இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

அன்பின் சகோதரர் ஜெ,

சமீப காலமாக தங்களின் எழுத்துகளை வாசித்து வருகிறேன். நான் தீவிர இலக்கிய வாசகன் இல்லை என்றாலும், இலக்கிய ஆர்வம் உண்டு. விவசாயிகள், விவாதம், வேலையும் இலக்கியமும் போன்ற கட்டுரைகள் என்னுள் மாற்றங்களை ஏற்படுத்தியவை.

அண்மையில் மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ள ஹிந்தி கற்றல் தொடர்பான கருத்துக்கள், சில சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளதே. தமிழ் நாட்டில் ஹிந்தி கற்றல் குறித்தான தங்கள் கருத்தென்ன?

தமிழின் தவிர்க்க முடியாத வெகுசன முன்னணி எழுத்தாளரான தங்களின் பார்வை அறிய ஆவலாய் உள்ளேன். முன்பே எழுதியிருந்தாலும் சுட்டி தரவும்.

இது பற்றிய என் பார்வை ‘ஹிந்தி கற்பது பாவச்செயலா?’ என்ற பதிவின் சுட்டி; http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html

நான் ஒரு செலிப்ரட்டிக்கு கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை, எனவே ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவதற்குண்டான வரைமுறைகள் இல்லாமல் இக்கடிதம் அமையபெற்றிருக்கலாம். மன்னிக்கவும்.

***************

அன்புள்ள ஜெ,

இக்கட்டுரைக்கான என் எதிர்வினை.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80908287&format=html

சமஸ்கிருதத்தை  பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதை தூற்றுவது எனக்கொண்டிருப்பது ஒரு நோக்கமாகவும்,  அத்தகைய தூற்றல் தமிழ் மொழிக்கு சேர்க்கும் பெருமையாக எண்ணுவதும் இம்மடலின் நோக்கம் எனத்தோன்றுகிறது. இரண்டுமே தவறானது.

சமஸ்கிருதம் முற்காலத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஒருவாறு ஒத்துக்கொள்ளும் ஒருவர் இப்போது பார்ப்பனர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால் அது பார்ப்பன மொழியாகிவிட்டது என்கிறார்.  அது மொழியின் தவறு இல்லை அல்லவா?. ஒரு மொழியை ஒரு மதத்தை ஒரு சாதியை சார்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அவற்றை அச்சாதியினருக்கே உரிமையாக்கிவிடுவது ஏமாளித்தனம் இல்லையா?

மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என  எப்படி.  சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக விரும்பும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.

கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அர்ச்சகரின் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் இருப்பதையே வேண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலோர் தமிழ் கற்றவர்கள்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் திளைப்பவர்கள் (தமிழ் விரோதிகள் அல்ல).   இவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதம்  பயன்படும் மொழியாகவே உள்ளது.  இந்துமதத் தத்துவங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் கணிசமானவர்கள் அனத்து சாதியினரிலும் உள்ளனர். அவர்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர்.

உலகம் முழுவதும் திருக்குரான் அதற்கான மொழியில் ஒலிப்பதைப்போல் இந்தியா முழுவதும் கோயில்களில் சமஸ்கிருதம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதத்தை செத்த மொழி என அனைவர் சார்பிலும் கூறுவேன் என்பது வெற்று அகம்பாவம் மட்டுமே.

செத்த மொழியென்பதற்கான வரையறை என்ன? மனிதர்களின் பேச்சுவழக்கில் இல்லாதது அதன் வரையறை  என்பதாக யார்  முடிவெடுத்தது?.  சில நாட்டில் பல தலைமுறையாய் வாழும் தமிழர்கள் இடத்தில் தமிழ் பேச்சுமொழியாக இல்லை. அதற்காக தமிழை அவர்களைப்பொருத்தவரை ’அவ்வாறு’ கூறமுடியுமா?

என் தமிழ்மொழியின் பெருமையை மற்றொரு மொழியை தாழ்த்துவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் எனக்கூறுவது என் தமிழை பழிப்பதாக கருதுகிறேன். அவ்வாறு பழிப்பவர்கள் தமிழின் பெருமையை அறியாதவர்கள். அவர்களால் என்றுமே தமிழுக்கு நன்மை விளையப்போவதில்லை.

ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள்?  அது பார்ப்பனர்களை உயர்த்தி மற்றசாதியினரை தாழ்த்தும் சில வாசகங்களை கொண்ட நூல்களை கொண்டிருக்கிறது என்பதாலா?  அவ்வாறிருந்தால்கூட அதற்காக ஒரு முழு மொழியையும் வெறுத்துவிட வேண்டுமா?

அறிவியலை எடுத்துக்கொண்டால் விமானம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆய்வு அனைத்தும் ஆதிக்க வெறியர்கள் போருக்காக  பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே (இவற்றில் முக்கியமான ஆய்வுகள் ஹிட்லரின் ஜெர்மனியில் நடத்தப்பட்டவை) அவற்றில் தீங்கானவற்றை விலக்கி நல்லனவற்றை பயன்படுத்துவது தவறானதில்லை எனும்போது சமஸ்கிருதத்தில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு  தேவையற்றவற்றை தவிர்த்துவிடுவதில் என்ன தவறிருக்கிறது?

சமஸ்கிருதம் மொழியின் பலநூல்கள் எழுதப்பட தமிழகத்தை சேர்ந்தவர்கள் காரணமாய் இருந்திருக்கின்றனர். பலர் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். சமஸ்கிருதத்தை பழிப்பது அவர்களையெல்லாம் பழிப்பதாகும்.

பழிப்பதும் தூற்றுவதும் எதிர்மறை கண்ணோட்டமாகும். அவற்றால் எவ்விதப்பயனும் விளையப்போவதில்லை.

த.துரைவேல்.

 

அன்புள்ள துரைவேல்

நான் ஓர் எழுத்தாளன் என்றவகையில் எப்போதும் என் அனுபவங்களை நம்பியே பேச கடமைப்பட்டவன். கோட்பாடுகளை அல்ல அனுபவத்தையே எழுத்தாளன் எப்போதும் முன்வைக்க வேண்டும். அவ்வகையில் மொழிப்பிரச்சினையைக் குறித்த என் கருத்துக்களை சொல்ல இது ஒரு தருணம்

ஒரு தேசம் முழுக்க ஒரு மொழி என்பது மைய அதிகாரத்தை வலியுறுத்த கண்டுபிடிக்கப்பட்ட கருத்து. ஒற்றைத்தன்மை என்பது இயல்பாக மைய அதிகாரத்தை உருவாக்குகிறது. பலதேசங்களில் இயல்பாக ஒருமைத்தன்மையும் மைய அதிகாரமும் சாத்தியமாகியது. ஆனால் கணிசமான தேசங்களில் அது வன்முறை மூலமே உருவாக்கப்பட்டது என்பது வரலாறு

மைய அதிகாரத்தை வலியுறுத்திய மார்க்சியமே ஒருமொழிக் கொள்கையின் மோசமான முன்னுதாரணங்களை உருவாக்கியது . சோவியத் ருஷ்யாவில் ருஷ்ய மொழி தேசம் முழுக்க திணிக்கப்பட்டது. இப்போது சீனாவில் மாண்டரின் மொழி அவ்வாறு திணிக்கப்படுகிறது.

இந்தியா என்னும் நவீன அரசியல் கட்டுமானத்தைப்பற்றிய சிந்தனைகள் உருவாக ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி ஒரு முக்கியமான விவாத விஷயமாக எழுந்து வந்தது. அப்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவை ஐரோப்பிய மையஅதிகார நவீன அரசுகளே. ஆகவே அங்குள்ளது போல வலுவான மைய அரசு கொண்ட ,மையமொழி கொண்ட , ஒரு தேசிய உருவகத்தை அவர்கள் கற்பனைசெய்தார்கள்.

அதற்காகவே இந்தியாவின் பொதுக்கூறுகளைக் கண்டடைவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த பொதுக்கூறுகளை மையக்கூறுகளாக வலியுறுத்தும் போக்கு தொடங்கியது. உதாரணமாகச் சொல்லப்போனால் இந்து மதத்துக்கு முதல்நூல்களை கண்டடையும் முயற்சியைச் சொல்ல வேண்டும். வேதங்களை முதல் நூலாக முன்வைத்த ஆரியசமாஜமும் கீதையை முதல்நூலாக முன்வைத்த பிரம்ம சமாஜமும் இந்த போக்கை வெளிப்படுத்துபவை.

இம்மனநிலையே இந்தியா முழுமைக்கும் ஒரு மையமொழி தேவை என்ற தேடலை உருவாக்கியது. சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும் அந்த இடத்துக்குக் கொண்டு வர முடியுமா என்ற வினா எழுந்தது. காலப்போக்கில் இந்தி அந்த வினாவுக்கான பதிலாக முன்வைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்துஞானமரபின் இணைப்பு மொழி என்ற நிலையில் சம்ஸ்கிருதம் முன்வைக்கப்பட்டது. பிரம்ம சமாஜமும் ஆரிய சமாஜமும் அதை முன்வைத்தன. பின்னர் காங்கிரஸ் உருவாகி பெருமளவு மக்களை உள்ளே கொண்டுவந்து மக்களியக்கமாக சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டபோது பெருவாரியான மக்களின் மொழியான இந்தி பொதுமொழியாக முன்வைக்கப்பட்டது.

ஆனால் மிகமிகத் தொன்மையான காலம் முதலே இந்த மண்ணில் ஒரு பண்பாட்டுத் தேசிய உருவகம் இருந்திருக்கிறது. அதன் தேசிய நில எல்லைகள், அதன் அடையாளங்கள், அதன் தனித்துவம் எல்லாமே குறைந்தது மூவாயிரம் வருடங்களாக துல்லியமாக வகுக்கப்பட்டிருந்தன. அந்த பண்பாட்டுத் தேசியத்தில் இருந்து அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு நவீன அரசியல்-பொருளியல் தேசியத்தை உருவாக்குவது குறித்து நாம் சிந்தனை செய்திருக்க வேண்டும்.

ஆனால் அது நிகழவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் அப்போது அந்த வகையான சிந்தனைகளுக்குள் சென்றவர்கள் ஆங்கிலம் மூலம் ஐரோப்பாவை அறிமுகம் செய்துகொண்டு அங்கே உருவாகி வந்த தேசிய- சுதந்திரவாத கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான். ஆகவே அவர்களுக்கு ஐரோப்பா முன்னுதாரணமாக அமைந்தது.

நம்முடைய இந்துத்துவர்களுக்குக் கூட ஐரோப்பாவில் உருவாகிவந்த ஒற்றைப்படையான தேசிய அடையாளம் கொண்ட நவீன அரசுகளே முன்னுதாரணமாக இன்றும் உள்ளன என்பதை காணலாம். பன்மைத்தன்மையின் பெருக்கத்தால் உருவான இந்திய தேசியத்தை அவர்கள் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை.

நம்முடைய பண்பாட்டு தேசியம் என்பது மையத்தில் ஒரு லட்சியத்தின் அடிப்படையில் ஒரு ஒற்றுமையை முன்வைப்பதாகவும் அடித்தளத்தில் அனைத்து வகையான பிரிவுகளையும் அனுமதிப்பதாகவுமே இருந்துள்ளது. ஒவ்வொரு கூறும் இன்னொன்றுடன் மோதி விவாதித்து வளரும் ஒரு களமாகவே இருந்திருக்கிறது. எந்த ஒரு உட்கூறும் அதன் தனித்தன்மையை இழந்து மையத்தில் கலந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை

அந்த ஆதார இயல்பையே நம் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தவிர எந்த ஒரு மையவாத நோக்கும் இந்த மாபெரும் தேசத்தில் முரண்பாடுகளை , கசப்புகளை பெருக்கும். மோதல்களையும் அழிவுகளையும் உருவாக்கும்.

இந்த கோணத்தில்தான் நான் மொழி மையவாதத்தையும் அதன் எதிர் விளைவான மொழிக்காழ்ப்புகளையும் காண்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்னும் மொழியின் தொல்வடிவம் என்பது இந்நிலத்தில் வாழ்ந்திருந்த பல்லாயிரம் தொல்குடிகளில் ஒன்றின் மொழியாக ஏதோ காலத்தில் இருந்திருக்கிறது. அவ்வண்ணம் பல தொல்மொழிகள் இங்கிருந்தன. சம்ஸ்கிருதம் சாதகமான வரலாற்றுக் காரணங்களால் ஒப்புநோக்க வளர்ச்சி அடைந்தது. அதற்கான காரனங்களில் முக்கியமானது அது நில-நீர்வளம் மிக்க பகுதிகளில் இருந்தது என்பதே. அம்மக்கள் அதிகமாக பயணம் செய்பவர்களாக இருந்தார்கள் என்பதே. அத்துடன் அவர்கள் மற்றவர்கள் மேல் அரசாதிக்கமும் கருத்தியலாதிக்கமும் கொண்டதும் முக்கியமான காரணமே.

அதாவது இப்போது எப்படி ஆங்கிலம் இயல்பாக ஓர் உலகமொழியாக, சர்வதேச இணைப்பு மொழியாக பரிணாமம் கொண்டதோ அவ்வாறு. ஆங்கிலம் ஒரு சிறிய மொழி, ஆனால் இன்று உலகமொழி. அவ்வாறு ஆவததற்கு காலனியாதிக்கமே வழிவகுத்தது.

இந்திய நிலப்பகுதியில் இருந்த பிற மொழிகள் சம்ஸ்கிருதத்தை ஒட்டி வளர்ச்சி பெற்றன. சம்ஸ்கிருதம் அந்த மொழிகள் அனைத்துக்கும் பொதுவான இணைப்பாக அமைந்தது. அந்தமொழிகளில் இருந்து சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கு வந்தன. சம்ஸ்கிருதம் வழியாக அவை பிற மொழிகளுக்குச் சென்றன. எல்லா மொழிகளும் வளர்ச்சி அடைந்தன. அவற்றை சம்ஸ்கிருத அபப்பிரஹ்ம்ஸ மொழிகள் என்று சொல்கிறார்கள்.

இந்திய நிலப்பகுதியில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துடன் ஆழமான பிரிக்க முடியாத உறவு உண்டு. அம்மொழிகளின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே சம்ஸ்கிருத உறவு இருந்திருக்கிறது. அந்த உறவின் விகிதாச்சாரம் மட்டுமே மாறுபடுகிறது.

அதேபோல சம்ஸ்கிருதத்தில் இந்த அத்தனை மொழிகளும் புகுந்துள்ளன. தமிழ் சம்ஸ்கிருதத்தில் ஆழமான பாதிப்பு செலுத்திய மொழி. சம்ச்கிருத அறிஞர்கள் பல சொற்களை தென்னக பிறப்பு [தட்சிணஜன்யம்] கொண்டவை என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு சிறு இனக்குழுவின் பேச்சு மொழியாக இருந்த சம்ஸ்கிருதம் இந்தியா முழுமைக்குமான இணைப்பு மொழியாக உருமாறியபோது அந்த தேவைக்காக அது செம்மை செய்து சீர்படுத்தப்பட்டது. அந்த வடிவமே இப்போது நாம் அறியும் சம்ஸ்கிருதம்–செம்மை செய்யப்பட்ட மொழி.  அது அதற்குப்பின் எப்போதுமே அறிவார்ந்த விவாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதற்கான இலக்கணங்களும் வழக்காறுகளும் மட்டுமே அதில் உருவாயின.

எந்த மக்கள் அந்த மொழியை அன்றாடப்பேச்சுமொழியாகக் கொண்டிருந்தார்களோ அந்த மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே உருமாற்றம் அடைந்து மறைந்து விட்டனர். அவர்கள் பேசிய மூலமொழி ஒரு அபப்பிரஹ்ம்ச வடிவமாக இருந்து பின்னர் இந்தி போன்றவற்றுக்கு வழிவிட்டிருக்கலாம்

இன்றைய சம்ஸ்கிருதம் மிக விரிவான ஒரு தத்துவ, இலக்கிய செயல்பாடு மூலம் உருவம்பெற்ற ஒரு அறிவார்ந்த மொழி. இந்து ஞானமரபின் எல்லா பிரிவுகளுக்கும் அதுவே அறிவார்ந்த மொழி. பிற்கால பௌத்தம் சமணம் ஆகியவற்றுக்கும் அதுவே மொழி. அவற்றுக்கு இடையேயான விவாதங்கள் எல்லாம் நடந்த மொழி. ஆகவே அது இந்திய சிந்தனை மரபை நிகழ்த்திய, இன்றும் தன்னுள் வைத்திருக்கிற மொழி.

இன்று சம்ஸ்கிருதத்தின் இடம் என்ன? சம்ஸ்கிருதம் இன்று ஓர் இணைப்பு மொழி அல்ல. நான் சில வைதிக சபைகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இயல்பாகவே ஆங்கிலம்தான் இணைப்பு மொழி. சென்ற காலத்தில் தமிழர்களும் கன்னடர்களும் வங்கத்தினரும் காந்தாரத்தினரும் சேர்ந்தமர்ந்து பேசும் சபைக்கு சம்ஸ்கிருதம் மொழியாக இருந்திருக்கலாம். இன்று ஜெர்மானியரும் அமெரிக்கரும் இந்தியரும் அமரும் சபைக்கு ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதே இயல்பானது.

கடந்த நூறு வருடங்களில் இந்திய ஞான மரபின் எல்லா நூல்களும் ஆங்கிலத்தில் ஆக்கம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த நூறுவருடத்தில் இந்திய ஞானமரபை ஒட்டி எழுதிய எல்லாருமே ஆங்கிலத்தையே தங்கள் ஊடகமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நேற்று சம்ஸ்கிருதம் வகித்த பங்கை இன்று ஆங்கிலம் அகிக்கிறது

ஆனால் சம்ஸ்கிருதத்தில்தான் இந்த மரபின் இறந்த காலம் உள்ளது. ஆகவே ஒருபோதும் சம்ஸ்கிருதம் அழிந்து படாது. ஒருபோதும் அது தன் முக்கியத்துவத்தை இழக்கவும் இழக்காது. மூலநூல்கள் உள்ள மொழி என்ற வகையில் எப்போதுமே அது இருந்துகொண்டிருக்கும். அந்நூல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள அது இன்றியமையாதது.  மாக்ஸ்முல்லருக்கும், ஜெக்கோபிக்கும், ஷெர்பாட்ஸ்கிக்கும், அம்பேத்கருக்கும் டி.டி.கோசாம்பிக்கும் அது வரலாற்று,பண்பாட்டு ஆய்வுக்கு உதவியது. இன்றும் ஆய்வாளர்களுக்கு உதவுகிறது.

ஆய்வாளர் நடுவே எப்போதுமே சம்ஸ்கிருதம் வாழும். நேற்று அது ஓர் அறிவுத்தள மொழி. இன்றும் நாளையும் அது அறிவுத்தள மொழியாகவே இருக்கும். அதன் சொல்வளம் மூவாயிரம் வருட தத்துவ இலக்கிய நூல்களால் உருவாக்கப்பட்டது. இன்று ஆங்கிலத்தில் அச்சொற்களை அப்படியே பயன்படுத்தித்தான் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

இந்த தளத்தில் இருந்தே இந்தி என்னும் பிரச்சினைக்கு வருகிறேன். இந்திய ஒருமைப்பாடு என்ற அம்சத்தை ஏற்கனவே இருந்த ஒன்று என்ற கோணத்தில் பார்க்காமல் புதிதாக உருவாக்க வேண்டிய ஒன்று என்ற கோணத்தில் பார்த்தவர்கள் தான் மையமொழி தேவை என்று சொல்ல முற்பட்டார்கள்.

ஏற்கனவே இருந்த வழிமுறை என்ன? மையத்தில்  அறிவார்ந்த விவாதத்துக்காக ஒரு வளமான தொடர்புமொழி.  அடிப்படைத்தளங்களில் முடிவிலாத பன்மைத்தன்மை. பலமுகப்பட்ட பலதிசைப்பட்ட வளர்ச்சி. அதையே நம் முன்னுதாரணமாகக் கொண்டால் நமக்குத்தேவை ஒரு ஒற்றைமொழிக் கோட்பாடல்ல. தொடர்புமொழிக்கோட்பாடு.

அதற்கு நமக்கு தேவை ஒரு அறிவார்ந்த மொழி. இந்தி அந்த இடத்தை வகிக்க முடியவில்லை. அந்த இடம் பல்வேறு நுட்பமான வரலாற்றுக்காரனங்களால் காலப்போக்கில் உருவாகி வருவது. உருவாக்கப்படும் ஒன்று அல்ல. அந்த தொடர்பு மொழியில் இலக்கியவளம் மிகுந்திருக்க வேண்டும். சொல்வளம் மிகுந்திருக்க வேண்டும். அந்த வளங்கள் இடைவெளியில்லாத உரையாடல் மூலம் பல்வேறு மொழிகளில் இருந்து இலக்கியங்களையும் சொற்களையும் உள்ளிழுத்துக்கொள்வதன் வழியாகவே உருவாகி வரும். ஆங்கிலமும் சம்ஸ்கிருதமும் அப்படி உருவாகி வந்தவை.

சம்ஸ்கிருதம் பலநூறு மொழிகளின் ஞானத்தையும் சொற்களையும் தனக்குள் ஏற்றுக்கொண்டே அந்த தொடர்புமொழித்தன்மையை அடைந்தது என நாம் அறிவோம். அந்த இயல்பு இந்தியில் அறவே இல்லை. இன்றும் அது கொஞ்சம்கூட வளராத ஒரு மொழி. அதில் முக்கியமான சம்ஸ்கிருத நூல்கள் கூட மொழியாக்கம் செய்யப்படவில்லை. அதில் இன்னமும் உலக இலக்கியத்தின், அறிவியலின் எளிய பங்களிப்பு கூட இல்லை. அந்த மொழி ஒருபோதும் உக்கிரமாக உருவாகிவரும் இந்திய அறிவியக்கத்தின் மொழியாக அமைய முடியாது. இந்தியாவின் நவீன தொடர்பு மொழியாக அது அமைய முடியாது

அப்படி இருந்தும் இந்தி ஏன் தொடர்புமொழியாக முன்வைக்கப்படுகிறது?  அதிகபேர் அதைப் பேசுகிறார்கள் என்பது ஒரு காரணம். ஆங்கிலம் போன்ற அன்னிய மொழிகளுக்கு பதிலாக ஒரு தேசி மொழி இணைப்பு மொழியாக இருக்கட்டுமே என்ற எண்ணம் இன்னொரு காரணம். இரண்டுமே இன்று பொருந்தா வாதங்கள்.

அதிகம் பேர் பேசுவதனால் ஒரு மொழி பொதுமொழியாக இருக்க முடியாது. அது மொழிச்சிறுபான்மையினர் மீதான பண்பாட்டு வன்முறையாக ஆகிவிடவே வாய்ப்பதிகம். மேலும் நாம் பேசுவது இணைப்புக்கான மொழியை. இன்றைய காலகட்டத்தில் ஒரு மொழி தேசி மொழியாக இருக்கவேண்டும் என்பது ஒருவகை குறுக்கல் வாதமே. நான் இந்தியா என்பது இந்திய நிலப்பகுதிக்கும் வெளியே  பரந்து கிடக்கும் ஒரு வெளி என்றே நினைக்கிறேன்

ஆகவே  ஆங்கிலம் இந்தியாவின் அறிவார்ந்த இணைப்பு மொழியாக, நேற்று சம்ஸ்கிருதம் வகித்த இடத்தை வகிப்பதாக, இருப்பதே இயல்பானது. சம்ஸ்கிருதத்தில் ஸ்வயமேவ மிருகேத்ரதா என்ற சொலவடை ஒன்றுண்டு. சிம்மம் அதன் இயல்பான வல்லமையால் மிருகராஜன் ஆகிறது. மொழிகளும் அப்படியே. ஆங்கிலம் அப்படி ஆன மொழி. அது இந்தியாவை இணைக்கிறது, இந்தியாவை உலகுடன் இணைக்கிறது

காந்தியும் நேருவும் அம்பேத்காரும் முழுஇந்தியாவுடனும் பேசியது ஆங்கிலம் மூலமே. இன்றும்  இந்தியா ஆங்கிலம் மூலமே இணைக்கப்பட்டிருக்கிறது. இந்து ஞான நூல்கள் இந்திய வரலாற்றுப் பண்பாட்டு நூல்கள் அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளன. நாராயணகுரு சம்ஸ்கிருதத்தில் பேசினார், நடராஜ குருவும், நித்ய சைதன்ய யதியும் பேசியது ஆங்கிலத்தில். அது ஓர் இயல்பான மாறுதல்

இன்று பிழைப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலம் அறிவியலின்,நவீன சிந்தனைகளின் மொழி. அதில் உள்ள தேர்ச்சியினாலேயே வடக்கை இன்று தெற்கு வென்றிருக்கிறது. எப்படியும் நாம் ஆங்கிலம் கற்றாகவேண்டும். அதாவது ஆங்கிலம் இன்று இரு பணியையும் ஆற்றுகிறது. ஒரு இந்தியப்பண்பாட்டு இணைப்பு மொழியாக அது இயங்குகிறது. உலகத்துடன் நம்மை இணைக்கக் கூடிய தொழில்நுட்ப மொழியாகவும் அது இருக்கிறது. இந்த பணிகளை வெற்றிகரமாக நிகழ்த்தும் ஆங்கிலத்துக்கு மாற்றாக நாம் ஏன் வெறும் தேசிய வெறி ஒன்றின் காரணமாகவே இந்தியை முன்வைக்க வேண்டும்?

மேலும் நடைமுறைச் சிக்கல்கள். எப்படியும் நாம் ஆங்கிலம் கற்றாக வேண்டும். மும்மொழிக்கொள்கை வந்தால் இந்திபேசுபவர் இருமொழி கற்க தெற்கே மும்மொழி கற்க வேண்டியிருக்கும். அது சமமற்ற போட்டியை உருவாக்கும்.

பேச்சில் இந்தி இல்லாமலிருக்கையில் இந்தியை பாடமாகக் கற்பது போன்ற வீண் ஏதுமில்லை. எனக்கு தெரிந்த ஏராளமானவர்கள் பத்துவருடம் வரை பள்ளியில் இந்தி கற்றவர்கள். ஆனால் இந்தியில் நான்கு சொல் பேசமுடியாது. பேசினால் புரியும் அவ்வளவுதான்.

அதேசமயம் தேவை ஏற்படும்போது மிக விரைவாகவே நம் மக்கள் இந்தி கற்றுக்கொள்கிறார்கள். ராணுவத்துக்குப் போகும் நம் இளைஞர்கள் அடுத்த விடுமுறையில் இந்தி பேசுபவர்களாக வருகிறார்கள். இந்தி கற்பதனால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது ஒரு மாயை. இன்று வாய்ப்புகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வடக்கே அல்ல. கிட்டத்தட்ட ஒருகோடி தமிழர்கள் இன்று இந்தியாவெங்கும் வெற்றிகரமாக வணிகமும் தொழிலும் செய்கிறார்கள். அவர்கள் இந்தி கற்றுக்கொண்டு சென்றவர்கள் அல்ல. அடித்தள மக்களாகச் சென்றவர்களே.

ஆகவே இன்று இந்தியை ஓர் இந்தியப்பொதுமொழியாக பரப்பவும் திணிக்கவும் எந்த தேவையும் இல்லை. மையத்தின் இணைப்புமொழியாக -அறிவுத்தள மொழியாக- ஆங்கிலம் இருப்பதே வசதியானது.  பாரபட்சமற்றது.  இந்தி உட்பட பிற மொழிகள் எல்லாமே முழுமையான வளர்ச்சி பெறும் சூழல் உருவாக்கப்படவேண்டும். சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளை அந்த மொழி சார்ந்த தேவை கொண்டவர்கள் கற்றுக்கொள்ளலாம்.

மொழியால் இந்தியா ஒருமைப்படவேண்டும். நம் வாழ்வு வளப்பட வேண்டும். ஆதிக்கம் மூலமும் அதற்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மூலமும் நாம் பிளவுபட்டு அழியலாகாது.

ஜெ

 

முந்தைய கட்டுரைகாந்தியின் கண்கள் – ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசம்ஸ்கிருதம் யாருடைய மொழி?