனாக என் கருத்துக்களை மட்டுமே. கதையின் கட்டமைப்பு உங்களைக் கவர்ந்திருந்தால் மகிழ்ச்சி. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை, நான் கூறிய காரணங்களுக்காக, அவ்வுளவுதான்.

  கதையின் மைய செய்தி. நீங்கள் சொல்வது போல் சேரா படைப்பூக்கத்தை அடைய நினைப்பது நியாயம் தான். அதைதான் நானும் சொல்கிறேன். அவள் படைபூக்கத்தை அடைய ஏன் நினைக்கிறாள்? ஏனென்றால் தான் கற்றிருப்பது வெறும் தொழில்நுட்பம் தான், படைப்பு அல்ல; படைப்பூக்கம் என்பது தொழில்நுட்பத்தை விட மிக மேலானது என உணர்வதால்தான் இல்லையா? இந்த உணர்தல் முக்கியமானது. இந்த உணர்தலினால் சேரா மிக்க துன்பத்திற்கு உள்ளாகிறாள். ஆசிரியர் அதற்கு ஒரு தீர்வளிக்கிறார்.
  இந்த இடத்தில்தான் ஒரு வாசகனாக நான் முரண்படுகிறேன்.
  ஒன்று, என் பார்வையில் சேராவின் உணர்தல் உண்மையானது. ஆனால் அதற்காக அவளின் இது வரையிலான கலை வாழ்க்கை அர்த்தமற்றது என்பதல்ல. அவளது கலை வாழ்க்கைக்கான நியாயம் என்பது அதில் அவள் இதுகாறும் அடைந்து வந்த மகிழ்ச்சி, அதன்பால் அவள் கொண்ட காதல் என்பது தான். எனவே அவளின் கடந்த கால கலை வாழ்க்கை குறித்த எந்த வருத்தமும் பட தேவையில்லை.
  ஆசிரியர் என்ன கூறுகிறார் என்றால், சேரா அவ்வாறு உணரத் தேவை இல்லை என்கிறார்.
  அவர் பார்வையில் சேரா கண்டு கொண்டது அவள் நினைப்பது போல் மிக மேலான கலை அல்ல, அவளின் கலையை ஒத்ததுதான் என்கிறார். இது சேராவை சாந்தப்படுத்தும் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இது படைப்பூக்கமும் தொழில்நுட்பமும் ஒன்றுதான், பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என பொருள் தர வல்லது. இதுனுடன் தான் நான் ஒப்பவில்லை. எல்லார் இசையும் ஒன்றுதான் இதில் உன் இசை என்ன, என் இசை என்ன என்ற கருத்தும் இதனுடன் ஒத்ததே. பீதோவன் மொசார்ட்டின் இசையைக் கேட்டு, அதான் அவர் செய்துவிட்டாரே, அது நாம் செய்த மாதிரி தான் என நினைத்திருந்தால் நமக்கு பீதோவன் கிடைத்திருப்பாரா? வேதா, பீத்தோவனின் ஆவி என கதை எழுதிருப்பாரா?

  இரண்டு, ஒரு மேலான கலையை காணுகையில் மற்றொரு கலைஞனுக்கு எழுவது பெரும் பரவசம் தான்; தன்னிரக்கம் அந்தப் பரவசத்தின் முன் ஒரு சிறு துளி தான். கதை அதை முன்வைக்கவில்லை.

  இது ஒரு தத்துவ விவாதத்தை மையமாக கொண்ட கதை. இவ்வகைக் கதைகள் அதன் பேசு பொருள் காரணமாக இரு துருவத்தில் இருந்தும் எதிவினையை ஈர்க்க வல்லவை. தனிப்பட்ட முறையில், இவ்வாறான கதைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.

  வேதா அவர்கள் இன்னமும் சிறப்பான கதைகள் தர வாழ்த்துக்கள்.

Comments have been disabled.