பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்

ஜெ

பிரகாஷ் சங்கரனின் வேஷம் நீங்கள் எழுதிய லங்காதகனம் கதையின் இன்னொரு வடிவம். improvisation என்று இன்னும் சரியாகச் சொல்லலாம். அல்லது அதற்கான எதிர்வினை என்று. லங்காதகனம் கதையில் கதகளிஆசான் இழிவுபடுத்தப்பட்டு சுருங்கி உயிர்வாழக்கூடிய ஒரு கலைஞன். எலியின் அசைவுகள் அவரது உடலில் இருந்தன என்று அதில் கதை சொல்லக்கூடியவன் சொல்கிறான்.அவர் உக்கிரமான அனுமாராக ஆவது என்பது ஒரு பரிணாமம். தன்னைத் துறந்து கலையாக ஆகிவிடுவது. வேஷம் மூர்த்தி உடலில் கூடுவது. அதை முழுமைப்படுத்த வேஷக்குறையை அழித்துக்கொள்கிறார் லங்காதகனத்தின் ஆசான். அதன்வழியாக இந்த உலகுடன் உள்ள கடைசித்தொடர்பையும் முறித்துக்கொண்டு அவர் கலையின் உலகுக்குச் செல்கிறார். இந்த உலகம் என்பது குறைபாடுகளால் ஆனது. முழுமைக்கான சாத்தியப்பாடுகளாலும் ஆனது. கலையின் உலகம் என்பது இந்த உலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு முழுமைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனை உலகம். அங்கே போகிறார் ஆசான். கற்பனையே ஆனாலும் அது எரிக்கும் என்பதுதான் லங்காதகனம் கதையின் சாரம். கதையின் தலைப்பே அதைத்தான் சொல்கிறது.

பிரகாஷ்சங்கரன் அந்தக்கதையை நெருக்கமாகப் பின்தொடர்கிறார் என்பதைக் காணமுடிகிறது. கதையைக்கேரளப்பின்னணியிலே அமைத்திருப்பதுகூட அதனால்தானோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. வேஷம் கதையின் கதாநாயகன் ஆசான் என்றே அழைக்கப்படுகிறார். கலையில்லாத நாட்களில் தன்னை எளிமையானவராக வெளிப்படுத்தும் ஆசான் ஆட்டம் நிகழும்போது கலை வழியாக முழுமையை நோக்கிச் செல்கிறார். அந்த முழுமையினை ஊரே ரசிக்கிறது. கொண்டாடுகிறார்கள். புலிமாதிரியே இருக்கிறார் என்று ஒருவரைக் கொண்டாடுகிறார்கள். புலியே நேரில் வரும்போது அதைக்கண்டு பயப்படுகிறார்கள். எப்படியாவது அதைக்கொல்லத்தான் நினைக்கிறார்கள். கலையிலே உள்ள tamed truth அவர்களுக்கு தேவைப்படுகிறது. அல்லது வசதியாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தில் உள்ள raw truth அவர்களுக்குச் சரிப்படவில்லை.

உண்மையிலே அவர்கள் எவருமே நிஜப்புலியைப் பார்த்தது கிடையாது. நிஜப்புலியைப்பார்க்காதபோதுதான் கலையிலே உள்ள புலியை புலிமாதிரியே இருக்கிறது என்று ரசிக்கமுடிகிறது. புலிக்கும் ஆசானுக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் நிஜப்புலியைப்பார்த்ததுமே ஆசானுக்கும் நிஜப்புலிக்கும் உள்ள வேறுபாடுதான் முக்கியமானதாக தோன்ற ஆரம்பித்துவிடுகிறது

லங்காதகனம் கதையில் கலை உக்கிரமானதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் அச்சம்தரக்கூடியதாகவும் உள்ளது . நிஜம்தான் சாதாரணமாக, கட்டுப்பாடுள்ளதாக உள்ளது. இந்த சாதாரண யதார்த்ததில் இருந்து கலைக்குள் போய் தப்பிக்கிறார் ஆசான். வேஷம் கதையிலே நேர்மாறாக யதார்த்தம் உக்கிரமானதகாவும் கட்டுப்பாடற்றதாகவும் பயங்கரமானதகாவும் உள்ளது. கலை நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்கிவிடக்கூடியதாக உள்ளது. இந்த வேறுபாடுதான் பிரகாஷின் கதையின் மையம்.அவர் லங்காதகனத்துக்கு பதிலாக இந்தக்கதையை எழுதுவதற்கான காரணம் இதுதான் என நினைக்கிறேன்

வேஷம் கதையிலே வரும் ஆசானின் கலை உண்மையைச் சந்தித்ததுமே தோற்றுப்போகிறது. அதுவரை கலையிலே உக்கிரத்தைப் பார்த்தவர்கள் உண்மையை கண்டதுமே கலையை ஒரு பாவலாவாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். புலிகளியிலே உள்ள புலி அதன் பயங்கரத்தை இழந்து வேடிக்கையாக ஆகிவிடுகிறது. அந்த வீழ்ச்சி தாங்கமுடியாமல் ஆசான் இறக்கிறார்

லங்காதகனம் கதையிலே ஆசான் கலைக்குள் தப்பி ஓடி தன்னை உக்கிரமாக ஆக்கிக்கொண்டு அழிக்கிறார். வேஷம் கதையிலே ஆசான் கலையில் இருந்து யதார்த்ததுக்குள் ஓடிப்போய் சாகிறார். இரண்டு பார்வைகளை முன்வைக்கக்கூடிய கதைகள். முத்தாய்ப்பு போல அற்புதமான கதை. வாழ்த்துக்கள்

சிவம்

லங்காதகனம் வாசிப்பனுபவம்


லங்காதகனம் ஒரு கடிதம்

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைபால்வெள்ளம்
அடுத்த கட்டுரைநடன இசை- பைலா