அறம் கடிதங்கள்

அறம் விக்கி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களே,
மதிப்புமிகு ஜெயமோகனுக்கு,
வணக்கமும் நல்வாழ்த்துக்களும்

உங்களுடைய அறம் தொகுதிக்கு எஸ் ஆர் எம் பல்கலை அறக்கட்டளை வழங்கும் தமிழ்ப் பேராய விருது கிட்டியது பற்றி பெருமகிழ்ச்சி. தொகுதியிலுள்ள கதாபாத்திரங்கள் சிலருடன் நேரடி அறிமுகமும் பரிச்சயமும் ஏற்கனவே எனக்கு சித்தித்திருந்ததனால், அந்தக் கதைகளில் துலங்கிய உண்மையின் தரிசனம் நீண்ட நாட்களாக என் நெஞ்சில் நிலைத்திருந்தது.

கோமல் சுவாமிநாதன், ஜெயகாந்தன், கும்பகோணம் எம்.வி. வெங்கட்ராம், மிக இளமையில் என்னை ஆட்கொண்ட மாபெரும் கலைஞன் தி.ஜானகி ராமன் என்று அந்தக் கதைகளுக்குள் அவர்களெல்லாம் உயிர்கொண்டு உலவுகிறார்கள். அல்லது அவர்களே அறம் தொகுதிக்குள்ளிருந்து இன்னும் எழுதிக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு எனக்குள் ஓடுகிறது.

பல்கலைக்கழக மாணவர்கள் அதிலும் வைத்தியர்கள், வக்கீல்கள், சமூகத்தின் பெரும்பதவிகளில் அமர்ந்திருக்கும் அல்லது அமர்ந்திருக்க ஆசைப்படும் அனைவரும் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டும். அல்லது அவர்கள் கற்கும் பல்கலைக்கழகங்களில் இவற்றையொரு பாடநூலாக அமரச் செய்ய வேண்டும்.

டாக்டர்களாலும் வக்கீல்களாலும் பொறியியலாளர்களாலும் நாளைய உலகம் நிறைந்து வழியும் பொழுது நம்மால் மனிதர்களைக் காண முடியாமல் போகும். மனிதர்களை இவ்வாறான படைப்புகள்தான் அதி மனிதர்களாக மாற்றுமென நம்புகிறேன். ஆனால் இதைப் படிப்பதன் மூலம் ஒருபோதும் அவர்களால் பரீட்சையில் ஒரு கால் புள்ளியைக்கூடப் பெற முடியாமல் போகும் என்பதுதான் இன்றைய நடைமுறை வாழ்வின் யதார்த்தமாக இருக்கிறது.

உங்களின் புதிய எழுத்துகளைப் படிக்க ஆசை.

மீண்டும் வாழ்த்துக்கூறி விடை பெறுகிறேன்.

அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஹனீஃபா அவர்களுக்கு,

நலம்தானே? வழக்கம்போல நலமாக, உற்சாகமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு வேளாண்மை விஷயமாக சென்றபோது உங்களை நினைத்துக்கொண்டேன். ஆளுயர வாழைக்குலையுடன் நீங்கள் நிற்கும் காட்சி கண்ணுக்குள் வந்தது.

வாழ்த்துக்களுக்கு நன்றி

ஜெ

எனது பெயர் ராஜேஷ். தங்கள் உடைய ‘அறம்’ சிறுகதைகள் படித்தேன்.
அதில் அறம், சோற்றுக்கணக்கு, வணங்கான்
தாயார் பாதம், யானை டாக்டர், நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை
மெல்லிய நூல், பெருவலி, உலகம் யாவையும்​ – கதைகள் என்னை மிகவும் பாதித்தன.

உங்கள் எழுத்துக்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.​

​அன்புடன்,
​ராஜேஷ்
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com

அன்புள்ள ராஜேஷ்

நன்றி

அறம் என்னுடைய கதையுலகுக்குள் நுழைவதற்கு மிகச்சிறந்த வாசல். வருக

ஜெ

முந்தைய கட்டுரைதிருப்பூரில்…
அடுத்த கட்டுரைதொலைதல் பற்றி…