புதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்

“உலகம் சுத்திக்காட்டிற இந்த பஸ்ஸில ஏறாத எண்டு சொல்லச்சொல்ல கேட்காமல் ஏறிப்போட்டாய்.இண்டைக்கு ரெண்டு மணித்தியாலம் சரி.”

பின் இருக்கையில் கதவடி மூலையில் இருந்த அந்தோனிப்பிள்ளை நினைவுகள் கலையமேற்கிலிருந்து சுள்ளெண்டு அடிக்கும் சூரியனை தடுக்க கையில் வைத்திருந்த பேப்பரை சிறிது பதித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.இரண்டு பெடியன்கள்.கைகளில் கொப்பிகளைப் பிடித்தவாறுநின்றிருந்தார்கள்.வெள்ளவத்தை மொட் ஸ்டடி சென்டர் தரிப்பிடத்தில் ஏறியிருக்கவேண்டும். யோசனையில் கவனிக்கவில்லை.

“அடேய் நான் 102 இல கொச்சிக்கடையில இருந்து வெள்ளவத்தைக்கு கிளாஸுக்கு வாறதுக்கிடையில மூண்டிடத்தில இறக்கிபோட்டாங்கள்.அதுதான் 102 வேணாம் என்டு 155 இல ஏறுவமெண்டனான்.பிந்திபோனாலும் கொஞ்சம் நிம்மதியாப்போகலாம்.”

பஸ்ஸில் அதிக கூட்டம் இல்லை.ஆனால் இருக்கைகள் நிரம்பியிருந்தன.அந்தோணிப்பிள்ளை தனது ஆறடி உயரமான திடகாத்திரமான உடம்பை சற்று அரக்கி இருந்தவாறு “ மகன் இதில இரு அப்பு” என்று மென்மையான குரலில் கூறினார்.

”கேசவன் நீ இரு.”
கேசவன் என்று கூறப்பட்டவன் நன்றி ஐயா என்றவாறு கிடைத்த இடைவெளியில் பின்னிருக்கையில் முதுகு முட்டாமல் அமர்ந்தான்.
மற்றைய நண்பன் அவனது மடியில் தன்னுடைய கொப்பிகளையும் அடுக்கினான்.கொப்பிகளின் மேல் அன்ரனி, தூயகணிதம்,A/L-95 என்று
எழுதப்பட்டிருந்ததைக் கவனித்த அவர் ”பெயர் என்ன அன்ரனியா?என்ர மகன்ட பெயரும் அதுதான்” என்றார் அதே மெதுவான குரலில். “தம்பியவைன்ட சொந்த இடம் எது?யாழ்ப்பாணமா?”
“ஓம்”
“யாழ்ப்பாணம் எவ்வடம்?”
“வேலணை.அன்ரனி குருநகர்.”
“ஓ.நான் பக்கத்து ஊர்தான். நாரந்தனை.படிப்பிச்சுக்கொண்டிருந்தனான். இடப்பெயர்வுக்கு முதல் வருசம்,எண்பத்தி ஒன்பதில பென்சன் எடுத்திட்டன்.”
“ஐயாவின்ர பெயர் என்ன?”
“அந்தோணிப்பிள்ளை,ஊரில எல்லாருக்கும் மாஸ்டர் என்டால் தெரியும்.”
“இவ்வளவு வளர்ந்த பிறகும் பிள்ளையா?”
“சும்மா இருடா அன்ரனி.உனக்கு யாரோட பகிடிவிடிறதெண்டு ஒரு வரையறை இல்லையா?”கேசவனின் குரலில் சிறிது கடுமை தெரிந்தது.
பெயர் மட்டுமில்லை.வாய்த்துடுக்கும் என்ட மகனை மாதிரித்தான் என்று அவர் நினைத்துகொண்டார்.மீண்டும் பழைய நினைவுகள் அவரை இழுத்துக்கொண்டன.

”இண்டைக்கு நேற்றா?நாங்க தான் பெரியவங்கள் எண்டதை ரெண்டாயிரம் வருசத்திற்கு முதலே திருவள்ளுவர் சொல்லிப்போட்டேரல்லோ.யாராவது இல்லையெண்டு சொல்லட்டும் பார்ப்பம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்தொழுதுண்டு பின் செல்வர் என்டு சும்மாவா சொல்லியிருக்கிறேர் ” என்றுவீட்டுக்கூடத்தில் இருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்த நண்பர்களுக்குஅந்தோனிப்பிள்ளை அடித்துவிட்டுக்கொண்டிருந்தார்.
“அது நெல்லு நடுறவங்களுக்குச்சொன்னது.போயிலை நட்டு மற்றவங்கட நுரையீரலை புடுங்கிறவங்களுக்கு சொல்லயில்லை.விளங்குதா?.” ஒரே அடியில் அடித்துவிட்டு வெளியே போய்க்கொண்டிருந்தான் அன்ரனி.
அவருக்கு சிரிக்கிறதா கோபப்படுறதா என்று தெரியவில்லை.முகத்தை கஷ்டப்பட்டு இறுக்கமாக்கி கொண்டு ”அது A/L ரிசல்ட் வரேக்குள்ள தெரியும்” என்று சத்தமாகச் சொன்னார்.அவன் இப்பொழுது கேட்கிற எல்லையை கடந்திருப்பான் என்று பிறகுதான் நினைத்தார்.
“மாஸ்டரின்ட மகன் வலுகெட்டிகாரன் தான்”
“என்ன கெட்டித்தனம்.கெட்டித்தனம் எல்லாம் இப்படி குறுக்காலதான் போகுது”என்றார் ஒரு சலிப்புடன்.
முதல்நாள் நடந்தது இன்னமும் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.ஊராத்துறைக்கு போய்டு வந்துகொண்டிருந்தவர் பெரியபுலம் வீதி முடக்கில்சைக்கிளைத்திருப்பினார்.அன்ரனி இன்னுமொருவனை சைக்கிள்ள ஏற்றிக்கொண்டு எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தான்.இவரைக்கண்டதும் சிரிப்பும் பேச்சும் நின்றுவிட்டன.உள் ஒழுங்கை ஒன்றுக்குள் சைக்கிளை திருப்பி வேகமாகசென்றுவிட்டான்.
“யாரை நீ சைக்கிள்ள ஏற்றி ஓடினனி?”
“கண்டனீங்கதானே பிறகேன் கேட்கிறீங்க”
“எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கு.பீற்றரின்ட மகனோட உனக்கென்னகூட்டு?அவன் உன்ர பள்ளிகூடமும் இல்லை.அவங்கள் போற சேர்ச்சும் வேற.”
“ஆறாம் வகுப்பு மட்டும் ஒண்டாத்தானே படிச்சனாங்கள்.அதுக்கு பிறகெல்லாநான் சென் பற்றிக்ஸிலும் அவன் சென்ட் அன்ரனிஸிலும் சேர்ந்தனாங்கள்.மறந்திட்டிங்க போல.கட்டிடங்கள்தான் வேறவேற.நிற்கிற நிலம் ஒண்டுதான்.”

இதற்கு பிறகு மகனுடன் அவர் அதிகம் கதைக்கிறதில்லை.கதைக்கப்போனால் ஏதாவது பிரச்சனைதான் வரும்.வாய்க்கு வாய்காட்டிக்கொண்டிருப்பான்.அப்பன்என்ட மரியாதையும் போயிரும் என்று நினைத்து ஏலுமானவரை பேசுவதை தவிர்த்துவிடுவார்.
இரண்டு மூன்று மாதங்கள் இப்படியே ஓடியது.பீற்றரின்ட மகளோட அவனைக்கண்டதாக பொன்னமாக்கா சொல்லீற்று போனா.இதைக்கேட்கிறதா விடுறதா என்று அவருக்கு குழப்பம்தான்.கேட்கப்போய் ஒண்டும் இல்லாததை நானே உருவாக்கிவிட்டிருவேனோ என்ற பயம் மனசுக்குள்.
இதற்கு சிலநாட்கள் கழித்து செருக்கன் சந்திக்கு போய்விட்டு ஒன்பதாம் கட்டையால வந்துகொண்டிருந்தார்.முன் சில்லில காற்று குறைவாக இருந்ததால் கல்லுகளில் பட்டு டங் டங் என்று எரிச்சலூட்டிக்கொண்டிருந்து. ‘முள்ளுக்கில்லு குத்திப்போட்டுதோ தெரியாது.வீட்டுக்குபோய் உடன காத்தடிச்சு பார்க்கவேண்டும் என்று அவரின் மனதில் ஓடியது.

தூரத்தில் கறுத்தக்கொழும்பான் மாமரத்தடியில் இரண்டு உருவங்கள்.சைக்கிளை வீதியோரமாக வேலியில் சாய்த்துவிட்டு மெதுவாக நடந்து சென்றார்.கிட்டத்தட்ட ஒரு னைபோல.கறுத்தகொழும்பான்சடைத்துப்பரவி உயர்ந்திருந்தது. தாழப்பதிந்திருந்தகொப்பில் அவன்.கால்கள் சைக்கிள் கரியரில் பதிந்திருந்தன.சைக்கிளின் கைபிடியை பிடித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள்.
சூரியன் படத்தொடங்கியிருந்தது.படுவெயிலின் கதிர்களில் இருவரையும் பார்த்தபோதுஅவருக்கு ஏனோ வந்தியத்தேவனும் குந்தவையும் கணப்பொழுதில் வந்து மறைந்தார்கள்.
மறுகணம் இரத்தம் சூடேறியது.அவர்களை நோக்கிவேகமாக அடி எடுத்துவைக்கசற்று தொலைவில் இருவர் பனைவளவிற்குள் இருந்துவருவது தெரிந்தது.நாய் வீட்டை வரட்டும் என்று கறுவிக்கொண்டே சைக்கிளை நோக்கி நடந்தார்.
சைக்கிளை கொண்டுவந்து மோதினவேகத்தில் முன்னால் இருந்த பூச்சாடியில் பட்டுஅது கவிழ்ந்தது.பூக்கன்றுகளுக்கு தண்ணிவிட்டுக்கொண்டிருந்த மனைவி ஏதோசொல்ல வாயெடுத்துவிட்டு அவரின் முகத்தில் தெரிந்த உக்கிரத்தை பார்த்து அமைதியானார்.
”பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத்தெரியவில்லை.பூக்கண்டு வளக்கிறியா?எட்டிஉதைந்த உதையில் இன்னும் இரண்டு பூச்சட்டி உடைந்தது.உன்ட மகன் பீற்றரின்டமகளோட ஊர் மேயிறான்.இண்டைக்கு அந்த நாய் வரட்டுக்கும் இரண்டில ஒன்று பார்க்கிறன்.”
”நீங்க சும்மா இருங்க அப்படியொன்றும் இருக்காது.வரட்டும் நான் மெதுவாகக்கேட்கிறன்.”

இரவு அவன் வந்த பொழுது இருவருமே அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை.அடுத்தநாள் வெள்ளெண பின்வளவு மாமரத்தில ஏறி இருந்து எதையோவாசித்துக்கொண்டிருந்த அன்ரனியிடம் அவர் வந்தார்.
“கீழ இறங்கெடா”
“என்ன சொல்லுங்க”
“இப்ப எந்த நேரமும் மரத்திலதான் இருக்கிறீங்க போல இருக்கு.இப்ப கொப்புள்ள மரத்தில ஏறிப்பழகினாத்தானே கொப்பில்லாத மரத்தில ஏறலாம்.”
“எனக்கு விளங்கேல்ல.விளங்கிறமாதிரி கதையுங்க.”
“உனக்கு என்னடா பீற்றரின்ட மகளோட கதை?”
“ஏன் கதைக்க கூடாதா? நேற்று நீங்க வந்திட்டு திரும்பிப்போனதை கண்டனான்.நீங்க நினைக்கிறமாதிரி ஒண்டும் இல்லை. நானும்,அவளும்,அவளின்ட அண்ணனும்,சிவம் மாமாவின்ட மகனும் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள்.அவங்கள் ரெண்டுபேரும் ஒண்டுக்குப்போறதிற்கு பனைவளவுப்பக்கமா போன நேரத்தில நீங்க வந்திட்டீங்க.”
“ஏதோ பார்த்து நடந்துகொள்ளு. என்ட தோட்டத்தில மிளகாய்,வெங்காயம்,போயிலை நடலாமே தவிர பனையை நடேலாது.அதை ஞாபகம் வச்சிருந்தா சரி.”

பஸ் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலைக்கடந்தது.கேசவன் வலது கையால் நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுகொண்டான்.
அந்தோனிப்பிள்ளை ஒரு ரெண்டு அங்குலம் எழுந்து அமர்ந்தார். “ஐயா தன்டபெயர் அந்தோனிப்பிள்ளை” என்று சொன்ன மாதிரி இருந்தது
அன்ரனியின் குரலில் ஒரு கிண்டல் இருந்தது.
“என்ட நிறைய சொந்தக்காரங்கள் சைவம்.இப்ப மருமகனும் சைவக்காரன்தான். ஒருவகையில தூரத்துச்சொந்தம்.மகள் விரும்பிறது தெரிஞ்சு வேணாம் என்டு சொல்லிப்பார்த்தன்.கேட்கவில்லை.பெடியன் கொஞ்சக்காலத்தில டென்மார்க் போய்ற்றான்.சரி இனி மறந்திடுவாள் என்று நினைச்சு நிறைய சொந்தக்காரங்க பிரான்ஸில இருந்தும் பக்கத்திலவிட்டால் பிரச்சனை எண்டு கனடாவிற்குஅனுப்பிவைச்சன்.ஒரு வருசத்தில எப்படி போனவளெண்டு தெரியாதுடென்மார்க்கிற்கு போய் அவனைக்கட்டிற்றாள்.சரி மேல்த்தோல சுரண்டிப்பார்த்தாநானும் சைவக்காரன்தானே என்டு விட்டுப்போட்டன்.இப்ப அவங்களுக்கு இரண்டுபிள்ளையளும் இருக்கு.நாலுமாதம் அங்க போய் நிண்டிட்டு போன கிழமைதான்வந்தனான்.”என்று பொதுப்படையாக கூறினார்.
“ஏன் அங்கையே நிண்டிருக்கலாமே?”
“எங்கட நாடுதான் திறம்.அங்கத்தை குளிரும் எனக்கு பிடிகேல்ல.அறுபத்தஞ்சு வருசம் இங்க இருந்து பழகிட்டன்.இனிக்கஷ்டம்.பனையைகொண்டு போய் பனிக்க நடேலுமா? “என்று சிரித்தார்.

அவருக்கு இன்னும் கொஞ்சக்காலம் பேரப்பிள்ளைகளுடன் இருந்திருக்கலாம்என்றுதான் நினைப்பு வரும்.டென்மார்க் வீதியொன்றில் நடந்த சம்பவத்திற்குபின்னர்தான் கெதியில நாட்டுக்குத்திரும்ப வேணும் என்று முடிவெடுத்தவர்.ரோட்டில போகும்போது ஒரு டேனிஷ்காரனை தவறுதலாக இடித்துவிட்டார்.அவன் டேனிஷில் ஏதோ கூறியவாறு ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுசென்றுவிட்டான்.அவன் கூறியது அவருக்கு புரியவில்லை.ஆனால் அந்த பார்வைபுரிந்தது.தெருவில் கிடக்கும் சொறிநாயை பார்க்கும் அதே பார்வை.

அந்த சம்பவம் அவரை கடுமையாக தாக்கிவிட்டது.வீட்டுக்கு வந்து மகளிடம்திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.இந்த நாட்டு மக்கள்மிகவும் நல்லவர்கள்.நட்புணர்வு மிகுந்தவர்கள்.ஒரு சிலர்தான் இவ்வாறுநிறவெறியுடன் நடந்து கொள்வார்கள் என்று மகள் திரும்பத்திரும்ப சொன்னாலும்அவரின் மனது கேட்க மறுத்தது.
ஸ்ரீலங்கா போகப்போவதாக கூறிவிட்டார்.எப்படிச்சமாதானப்படுத்தினாலும் அப்பாகேட்கவில்லை என்பது மகளைக் கோபப்படுத்தியது.

“அங்க போய் சிங்களவனிடம் அடி வாங்குங்க.அப்பதான் சரியா இருக்கும்.”
“சிங்களவன் வெட்டினாலும் சுட்டாலும் அவன்ட அடிமனதில பயமும் மரியாதையும்இருக்கு.அவங்கள்ள எவனோட பேசினாலும் கண்ணில அது தெரியும்”

இன்னும் கொஞ்ச காலம் நிண்டிட்டு வர போறன் எண்டு சொன்ன மனைவியை விட்டிட்டுஅடுத்த கிழமையே கொழும்புக்கு திரும்பிவிட்டார்.

பேருந்து தும்புள்ள சந்தியை நோக்கி திரும்பியது.எல்லாரும் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு இறங்குங்க என்ற நடத்துனரின் குரல் சிங்களத்தில் கேட்டது.

அடையாள அட்டையின் முன்னுள்ள புகைப்படத்தையும் ஆளையும் மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்துகொண்டு மறுபுறத்தை திருப்பினான் பச்சை சீருடை அணிந்தவன்.
நாகநாதர் அந்தோனிப்புள்ளே என்று வாசித்தவன்.வேலுப்புள்ளே இல்லையா என்று கூறியவாறு விசாரிக்க தொடங்கினான்.
“எங்க போறீங்க?”
“வத்தளைக்கு”
“என்னத்திற்கு?”
“வீடு பார்க்க”
“இப்ப இருக்கிறது எங்க?”
“வெள்ளவத்தையில.வாடகை கூட.வத்தளை என்றால் இதைவிடக்குறைவாய் கிடைக்கும்”
அனைவரினதும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சோதனை முடிந்தது.
கேசவனையும் அன்ரனியையும் கேள்விமேல் கேள்விகேட்டு கடைசியாகத்தான் பஸ்ஸில ஏறவிட்டாங்கள்.
அதுவரைக்கும் அந்தோனிப்பிள்ளை கண்ணாடிக்கு வெளியில் தலையை விட்டு ஐயோ பிள்ளையளை விட்டிட வேணுமே என்ற பதட்டத்துடனேயே இருக்கை நுனியில் இருந்தார்.
மீண்டும் பஸ் புறப்பட்டது.
“தாண்டிக்குளத்தை தாண்டினால் நிப்பாங்கள்தானே.அங்கபோய் பிடிக்கவேண்டியதுதானே. அதுக்கு பயம்.இங்க சும்மா எங்களைபோட்டு” என்று தாழ்ந்த குரலில் அன்ரனி நக்கலடித்ததை இடைமறித்து முறைத்த கேசவன் “வாயை மூடிக் கொண்டுவா” என்றான்.
“ஐயாவிற்கு எத்தனை பிள்ளையள்?” கேசவன் பேச்சை திசைமாற்றினான்.
ரெண்டு.டென்மார்க்கில இருக்கிறவா மூத்தவா.மற்றது மகன்.”
“அவரும் வெளிநாட்டிலா?”
“ம்” அவரின் முகத்தில் சிறு குழப்பம் தெரிந்தது.
“எந்த நாடு?”
“தெரியெல்ல.வேற சாதியில கலியாணம் கட்டிக்கொண்டு போய்ற்றான்.என்னோட தொடர்பில்லை.
அவரின் கற்பனையில் மகனை அவ்வாறுதான் நினைக்கவிரும்பினார். தொண்ணூறாம் ஆண்டு வலம்புரி இராணுவ நடவடிக்கையின் மூலம் சிங்களப்படைகள்யாழ்ப்பாணத்தின் மேற்கிலுள்ள தீவுகளை கைப்பற்றிகொண்டன.பெரும்பாலான மக்கள் குடாநாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.அன்ரனி,பீற்றரின்ட மகன் செபஸ்டியான், பீற்றரின்ட மகள்,சிவத்தின்ட மகன் என்று நிறையப்பேர் இயக்கத்திற்கு போய்விட்டார்கள்.
தொண்ணூற்றியொண்டில ஆனையிறவுச்சண்டையில காயப்பட்டு கிடக்கேக்கதான் அவர் அன்ரனியை கடைசியாக பார்த்தவர்.அவனும் இன்னும் சில போராளிகளும் காயப்பட்ட பொழுது செபஸ்டியான் தலைமையிலான மீட்பு அணிதான் அவர்களைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் அதன் பின்னர் அவ்விடத்தில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் வேறுசில போராளிகளும் வீரச்சாவடைந்து விட்டதாக மகனின் மூலம் அறிந்து கொண்டார்.
“விலகிவா அப்பன்.உன்னை விட்டா எனக்கு யார் இருக்கிறாங்க?”
“அக்கா இருக்கிறா.அது போதும் உங்களுக்கு”
அதுதான் கடைசி.அதன் பிறகு அம்மாவும் அப்பாவும் தனிய இருக்கவேணாம்.கொழும்பில் வந்து இருங்க என்று மகள் நெடுகலும் வற்புறுத்தினதால கொழும்புக்கு வந்துவிட்டார்.
வழமைபோல வெரித்தாஸ் தமிழ்பணி செய்தியை போட்டார்.செய்திகேட்க வானொலியைப்பிடிக்கிற கையில் எப்போதும் ஒரு நடுக்கம் இருக்கும்.கடலில் நடந்த கடும் சண்டையை செய்தி சொல்லிகொண்டிருந்தது.இந்தச் சண்டையில் லெப்டினன்ட் கேணல் தமிழேந்தி எனப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரனிதாஸ்..

“அந்தோனியாரே என்னை கைவிட்டுடீரே”

பஸ் இப்பொழுது மருதானையை சந்தியில திரும்பியது.

கேசவன், “ஐ யா அழுகிறேர் போல இருக்கு”

“ஒண்டும் இல்லையப்பன்.கண்ணாடி போடவேணும்.போட இல்லை.அதுதான்.”
பஸ் ஆமர்வீதி சந்தியை அடைந்தது.இருவரினதும் தலைகளை தடவியபடி வாறன்
பிள்ளையள் என்றவாறு இறங்கினார்.சந்தியைக்கடந்துவந்து 107 பஸ்ஸில் ஏறி நாயக்க கந்தையில் இறங்கினார்.

சேர்ச்சுக்கு இடதுபக்கம் திரும்பினால் சரி.அப்படித்தான் புரோக்கர் சொல்லி இருந்தவன்.மேல் பொக்கற்றில் கையைவிட்டுப்பார்த்தார் விலாசம் இருந்தது.

“மாஸ்டர்”

திரும்பிப்பார்த்தார்.

பீற்றர்.

“எங்க மாஸ்டர் இந்தப்பக்கம்.நான் இங்க இடதுபக்கமாத்தான் இருக்கிறன்.வீட்ட வந்திட்டு போங்க.”
“பிள்ளையள் எப்படி இருக்கிறாங்க?”

“மூத்த ரெண்டின்ட கதையும் உங்களுக்கு தெரியும்தானே.மூண்டாவதும் நாலாவதும் பிரான்ஸில.கடைக்குட்டி இப்ப A/L படிக்கிறாள்.”

“இந்த வீட்டை இப்பதான் வாங்கித்திருத்தினனாங்கள்.”

“மாஸ்டர் டீ குடிப்பீங்களா?”

“இதென்ன கேள்வி அதெல்லாம் பழைய காலம்”

“டீ நல்லா இருக்கு.”

“ஊரைப்பற்றி கதைத்துக்கொண்டு இருந்ததில நேரம் ஓடியதே தெரியேல்ல.இருட்டப்போகுது.
அப்ப நான் வாறன்.”

“சரி மாஸ்டர் இங்கால என்ன விஷயமா வந்தனீங்க?”

“நாயக்க கந்த சேர்ச்சை பற்றி கேள்விபட்டன்.அதுதான் ஒருக்கா பார்த்திட்டு
போவம் எண்டு வந்தனான்.”

முந்தைய கட்டுரைசிறுகதைகள் இரு விமர்சனக்குறிப்புகள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]