பால்வெள்ளம்

இந்தத்தொகுதியில் உள்ள கதைகளை வெவ்வெறு மனநிலைகளில் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதினேன். கைதி கதை அறம் வரிசை கதைகளுக்காக எழுதப்பட்டது அப்போது சரிவர அமையவில்லை. அந்தக்கருங்குருவி கதைக்குள் வரும் வரை அந்தக்கதையில் என்ன சிக்கல் என்றே தெரியவில்லை. சில கதைகளை ஒரு மெல்லிய கற்பனாவாத மனநிலையில் நின்று எழுதியிருக்கிறேன். ஐம்பது வயதுக்குமேல் காதலை எழுதும்போது அது இன்னமும் இனிதாக, இன்னும் நுட்பமாக, பிரபஞ்சநாடகத்தின் இனியதொரு துளியாக ஆகிவிட்டிருக்கிறது. இக்கதைகளின் பலசுவைத்தன்மையே இத்தொகுப்பின் பலம்

தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தத் தொகுதியில் மிகவும் பிடித்த கதை அம்மையப்பம் தான். அதில் உள்ள நுண்மையான ஒரு கண்டடைதலை நான் என்வரையில் ஒரு சுயதரிசனமாகவே நினைக்கிறேன். நான் என்றும் கனவுகண்ட எழுத்துமுறை என்பது பஷீரிய எளிமைதான். கவிதையையும் தரிசனத்தையும் எளிய கதைக்குள்ளேயே அடையும் கைநுட்பம். அத்துடன் இன்னொரு கோணத்தில் வெறும் முள் எனக்கு நிறைவளித்த கதை. கல்வியை ஞானத்தை வெறும் முள்முடியாகக் காணும் நிலை என்பது ஆன்மீகக் கண்டடைதலின் ஒரு படி.

எனக்கு பலவகையிலும் நெருக்கமான இக்கதைகளை வாசகர்கள் முன் வைக்கிறேன். இந்தத் தொகுதியை எழுதிமுடித்த அன்று எனக்கு என் இனிய பிள்ளைகள் வானவன் மாதேவியின் கடிதம் ஒன்று வந்தது. என்றுமே உணர்ச்சிகள் கலவாமல் அவர்களை நினைத்துப்பார்க்க முடிவதில்லை. பெண்ணின் உள்ளிருந்து எழும் பாற்கடலுக்கு வானவன் மாதேவி இயலிசை வல்லபி இருவரை விடச் சிறந்த உதாரணம் சமகாலத்தில் எவர்?

இத்தொகுதியை அவர்களுக்கு பிரியத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

[வம்சி வெளியீடாக வெளிவந்துள்ள ‘வெண்கடல்’ தொகுப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்