ஒருபாலுறவின் உலகம்

வணக்கம் அண்ணா,

உங்கள் எண்ணற்ற கருத்துகளில் நான் உடன்படுகிறவன், அதே போல எண்ணிலடங்காகருத்துகளில் மாற்றுக்கருத்தும் கொண்டவன்…. இப்போ உங்களிடம் நான்சொல்லப்போவது, அநேகமாக ஒத்த கருத்தை பற்றிய விஷயமாகத்தான்
இருக்கவேண்டும்….

ஆம், என்னை பொறுத்தமட்டில் ஒருபால் ஈர்ப்பு பற்றி துணிச்சலாக பேனாபிடித்து எழுதிய முதல் எழுத்தாளர் நீங்களாகத்தான் இருக்கும்… இப்போது வரைமுற்போக்கு எழுத்தாளராக காட்டிக்கொள்ளும் பலரும் கூட எடுத்துக்கொள்ள
மறுத்த ஒரு விஷயத்தை, அலசி ஆராய்ந்து துணிந்து கருத்தைதெரிவித்தீர்கள்…. அதற்காக ஒட்டுமொத்த ஒருபால் ஈர்ப்பு சமூகத்தின்சார்பாகவும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்…..

இப்போது எங்கள் சமூகத்தை பொறுத்தவரை நானும் ஒரு கதாசிரியன்…. எங்கள்வலிகளை கதைகள் மூலம் வெளிப்படுத்திக்கொள்ள நாங்களே எடுத்துக்கொண்டகளம்தான் இந்த கதைகள்….

அப்படி முழுக்க முழுக்க ஒருபால் ஈர்ப்பு நபர்களின் வாழ்க்கையைக் கதையாகவும், கட்டுரையாகவும் எழுதி வருகிறேன்… உங்களை போன்ற நல்லஉள்ளங்களின் ஆதரவு இருந்தால், எங்கள் சமூகத்தின் சிக்கல்களை இன்னும்சிரத்தையோடு நாங்கள் வெளியுலகிற்கு கொண்டு சேர்ப்பிக்க முடியும்…. அதை நீங்கள் செய்ய வேண்டுமாய் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்கிறேன்…..

மிக்க நன்றியுடன்,
என்றைக்கும் உங்கள் வாசகனாக,
விஜய் விக்கி….

என் வலைப்பூ – http://envijay.blogspot.in

***

அன்புள்ள விஜய்

உங்கள் வலைத்தளத்தில் வந்த கதைகளை வாசித்தேன். நல்ல முயற்சி. நாம் அதிகம் கவனிக்காத, பேசாத ஓர் உலகத்தை இயல்பாக எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். இன்றையநிலையில் அந்த முயற்சிக்காகவே கவனிக்கத்தக்கது உங்கள் தளம்.

ஆனால் இத்தகைய கதைகளின் இலக்கியமதிப்பு வேறுசில அழகியல்கூறுகளாலும் தீர்மானிக்கபப்டும். இவை சற்று மாறுபட்ட உலகைச்சார்ந்தவை என்பதனாலேயே இயல்புவாத அழகியலே இவற்றுக்குச் சரிப்படும். அதாவது மிகக்கறாராக, எது நிகழ்கிறதோ அதைமட்டுமே சொல்லும் முறை. குறைவாகச் சொல்லும் முறை. கிட்டத்தட்ட ஜி.நாகராஜன் எழுதியதுபோல. இப்போது சுரேஷ்குமார இந்திரஜித் எழுதுவதுபோல

நேர் எதிரானது வணிக எழுத்தின் உணர்ச்சிகர நடை அல்லது தேய்வழக்குகள் மிக்க நடை. அதைக் கதைகளில் தவிர்ப்பது கதைகளின் சமநிலையைப்பேண உதவும். நல்ல உரைநடையில் தேய்வழக்குகள் இல்லாமல் எழுதும்போதே இவ்வகை எழுத்தின் இலக்கியத்தரம் உறுதியாகிறது. தொடர்ந்து எழுதுங்கள். இவ்வகை எழுத்துக்கள் வழியாக நம்முடைய சமூகப்பார்வை இன்னும் விரிவடையவும் நமது நீதியுணர்ச்சி இன்னும் மேம்படவும் வழிதிறக்கட்டும்

வாழ்த்துகள்

ஜெ

***

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை கட்டுரைகள்

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்

ஓரினச்சேர்க்கை அனிருத்தன் வாசுதேவன்

முந்தைய கட்டுரைஉரை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள்- உத்திகள்-கடிதங்கள்