வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்

வேஷம்

பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை, அதில் கலந்துகொள்ளும் மக்கள்திரளை, அவர்களது மனநிலையை எல்லாம் தேவைக்கேற்ப நன்றாக விவரித்திருக்கிறார்.

இந்தக் கதைக்கு பலவிதமான வாசிப்புகள் வரும் என்று நான் ஊகித்தேன். அது போலவே நடந்தது. கடிதம் எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வாசிப்பை முன்வைத்திருக்கிறார்கள். அது இந்தக்கதையின் வெற்றிதான்.

ஆசான் தன் கலையின் வழியாக கண்ட (அல்லது காண நினைத்த) புலி எது – காட்டுப்புலியா அல்லது சாஸ்தா ஐயப்பனின் புலியா என்ற ஒரு குறியீட்டு வாசிப்பை கதைக்கு நாம் அளிக்கலாம். அவரது கனவில் இருந்த புலிக்கும், நிஜத்தில் வந்த புலிக்கும், அவர் ஆக நினைத்த புலிக்கும் உள்ள இடைவெளியே, அதிலுள்ள அடிப்படையானதொரு ஏக்கமே, இந்தக் கதை என்றும் சொல்லலாம். எத்தனை முறை எத்தனை வேஷம் போட்டாலும் நிரப்ப முடியாத அந்த இடைவெளி…

ஆனால் நான் இந்தக் கதையை வேறுமாதிரியே வாசித்தேன். அதை நேரடி வாசிப்பு எனலாம். ஆசானின் கலை முழுமையானது. அவரது வேஷத்தின் வழி அவர் உருவாக்கும் புலி நிஜப்புலியை விட பலமடங்கு உக்கிரமானது. காட்டுப்புலி வெறும் ஒரு புலி தான். ஆனால் ஆசானின் புலி இப்பூமியில் வலம் வரக்கூடிய புலி ஒன்றும் அல்ல. அல்லது இதுவரை இங்கிருந்த எல்லாப்புலிகளின் சாரம் என்றும் சொல்லலாம். ஆனால் மக்களோ நிஜப்புலியை பார்த்து பயந்து அதைக் கொன்று போட்டு பின்னர் ஆசானின் புலியை பார்த்து ‘பயப்படக்கூடாது .. நிஜப்புலி தான் இறந்துபோய்விட்டதே… இது வெறும் வேஷம் தானே’ என்கிறார்கள். தான் உருவாக்கும் கலை தன்னளவில் முழுமையானது, வெய்யிலும் குப்பையும் புழுதியும் எங்கும் படர்ந்து வெளிர்ந்து போயிருக்கும் இந்த தினசரி உலகை விட ஆயிரம் ஆயிரம் மடங்கு அழகானது செறிவானது என்று நினைக்கும் கலைஞனுக்கு மக்களின் இவ்வகை எதிர்வினை ஒருவித செம்மட்டி அடி போல்.. அதுவும் அவன் கலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் சொல்லும் போது…

ஒரு கதைக்கு நேரடி வாசிப்பு, குறியீட்டு வாசிப்பு இரண்டுமே இரு தளங்களில் விரிவது என்பது மிக நல்ல விஷயம். கதை சொல்லியின் வெற்றி அது என்றே நினைக்கிறேன். குறை என்றால் “ஒவ்வொரு வருடமும் சாஸ்தா காவு திருவிழாவின் கடைசி நாளன்று மாலையில் ஆசானின் புலிக்களி நடக்கும்.” போன்ற நேரடி விவரிப்புகளை தவிர்க்கலாம். கதை போகும் போக்கிலேயே இவ்விஷயங்களை சொல்வது கதைக்கு மேலும் வலு சேர்க்கும்.

*

சோபானம்

இடக்கா, சோபான சங்கீதம், ஷட்கால கோவிந்த மாரார் குறித்தெல்லாம் ராம் என்னிடம் முன்னரே சொல்லியிருந்ததால் கதையின் தலைப்பை பார்த்ததுமே இது கேரளத்தில் நடக்கும் கதை என நினைத்திருந்தேன். ஆனால் கதை நடக்கும் தளம் வேறு, சோபானம் என்ற சொல்லின் அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கதையை அமைத்திருக்கிறார்.

மிக நல்ல, உள்ளிழுக்கும் நடை. ஆரம்பத்தில் வரும் செட்டியார் பங்களா குறித்த விவரணைகள் எல்லாம் கச்சிதம். உண்மையில் இந்தக் கதை கான் சாகிப், அவரது சீடன், மற்றும் ராஜம் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் நிழற்படங்கள் [snapshot] தான். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியபடி இருக்கிறார்கள்.

அதில் கான் சாகிப்தான் மைய விசை. அவரது ஆன்மீகமான தவிப்பும் போராட்டமும்தான் கதை. கதை முழுக்க அவர் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டே இருக்கிறார். பின்னர் பயணத்தின் நடுவே ஓர் இடத்தில் இறங்கி, இசையின் வழி “ஒவ்வொரு ஸ்வரமாக நின்று நிதானித்து இன்னும் இன்னும் என்று அதன் படிகளில் ஏறிக்கொண்டே” சென்று ஒரு கட்டத்தில் முடித்துவிடுகிறார்.

கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை, புறக் காட்சிகளாக பல இடங்களில் ஆசிரியரால் காண்பிக்க முடிந்திருக்கிறது. இசைக்கும், காமத்திற்கும் இருக்கும் அந்த உறவை கான் சாகிபின் மனவாழ்க்கையை வைத்து மெல்லிதாக தொட்டுக் காட்டவும் முடிந்திருக்கிறது.

ஆனால் கதாபாத்திர அமைப்பு எனக்கு இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. கான் சாகிபையும், ராஜத்தையும் ஆசிரியரால் ஓரளவு துல்லியமாகக் காண்பித்து விட முடிந்திருக்கிறது. குறிப்பாக ராஜத்தின் வீடு, அதில் சுவர் முழுக்க மாட்டி வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்கள், கேடயங்கள் போன்றவற்றைக் கொண்டு. ஆனால் கான் சாகிபின் சீடன் சிக்கலானதொரு பாத்திரப் படைப்பு என்றே தோன்றுகிறது. அவன் நிலையற்றவனா, அல்லது விடுதலை அடைந்தவனா என்பது தெளிவாக இல்லை. ஒரு இடத்தில் நாடகத்தில் நடிக்க இசை கற்பதை விட்டு விட்டு ஓடிப் போனவன் என்று வருகிறது. மறு இடத்தில் பயங்கர கோபக்காரன் என்று. இன்னொரு இடத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு முழுக்க விடுதலை அடைந்த மனிதன் என்று. இவ்வகையான பாத்திரப் படைப்பு நாவலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சிறுகதைக்கு கொஞ்சம் அதிகம் தான். பிரச்சனை என்னவென்றால் அந்த பாத்திரப்படைப்பு நன்றாக அமைந்திருந்தால் மட்டுமே கான் சாகிபுக்கும், அந்த சீடனுக்கும் உள்ள கான்ட்ராஸ்ட் சரியாக வந்திருக்கும். அவரது சீடன் நாடகம் அதுஇதுவென்று போய் இப்படி ஆகிவிட்டானே என்று கான் சாகிப் வருத்தப்படுகிறாரா, அல்லது சீடனைப் போல் விடுதலை அடைந்த மனிதனாக ஆக முடியவில்லையே என்ற ஏக்கமா என்பது புரியவில்லை. இவை என்னுடைய வாசிப்பு பிரச்சனைகளாக கூட இருக்கலாம்.

அதே போல் ராஜமையரும் கான் சாகிப் காலில் விழுவது, பிறகு அதற்கு விளக்கம் சொல்வது எல்லாம் சிறுகதையின் ஒருமையை பாதிக்கிறது என்றே எனக்குப்படுகிறது. வரலாற்றை புனைவில் சேர்க்கும் போது வரும் சிக்கல் இது என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு வரலாற்றில் நடந்திருக்கலாம். ஆனால் சிறுகதையில் அது எத்தனை தூரம் பொருந்துகிறது என்பதே கேள்வி.

மேலும் “சங்கீதம் என்பது திறமையாகப் பாடுவது என்பதில் இருந்து இன்னமும் முக்கியமான வேறு எதுவோவாக அவருக்கு தோன்ற ஆரம்பித்ததும், பிறர் அறியாமல் இசையின் அடியாழங்களுக்குள் நீந்தி எதையோ தேடிக்கொண்டிருந்தார்” போன்ற விவரிப்புகளை தவிர்த்து, அவற்றை நிகழ்வுகளாக தந்திருக்கலாம்.

சரளமான நடை, சித்தரிப்புகளில் உள்ள நுண்மை, மற்றும் கதைக் கூறலில் இருக்கும் தீவிரம் ஆகியவற்றால் இது முக்கியமாக கதை ஆகிறது. கதாபாத்திர அமைப்பும் செறிவாக இருந்திருந்தால் இன்னும் மிக நல்ல கதையாக ஆகியிருக்கும். வாழ்த்துக்கள்.

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி
அடுத்த கட்டுரைசிவேந்திரனின் ’பயணம்’ -கடிதங்கள்