அன்புள்ள ஜெ
ராஜகோபாலனின் கன்னிப்படையல் வாசித்தேன்.. கண்கலங்கச்செய்யும் கதை. இன்று நம்முடைய சமூகத்தில் நாம் கண்டுகொண்டிருக்கும் பல விஷயங்களை வைத்துப்பார்க்கும்போது செவிட்டில் அறைந்தது போல இருந்தது. சுரணையற்றுப்போன நீதிமன்றங்களும் சமூகமனசாட்சியும்தான் இந்தக்கதைக்கு சாட்சிகளாக இருக்கவேண்டும். இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை
பத்மா நாராயணன்
அன்புள்ள ஜெயமோகன்
ராஜகோபாலனின் கதை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அவரது வாயுக்கோளாறு கதையிலே உள்ள நடைக்கும் கதைசொல்லக்கூடிய முறைக்கும் இந்தக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. இப்படி வேறுவகையான ஒரு கதையை எழுதமுடிந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உணர்ச்சிகரமான கதை. அழுத்தமான முடிவு
சுந்தரம் கெ.
அன்புள்ள ஜெ,
சிவம் மீண்டும். கன்னிப்படையல் வாசித்தேன். சிறப்பான கதை. உணர்ச்சிகரமான கதை. அந்தப்பெண்குழந்தையின் கேள்வி மனதை உடையச்செய்தது. நாம் எங்கே வந்து நின்றிருக்கிறோம் என்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. கடவுளிடம் கேட்பதுபோல அந்தக்குழந்தை ஒரு பெரிய மன்றாடலை முன்வைக்கிறது. சமூகம் அதற்கு முன்பு கற்பாறையைப்போல அர்த்தமில்லாமல் நின்றுகொண்டிருக்கிறது.
சிவம்
அன்புள்ள ஜெ
தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கதைகள் எல்லாமே முக்கியமானவை. ஆனால் நேற்று வெளிவந்த ராஜகோபாலனின் கன்னிப்படையல் என்ற கதையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நல்ல கதைதான். நன்றாக எழுதியிருக்கிறார். ஆனால் சாராம்சத்தில் மிகமிக மோசமான ஒரு கொள்கை அதற்குள் உள்ளது.
வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபெண்ணுக்கு கன்னிப்படையல் உண்டா என்ற கேள்வியே தப்பானது. அந்தப்பெண்குழந்தை அதைக் கேட்பது கொடுமைதான். அந்தக்குழந்தைக்கு அப்படி சொல்லிக்கொடுத்திருக்கிறோம். அதை ஒருவன் ஒரு பெண்ணுடன்வல்லுறவு கொண்டால் களங்கம் அவனுக்கு அல்ல அவளுக்குத்தான் என்று அவளே நம்புகிறாள். அதை அந்தத் தகப்பனும் நம்புகிறான். ஆனால் கதைசொல்லியும் அதை உணர்ச்சிகரமாக முன்வைக்கிறார் என்பதுதான் உறுத்துகிறது.
கன்னித்தன்மை புனிதமானது போன்ற புளித்துப்போன சிந்தனைகள்தான் பெண்களுக்கு பெரிய தண்டனை. அந்த நம்பிக்கைகளைப் பரப்புவதும்கூட ஒருவகை குற்றம்தான். அந்த நம்பிக்கைகள் இருப்பதனால்தான் ஒரு பெண்ணை பழிவாங்க அவளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. கற்பழிப்பு போன்ற சொற்கள்கூட இன்று மாற்றப்படும் சூழலில் கன்னித்தன்மை போன்ற சொற்கள் மிகமிகத் தவறான விளைவை உருவாக்கக்கூடியவை
செம்மணி அருணாச்சலம்