«

»


Print this Post

புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]


இந்த தளத்தில் தொடர்ச்சியாக பதினொரு எழுத்தாளர்களின் பன்னிரண்டு கதைகள் இதுவரை பிரசுரமாயின. அவை பல்லாயிரம்பேரால் வாசிக்கப்பட்டிருக்கின்றன.

இங்கே புதியவர்களின் கதைகளைப் பிரசுரிப்பதற்கான காரணம் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால் சென்ற சிலவருடங்களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக்கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால் சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது. சிற்றிதழ் கதைகளை சிற்றிதழ் வாசகர்களேகூட கவனிப்பதில்லை என அவ்விதழ்களை நடத்துபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சிற்றிதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதும் ஒருவர் அவ்விதழிலேயேகூட எதிர்வினைகளை எதிர்பார்க்கமுடிவதில்லை. கதைகளை வெறும் தந்திரங்களாக தரமிறக்கி அனுப்பினால் வணிக இதழ்கள் பிரசுரிக்கும். ஆனால் அவை அந்தவாரத்துடன் குப்பைக்கூடையை அடையும்.

கடைசி வழி என்பது இணையம். ஆனால் இணையத்தின் வாசகர்கள் பொதுவாக மேலோட்டமான ,சமகால விவாதங்களை மட்டுமே விரும்பக்கூடியவர்கள். 1999 வாக்கில் நான் இணையத்தில் நுழைந்த நாட்களில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான் விவாதம் சூடுபறக்க நடந்துகொண்டிருந்தது.இன்றும் அதுதான் இணையத்தின் தலையாய விவாதம். அது சார்ந்த எந்தக்கட்டுரைக்கும் முந்நூறு பின்னூட்டங்கள் வந்துவிடும். சினிமா தவிர சமகால அரசியல் வம்புக்கு சில எதிர்வினைகள் உண்டு

ஏனென்றால் தமிழகத்துப் பொதுவாசகனுக்கு ஏதேனும் சொல்வதற்கு இருக்கக்கூடிய தளம் அதுதான். பிற எதைப்பற்றியும் அவனுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை. தெரியாதவற்றைப்பற்றிய இளக்காரம் என்பது ஒரு சமகால வழக்கமும் கூட.

இந்தப்பொதுப்போக்கை ஃபேஸ்புக் போன்றவை மேலும் ஊட்டி வளர்க்கின்றன. மேலோட்டமான எட்டுவரிக்குறிப்புக்கு இன்னும் மேலோட்டமான நான்குவரி எதிர்வினை என்ற வகையான அரட்டையே அங்கே சாத்தியம். அந்த மனநிலை அங்கே வேரூன்றும்தோறும் ஆழமான வாசிப்புக்கான மனப்பழக்கம் மேலும் சரிவு பெறுகிறது.இந்நிலையில் நீளமான படைப்புகளை, குறிப்பாகக் கதைகளை அதிகம்பேர் வாசிப்பதில்லை.

மேலும் இணையத்தில் எதுவும் வெளியாகுமென்ற நிலை இருப்பதனால் ஏராளமாக படிக்கக்கிடைக்கிறது. பெரும்பாலான எழுத்துக்கள் பயிற்சியோ படைப்பூக்கமோ இல்லாத முதிரா எழுத்துக்கள். அவற்றை ஓரிருமுறை வாசித்தவர்கள் மீண்டும் வாசிப்பதில்லை. ஆகவே தனிப்பட்ட வலைப்பூக்களில் கதைகள் கவனிக்கப்படுவதில்லை. இணைய இதழ்களின் கதைகளும் வாசிக்கப்படுவதில்லை

இந்த ஒட்டுமொத்த உதாசீனம்போல எழுதுபவனுக்கு ஆர்வத்தை அணைத்துவிடக்கூடிய சக்தி வேறில்லை. சென்ற கால அனுபவங்களில் இருந்து ஒன்று தெரிந்துகொண்டேன். கதைகளை நானோ அல்லது இன்னொரு இலக்கியவாதியோ சுட்டிக்காட்டினால் அவற்றை வாசிக்கிறார்கள். ஆகவேதான் இக்கதைகள் இங்கே வெளியிடப்பட்டன. எதிர்பார்த்தபடியே இவை பரவலாக வாசிக்கபட்டன என்பதை புள்ளிவிவரங்கள் காட்டின.

*

ஆனால் எதிர்வினைகள் எனக்கு ஏமாற்றம் அளித்தன. மொத்த எதிர்வினைகளும் இருபது பேருக்குள் இருந்து மட்டும்தான் வந்தன. அவை முக்கியமான எதிர்வினைகள். காரணம் அவர்கள் ஏற்கனவே நிறைய வாசிக்கக்கூடியவர்கள். நிறைய எதிர்வினையாற்றக்கூடியவர்கள். அவர்களில் சிலருக்கு நானே கதைகளை மின்னஞ்சலில் அனுப்பி எதிர்வினைகள் பெற வேண்டியிருந்தது மற்றபடி பரவலாக எதிர்வினைகள் எழவில்லை.

இணையத்தில் 1500க்கும் மேல் தொடர்பவர் வைத்திருக்கும் சிலர் இங்கே எழுதினார்கள். அவர்களுக்குக் கூட தனிப்பட்ட முறையில் பெரிய எதிர்வினைகள் வரவில்லை. அவரது நெருக்கமான நண்பர்கள்கூட கம்மென்று இருந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். என்னுடைய இணையக்குழும நண்பர்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம். டிவிட்டரில் பகிரலாம். வாசகர்களும் நண்பர்களும் கூட அதைச்செய்யவில்லை. சொந்தக்கதையை பகிர்வதைத்தவிர இன்னொரு கதையை எவருமே பகிரவில்லை என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து வாசித்துச்சென்றவர்களில் பத்துசதவீதம்பேர் கதைகளைப்பற்றி பேசியிருந்தால்கூட இணையத்தில் இவ்வெழுத்தாளர்கள் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.

ஏன் யாரும் பேசுவதில்லை? ஒன்று, பேசத்தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவிலலை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவில்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள். அது ஓரளவு உண்மை.அத்துடன் வேறு ஏதோ ஒன்றும் உள்ளது. அது ஆரோக்கியமான மனநிலையே அல்ல. அந்த மனநிலையில் உள்ள கீழ்மையைப்பற்றி நாமே நம்மை விசாரணை செய்துகொள்ளவேண்டும்.

*

இன்னொன்று என் கவனத்தில் வந்தது. கிட்டத்தட்ட நூற்றுநாற்பத்தெட்டு கதைகளை வாசித்தேன். கதைகளை அனுப்பியவர்கள் அறுபத்திரண்டுபேர். அவர்களில் நான்குபேர் மட்டுமே வேறுகதைகளை வாசித்து ஏதேனும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். பிறர் மற்ற கதைகளை வாசித்தார்களா என்பதே சந்தேகம்தான்

நான் வாசிக்க நேர்ந்த கதைகளில் நூறுக்கும் மேல் கதைகள் மிக மிக ஆரம்பநிலையில் உள்ள ஆக்கங்கள். தொடர்ச்சியாகக் கதைகளை வாசிப்பவர்கள் அப்படிப்பட்ட கதைகளை எழுதினாலும் பொதுப்பிரசுரத்துக்கு அனுப்பமாட்டார்கள். ஏன் இந்த தரச்சரிவு என யோசித்தபோது அதற்கும் இவ்வாறு வாசிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கும் தொடர்புண்டு என தோன்றியது. வாசிக்காமல், விவாதிக்காமலிருக்கும் ஒருவருக்கு அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரிவதில்லை. அவர் எழுதியிருப்பது அபூர்வமான ஒரு படைப்பு என்ற நம்பிக்கை நீடிக்கிறது.

எந்த ஒரு கலையிலும் , அறிவுத்தளத்திலும் அதன் பொதுச்சூழல் மிகமுக்கியமானது. அந்தப் பொதுச்சூழலில் திரண்டு வரக்கூடிய ரசனையும், வடிவப்பிரக்ஞையும் , கருத்துக்களும்தான் ஒவ்வொரு கலைஞனையும் செயல்படச்செய்கின்றன. ஆகவேதான் எந்தக்கலைஞனும் தன் பொதுச்சூழல் பற்றிய கூர்ந்த கவனத்துடன் இருப்பான். அதனுடன் மானசீகமாக உரையாடிக்கொண்டிருப்பான்

இசைமாணவனாக இருந்த ஜானகிராமனிடம் ஆசிரியர் தொடர்ந்து கச்சேரிகளுக்கு போகச்சொல்வார் என ஜானகிராமன் எழுதி வாசித்திருக்கிறேன். திரும்பும்போது கேட்ட கச்சேரியைப்பற்றி விமர்சிக்கச்சொல்லி கேட்பாராம். அந்தக் காலகட்ட இசை என்பது அந்தக்கச்சேரிகள் வழியாக பொதுவாக திரண்டு வருவது. அங்கே என்ன நிகழ்கிறது என்ற அறிதலும் அதைப்பற்றிய சுயமான ஒரு விமர்சனமும் உருவாகும்போதே ஒரு தனித்தன்மை கொண்ட கலைஞன் உருவாகிறான்.

நான் என் ஆரம்பகாலக் கதைகளை வெளியிட்ட நாட்களில் தமிழில் அன்று எழுதிக்கொண்டிருந்த அத்தனைபேரும் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.சிற்றிதழ்ச்சூழல் சிறியதாக இருந்தாலும் தீவிரமான படைப்புகள் வெளிவரக் காரணம் அதுவே. கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், சுரேஷ்குமார் இந்திரஜித் , ந.ஜெயபாஸ்கரன், சமயவேல், யுவன் சந்திரசேகர் ,எஸ்.சங்கரநாராயணன், பவா செல்லத்துரை போன்றபலரிடம் எனக்கு மிகத்தீவிரமான கடிதத்தொடர்பு இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி , ஆ.மாதவன் நாஞ்சில்நாடன் வண்ணதாசன் போன்றவர்கள்கூட தொடர்ந்து கடிதங்களில் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.

அன்றெல்லாம் என் சக எழுத்தாளர்களிடமிருந்து ஒவ்வொருநாளும் கடிதங்கள் வரும். தபால்காரனை எதிர்பார்த்து எட்டுமணி முதலே மெல்லிய பதற்றத்துடன் காத்திருந்த நாட்கள் அவை. ஒரு கதைபிரசுரமானால் பல மாதங்களுக்கு கடிதங்கள் மூலம் தொடர் விவாதங்கள் நிகழும். கட்டுக்கட்டாக இவர்களின் கடிதங்கள் என்னிடமிருந்தன. ஒருமுறை பெட்டியை துழாவுகையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களைக் கண்டு நானே அதிர்ந்தேன்.

அந்த எதிர்வினைகள்தான் என்னை உருவாக்கின. எங்கோ காசர்கோட்டில் இருந்த நான் அவற்றின் வழியாகவே சமகாலத் தமிழ் இலக்கியசூழலில் வாழ்ந்தேன்.என்னுடைய அதிருப்திகளையும் விமர்சனங்களையும் உருவாக்கிக் கொண்டேன். அந்த விமர்சனக்கருத்துக்கள் வழியாகவே நான் என் எழுத்துமுறையைக் கண்டுகொண்டேன்.

நான் எழுதிய ஆரம்பகாலக் கதை கிளிக்காலம். அதற்கு அன்று மாணவராக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர்கடிதம் எழுதியிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆரம்பகாலக் கதைகளுக்கெல்லாம் நான் எழுதிய வாசகர்கடிதங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. பின்னர்தான் அந்த ராமகிருஷ்ணன்தான் இவர் என நான் அறிந்தேன். சிற்றிதழ்ச்சூழலில் இருந்த அந்தத் தீவிரமே எழுத்தாளர்கள் உருவாகி வரக் காரணமாக அமைந்தது

சக எழுத்தாளர்கள் மீது ஆழ்ந்த கவனமும் தொடர்ந்த விமர்சனமும் இல்லாமல் நல்ல எழுத்தாளர் உருவாகி வரமுடியாதென்றே நினைக்கிறேன். ஒரு காலகட்டத்தின் இலக்கியப்பரப்பில் ஒவ்வொரு எழுத்தாளனும் வெவ்வேறு இடத்தை நிரப்புகிறார்கள். அதைஎழுத்தாளன் கண்டுகொள்வது இந்த விவாதங்கள் வழியாகவே. சொல்லபோனால் சக எழுத்தாளனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதுமான ஒரு சமன்பாடு வழியாகவே எழுத்தாளனின் வெளிப்பாட்டுமுறை உருவாகிறது.

இன்றையசூழலில் சமகாலஎழுத்து மேலும் எழுத்தாளர்கள் மேலும் எழுதவருபவர்களுக்கு இருக்கும் கவனமின்மை, விவாதமே இல்லாத வெறுமை ஆகியவை இணைந்து சூம்பிப்போன எழுத்துக்களை உருவாக்கித்தள்ளுகிறது என நினைக்கிறேன்.

எழுதவேண்டுமென நினைக்கும் இளம் எழுத்தாளர்களிடம் வலுவாக ஓங்கிச்சொல்ல என்னிடம் ஒரு விஷயம்தான் உள்ளது. ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நான்குவரி,ஒற்றைவரி சர்ச்சைகளில் ஈடுபடுவதை அறவே ஒதுக்குங்கள். சமகால அரசியல், சினிமா வம்புகளில் இருந்து முழுமையாக விலகுங்கள். இலக்கியமரபை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பொருட்படுத்தும் சமகால எழுத்தாளர்களிடம் முழு உயிராற்றலாலும் மோதுங்கள். விவாதியுங்கள். பிற கதைகளைப்பற்றி விவாதிக்காத ஒருவருக்கு தன் கதைகள் விவாதிக்கப்படவில்லை என்று சொல்ல அருகதை இல்லை.

கலைசார்ந்த ஒட்டுமொத்தமான ஒரு விவாதச்சூழலே கலைகளை உருவாக்க முடியும். ஒரே தரத்திலான வேகம் கொண்ட ஐம்பதுபேர் இருந்தால்போதும் இலக்கியம் வாழும், வளரும். அந்த எண்ணிக்கைகூட இன்றிருக்கிறதா என்ற ஆழமான ஐயம் எனக்கு உள்ளது

*

புதியவர்களின் கதைகள் குறித்த பார்வைகளையும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். அதற்காக இங்கே பின்னூட்டப்பெட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தாளர்களுக்கு கருத்துக்கள் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

தொடர்புடைய பதிவுகள்

 • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/38334/

36 comments

4 pings

Skip to comment form

 1. mohan kumar

  vasalil ninra uruvam ovvoruvaru anubavikka vendiya anubavika pogum oru anubava anubavam neengalum kooda

 2. ஹரன் பிரசன்னா

  தலையில் சம்மட்டியாய் அடித்தது போல் இருக்கிறது. :( நான்கு கதைகள் மட்டுமே நான் வாசித்தேன். :( மற்றவற்றை வாசிக்கவேண்டும். கதைகளைப் பற்றி எழுதாதது – ஆயிரம் காரணம் சொன்னாலும், ஜெயமோகன் சொல்வதும் ஒரு காரணம்தான். புதியவர்களின் கதைகளை ஜெயமோகன் தளத்தின் மூலம் வெளியிட்டது பெரிய சாதனை. எனக்குத் தனிப்பட்ட முறையில் பலர் மடல் எழுதினார்கள். பலர் தொலைபேசியில் சொன்னார்கள். ஜெயமோகன் வலைத்தளத்தின் ரீச் இது. இதேபோல் மற்றவர்களுக்கும் நடந்திருக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

 3. selva

  இதில் வந்த எல்லா கதைகளையும் வாசிக்கவில்லை. சங்கீதத்தைப்பற்றிய கதைகளை விட்டுவிட்டேன். மற்றகதைஅளில் தனசேகரின் உறவு என்ற கதையும் பிரகாஷ் சங்கரனின் வேசம் என்ற கதையும் மிகவும் பிடித்திருந்தன. மற்றகதைகளில் பெரியதாக புதிய விசயங்கள் ஏதும் எனக்கு தெரியவில்லை. யாவரும்கேளிர் போன்ற கதைகளை நிறையவே வாசித்துவிட்டோம் என்ற நினைப்பு வந்தது. அதேபோல வாயுக்கோளாறு கதை. அதை முன்பு கணையாழியிலே வாசித்த கதை என்று சொல்லலாம். தொலைந்துபோதல் கதையும் கணையாழிக்கதை மாதிரித்தான் இருந்தது.

  கதையிலே எல்லாருமே ஒரு சில மாதிரிக்குள் முயற்சிசெய்துபார்த்தது மாதிரி தோன்றியது. மாயம், திகில் , பேய்க்கதை, அறிவியல்கதை என்று எவ்வளவோ கதை மாதிரிகள் உள்ளன. இலக்கியக்கதை என்றால் இப்படித்தான் இருந்தாகவேண்டும் என்று நினைத்தது போல இருந்தது.

  ஆனாலும் கதைகளை இப்படி வெளியிட்டு ஒரு பத்து எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருப்பது நல்ல செயல். பாராட்டுக்கள்

  கூகிளில் டைப் செய்வதுதான் பெரிய பிரச்சினை. அதில் வரக்கூடிய எழுத்துப்பிழைகளை தனியாக டைப் செய்து திருத்தவேண்டும். இதற்கு பயந்தே எழுதுவது கிடையாது. ஒத்திப்போடுவது. அது தப்புதான் என்று உங்கள் கட்டுரையை வாசித்தபோது தோன்றியது

  செல்வா

 4. Govardhan Parthasarathy

  பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதையை படிக்கும் பொது அசோகமித்ரனின் புலிக் கலைஞனும் தங்களின் லங்கா தகனமும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். மக்கள் உற்சாகப்படுத்தாத எந்த ஒரு நல்ல கலைஞனும் மனதளவில் நலிந்து போகிறான். தன்னுடைய கீர்த்தி மங்கும் பொழுதோ எந்த முடிவையும் எடுக்கத் துணிகிறான் அல்லது அம்முடிவுகளை எடுக்கத் தூண்டும் வெறுப்பின் உச்சத்தை அடைகிறான். அதே சமயம் கலைஞன் சுயநல வாதியும் கூட. காலத்தின் போக்கை அவதானிக்காமல் தேங்கி விடுதலும் மாற்றங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுக்காததும் கர்வத்தின் காரணமாகவா என்பதும் பரீசீலிக்கத் தக்கது.

  தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த புதிய எழுத்தாளர்களின் பல கதைகளின் முடிவில் மரணம் என்பது இயல்பானதாகவோ திணிக்கப்பட்டதாகவோ பொதுவான அம்சமாக இருக்கிறது. (சோபானம், உறவு, வாசுதேவன், வேஷம், கன்னிப்படையல், வாயுக் கோளாறு ). இது தங்களின் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கிறதா என்ன?

  கன்னிப்படையல் பிற்போக்குத் தனமான சிந்தனை உடையது போன்ற எதிர்வினைகளை வாசித்தேன். அது ஒரு நடுத்தர வர்க்கத்து மரபுகளை முற்றிலும் துறந்துவிடாத தகப்பனின் – மகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கதையே ஒழிய அந்த எழுத்தாளனின் சிந்தனை என்பதாக கற்பிதம் செய்வது அபத்தமானது என்றே எண்ணுகிறேன்.

  ஒரு கட்டுரையில் சிறுகதை என்பது முடிவில் இருந்தும் வாசிக்கப்பட வேண்டும் என்று தாங்கள் எழுதியிருப்பதாக ஞாபகம். ஒரு வாசகனாக சில கதைகள் இத்தகைய தளத்தில் பிரசுரத்திற்கு தகுதியுடைவை அல்ல என்றே கருதுகிறேன். தனசேகரின் உறவும் பிரகாஷ் சங்கரனின் வேஷமும் ஹரன் பிரசன்னாவின் தொலைதலும் சிவேந்திரனின் பயணமும் மீள் வாசிப்பிற்கு உரியவை.

  நன்றி.

 5. கதிர்

  நீங்கள் சொல்வது சரிதான். இஙே இன்றைக்கு ஆழ்மான விவாதமே இல்லை. நிகழ்ச்சிகளில் குடித்துவிட்டு உளறுகிறார்கள். அச்சில் எதையுமே சொல்வதில்லை. காரணம் பயம்தான். அதோடு காழ்ப்பு. ஏன் மற்றவனை பெரியாளாக ஆக்கவேண்டும் என்ற நினைப்பு. இந்த அகறையில்லாதபோக்கினால்தான் இன்று தீவிரமான எழுத்து என்பதே இல்லாத நிலை உள்ளது. நீங்கள் அந்தக்காலத்தில் அப்படி ஆழமாக கடிதங்கள் வழியாக விவாதித்தது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால் அதை புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஏக்கப்பெருமூச்சு

  இன்றைக்கு உங்கள் 11 எழுத்தாளர்களிலே ஒருத்தராவது மற்ற கதையை வாசித்தார்களா? எதையாவது சொன்னார்களா? அறிந்குகொள்ள ஆவலாக இருக்கிறேன் [இருக்காது என்று தெரியும்]

  கதிர்

 6. jeyamohan

  கதிர்,

  குழுமத்தில் வெளிவந்தபோது நல்ல கதை என்ற வகையிலான சில வரிகள் வந்தன. சில விவாதங்கள் இருந்தன. ஆனால் எல்லா கதைகளையும் வாசித்த, எல்லாவற்றுக்கும் அழுத்தமான கருத்தைச் சொன்ன ஒருவர்கூட இல்லை என்பதே உண்மை. அவ்வகையில் குழுமத்தில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரம் பேர்மீதும் ஆழமான ஏமாற்றம்தான்.

  தனிப்பட்டமுறையில் பேசிக்கொண்டோம் என்கிறார்கள். அந்தப்பேச்சுக்கு அர்த்தமே இல்லை. பதிவுசெய்யும் கருத்துக்கே மதிப்பு. அதைச் சொல்லக்கூடியவன் அதற்குப் பொறுப்பேற்கிறான். அப்படி பொறுப்பேற்காமல் பேசுவதற்குப்பெயர் அரட்டை

  ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. இதைவிட அதிகமான எதிர்வினையோ விவாதமோ வேறு எங்கேனும் நிகழ்ந்தால்தானே வருத்தப்படவேண்டும்?

  முன்னரே சிற்றிதழ்ச்சூழலில் செயல்படாமல் இப்போது வாசிக்க ஆரம்பித்தவர்கள் என நான் அறிந்தவர்களில் நான்குபேர் மட்டுமே பொருட்படுத்தும்படியான கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். அது காட்டும் உண்மை என்னவென்றால் இலக்கியம் மீதான அர்ப்பணிப்பும் தீவிரமும் மிக மிக அருகிவருகின்றன, வெற்று அரட்டை போதும் என்ற மனநிலை வேரூன்றி வருகிறது என்பதே

  தமிழ் இலக்கியம் தொடருமா என்ற அச்சமேகூட இருக்கிறது. சரிதான், தொடராவிட்டால்தான் என்ன?

  ஜெ

 7. jeyamohan

  அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

  #ஏன் யாரும் பேசுவதில்லை? ஒன்று, பேசத்தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவில்லை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவில்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள். அது ஓரளவு உண்மை.அத்துடன் வேறு ஏதோ ஒன்றும் உள்ளது. அது ஆரோக்கியமான மனநிலையே அல்ல. அந்த மனநிலையில் உள்ள கீழ்மையைப்பற்றி நாமே நம்மை விசாரணை செய்துகொள்ளவேண்டும்.#

  செருப்பால் அடித்தது போன்று இருந்தது.

  காகிதக்கப்பல்-சுரேந்திரகுமார்,வாசலில் நின்ற உருவம்-கே.ஜே.அசோக் குமார் இருவரையும் எனது முகநூல் நண்பர்கள் பட்டியலில் இணைத்து அவர்களது கதைகள் தொடர்பாக உரையாடி இருந்தேன்.

  நேரடியாக அறிமுகம் இல்லாத புதியவர்களின் கதைகளை விமர்சித்து அவர்களை மனம் நோக வைத்துவிடுவேனோ என்ற தயக்கமும் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதை தவிர்த்தமைக்கு ஒரு காரணம்.எனினும் நீங்கள் கூறியது சரிதான்.

  சிவேந்திரன்

 8. ஹேமா

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
  இணையத்தில் வாசிப்பதற்கான பொறுமை ஏனோ எனக்கிருப்பதில்லை. புத்தகங்களை எங்கும் எப்படியும் படிக்க முடிகிறது. ஆனால் இணையத்தில் உட்காரும் நேரமோ மிகக்குறைவு. அதனால் இணைய கதைகளை, என்னை அது இழுத்துப் பிடித்து நிறுத்தினாலே தவிர, நான் படிப்பதில்லை! அப்படி படித்தாலும் மிகவும் பாதித்த கதைகளைப் பற்றி மட்டுமே பின்னூட்டமிட நேரம் ஒதுக்குகிறேன். இனி படிக்கும் கதைகளுக்கு எனக்குத் தோன்றும் கருத்தை கண்டிப்பாய் சொல்கிறேன்.

 9. ஜோதிஜி திருப்பூர்

  உங்கள் தளம் அறிமுகமாகி இன்று கதவு திறந்துள்ளதைப் பார்த்த போது சின்ன வயதில் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் கதவு பக்கம் அந்த அதிகாலை வேளையில் நின்றது என் நினைவுக்கு வந்து போகின்றது. புதியவர்களுக்கான விவாதத்திற்காக திறக்கப்பட்ட கதவு இன்னும் பல சமயங்களில் திறக்க வேண்டும் என்பதே என் எண்ணம். உங்களின் சில கட்டுரைகளை தந்த தாக்கத்தை வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

  துணுக்கு, ஒரு பக்க கதை, சிறுகதை, நெடுங்கதை, தொடர்கதை என்று தாண்டி வந்தவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள்? நானும் இப்படித்தான் தாண்டி வந்தேன். கடந்த ஒரு மாதமாக உங்கள் தளத்தில் உள்ள கால்வாசி முக்கிய கட்டுரைகளை படித்து முடித்துள்ளேன். என்னை கதைகள் படி என்று சொன்னால் ஓடி விடுவேன். நான் கதைகளை விட்டு விலகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கற்பனைகளை பேசும் கதைகளை விட எதார்த்தத்தை பேசும் கட்டுரைகள் தான் என் விருப்பமாக உள்ளது.

  உங்களின் பல கட்டுரைகளில் உள்ள முக்கிய தகவல்களை தனியாக எடுத்து குறிப்பாக சேர்க்கும் அளவிற்கு கட்டுரை இலக்கியம் மேல் தீரா ஆர்வம் உருவாகியுள்ளது. என்னை அது குறித்து விமர்சி என்று சொன்னாலும் என்னால் முடியாது. படித்த வார்த்தைகளை பார்க்கும் காட்சிகளோடு சம்மந்தப்படுத்தி அதை எழுத்தாக்குவதே என் நோக்கம்.

 10. Santhini

  விமர்சனத்தின் தேவை குறித்து அழகாக சொல்லி இருக்கிறீகள் ஜெ. அதன் முடிவில், பின்னூட்டப் பெட்டி யின் திறப்பு உங்கள் வார்த்தைகளை மீண்டும் உறுதியாக்குகிறது.

  சோபானம் குறித்து எனக்கு தோன்றியது இதுவே :

  சோபானம் என்பது ஒருவகை கேரள பாணி இசையில் துயில் எழுப்பவும், துயில் கொள்ளவும் பாடப்படும் ஒரு ராகமாம். தலைப்பு வைத்த ராம், வாசகர்கள் அனைவரும் இதை அறிந்திருப்பார்கள் என்று எண்ணியிருக்கிறார். கூடலின் பின் எழும்பும் மாபெரும் துக்கம் போல, உருவகிக்கப்படும் மானுட உன்னதம், தனது நிழலாக துக்கத்தையும் எழுப்புகிறது. பரிதாபமான மனிதனின் உன்னத உருவகங்கள் !!
  மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கடைசி வரி ! மீண்டும் மீண்டும் மனிதன் நிலைநிறுத்த முயலும் உன்னதம். —- கதை படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. – இளம் வாசகர்களுக்கான அழகிய இசை கூடிய கதை.

  – I was going to post it in my google plus stream,.

 11. Thirunavukarasan

  சுனீல் கிருஷ்ணனின் வாசுதேவன் வாசித்தேன்.

  யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா”

  “ஊரிக்க தா”

  Punch lines என்று புரிகிறது… தெலுங்கு ( தெலுங்குதானா ? ) தெரியாததால் மலங்க மலங்க விழித்தேன்.

 12. THENMOZHI CHINNARAJ

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,

  முதலில் புதியவர்களை ஊக்குவிக்கும் இம் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  பீத்தோவனின் ஆவி – இக் கதை கொண்ட களத்தை கருத்தில் கொள்ளும் பொழுது , நான் இணயத்தில் படித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் , ரபீந்திரநாத் தாகூர் இடையேயான உரையாடலில் இவ்விஷயம் விவாதிக்கப்பட்டிருந்தது நினைவிற்கு வந்தது . இசை பற்றி விவாதிக்க எனக்கு எந்தத் தகுதியும் இல்லை . ஆனால் எவ்வித அறிமுகமும் இல்லாத இரண்டு மனிதர்களிடையே ஏற்படும் இந்தஆழமான பகிர்தல் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களுடன் ஒத்துப் போவதால் வியந்து போனேன்.
  ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒருவர் , தன வழியில் போய்க்கொண்டிருந்தவர்,
  என் புன்னகைக்கு மரியாதை அளித்து பேசிக்கொண்டே வீடுவரை வந்தததும் , தன்
  பிரார்த்தனைகளை எங்கள் பூஜை அறையில் செலுத்தியதும், கண்ணீர் மல்க தான் தன்
  குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வதாகக் கூறியதும் , இந்திய தேசத்தில் கடைபிடிக்கும் குடும்ப முறை குறித்து தன் வியப்பை பகிர்ந்ததும் , இன்று மனதில் நிழலாடுகிறது .

  வாசுதேவன் -சுனில் கிருஷ்ணன்
  வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்வியான “ஏன்” என்ற சொல்லுக்கு வலு சேர்க்கும் கதை .அதிலும் அந்தக் கடைசி வார்த்தை .. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நான் இந்த வார்த்தையை எவ்வளவு முறை எளிதாக உச்சரித்திருப்பேன் ! ஆனால் இந்தக் கதையில் தான் அது எத்தகைய கனம் கொண்டு கிடக்கிறது ?

  கூத்தாகிவிட்டதடி தோழி
  என் ஆட்டம் கூத்தாகிவிட்டதடி
  ஊழிக்காற்றாய் உன்மத்தமாய்
  ஆடிய ஆட்டமெல்லாம்
  கண்ணுக்கெட்டாத கரங்கள் ஆடிய
  தோல்பாவைகூத்தானதடி தோழி
  வெறும் தோல்பாவை கூத்தானதடி.

  இது என் பார்வை

  தேன்மொழி சின்னராஜ் .

 13. Jaiganesh

  அன்புள்ள ஜெ.,
  கதைகள் எழுப்பும் எதிர்வினைகள் குறித்து தங்கள் கருத்தை வாசித்தேன்.
  ஒரு சாமான்யனாக, கதைகளை மூவகையாகப்பார்க்கிறேன். வாசித்து முடிக்கக்கூடிய கதை, வாசித்து முடிந்ததும் முடிவடையும் கதை, வாசிப்பு நின்ற பின்னும் வாசகனுக்குள் தொடரும் கதை. நீங்கள் வெளியிட்ட கதைகளில் இம்மூவகைகளும் உண்டு, என்னால் வாசிக்க முடிந்த, நான் அதன் தளத்தை உணர முடிந்த கதைகளுக்கு உடனடியாக வினையாற்றியுள்ளேன். வாசலில் நின்ற உருவம், படித்து முடித்த கணம் தொட்டு இன்னும் என்னை சலனத்துக்குள்ளாக்கிக்கொண்டிருக்கின்றது. அந்த சிந்தனைத்தொடர்ச்சியை (ஜெயகாந்தனின் மொழியில் சொல்வதென்றால் ஸ்றீம் ஆப் கான்ஸியஸ்னஸ் – நான் அதிகம் படித்த ஒரே ஆசிரியர் அதனால் தான் அவர் சொல்வதை மேற்கோள் காட்டுகின்றேன்) புரிந்து முடித்தால் தான் கோர்வையான எதிர்வினையாற்ற முடியும் என்று தோன்றுகிறது. சரி, வாசித்து முடிக்காத கதைகளின் பிரச்சினைகள் (அவை என்னுள்ளில் இருக்கலாம்) குறித்து மிகத்தைரியமாக எழுத முடியவில்லை. எழுத்தாளன் சாபம் நமக்கெதற்கு என்றும் இருக்கலாம், இல்லை மறுமொழி இடுவதற்கு வாசித்து முடிக்க வேண்டும் என்ற தார்மீக நெறியும் காரணமாயிருக்கலாம். பொதுவாக சொல்வதென்றால், கதை எழுதுபவர் காட்ட விழையும் களம் பரிச்சயமானதாக இல்லையென்றால்(இசை அல்லது ஒரு இடம் சார்ந்த பிரச்சினை), அதை கொஞ்சம் அனைவருக்கும் எளிமையாக்க சில ஜோடனைகளைச்சேர்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வெகுஜன வாரந்திரிக்கதைகளை வாசித்து மரத்துப்போன எனக்கு அது கொஞ்சம் வசதி. தி.ஜாவின் கதைகளையே இன்னும் வாசித்திறாத கத்துக்குட்டி வாசகன் நான் என்பதையும் நான் இங்கு சொல்லக்கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே கொஞ்சம் எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பது என் விண்ணப்பம்.
  அன்புடன்,
  ஜெய்கணேஷ்.

 14. அரவிந்த்

  இடக்கா, சோபான சங்கீதம், ஷட்கால கோவிந்த மாரார் குறித்தெல்லாம் ராம் என்னிடம் முன்னரே சொல்லியிருந்ததால் கதையின் தலைப்பை பார்த்ததுமே இது கேரளத்தில் நடக்கும் கதை என நினைத்திருந்தேன். ஆனால் கதை நடக்கும் தளம் வேறு, சோபானம் என்ற சொல்லின் அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கதையை அமைத்திருக்கிறார்.

  மிக நல்ல, உள்ளிழுக்கும் நடை. ஆரம்பத்தில் வரும் செட்டியார் பங்களா குறித்த விவரனைகள் எல்லாம் கச்சிதம். உண்மையில் இந்தக் கதை கான் சாகிப், அவரது சீடன், மற்றும் ராஜம் ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் நிழற்படங்கள் [snapshot] தான். வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியபடி இருக்கிறார்கள்.

  அதில் கான் சாகிப் தான் மைய விசை. அவரது ஆன்மீகமான தவிப்பும் போராட்டமும் தான் கதை. கதை முழுக்க அவர் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டே இருக்கிறார். பின்னர் பயணத்தின் நடுவே ஓர் இடத்தில் இறங்கி, இசையின் வழி “ஒவ்வொரு ஸ்வரமாக நின்று நிதானித்து இன்னும் இன்னும் என்று அதன் படிகளில் ஏறிக்கொண்டே” சென்று ஒரு கட்டத்தில் முடித்துவிடுகிறார்.

  கதாபாத்திரங்களின் அக உணர்வுகளை, புறக் காட்சிகளாக பல இடங்களில் ஆசிரியரால் காண்பிக்க முடிந்திருக்கிறது. இசைக்கும், காமத்திற்கும் இருக்கும் அந்த உறவை கான் சாகிபின் மனவாழ்க்கையை வைத்து மெல்லிதாக தொட்டுக் காட்டவும் முடிந்திருக்கிறது.

  ஆனால் கதாப்பாத்திர அமைப்பு எனக்கு இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. கான் சாகிபையும், ராஜத்தையும் ஆசிரியரால் ஓரளவு துல்லியமாக காண்பித்து விட முடிந்திருக்கிறது. குறிப்பாக ராஜத்தின் வீடு, அதில் சுவர் முழுக்க மாட்டி வைக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படங்கள், கேடயங்கள் போன்றவற்றை கொண்டு. ஆனால் கான் சாகிபின் சீடன் சிக்கலானதொரு பாத்திரப் படைப்பு என்றே தோன்றுகிறது. அவன் நிலையற்றவனா, அல்லது விடுதலை அடைந்தவனா என்பது தெளிவாக இல்லை. ஒரு இடத்தில் நாடகத்தில் நடிக்க இசை கற்பதை விட்டு விட்டு ஓடிப் போனவன் என்று வருகிறது. மறு இடத்தில் பயங்கர கோபக்காரன் என்று. இன்னோரு இடத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு முழுக்க விடுதலை அடைந்த மனிதன் என்று. இவ்வகையான பாத்திரப் படைப்பு நாவலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சிறுகதைக்கு கொஞ்சம் அதிகம் தான். பிரச்சனை என்னவென்றால் அந்த பாத்திரப்படைப்பு நன்றாக அமைந்திருந்தால் மட்டுமே கான் சாகிப்புக்கும், அந்த சீடனுக்கும் உள்ள கான்ட்ராஸ்ட் சரியாக வந்திருக்கும். அவரது சீடன் நாடகம் அதுஇதுவென்று போய் இப்படி ஆகிவிட்டானே என்று கான் சாகிப் வருத்தப்படுகிறாரா, அல்லது சீடனை போல் விடுதலை அடைந்த மனிதனாக ஆக முடியவில்லையே என்ற ஏக்கமா என்பது புரியவில்லை. இவை என்னுடைய வாசிப்பு பிரச்சனைகளாக கூட இருக்கலாம்.

  அதே போல் ராஜமையரும் கான் சாகிப் காலில் விழுவது, பிறகு அதற்கு விளக்கம் சொல்வது எல்லாம் சிறுகதையின் ஒருமையை பாதிக்கிறது என்றே எனக்கு படுகிறது. வரலாற்றை புனைவில் சேர்க்கும் போது வரும் சிக்கல் இது என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு வரலாற்றில் நடந்திருக்கலாம். ஆனால் சிறுகதையில் அது எத்தனை தூரம் பொருந்துகிறது என்பதே கேள்வி.

  மேலும் “சங்கீதம் என்பது திறமையாகப் பாடுவது என்பதில் இருந்து இன்னமும் முக்கியமான வேறு எதுவோவாக அவருக்கு தோன்ற ஆரம்பித்ததும், பிறர் அறியாமல் இசையின் அடியாழங்களுக்குள் நீந்தி எதையோ தேடிக்கொண்டிருந்தார்” போன்ற விவரிப்புகளை தவிர்த்து, அவற்றை நிகழ்வுகளாக தந்திருக்கலாம்.

  சரளமான நடை, சித்தரிப்புகளில் உள்ள நுண்மை, மற்றும் கதைக் கூறலில் இருக்கும் தீவிரம் ஆகியவற்றால் இது முக்கியமாக கதை ஆகிறது. கதாபாத்திர அமைப்பும் செறிவாக இருந்திருந்தால் இன்னும் மிக நல்ல கதையாக ஆகியிருக்கும். வாழ்த்துக்கள்.

 15. Surya

  இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. தங்கள் தளம் மறு மொழிகளுக்காக திறந்து விட பட்டுள்ளது.

  இந்த புதியவர்களின் கதை அறிமுகம். என்ன சொல்ல இது வேறு எங்கும் காண கிடைக்காத பேரின்பம்.
  -சூர்யா

 16. Govardhan

  கடந்த இரண்டரை ஆண்டுகளாக தினமும் இந்த தளத்தில் வாசித்து வருகிறேன். ஒரு நாள் கூட காலையில் ஒரு புதிய பதிவையாவது பதிவேற்றாமல் ஜெயமோகன் இருந்ததில்லையே! இன்றைக்கு என்னாச்சு? கடும் வேலை நெருக்கடி காரணமா அல்லது வருத்தமா?

 17. jeyamohan

  அன்புள்ள ஜெ,

  உங்கள் கட்டுரையில் உள்ள ஒரு விஷயத்தைப்பற்றி சொல்ல விரும்புகிறேன். அச்சு இதழ்களில் கதைகள் குறைவாகவே வாசிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். உயிரெழுத்து மட்டும்தான் நிறைய கதைகளை வெளியிடுகிறது. மற்றவை அதிகம் கதைகளை வெளியிடுவதில்லை. அதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். உயிரெழுத்தை பாராட்டி நீங்கள் எழுதியதையும் வாசித்தேன். மற்ற இதழ்கள் இலக்கியத்துக்கு ஒதுக்கும் பக்கங்கள் குறைந்துவிட்டதையும் கண்டித்திருக்கிறீர்கள். ஆனால் வாசகர்களின் ஆர்வம் குறையும்போது அவர்கள் பக்கங்களைக் குறைப்பதில் என்ன தப்பு?

  உங்கள் இணையதளத்தில் கதைகளுக்கு வரும் கிளிக்குகள் கணக்கில் சேராது. உங்களை வாசிக்க வரக்கூடியவர்கள் கதைகளை கிளிக் பண்ணிப்பார்த்துவிட்டு நீளம் எவ்வளவு என்று கீழே வரை ஸ்கிரோல்பண்ணிவிட்டு போய்விடுவார்கல். அவர்களை வாசகர்கள் என்று சொல்லமுடியாது. எதிர்வினைகளிலேயே பாருங்கள் கதைகளை வாசிக்கமாட்டேன் என்றுதான் பலர் எழுதியிருக்கிறார்கள்

  அருண்

 18. Srinivasan

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

  முதலில் நன்றி .இங்கு ஒரு வாசல் திறந்திருக்கிறது என்று காட்டியதற்கு !!!!நான் அந்த பன்னிரண்டுக் கதைகளையும் இன்னும் படிக்கவில்லை . படித்துவிட்டு ஒவ்வொன்றாக என்னுடைய எதிர்வினைகளைத் தருகிறேன் .அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .அத்துடன் இந்தப் பதிவை முடித்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இன்று காலை தற்செயலாக சு ராவின் “இல்லாத ஒன்று ” கதையைப் படித்தேன் .அந்தக் கதையில் வரும் ராஜசேகரனின் குணாதிசயங்களில் சில எனக்கும் உண்டு .எழுத ஆரம்பிக்கும் அனைவரும் கட்டாயம் இந்தக் கதையைப் படிக்கவேண்டும் .இணையத்தில் குப்பைகள் தான் அதிகம் என்று இன்றுதான் உணர்ந்தேன் .அதில் வரும் எழுத்தாளர் ஆனந்த சாகர் மாதிரி எவ்வளவு போலிகள் இங்கு உலவிக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் தாங்கள் எழுதும் படைப்பிற்கு ஏதேதோ fiction என்று பெயர் வைத்துக்கொண்டு ,ஏற்காட்டிலோ ,ஊட்டியிலோ ,உயர்தர
  விஸ்கியை உறிந்து கொண்டு ,ஏதாவது இத்தாலிய இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி c minor ,d minor என்று உளறுவது வாடிக்கையாகி .விட்டது இன்னும் சில வணிக இதழ்களிலோ மாரி முத்து அண்ணன் ,செல்வி அத்தை ,ராஜாமணி பெரியப்பா என்று உறவுகள் சம்பந்தமான எழுத்தே மலிந்து கிடக்கிறது .அவற்றைக் குற்றம் .சொல்லவில்லை அது ஒரு கிளீஷேவாக மாறிவிட்டது .எழுதும் எல்லோரும் அதே மாதிரி hackneyed notion உடன் எழுதுகிறார்கள் .போலியான எழுத்து மலிந்து கிடக்கும் ,அளவற்ற ஆனந்த சாகர்கள் நடமாடும் இந்த காலக்கட்டத்தில் உங்களின் இந்த முயற்சி இணையத்தில் சுஜாதாவிற்குப் பிறகு வந்த நல்ல மாறுதல் மற்றும் ஆறுதல் .ஆனால் சுஜாதாவை விட வேகமான மற்றும் அடர்த்தியான உங்களின் இலக்கியப் பாய்ச்சலில் குறுக்கே வந்த நாங்கள் நிச்சயம் அடித்துச் செல்லப் படுவோம். மன்னிக்கவும் இது முகஸ்துதி அல்ல .உங்கள் முயற்ச்சியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிவிக்க அடியேனுடைய சிறிய உளறல் .இல்லாத ஒன்றைத் தேடி அலைந்த பிறகு ஒரு வாசல் திறந்த மகிழ்ச்சி அவ்வளவுதான் மீண்டும் மன்னிக்கவும் பின்னூட்டப் பெட்டியைத் தவறாகப் பயன்படுத்தி இருந்தால் .

  சிறு கதைகளைப் படித்து விட்டு மீண்டும் பதிவிடுகிறேன் .சிறுகதை எழுதினால் அவைகளையும் .

  – ஸ்ரீனி

 19. Arulappan T

  கதைகளை வாசித்து வம்ர்சிக்கதது வருத்தம் தான். என்ன செய்வது.

  “நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவிலலை என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத்தெரியவில்லை”

  இதில் நானும் ஒருவன். முயற்சிபன்னுகிறேன்.

 20. M.Kumar

  கதைகளை வாசித்தபோது எனக்கு பெரியதாக ஏதும் சொல்லத்தோன்றவில்லை. கதைகளைப்பற்றி விவாதிப்பது எதற்காக என்று தெரியவில்லை. கதைகளை விவாதித்தால் கதைகளைப்பற்றிய அனுபவம் இல்லாமல் போய்விடுகிறது. கதைகளை கொஞ்சநாள் நினைவில் வைத்திருக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். நினைவில் நின்றால் மேற்கொண்டு அதைப்பற்றி பேசலாம். இல்லாவிட்டால் போய்விடலாம். இதுதான் என் கணக்கு

  இந்தக்கதைகளிலே வேஷம், உறவு இரண்டும் நல்ல கதை. சோபானம் கதை அலைபாய்ந்துகொண்டே இருந்தது. என்ன ச்0ல்ல வருகிறார் என்று தெரியவில்லை. கன்னிப்படையல் கதை சமகால சம்பவங்கள் காரணமாக மனசுக்குப்பிடித்திருந்தது. மற்றகதைகள் எல்லாமே பரயாவில்லை தரம்தான்

  குமார்

 21. jeyamohan

  புதியவாசல்

  என்ற தலைப்பில் இந்த 12 கதைகளும் அறிமுகக்குறிப்பு மற்றும் என்னுடைய குறிப்புகளுடன் நற்றிணைப் பிரசுரமாக வெளிவரவுள்ளன. இன்று பிரதி தயாரித்து அனுப்பியிருக்கிறேன்

  ஜெ

 22. jeyamohan

  அன்புள்ள சுனில்

  நீங்க முன்னாடி எழுதிய கதையும் மருத்துவனின் அறம் சார்ந்த குழப்பங்களை மையமா வெச்சிருந்தீங்க. குறிப்பா ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும் முரண்படும் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லாமல் பூடகமா காட்டி எழுதுவது போலிருக்கு. பூமியின் நாயகன், பூவுகலத்தைக் காப்பவன் என வேத காலத்து வாசுதேவனையும் , நவீன கடவுளர்கள் ரமணர்/அரவிந்தரும் காப்பாற்றணும் எனும் குறிப்புகளும் நல்லா வந்திருக்கு.

  //ஹார்லிக்ஸ் குடிச்ச வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாது //

  நம் நண்பர்கள் சூழலிலிருந்து இளங்கோவை சட்டென அடையாளம் காட்டும் வரி. உரையாடல்களில் நல்ல கவனம் தெரியுது. கதை சொல்லிக்கு அடிப்படையில் சில நம்பிக்கையின்மைகள் இன்னும் தெளிவா வெளிப்பட்டிருக்கலாம்னு தோணுது..மருத்துவத்தின் எல்லையை உணர்ந்தாலும் அதையும் மீறிய மனத்திடத்தின் சாத்தியம் பற்றிய வினாவை பல கட்டங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்..உங்க கதை அதை மீண்டும் சிந்திக்க வைத்திருக்கு.

  நன்றி

  கிரிதரன்

 23. தனா

  ஜெ சார், வெகு நாட்களுக்குப் பிறகு என்னைக்குறித்து நான் வெட்கமடைந்தேன். ஆனால் இது எனக்கு ஒரு திறப்பு. இன்னும் உத்வேகமாக செயல்படத்தூண்டும் உங்கள் கட்டுரை மிக முக்கியமானது.

  ”உறவு” கதை புதியவர் ஆக்கங்களுக்காக எழுதிப்பார்த்த கதைதான். ஆனால் அது எனக்கு ஒரு படிக்கட்டாய் அமையும் என்று எண்ணவில்லை. வாசித்து விமர்சித்த அனைவருக்கும் நன்றி. உறவு கதையில் நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லிவிட்டேனா என்ற ஐயம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் வாசர்களால் மிகச்சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு மகிழ்சி. பிரதீப் பாரதி மட்டுமே என்னை திகிலடையச் செய்தார் :))…

  உண்மையாகவே எனக்கு என் வாசிப்பின் மீது சந்தேகம் உள்ளது. ஒரு சிறந்த வாசிப்பு என்பதை நான் இன்னும் நிச்சயமாக அடையவில்லை. ஒரு மேலோட்டமான வாசிப்பே உள்ளது. ஒரு சிறுகதை அதிகபட்சம் இரண்டாவது பாராவில் என்னை உள்ளிழுக்கவில்லையென்றால், அடுத்த பாராக்களில் என்னை திருப்தி படுத்துவேன் என்றும் சத்தியம் செய்யவில்லை என்றால் நான் அந்த கதைக்குள் நுழைய பெரிதும் மெனக்கெடுகிறேன். என்னுடைய பெரிய குறைபாடாக இதை எண்ணுகிறேன். ஒருகதையை ஆழ்ந்து வாசித்து அதன் தரிசனங்களைப்பெற நான் இன்னும் உழைக்கவேண்டும்.

  யாவரும் கேளீர் எனக்கு மிகவும் பிடித்த கதை. கதை முடிவும் அதை ஒரு நல்ல சிறுகதை வடிவிற்கு கொண்டுவந்து நிறுத்தியது. ஆனால் அந்த முடிவு எனக்கு ஒட்டு மொத்த கதையில் ஒரு ஏமாற்றத்தை தந்ததோ எனக்குழம்புகிறேன். அந்த முடிவை தீர்மானித்துவிட்டு மிச்சமுள்ள பகுதியும் வசனமும் அதற்க்காக வேண்டுமென உருவாக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. கிருஷ்ணன் இப்படி பட்ட கட்டமைப்பு வாசகர்களை சென்றடைய மினிமம் கேரண்டியை கொண்டுள்ளது என்றார்.

  காகிதகப்பல் ராம் சொன்னதைப்போல் ஒரு கவிதையாகவே பட்டது. அதிகம் விவாதிக்காமல் முதல் வாசிப்பில் ஏற்படும் அனுபவத்தை சுகித்துக்கொள்வதே சரி என்பது போல.

  தொலைதல் ஒருவனின் ஒட்டுமொத்த அபத்த வாழ்வையையே எனக்கு தரிசனமாக்கியது. அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, குழந்தைகள் அனைவரையும் விட்டுவிட்டுசிலகாலம் நானும் ரிஷிகேஸ் பகுதியில் ஆசிரமத்தில் இலவச உணவுடன் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். நான் தப்பித்து விட்டேன். சிவபாஸ்கரன் தப்பவில்லை.

  பீத்தோவனின் ஆவி எனக்கு இசை பற்றிய அறிவெல்லாம் தேவையில்லாமலேயே அதன் சாரத்தை எனக்கு அறிந்துகொள்ள செய்தது. இசை என்பது இக்கதையில் ஒரு குறியீடு மட்டுமே என்று எண்ணுகிறேன். இசைக்கு பதிலாக வேறு என்னவெல்லாமும் போட்டுக்கொள்ளலாம், பிரதியில் லயிக்கும் சிலகணங்கள் நான் அதுவாகவே மாறுகிறோம். அது நாமே.. உதாரணமாக சினிமா நடிகர்களின் கதாபாத்திரங்கள் போல.

  வாயுக்கோளாறு ஒரு கதாபாத்திரத்தின் வெற்றி. ஒரு கதாபாத்திரத்தின் முழுமை. கன்னிப்படையல் சிறந்த கதை எனினும் அவர் சொல்ல வந்தது இன்னும் சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் ராஜகோபாலனிடம் தொலைபேசியில் பேசியபின்புதான் அறிந்து கொண்டேன்.

  சோபானம் எனக்கு கான் சாகிப்பின் உள்ளும் புறமும் என வகுத்துக்கொள்ளச்சொல்கிறது. மிக சிறந்த வாசிப்பனுபவத்தை தந்த கதை.

  வேஷம் கதை, ஒரு சிறந்த கதையாசிரியனின் கதை. அதன் கட்டமைப்பும் , உரையாடல்களும், விவரிப்புகளும் மிகவும் அபாரமானது. முழுக்க முழுக்க ஜெயமோகனின் பிரதி எனப்பட்டது. இதை குறையாகச்சொல்லவில்லை. பிரகாஷ் வண்டியின் இண்டிகேட்டரை வலதிற்குப்பதிலாக இடதுபக்கம மாற்றினால் போதும்.

  வாசலில் நின்ற உருவம் கதையின் மொழி நடையே அதை சிறந்த கதையாக்குகிறது.

  வாசுதேவன் கதையில் கதை சொல்லிக்கும் வாசுதேவனுக்குமான உறவு இணக்கமாவதை என்னால் உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. சூகி அதை ஒரு மேஜிக் மொமண்ட்டாக ஆக்கியிருந்தால் ஒட்டுமொத்தகதையும் வலுவாயிருந்திருக்கும். காலப்போக்கில் உருவான இணக்கம் என்பது கதையில் எனக்கு பலவீனமாக தெரிந்தது. ஆனால் கதையின் முடிவு முகத்தில் அறையும் ஒரு எதார்த்தம். மிக உருக்கமான ஒரு கதை.

  மீண்டும் மீண்டும் இக்கதைகளை வாசித்தே நான் என் வாசிப்பனுபவத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று அறிந்து வாசிக்க ஆரம்பிக்கிறேன்.

  தனா..

 24. suren

  அன்புள்ள திரு ஜெ

  முதல் எதிர் வினையாற்றி இருக்கிறேன்.

  படித்தவற்றில் ” உறவுகள்” மிகவும் பாதித்தது.

  ” வாசலில் நின்ற உருவம்” அற்புதம். ஆழ்ந்த நடை. இலகுவான மொழி. மனம் பிசைந்தது.

  ” சோபானம்’ கவிதையாய் பட்டது. இசை கற்று கொள்வதால்.

  ” கன்னி படையல் ” தமிழ் சினிமாவின் மொழி. கண்கள் பனித்தன. நாம் ஒவ்வொரும் சில சமயங்களில், நேரங்களில், சூழ் நிலைகளில் அவதானிக்கும், ஆற்றாமையை, அவலத்தை, அற்புதமாக சொல்லிய கதை.

  சுரேன்

 25. kesavamani

  கச்சிதமான வடிவமும் நேர்த்தியான சித்தரிப்புகளும் கொண்டது சுனீல் கிருஷ்ணனின் வாசுதேவன் கதை. என்ன ஏது என்று சொல்லாமல் ஆரம்பத்தில் பூடகமாக கதையை நகர்த்திச் செல்வதன் மூலம் கதையை ஒரு எதிர்பார்ப்புடன் படிக்கச் செய்துள்ளார் ஆசிரியர். கதை நடக்கும் வீட்டின் புறமும் அகமும் சில வரிகளின் வர்ணனை மூலம் நம் கண்முன் கொண்டு நிறுத்துகின்றன. கதை ஒரே நேர்கோட்டில் செல்லாமல் சற்றே முன்னும் பின்னுமாக மாற்றி கதைசொல்லியிக்கும் அமைப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

  இவையெல்லாம் கதையின் வெளித்தோற்றத்தின் சிறப்பாகச் சொல்லலாம்.

  கடவுள்தான் நம்மை அடிக்க முடியும். நாம் கடவுளை அடிக்க முடியுமா என்ன? நன்றாக இருக்கும் ஒருவனை அடிபடவைத்து அவனைக் கோமாவில் ஆழ்த்தி, அவனையும் அவன் குடும்பத்தாரையும் துன்பப்படச் செய்யும் இவற்றுக்கெல்லாம் அர்த்தமிருக்கிறதா என்ன? என்ற கேள்வி கதையினூடான வாசிப்பில் நம் மனம் முழுதும் வியாபிக்கிறது. ஆனால் கதையைப் படித்து முடித்ததும் இவற்றுக்கெல்லாம் ஏதோ அர்த்தம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. அர்த்தமில்லாமல் ஒன்றை இறைவன் நிகழ்த்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் படுகிறது.

  மருத்துவத் தொழில் செய்யும் ஒருவன் அதை வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் செய்யாமல், மனித நேயத்துடனும் அக்கறையுடனும் நடக்கவேண்டும் என்ற பாடத்தை கதைசொல்லிக்குக் காட்டுவதற்காகவே கடவுள் இத்தகைய காரியத்தைச் செய்திருக்கிறார் என்று வேறோர் அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்ளும் போது, கதையின் வீச்சு புலப்படுகிறது.

  இவையெல்லாம் கதையின் உள்ளடக்கம் நமக்குள் எழுப்பும் சிந்தனைகளாகச் சொல்லலாம்.

 26. அருண்

  கதைகளில் நல்ல தொடக்க நிலைகள் இருந்தன . வேஷம். நல்ல கதை. சோபானம் நல்ல கதையாக வந்திருக்க முடியும். ஒரே சமயம் பல கதைகளை சொல்ல முய்ற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் . தொலைதல் நல்ல கதை ஆனால் பழசு. உறவு நல்ல கதை. பிசிறுகள் உண்டு. முட்டி முட்டி சொல்லப்ப்ட்டது பொல தோன்றிய கதை .மிகச்சிறந்த. கதை பயணம்
  சுருக்கமாக எழுதப்பட்ட கதை.

 27. மது

  /ஆனால் கதையின் முடிவு முகத்தில் அறையும் ஒரு எதார்த்தம். மிக உருக்கமான ஒரு கதை/

  ‘வாசுதேவன்’ கதைசொல்லிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு பெரும் வைணவ தரிசனத்தை முன்வைக்கிறது. ஒரு சராசரி உருக்கமான கதையிலிருந்து இதை மேலேற்றுவது இந்த தரிசனம்தான்.

 28. சண்முகம்

  அன்புக்குரிய ஜெ,
  பிரகாஷ் சங்கரனின் வேஷம் வாசித்தேன், மிக அருமையான கள வர்ணனை.
  நன்றி

 29. jeyamohan

  “பயணம்” கதையின் அந்தோனிப்பிள்ளை தன் சொந்த ஊரில் வேறு சர்ச்சுக்கு போகும் ‘பீற்றர்’ அவ்வளவு ஒன்றும் வேற்றாள் இல்லை என்பதை மகனை இழந்து, அரசால் இடப்பெயர்வு செய்யப்பட்டு, மகளை சைவனுக்கு மணமுடித்து வைத்து..என்று நீண்ட வாழ்க்கைப் பயணத்தினாலும், தெரியாமல் இடித்ததற்காக முறைத்துப் பார்த்த டேனிஷ்காரனை கண்டு வெறுத்து சொந்த ஊர் திரும்பிய டென்மார்க் பயணத்தினாலும் இறுதியில் உணர்ந்து கொள்கிறார் என்று முதலில் நினைத்தேன். இல்லை, இவ்வளவு பயணம் செய்தும் மீண்டும் அவர் ஆரம்பித்த இடத்திற்குத் தான் வந்து சேர்ந்திருக்கிறார். வத்தளைக்கு வீடு பார்க்க வந்துவிட்டு பீற்றர் வீட்டில் டீ குடித்து, ஊரைப் பற்றிக் கதைத்து விட்டு கிளம்பும் போது சும்மா நாயக்க கந்த சேர்ச்சை பார்க்கவந்ததாகச் சொல்லும் முடிவு கதையை உண்மையில் வித்யாசமானதாக ஆக்குகின்றது. பீற்றர் வீட்டுக்குப் பக்கத்தில் அவர் குடிவந்திருந்தால் தேர் வழக்கமான வகையில் நிலை வந்து சேர்ந்திருக்கும். புரட்டி வீசும் வாழ்க்கை அனுபவங்களுக்குப் பிறகு அந்தோனிப்பிள்ளை பக்குவமடைந்து மாறிவிட்டார் என்ற இடத்திற்குக் கதை வராததே கதாசிரியனாக சிவேந்திரனின் வெற்றி. சராசரி மனிதர்களின் சில அடிப்படையான உணர்ச்சிப்பிடிப்புகளை எந்த துயரமான அனுபவங்களும் மாற்றிவிடுவதில்லை என்பது ஒருவகையில் உண்மை. அவர்கள் பயணம் ஒரு வட்டப்பாதையில் தான் அமைகிறது. இதுவே யதார்த்தம். சிவேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

  – பிரகாஷ் சங்கரன்.

 30. Santhini

  கன்னிப் படையல்:

  கற்பழிக்கப்பட்டு, இறந்து, நியாயம் கிடைக்காது ……கோபப்பட்டு .எல்லாம் சரிதான் .
  ஆனால் கன்னிப் படையல் என்கிற செண்டிமெண்ட் எதற்கு.
  கன்னித்தன்மை என்கிற தன்மையை பெண் சுமக்கவேண்டியவளா ?

  கன்னித் தன்மை இழக்கப்பட்டதுதான் இங்கு பெரும் பாவமா ?
  ஏன் இன்னும் பெண்மையை இந்த மாதிரியான மரபு ரீதியான சுமைகளை
  சுமக்க வைக்கிறீர்கள் ?

  ///செய்யாத குத்தத்துக்கு தண்டனையா எம் பொண்ணு போனா ன்னு ஒரு சொல்லு வேணும்///

  சொல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

  நவீன யுகத்தில் இருந்து கொண்டு……..ஏன் இந்தக் கதைகள் எல்லாம் ???

 31. kesavamani

  ராஜகோபாலனின் வாயுக் கோளாறு உள்ளடக்கத்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் சொல்லும் முறையிலும், வடிவத்திலும் கதை சிறப்பானதாக அமைந்திருக்கிறது. தி.ஜாவின் அக்பர் சாஸ்திரியை நினைவுறுத்துவதாக கதை இருந்தது.

 32. பொன்.முத்துக்குமார்

  வாசுதேவன் :

  தனது வைத்திய முறையை முழுமையாக தங்களுடன் பகிர்ந்துகொள்ளாத, கற்றுக்கொடுக்காத மருத்துவரிடம் பயிற்சி எடுக்கும் – நம்பிக்கையற்ற – அலுப்பு கூடிய ஒரு இளநிலை மருத்துவனுக்கு வாசுதேவனுக்கு கொடுக்கப்படும் வைத்தியம் ‘இதெல்லாம் எதற்கு’ என்று தொன்றுகிறது. என்னால் இதை புரிந்துகொள்ள முடிகிறது. என் அக்கா கணவரின் தாய்வழி தாத்தா கம்பீரமாக உலா வந்தவர். பக்கவாதம் தாக்கி, உடலின் வலப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கிட்டத்தட்ட கார்டூன் பாத்திரம் மாதிரி ஆகி முடிந்து போனவர். (எங்கள் ஊரில் மரண தேதி-நேரத்தை சரியாக கணிக்கும், LIM மருத்துவரிடம் பயிற்சி பெற்ற ஒரு ‘மருத்துவர்’ இருந்தார். அவர் சொன்னது போல நள்ளிரவில் நிகழ்ந்தது மரணம்) இதை நேரில் பார்த்த முதல் மரணம் என்று நினைக்கிறேன். என் ஆரம்ப இருபதுகளில் பெரிய தத்துவ தொந்தரவெல்லாம் இல்லை. ஒரே ஒரு கேள்விதான். ‘ஏன்’. மேலும் ஓரிரு மனதை பாதிக்கும் மரணங்கள் பார்த்ததும் இதே கேள்விதான் மனதுக்குள்.

  சுஜாதா சொன்னது போல ‘வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை’ என்று சொல்லிக்கொண்டதுதான் மிச்சம்.

  கள்ளங்கபடமற்ற குழந்தை – கூட்டை நிறைய பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் பெண் குழந்தை – பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்துகொண்டிருக்கும் குழந்தை இங்கே அதற்கு பதில் சொல்கிறதோ ? “சும்மா-தான்” (நன்றி – ஆர்வி)

  // உருக்குலைந்து துருப்பிடித்த இரும்பின் மீது உயிர்ப்புடன் படர்ந்திருந்தது கிளிப்பச்சை கொடி ஒன்று. இளநீலப் பூக்கள் ஆங்காங்கு எட்டிப்பார்த்தன. //

  இங்கே வாசுதேவன் கூட உருக்குலைந்து துருப்பிடித்த இரும்பு போலத்தான், இல்லையா ?. அங்கே உயிர்ப்புடன் என்ன கொடி படர்ந்திருந்தது, என்ன பூக்கள் பூத்திருந்தன ? தெரியவில்லை. அதன் மேல் போய் ஏன் உயிர்ப்புடன் படர்ந்து பூத்திருக்க வேண்டும் ?

  சும்மாதான்.

  அன்புடன்
  பொன்.முத்துகுமார்.

 33. kesavamani

  மனிதனின் பொருளாதாரச் சிக்கல்கள் உறவைத் தீர்மானிக்கினறன என்பது உண்மைதான் என்றாலும் சில சமயம் அதையும் மீறி உடல் மற்றும் மனத்தேவைகளும் உறவை நிர்ணயிக்கின்றன என்பதை தனசேகரின் உறவின் கதை சொல்கிறது. கதையின் உறவு என்ற தலைப்பு இரண்டு பொருள்பட அமைந்து கதையை நடத்திச் செல்கிறது.

  சாதாரணமாகவே மனிதன் சந்தேகபுத்தி உள்ளவன். எனவே இப்படியான ஒரு சூழ்நிலை கொண்ட மக்கள் வாழும் இடத்தில் அந்த சந்தேகம் கதைசொல்லிக்கு எழுவது இயல்பு. ஆனால் முருகண்ணனோ இத்தகைய சந்தேகத்தைக் கடந்தவராக சித்தரிக்கப்பட்டு ஒரு மேலான மனநிலையில் இருப்பதைக் கதைசொல்லி காண்பதாகச் சொல்வதன் மூலம் அவனின் சந்தேகத்தை அற்பமானதாக்குகிறார் அவர். அந்த மலையைப் பார்த்து வியப்பதும், சிறுநீர் கழித்தபின்னரும் மோனத்தின் ஆழ்ந்தவராகக் அவரைக் காட்டியிருப்பதும் அவர் பாத்திரத்தை நமக்குத் துலக்கமாக எடுத்துக்காட்டுகிறது. கதையைப் படித்து முடித்ததும் முருகண்ணனும் அந்த மலையும் நம் மனதில் நிலைத்து நின்றுவிடுகிறார்கள்.

  தனசேகரின் உறவின் கதை வெறும் உறவை மட்டும் சொல்லவில்லை. அந்த உறவுக்குப் பின்னால் இருக்கும் மனிதனின் உயர்ந்த உள்ளத்தையும் காட்டுகிறது.

 34. srinivasan

  சுரேந்திரகுமார்,

  இங்கு பிரசுரமான பன்னிரண்டு கதைகளில் முதலில் உங்கள் கதையைப் படித்தேன் .நன்றாக இருந்தது .
  சண்முகம் சொன்னது போல் கவிதையாக இருந்தது .கவிதையாக வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் .எந்த கவிதைத் தொகுப்புக்குள்ளும் இடம் பெறத் தகுதியானதாக இருந்திருக்கும் .நல்ல படைப்பு .

  சில இடங்களில் தென்பட்ட எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்தின .அது ஏதோ வட்டார வழக்குச் சொல்லா என ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது .சில இடங்களில் உரையாடல் மொழிக்கும் கதைசொல்லியின் மொழிக்கும் வித்தியாசம் இல்லை .

  ஜெயிடம் ஒரு கேள்வி ,

  ஜெ,

  கதைசொல்லியும் வட்டார வழக்கிலேயே கதை சொல்லலாமா ?அப்படிச் சொன்னால் உரையாடல் மொழிக்கும் ,கதைசொல்லியின் மொழிக்கும் இடைவெளி இருக்காது .எனக்கு இந்த இடைவெளி அவசியம் எனப்படுகிறது .ஏனெனில் சில நேரங்களில் வட்டாரச் சொற்கள் எல்லாருக்கும் புரியாத மாதிரி இருக்கும் .கதைசொல்லியின் பங்கு வாசகர்களை நகர விடாமல் செய்வது .அபத்தமான கேள்வியா இது ?காகிதக் கப்பல் கதையில் முக்கால்வாசி கதைசொல்லியின் தமிழ் தூய்மையாக இருக்கிறது ,சில இடங்களில் வட்டாரச் சொற்களிலும் வருகிறது .இது எதிர்பாராமல் ஏற்பட்ட தவறா ?அல்லது ??

  நன்றி .

  ஸ்ரீனி

 35. srinivasan

  வேதா ,

  இரண்டாவதாகப் படித்தது உங்களின் கதை “பீத்தோவனின் ஆவி “. இப்போதே இந்தத் தொகுப்பில் இருக்கும் வலுவான கதைகளில் இது ஒன்று எனக் கூறமுடியும்.
  “ஒரு சரக்கு விமானம் இரையை விழுங்கி விட்டு பழகிய வழியில் திரும்பும் கிழப்பாம்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது .”

  கிழப்பாம்பு போல ,என்ற உவமை அருமையாக இருந்தது . நுட்பமான பார்வையோ வாசிப்போ இல்லாதவர்கள் வெறும் பாம்பு என்று எழுதியிருப்பார்கள் .சுந்தர ராமசாமியின் “கோவில் காளையும் உழவு மாடும் “என்ற சிறுகதையில் ஒரு பண்டாரம் சோற்றுக்காக வந்த நாயின் வயிற்றில் எட்டி மிதிப்பான் .அப்போது அருகிலுள்ள ஒரு கிழவன் “வயத்திலே மிதிக்காதே .அது கொளந்தெ உண்டாயிருக்கு “என்பான் .
  இந்த மாதிரி நுட்பமான தகவல்கள் தான் சு ராவின் ஸ்பெஷல் .அது போல் உங்களுடைய கிழப்பாம்பு படிக்கும் போது இதை ஞாபகப் படுத்தியது .

  சில பேர் உங்கள் கதையைத் தப்பாகப் புரிந்து கொண்டு இரண்டு இசையையும் தொடர்புபடுத்தி பார்க்கிறார்கள் .நீங்கள் சொல்ல வந்த கருத்து அதுவல்ல .இசை பற்றிய கதை அல்ல இது .அந்தப் பெண்மணியின் சுய வருத்தம் தான் இதில் பிரதானமான அம்சமாக எனக்குப் .பட்டது போன மாதம் ஒரு நாள் மதியவேளையில் என் நண்பனுடன் மது பானக் கடைக்குச் சென்றேன் நான் ,குடிக்கவில்லை சும்மா கம்பெனி கொடுத்தேன் .அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எங்களிடம் பேச்சு கொடுத்தார் .அவர் தனது பெயர் டோலக் ஜெபா என்றார் .நாம்தான் எழுத்தாளனாச்சே ,டோலக் ஜெபா என்ற டைட்டிலில் ஒரு கதை எழுதலாம் என நப்பாசையில் பேச்சுக் கொடுத்தேன் .அவர் M.S.V தொடங்கி தேவா வரை டோலக் வாசித்திருக்கிறார் .கடைசியில் இப்போது வாய்ப்புகள் கிடைக்காமல் சும்மா தெருக் கச்சேரிகளுக்குச் சென்று வாசிக்கிறார் .இவரைப் போல் நிறைய பேர் கிட்டார் ,வயலின் போன்ற இசைக்கருவிகளை சொற்ப பணத்துக்கு வாசித்துக் கொண்டு காலம் தள்ளிவிடுகிறார்கள் .எல்லாரும் இசையமைப்பாளர்கள் ஆகிவிடுவதில்லை .டேக் என்றவுடன் கொடுத்துள்ள நோட்ஸை வாசித்துவிட்டு போய்விடுகிறார்கள் .ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவில் வாசிக்கும் எண்ணற்ற இசைக் கலைஞர்களுக்கும் இதே நிலை தான் .வாசிக்கும் நிமிடங்களில் பீத்தோவனாக மாறிவிடும் அற்புதக் கணங்கள் நிறைந்தது என்றாலும் ,அவர்களின் மனதில் இந்த ஓயாத அலுப்பு, சலிப்பு இருக்கத்தான் செய்யும் . ஒரு கம்போசராக மாறும் வரை இது தொடரும் ,ஒரு கம்போசருக்கு தான் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கிறது .
  மற்றபடி ,அமெரிக்காவிலும் அந்தப் பெண்மணி லயித்துப் போன ஹிந்துஸ்தானி இசை போல் ப்ளுஸ் உள்ளது .என்னைப் போல் எவ்வளவோ பேர் ப்ளுஸ் கேட்டு லயித்துப் போய்க் கிடக்கிறோம் இங்கே ,அதிலும் அதிக கட்டுப்பாடு கிடையாது .மூன்றே கார்டுகள் ,எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் லயித்துப் போய் வாசிக்கலாம் .நமது கர்நாடக இசையிலும் ஸ்கேல் அதாவது ஆதார ஸ்ருதி ஒன்றே ஒன்றுதான் .அதை வைத்துக் கொண்டு நாம் நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம் . இந்தக் கதையில் வரும் பெண்மணிக்கு அது வாய்க்கவில்லை .சிலர் புகழ் பெற்றாலும் மக்கள் அவர்களிடம் எது வேண்டுமோ அதை மட்டுமே எதிர்பார்ப்பார்கள் .உதாரணம் ,இன்று ரஜினிகாந்த் என்ன நினைத்தாலும் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடிக்க .முடியாது .ஆங்கிலத்தில் “Fame is a martyr” என்று சொல்வார்கள் .ரஜினிக்கும் உள்ளூர இந்த சலிப்பு இருக்கத்தான் செய்யும் .உலகப்புகழ் பெற்ற பீட்ல்ஸ் இசைக்குழுவின் ஜான் லெனனிடம் எது அல்லது யார் அவர்கள் இசைக்குழுவைப் பிரித்தது/பிரித்தார் என்று ஒருவர் கேட்டார் . அதற்கு லெனனின் பதில் “Boredom “. ஆம் ,சலிப்பு அல்லது அலுப்பு என்று பொருள் கொள்ளலாம். ஒரு கட்டத்தில் அவர்கள் வெறும் இசைத்தட்டுக்கள் உருவாக்கும் இயந்திரங்களாக உருமாறிவிட்டார்கள் .ஜான் லேனனாக வருவது பலபேருடைய கனவு .ஒரு கட்டத்திற்கு மேல் லெலனுக்கு லெனனாக இருப்பதே சலிப்பாகி வந்தது .இதில் வாசிக்கும் போது நாம் பீத்தோவனாக இருந்தாலென்ன ,இல்லாட்டியென்ன .இது என்னுடைய கருத்து இல்லை .இது தான் அந்த கதாப்பாத்திரம் மூலம் நான் அறிந்து கொண்ட கருத்து .மற்றபடி கலாச்சார மதிப்பீடுகளோ ,ஒப்பீடுகளோ இந்தக் கதையை என்னைப் பொருத்தவரை சிறந்ததாக ஆக்கவில்லை .இந்த வயதானப் பெண்மணியின் சுயமதிப்பீடுகள் ,அவள் விரும்பும் கட்டற்ற சுதந்திரம் ,அதற்கு அவள் அந்த இளைஞனிடம் எதிர்ப்பார்க்கும் ஆறுதலான வார்த்தைகள் தான் இக்கதையின் சிறப்பான அம்சங்கள் என ஒரு ப்ளுஸ் கிட்டாரிச்டான எனக்குப் படுகிறது .

  நன்றி

  ஸ்ரீனி

 36. Prasanna

  அன்புள்ள ஜெயமோகன்,

  வணக்கம்,,,,, உங்கள் கடிதம் என் குற்ற உணர்ச்சியை தூண்டி விட்டது…
  ஒரு நல்ல படைப்பை யாருமே அங்கீகரிப்பதில்லை என்று என்னுடைய சிறு கவிதைக்கும் கூட ( அது மிக சிறந்தது என நானே என்னைமுதலில் பாராட்டி விட்டதால் வந்த வினை…) யாருமே விமர்சிக்க வில்லை என் வருந்தி இருக்கிறேன்,,,,,,
  அப்படி பட்ட நானே ஏன் புதிய தலைமுறையின் முயற்சியை விமர்சிக்க சிறு முயற்சி கூட செய்யவில்ல என்றால் ?????
  எல்லா கதைகளையும் தொடர்ந்து படித்தேன்… பல்வேறு அனுபவங்கள்….சில ஆச்சர்யங்கள் …. கோபங்கள்…. வருத்தங்கள்…..மேலும் சில கதைகள் புரியவே இல்லை…..

  ஆனால் பின்னூட்டம் எழுத நேரம் இல்லாமல் எல்லாம் இல்லை…. மனதிற்குள் இருக்கும் கர்வம் தான்…சில ஆசிரியர்கள் மென்பொருள் துறையில் இருக்கிறார்கள் என்று குறிப்பு படித்தேன்… அவ்ளோ தான் .. என் மனம் தானாகவே எல்லைகளை சுருக்கி விட்டது……… மென்பொருள் துறையில் இருப்பவர்கள் எப்படி இலக்கிய தரத்தில் கதை எழுதுகிறார்கள்…. அவர்கள் எல்லோருமே வீண் அரட்டையும்….. பொழுது போக்கு காதலும் ஏன் சில நேரங்களில் பொழுதுபோக்காய் காமும்..இரவெல்லாம் மது போதையும் கொண்டவர்கள் தானே என ஆழ்மனதிற்குள் ஊறி போன சிந்தனை தான் இவர்களின் நிஜமான திறமையை அங்கீகரிக்க மறுத்து விட்டது…..
  இலக்கிய ரசனை உள்ளவனும்… படைப்பாளியும் பொருள் வசதி இல்லதவனாகத்தான் இருப்பன் என்ற சிந்தனையை துடைத்து எரிய முடியாததன் விளைவே நல்ல கதைகளுக்கும் கூட பின்னோட்டம் எழுத முடியாமல் செய்து விட்டது..
  அப்படியும் சில பேர் வேறு வேறு துறையை சேர்ந்தவர்கள் தான்,,,, இருந்தாலும் பொது புத்தி தடை போட்டு விட்டது….
  இப்போது கூட அந்த சிந்தனை போய் விட்டது என சொல்லவில்லை….என் மனம் தனக்கு தானே உருவாக்கி கொண்ட பிம்பங்களை உடைத்து நிஜங்களை ஏற்றுகொள்ள தடை போடுகிறது…..அந்த பிம்பங்களை ஒத்துபோகும் படைப்புகளை மட்டுமே அங்கீகரிக்க தூண்டுகிறது….. இது ஆழமான என்ன ஓட்டத்தையும் மன விரிவையும் தடை செய்து விடும் என்று தெரிகிறது…..என்ன செய்வது என்று தான் தெரிய வில்லை….மற்றபடி புதியவர்களின் கதைகள் நிஜமாகவே என்னை யோசிக்க வைத்தன….அவர்களுக்கு ஒரு வாசகனாக அன்பு பாராட்டுக்கள்……

  அன்புடன்

  பிரசன்னா

 1. புதியவர்களின் கதைகள் நிழல்கள் | நிழல்கள்

  […] வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை […]

 2. 2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

  […] மீண்டும் புதியவர்களின் கதைகள் […]

 3. 3. கடலாழம் – கிறிஸ்டோபர்

  […] மீண்டும் புதியவர்களின் கதைகள் […]

 4. 6-’நிர்வாணம்’- ரா.கிரிதரன்

  […] [மீண்டும் புதியவர்களின் கதைகள் ] […]

Comments have been disabled.