யாருடைய ரத்தம்?

நண்பர்களே,

க.நா.சு நெடுங்காலம் முன்பு ஒரு நாவலை மொழியாக்கம் செய்தார். பேர் லாகர் குவிஸ்ட் என்ற சுவீடிஷ் எழுத்தாளர் எழுதிய ‘அன்புவழி’ என்றநாவல் [Pär Lagerkvist (1891-1974), Barabas]  இந்த சிறு நாவல் தமிழ் எழுத்தாளர்கள் நடுவே ஆழமான ஒரு பாதிப்பைச் செலுத்திய ஒன்று. வண்ணநிலவன் வண்ணதாசன் பாவண்ணன் போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் அந்த நாவலை தங்கள் ஆதர்ச நாவலாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாவலின் கதை இதுதான். கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றுவதற்காக கல்வாரி மலைக்குக் இழுத்துவருகிறார்கள். கூடவே வரும் யூதமக்கள் அவரைக் கல்லால் அடித்தும் இழிசொல் சொல்லியும் அவமதிக்கிறார்கள்.

ஏசுவை சிலுவையில் ஏற்றும் பொறுப்பில் இருப்பவன் பிலாத்தோஸ். அவன் மனதுக்கு தெரிகிறது ஏசு நியாயவான் என்று. ”இந்த நீதிமானை ஏன் கொல்ல வேண்டும். இவனை விட்டுவிடுவோம்” என அவன் மக்களிடம் கோருகிறான். வெறி கொண்ட மக்களோ ”அவனை கொல்லுங்கள்”என்ரு கூவுகிறார்கள்.

ஏற்கனவே அங்கே மூன்று திருடர்கள் சிலுவைத்தண்டனைக்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திருடனும் கொலைகாரனுமாகிய பரபாசும் உண்டு. ”இவர்களில் ஒருவரை விட்டுவிட எனக்கு அதிகாரம் இருக்கிறது. நீங்கள் சொன்னால் நான் இந்த நீதிமானை விட்டுவிடுகிறேன்’ என்கிறான் பிலாத்தோஸ்.

‘பரபாஸை விட்டுவிடுங்கள்,  இவனை கொல்லுங்கள்’ என்று கூவுகிறது கூட்டம். பரபாஸ் விடுதலையாகிறான். ”இத்த நீதிமானின் ரத்தத்தில் எனக்கு பங்கில்லை” என்று சொல்லி பிலாத்தோஸ் கை கழுவுகிறான்

விடுதலையாகும் பரபாஸ் தன் விடுதலைக்குக் காரணமான அந்த மனிதனை உற்று பார்க்கிறான். அவனது மெலிந்த உடலையும் துயரம் நிறைந்த கண்களையும் பார்க்கிறான். அந்த மனிதன் துயரம் கொள்வது அவனை கொல்லும் அந்த மனிதர்களை எண்ணி என அவன் உணர்கிறான். அவனை சிலுவையில் ஏற்றும் காட்சியை அவன் ஒளிந்திருந்து பார்க்கிறான்

அதன் பின் பரபாஸ் தன் வழக்கமான குற்ற வாழ்க்கைக்கு திரும்புகிறான். ஆனால் அவனை ஒர் உணர்வு துரத்திக் கொண்டே இருக்கிறது. தன் வாழ்க்கை கடன் வாங்கப்பட்ட ஒன்று. ஒரு நீதிமானின் உயிருக்குப் பதிலாக பெறப்பட்ட உயிர் தன்னுடையது

பல இடங்களில் அலைகிறான் பரபாஸ். பின்னர் அவன் மனம் திரும்பி கிறித்தவனாகிறான். அதற்காக அவனை வேறு ஏதோ ஊரில் வேறு ஏதோ மலையில் சிலுவையில் ஏற்றுகிறார்கள்.’என் ஆண்டவரே நான் என் கடனை கழித்துவிட்டேன்’ என்று சொல்லி பரபாஸ் உயிர்துறக்கிறான்.

நண்பர்களே, நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு தங்கையா நாடார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் ஒருமுறை சொன்னார். ‘என் அப்பாவுக்கு காலத்தை நீட்டவும் சுருக்கவும் தெரியும்…” வேடிக்கையாகச் சிரித்தபடி சொல்ல ஆரம்பித்தார். மிகச் சாதாரனமான ஒரு கிராம விவசாயி அவரது அப்பா. தினமும் அவரது அப்பாவுடன் அவரும் தம்பியும் தோட்டவேலைக்குச் செல்வார்கள். அவர்கள் நிரையாக நின்று மண்வெட்டியால் மண்ணை வெட்டுவார்கள். அப்பா காலத்தை வேகப்படுத்துவார். முன்னால்சென்று வெட்டி முடித்துவிட்டு வந்து தம்பியை அனுப்புவார். அதன்பின் அவரை போகச் சொல்வார்

ஆனால் சாப்பிடும்போது அப்பா காலத்தை தாமதமாக ஆக்குவார். தம்பி சாப்பிட்டு அவரும் சாப்பிட்டபின்னும்கூட அப்பா சாப்பிட்டு முடித்திருக்க மாட்டார். அவர் ஒருமுறை கஞ்சி வாங்குவதற்குள் தம்பி நான்கு முறை கஞ்சி வாங்கி குடித்திருப்பான்

”எங்களை அவர் அப்படி ஆளாக்கினார். அவர் ஒருநாளில் முப்பது மணிநேரம் உழைத்தார்…அவரது ரத்தத்தைக் குடித்து நாங்கள் வளர்ந்தோம். இந்தக் கல்வி இந்த வாழ்க்கை எல்லாம் அவரிடம் பெற்ற கடன்” என்றார் தங்கையா நாடார். அவரது கண்களில் கண்ணீரை பார்த்தேன்.

நண்பர்களே, எவரது ரத்தத்தை உண்டு நாம் இங்கே வந்து சேர்ந்திருக்கிரோம் என எண்ணியிருக்கிறோமா? எவரிடம் கடன்பெற்ற வாழ்க்கை இது என எண்ணியிருக்கிறோமா?

நம்மில் பாதிபேரின் குடும்பத்தில் நம் அப்பாதான் முதல் கல்விபெற்றவராக இருப்பார். நம்மில் அனேகமாக அனைவருக்குமே மண்ணில் உழைத்து பட்டினி கிடந்த தாத்தாக்கள் இருந்திருப்பார்கள். நாம் அவர்களில் இருந்து உருவாகி வந்திருக்கிறோம்.

நான் சிறு வயதிலே பார்த்திருக்கிறேன். ஆனி ஆடி மாதத்தில் நடவு வேலைகள் முடிந்த பின்னர் எங்களூரில் பெரும் பட்டினிக்காலம். கிழங்குகளுக்காக மக்கள் ஊரெங்கும் அலைவார்கள். அரிசி ஒரு அபூர்வமான பொருளாக இருக்கும். கஞ்சியே ஒரு ஒரு அரும்பொருள். அப்படி இருந்தது நம் நாடு நண்பர்களே. ஒட்டச்சுரண்டப்பட்ட நாடு. பெரும் பஞ்சங்களால் சூறையாடப்பட்ட நாடு. முதலீடுகள் இல்லாத நாடு

அந்த மண்ணில் நம் முன்னோர்கள் தங்கள் முதுகு ஒடிய உழைத்தார்கள். ஒவ்வொரு காசாக சேர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்கினார்கள். ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி நின்று அடுத்தவரை மேலே ஏற்றினார்கள்

இங்கே வந்தபின் நமது குடும்ப அமைப்பைப் பற்றிய விமரிசனங்கள் சிலவற்றைக் கேட்டேன்.  நமது குடும்பமுறை ஒருவரை பிடித்துக் கட்ட முயல்கிறது, குடும்பத்தினரின் மூக்குகள் நீளமானவை என்றார்கள். நம் குடும்ப முறையை இங்குள்ள குடும்ப முறையுடன் ஒப்பிட்டு இங்குள்ளவர்கள் எந்த பொறுப்புச்சுமையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார்கள். இருக்கலாம். இது இவர்கள் உருவாக்கிக் கொண்ட முறை. ஆனால் நாம் உருவாக்கிக் கொண்ட முறை நம்மை  பெரும் வீழ்ச்சிகளில் இருந்து மேலே தூக்கியிருக்கிறது. தோல்விகளில் இருந்து மேலும் மேலும் நம்மைக் கரையேற்றியிருக்கிறது

நமது குடும்பங்கள் நம்மை உருவாக்கின. ஒரு குடும்பமே பட்டினி கிடந்து ஒருவரை படிக்கச் செய்வதென்பது நம் நாட்டில் மிக சாதாரனமாக காணக்கிடைப்பது. ஒருவர் பலருக்காக பலர் ஒருவருக்காக என நம்பிய அமைப்பு அது. பல்லாயிரம் வருடங்களாக சோதித்து வெற்றி பெற்ற ஒன்று. அதற்கு மாற்றாக ஒன்றை நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால் அதன் வரலாற்றை கவனியுங்கள் என்று மட்டுமே சொல்வேன்

நண்பர்களே, இங்கே நான் சொல்ல விழைவதெல்லாமே நமது விழுமியங்களைப் பற்றித்தான். அவ்விழுமியங்களின் வரலாற்றை கவனியுங்கள். வரலாற்றில் அவை ஆற்றியுள்ள பங்களிப்பைக் கவனியுங்கள். பட்டினி தேசமொன்றை வெறும் ஐம்பதே ஆண்டுக்காலத்தில் ஒரு பொருளியல் சக்தியாக ஆக்கியதில் அந்த விழுமியங்களுக்குள்ள பங்கைப்பற்றி சிந்தியுங்கள்

அந்த விழுமியங்களே நம் குழந்தைகளுக்கு நாம் கொடுத்துச் செல்ல வேண்டியவை. இல்லையேல் நாம் அடையும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல. நம் முன் கண்கூடான ஒரு முன்னுதாரணம் உள்ளது.முந்நூறு வருடம் முன்பு பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக அடிமைகளாக வந்த தமிழர்கள், இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மரபையும் விழுமியங்களையும் இழந்தார்கள். விளைவாக எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாத சமூகமாக, அடையாளமில்லாத உதிரிகளாக, ஒரு துறையிலும் சாதிக்க முடியாதவர்களாக இந்த மண் முழுக்க சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் நமக்கு ஒரு மாபெரும் எச்சரிக்கை.

இன்று இங்கே நம்மில் சிலர், அனேகமாக முதல்தலைமுறை அமெரிக்க தமிழர்கள், தங்கள் குழந்தைகளை அமெரிக்கனாக வளர்க்க முயன்றிருப்பதைக் கண்டேன். அமெரிக்கர்களாகத்தோன்றும் இந்திய பதின்வயதினர் பலரைக் கண்டேன். அவர்களுக்கு இந்தியா குறித்த ஓர் இழிவுணர்ச்சியை அவர்களின் பெற்றோர்களே உருவாக்கியிருக்கிறார்கள். வீட்டில் பேசும் அன்றாடப்பேச்சில் இந்திய நிலத்தைப்பற்றி மக்களைப்பற்றி மதிப்பீடுகளைப் பற்றி கிண்டலாகப்பேசி பேசி அந்த மனநிலையை தங்களை அறியாமலேயே குழந்தைகள் மேல் ஏற்றி விட்டிருக்கிறார்கள். அக்குழந்தைகளிடம் இந்தியா குறித்து இருக்கும் இளக்காரம் அவர்கள் பெற்றோர் மேலும் திரும்புகிறது என்பதல்லவா உண்மை.

அந்தக்குழந்தை ஓர் அமெரிக்கனாக தன்னை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் என்றாவது அது அமெரிக்கனாக ஆகுமா? உப்பில் ஊறியது ஊறுகாய் ஆகும், உப்பாக ஆகாது. நாநூறு வருடங்களாக இங்கே இருக்கும் கறுப்பர்கள் இன்னமும் ஆப்ரிக்கர்களே.  நூறு வருடமாக இருக்கும் யூதர்கள் யூதர்களே. இந்தியர்கள் எந்நாளும்  இந்தியர்களே. அதை அக்குழந்தைகள் ஆணித்தரமாக உணரும் ஒரு காலம் வரும்

அப்போது அவர்களுக்கு அடையாளம் இல்லாவிட்டால் அவர்கள் என்ன ஆவார்கள்? அமெரிக்காவின் வாசல்முற்றத்தில் அமெரிக்க அடையாளம் கோரி பிச்சைக்கையுடன் நிற்கும் இந்த தலைமுறை எதை உணரும்/ அவர்களின் ஆத்மாவில் உள்ள சுய இழிவை அவர்கள் எப்படி வெல்வார்கள்? ஒவ்வொரு கணமும் தங்களை ஓர் இந்தியன் அல்ல என்று நிறுவதற்காகவே வாழும் இவர்கள் எங்கே சென்றுசேர்வார்கள்?

எந்த ஒரு சமூகத்துக்கும் ஆழமான தன்னம்பிக்கை தேவை. தற்பெருமையாகவே அது இருக்கலாம், தப்பில்லை. தன்னை நிராகரிப்பதென்பது தற்கொலை.

அதற்கு என்ன காரணம்? இந்தியா என்றோ தமிழ் என்றோ சொல்லும்போது இந்தியாவின் தமிழின் ஆகச்சிறந்ததை நாம் அவர்களுக்கு அளிக்கிறோமா? நாம் ரசிக்கும் சில்லரை சினிமாக்களை டிவி நிகழ்ச்சிகளை பட்டிமன்றங்களை அவர்களுக்கு அளித்தால் அவர்கள் மனதில் என்ன மதிப்பு உருவாகும்? இந்தியப் பண்பாட்டின், தமிழ் மரபின் வெற்றிகளை நமக்கே தெரியாதபோது நாமே அவற்றை அடையாளம் காண முடியாமல் இருக்கும்போது நாம் எப்படி அவற்றை இவர்களுக்குக் கொடுக்க முடியும்?

திண்டுக்கல் லியோனியை தமிழின் குரலாக நீங்கள் உங்கள் குழந்தைக்குக் காட்டினால் அதன் நெஞ்சில் இளக்காரத்தை அல்லாமல் வேறு எதை உருவாக்க முடியும்? உலகின் எந்த மொழியிலும் எச்சூழலிலும் உள்ள எந்த அறிஞனிடமும் எழுத்தாளனிடமும் ஒப்பிடத்தக்க ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கே பெயர்கூட அறியப்படாதவர்கள்.

நமக்கு ஐராவதம் மகாதேவனை, அ.கா.பெருமாளை, ராமச்சந்திரனை தெரியாது. நாஞ்சில்நாடனை வண்ணதாசனை யுவன் சந்திரசேகரை தெரியாது. தெரிந்தவர்கள் மேடையில்பொய்யையும் போலிவேடிக்கைகளையும் கொட்டும் பேச்சாளர்கள். கேளிக்கையாளர்கள். அரசியல்வாதிகள். அவர்களை வைத்து நாம் எந்த எண்ணத்தை இக்குழந்தைகளிடம் உருவாக்குவோம்?

நாம் முதலில் நம்மைக்குறித்த பெருமிதத்தை அடைவோம். நாம் முதலில் நம் மரபையும் நம் சாதனைகளையும் கற்போம். நம்மிடம் உள்ள சிறந்தவற்றை நாம் போற்ற பேண கற்போம். அப்போது நாம் சிறந்தவற்றை நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வோம். அவர்கள் தங்களைப்பற்றிய பெருமிதத்தை அடையச்செய்வோம்.

சுஜாதா அவரது அப்பாவைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்பா தன்னை எப்படி உருவாக்கினார் என்று விவரிக்கிறார். அப்பா மரனப்படுக்கையில் இருக்கிறார். நோயில் குறுகி மெலிந்து. இவரா தன் தன்னம்பிக்கையை சோதிக்க மேட்டூர் அணை மதில் விளிம்பில் நடந்தவர் என வியக்கிறார் சுஜாதா.  வாழ்நாள் முழுக்க அப்பா சுஜாதாவிடம் இருந்து எதையுமே பெற்றுக்கொண்டவர் அல்ல. அதைப்பற்றி சுஜாதாவுக்கு ஒரு வருத்தம் இருக்கிறதென உணர்ந்தபோது ‘டேய் ஒரு சட்டை வாங்கி கொடுடா’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார்

அப்பா அருகே அமர்ந்து மெலிந்த கைகளைப் பற்றியபடி ரங்கா கேட்டார்” அப்பா நீ எனக்குச் செய்தவற்றுக்கு நான் என்ன திருப்பிச் செய்யப்போறேன்?” அப்பா மெல்ல சொன்னார் ”உன் பிள்ளைகளுக்குச் செய்டா போரும்”

நன்றி
[22-8-2009 அன்று  புளூமிங்க்டன் தமிழ் சங்கத்தில் ஆற்றிய உரை]

மறுபிரசுரம்

முந்தைய கட்டுரைதென்னகசித்திரங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3