பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்

ஜெ,

பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதை வாசித்தேன். கதைகள் எப்போதுமே வாழ்க்கையனுபவங்களின் தூண்டுதலில் இருந்துதான் வரும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலே அப்படிக்கிடையாது. கதைகள் வேறுகதைகளில் இருந்து உருவாவதும் அதே அளவுக்கு காணப்படுகிறது. போர்ஹெஸ் அப்படிச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய எல்லா கதைகளுமே வேறு கதைகளில் இருந்து வந்தவைதான் என்று சொன்னார். சரியாகச்சொன்னால் தனக்கு கதைகள் முக்கியம் இல்லை மெட்ட்ஃபர்கள்தான் முக்கியம் என்று போர்ஹெஸ் சொன்னார். மெட்டஃபர்களை பிற கிளாஸிக் படைப்புகளில் இருந்து எடுத்துக்கொண்டு அதைவைத்துத்தான் தன்னுடையகதைகளை எழுதுவதாகச்சொன்னார். போர்ஹெஸின் கதைகளை வாசித்தால் இதை அணுக்கமாக உணரமுடியும்

உண்மையானவாழ்க்கையனுபவங்களில் நமக்கு வாழ்க்கையிலிருந்து ஒரு riddle கிடைக்கிறது. அதைத்தொடர்ந்து நம் சிந்தனைகள் செல்கின்றன. அதைத்தான் கதைகளாக எழுதுகிறோம்.அதற்கு ஒரு அழகும் முக்கியத்துவமும் உண்டு. ஆனால் அவ்வாறு கிடைக்கும் கதைகளிலேயே யதார்த்தம்இருக்கக்கூடிய அளவுக்கு தத்துவமோ கவிதையோ இருக்காது. கவிதையோ தத்துவமோ இருந்தால்கூட மென்மையாக அது சொல்லப்பட்டிருக்கும். அப்படி நல்ல எழுத்தாளர்கள் வாழ்க்கையில் இருந்து எழுதிக்கொண்டவிஷயங்களில் இருந்து வாசிப்பு வழியாக கொஞ்சகொஞ்சமாக மெட்ட்ஃபர்கள் உருவாகி வருகின்றன. அதற்குப்பிறகுதான் அந்த மெட்டபஃர்களை வைத்து தத்துவமும் கவித்துவமும் நுட்பமாகப் பேசப்படுகின்றன. அப்போதுதான் கதையிலே [அல்லது கவிதையிலே] தத்துவமும் கவித்துவமும் அழுத்தமாக வரமுடியும். நாம் போர்ஹெஸில் காண்பது இதைத்தான். அவர் பேசக்கூடிய மெட்டஃபர்கள் எல்லாமே ஐரோப்பிய கிளாசிக் இலக்கியப்படைப்புகளில் பலமுறை பலகோணங்களிலே விவாதிக்கப்பட்டவைதான். அவற்றைக்கொண்டு போர்ஹெஸ் புதியகதைகளைச் சொல்கிறார்.

தமிழிலே தத்துவார்த்தமான கதைகளை எழுதியவர்களிலே புதுமைப்பித்தனும் மௌனியும்தான் முக்கியமானவர்கள். புதுமைப்பித்தனின் கயிற்றரவு ஒரு நல்ல உதாரணம். அந்த மெட்டஃபர் ஆதி சங்கரர் காலம்முதலே இருக்கக்கூடியது. நம்முடைய தத்துவமரபிலே ஒரு மெட்டபர் கிடைத்துவிட்டால் எல்லாரும் அந்த ஒரே மெட்டஃபரைக்கொண்டுதான் தங்களுடைய தத்த்துவத்தைச் சொல்வார்கள். அப்படி பலவகையிலே பேசப்பட்ட மெடஃபர் கயிற்றரவு. அதை புதுமைப்பித்தன் அழகாகமீண்டும் சொல்கிறார். எந்தெந்த ஞானிகளோ எங்கெங்கோ சொன்னதை புதுமைப்பித்தனின் கதாநாயகர் மலம்கழிக்கும்போது நினைத்துக்கொள்கிறார். இங்கே கயிற்றரவு கடித்துத் தொலைக்கிறது. மௌனி நம்முடைய மரபிலே உள்ள பட்டமரம் என்ற மெட்டபரை பல கதைகளிலே பயன்படுத்தியிருக்கிறார்.

பிரகாஷ் சங்கரனின் வேஷம் கதையைப்பற்றிச் சொல்வதற்காக இந்தக்கடிதத்தை எழுத ஆரம்பித்து வழிதவறிப் போய்விட்டேன். நீங்கள் சொல்வதுபோல என்னால் கச்சிதமாக இந்தமாதிரி விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வேஷம் கதை ஏற்கனவே தமிழிலே உள்ள மெட்டஃபர் ஒன்றை எடுத்துக்கொண்டு வேறு ஒரு விஷயத்தைச் சொல்ல முயல்கிறது. இந்த மெட்டபர் வேதாந்த்தத்தில் மிகவும் பழையது. ராமகிருஷ்ணர் கதையிலேகூட இது வரும். புலிவேஷம்போட்டுக்கொண்ட அண்ணனைப்பார்த்து தங்கை அழுவதையும் அவன் முகமூடியை அகற்றியதும் சிரிப்பதையும் ராமகிருஷ்ணர் சொல்வார். பிரம்மத்தை அறிவதற்கான உதாரணமாக. தமிழிலே ரா.ஸ்ரீ.தேசிகன் புலிவேஷம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதன்பிறகு அசோகமித்திரனின் புகழ்பெற்ற கதையான புலிக்கலைஞன் வந்தது. அதன்பிறகு நீங்கள் ஒரு கதை எழுதினீர்கள். லங்காதகனம். அதன்பிறகு சா.கந்தசாமி ஒரு கதை எழுதினார். புலிநகம் போட்டுக்கொண்டு கூத்துமேடையில் ஒருவனைக் கொல்வதைப்பற்றிய கதை. இரணியவதம் என்று நினைவு. நாசர் இயக்கிய அவதாரம் என்ற சினிமாகூட இதே கதைக்கருதான்

இந்த மெட்டபர் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டபடியே இருக்கிறது. மனிதனின் metamorphosis கதைக்கு எப்போதுமே உள்ள கருதான். சாமானியன் கலைஞனாக ஆவதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்தக்கதையில் கலைஞன் சாமானியனாக ஆவதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். அல்லது கலையின் முழுமையை அடையமுடியாத வெறுமையைச் சொல்லியிருக்கிறார். கலையை கேளிக்கையாகவோ வேடிக்கையாகவோ ஆக்கும் கும்பல் கலைஞனைக் கொல்கிறது. அவர்கள் வைத்திருப்பதும் வாள்கள் பொருத்தப்பட்ட பொறிதான்.

எனக்கு என்னவோ இந்தக்கதை வேறு ஒருவகையில் ராம் எழுதிய சோபானம் கதையுடன் ஒத்துப்போவதாக தோன்றியது அதிலே பாடிப்பாடிச் சாகக்கூடிய உஸ்தாத் படேகுலாமலிகான் இந்த ஆசானைமாதிரித்தானே. அவரும் அவரது கலை வழியாக தன்னைச்சூழ்ந்திருக்கக்கூடிய mediocracy இருந்து தப்புவதற்குத்தானே முயற்சி செய்கிறார்?

சண்முகம்
மதுரை

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைவேஷம், உறவு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபால்வெள்ளம்