பீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

வேதாவின் “பீத்தோவனின் ஆவி” படித்தேன்.

சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”.

http://www.youtube.com/watch?v=ZiiDf-HmkCE

சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது.

வண்ணதாசன் அவர்கள் முகநூலில் பகிர்ந்த அருணா சாய்ராமின் “என்ன கவி பாடினாலும்” தேடும் போது கிடைத்த இப்பாடல் மதுரை சோமுவின் குரல் மற்றும் லால்குடி ஜெயராமனின் வயலின் இரண்டும் கொடுக்கும் துக்கம் தாளமாட்டாதது. இரவு பதினோரு மணிக்கு பைக்கில் வீடு திரும்புகையில் கேட்டுவிட்டு கண்ணீர் மறைத்ததால் வண்டியை நிறுத்த வேண்டியிருந்தது.

இதில் வினோதம் என்னவெனில் கேட்கவேண்டும் என்று நினைக்கையில் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. கேட்டவுடன் அதே அளவு துக்கம் சூழ்ந்து கொள்கிறது.

பீத்தோவனின் ஆவி, அந்த மகிழ்ச்சியை கிளறிவிட்டதால் இக்கடிதம்.

நல்ல அனுபவங்களை கிளறும் எந்த ஒரு படைப்பும் நல்ல படைப்புதான். அவ்வகையில் என் பட்டியலில் “பீத்தோவனின் ஆவி” இணைகிறது. வேதா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி ஜி
பெங்களூரு

பி.கு.: எனக்கு எந்தவொரு இசை வடிவின் அடிப்படையும் தெரியாது. சேரா கொடுக்கும் நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். (“இசையைப்பற்றி விவாதிக்க இசையைக கற்றிருக்க வேண்டும் என்பதில்லை. இசையை ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.”)

மூர்த்திஜி

அன்புள்ள ஜெ

நீங்கள் கேட்டுக்கொண்டதனால் பீத்தோவனின் ஆவி வாசித்தேன். அதன்பின் இன்று சோபானம் கதையினை வாசித்தேன். இருகதைகளையும் நான் வாசித்தது ஒரு இசைக்கலைஞனாகத்தான். எனக்கு கர்நாடகசங்கீதத்தில் பெரிய ஆர்வம் இல்லை என்பதைச் சொல்லிவிடுகிறேன். கர்நாடகசங்கீதம் பஜனையாக மட்டும்தான் இருக்கமுடியும் என்பது என் எண்ணம். அதிலே மனுஷ உணர்ச்சிகளுக்கு பெரிய இடம் கிடையாது. பக்திமட்டும்தான். அதை விவாதிக்கவரவில்லை. நான் மேற்கத்திய கிளாசிக் இசையில்தான் ரசனையும் பயிற்சியும் உடையவன். என் தொழிலே அதுதான்.

பீத்தோவனின் ஆவி கதையை ஏற்கனவே என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லி நான் கேள்விப்பட்டேன். நான் ஆறுமாசமாக இண்டர்நெட்டே வாசிக்கவில்லை. அவர் சொன்ன குறைகளை தெரிந்துகொண்டபிறகுதான் கதையினை வாசித்தேன்.

அவர் சொன்னார் இந்தக்கதை கர்நாடகசங்கீதத்தை தூக்கிப்பிடிக்கிறது. இந்தக் கதையை எழுதியவருக்கு மேற்கத்திய கிளாசிக்கல் இசையைப்பற்றி ஒன்றுமே தெரியாது, மேற்கத்திய கிளாசிக்கல் சங்கீதத்திலும் இம்ப்ரொவைஸேஷனுக்கு நிறைய ஸ்கோப் உண்டு என்று தெரியாமல் எழுதிவிட்டிருக்கிறார், பெரிய மேற்கத்திய இசைமேதைக்கு இந்திய சங்கீதத்தில் ஆலாப் என்ற ஒன்று உண்டு என்று தெரியவில்லை என்று எழுதியிருப்பது அசட்டுத்தனம், இந்தமாதிரி நிறையச் சொன்னார்.

பொதுவாக இன்றைக்கு மேற்கத்திய கிளாசிக்கல் சங்கீதம்பற்றி அதிகமாகத் தெரியாதவர்கள் அதைப்பற்றி நிறையப்பேசுவது காணக்கிடைக்கிறது. முக்கியமான காரணம் அதை எவரும் கொஞ்சம் கவனித்தால் கேட்கலாம் என்பதுதான். இந்தியசங்கீதம் போல ஆர்வமில்லாதவர்களுக்கு பிடிக்காத மாதிரி அது இருக்காது. மேலும் நாமெல்லாம் சினிமாசங்கீதம் வழியாக மேற்கத்திய இசையை கொஞ்சம் கேட்டுப்பழகியிருக்கிறோம். எல்லாவற்றையும் விட புஸ்தகங்கள் வழியாகவும் இண்டர்னெட் வழியாகவும் யார்வேண்டுமானாலும் மேற்கத்திய சங்கீதத்தைப்பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளமுடியும்.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஒரு சின்னச்சுற்றுச்சூழலிலே பெரிய இசையறிஞர் மாதிரி காட்டிக்கொள்பவர்கள் உண்டு. அவர்களைத்தான் நான் நிறைய பார்த்திருக்கிறேன். நான் பத்துவருடம் முன்பு ஓட்டலில் வாசிக்கும்போது என்னிடம் வந்து பெரிய மேதாவிகளை மாதிரி பேசுவார்கள். அப்படிப்பேசுபவர்களே ரெண்டு வகை. ஒரு வகைக்காரர்கள் ஏதோகொஞ்சம் தகவல்களைச் சொல்லி ஆலோசனை வழங்கிவிட்டுப் போவார்கள். இன்னொரு சிலபேர் பெரிய கோபம் கொண்டவர்களைப்போல வந்து திட்டுவார்கள் ஏதோ சில தப்புகளைக் கண்டுபிடித்துவிட்டு அதை தாளமுடியாமல் வந்து பேசுவதுபோல பேசுவார்கள். எங்களுக்கெல்லாம் சிலசமயம் சிரிப்பாக இருக்கும். எரிச்சலாகவும் இருக்கும். ஆனால் சிரித்துக்கொண்டு பணிவாகப் பேசி விட்டுவிடுவோம். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மேற்கத்திய சங்கீதம் கேட்கக்கூடியவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் என்பதுதான் காரணம். நண்பர் சொன்ன கருத்துக்களெல்லாம் அப்படிப்பட்ட கருத்துக்கள்தான்.

பீத்தோவனின் ஆவி கதை கர்நாடகசங்கீதத்தை தூக்கிப்பிடிக்கவிலலை. அது சொல்லக்கூடிய ஆலாபனை இந்துஸ்தானி இசைக்கு உரியது. அதையும் கதையிலே மேற்கத்தியசங்கீதத்தைவிட தூக்கிப்பிடிக்கவில்லை. அதுவும் இதுவும் எல்லாமே சமம்தான் என்றுமட்டும்தான் சொல்கிறது. அதோடு சேரா என்றுசொல்லப்பட்ட அந்தப் பெண்மணியை இசைநிபுணராக அது காட்டவில்லை. அவள் கம்போஸர் கிடையாது. பெர்ஃபார்மர்தான். மேற்கத்தியசங்கீததிலே வித்வான்களில் 99 சதவீதம்பேரும் பெர்ஃபார்மர்கள்தான். ஆனால் மேற்கத்திய சங்கீதத்திலே அது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. ஆர்கஸ்டிரேஷனை மையமாகக் கொண்ட ஒரு இசை ஆகையினால் வழ்க்கையையே அர்ப்பணித்தால் மட்டும்தான் ஒரு நல்ல பெர்ஃபார்மராக ஆகமுடியும். இங்கே ஐந்து வருஷம் பழகிவிட்டு கச்சேரி செய்வதுபோல செய்ய முடியாது.

சேராவுக்கு ஆலாப் பற்றி ஒன்றும் தெரியாமலிருப்பதை நானே நிறைய கண்டிருக்கிறேன். 99 சதவீதம்பேருக்கும் பிறசங்கீதங்களைப்பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. இங்கே உள்ள சங்கீதத்தைப்பற்றி மட்டும் இல்லை. அங்கே உள்ள வேறு சங்கீதம்பற்றிக்கூட தெரிந்திருக்காது. அப்படி அர்ப்பணமாக இருந்தால்தான் அங்கே சாதிக்கமுடியும். எனக்கு அது தப்பாகத்தெரியவில்லை. அதுதான் சரியான வழி என்றுதான் எனக்கே என்னுடைய குருநாதர்கள் சொல்லியிருக்கிறார்கள். திடீரென்று இன்னொரு இசையைக் கேட்கும்போது அவர்களுக்கு பிடிப்பதும் இல்லை.இது நமக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். சேரா என்பவர் அந்தமாதிரி ஒரு இசையை திடீர் என்று ரசிக்கிறார் என்றால் அது அவருக்கு தனிப்பட்ட துக்கம் இருப்பதனால்தான். அந்தமாதிரி ஒரு நிலைமை இல்லை என்றால் கொஞ்ச நேரத்திலேயே மேற்கத்திய இசைக்கலைஞர்கள் ‘ரிப்பிட்டிஷன்’ என்று சொல்லிவிடுவார்கள். ஆர்ட் கிடையாது ஸ்கில் மட்டும்தான் என்று நினைப்பார்கள். அதுவும் கதையிலே சொல்லிவிட்டிருக்கிறார் ஆசிரியர்

இந்துஸ்தானி சங்கீதத்தைப்போல ஆலாபனைக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய சங்கீதமே உலகத்திலேயே கிடையாது. அதனாலேயே அவர்கள் மிச்ச எல்லாத்தையும் தவற விட்டுவிட்டார்கள். பாதிக் கச்சேரிகளிலே தபலாவே எங்கேயோ ஓடிப்போய்க்கொண்டிருக்கும். மேற்கத்திய சங்கீதத்திலும் சுதந்திரமாக வாசிக்க இடம் கொஞ்சம் உண்டு. ஆனால் மேற்கத்திய இசை தெரிந்தவர்களுக்குத் தெரியும். அதெல்லாம் ரொம்ப ரொம்ப கட்டுப்படுத்தப்பட்டது என்று உள்ளே போனால்தான் தெரியும். ஏனென்றால் மேற்கத்திய சங்கீதமே பெரும்பாலும் ஆர்கஸ்ட்ரைசேஷன் சார்ந்தது. தனியாக ஒரே பியானோவோ வயலினோ வாசித்தாலும்கூட அப்படித்தான். அந்தக்கட்டுப்பாடுகளை அதிகம் மீறமுடியாது.

உங்களுக்குப்புரிகிற மாதிரி சொல்லவேண்டுமென்றால் கேரளத்திய செண்டை வாத்தியக்கச்சேரி மாதிரி. கேரளத்திலே தாளம் மட்டும்தான் உண்டு. ஆனால் அதில் ஆர்கஸ்ட்ரைசேஷனின் கட்டுப்பாடுகள் உண்டு. தவுலும் மிருதங்கமும் மாதிரி தனியாவர்த்தனம் வாசிக்க இடம் கிடையாது. அதேதான் சொல்கிறேன்

கதையிலே சேரா துக்கம் நிறைந்த மனநிலையுடன் இருக்கும்போது ஆலாப் மாதிரி ஆர்கஸ்ட்ரைசேஷனின் கட்டுப்பாடில்லாமல் மனசு ஓடக்கூடிய இடமெல்லாம் ஓடக்கூடிய ஒரு சங்கீதத்துக்காக ஏங்குகிறாள். இங்கே இருந்து அங்கே பார்க்கக்கூடிய ஒருவன் அப்படி ஒரு தனிச்சிறப்பெல்லாம் இங்கே கிடையாது, நீங்கள் பாடுவது இன்னொரு வகை சங்கீதம். அதிலும் எல்லாவற்றுக்குமே இடம் இருக்கிறது. சங்கீதம் என்பது மனசு அடையக்கூடியதுதானே ஒழிய சங்கீதவித்தையிலே பெரியதாக ஒன்றும் கிடையாது என்று சொல்கிறான். இதுதான் கதையிலே நான் வாசித்தது

ஆனால் நான் அந்தக்கதையிலே முக்கியமானதாக நினைத்தது நீங்களும் பீத்தோவனாக ஆகமுடியும் என்று சொல்லும் வரிதான். அதுதான் மேற்கத்திய சங்கீதத்திலே முக்கியமான விஷயம். நாம் ஒரு பெரிய சங்கீதத்தின் ஒரு சின்ன பகுதியாக ஆக மாறுவதை வாசிக்கையிலே உணரமுடியும். நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. பக்கத்திலே மொசாத் நின்று வாசித்துக்கொண்டிருப்பதை பார்ப்பது மாதிரி இருக்கும். நாமே நம்முடைய உணர்ச்சிகளின் போக்கிலே வாசிப்பது ஒரு விஷயம் என்றால் இது அதைவிட மேலான இன்னொரு விஷயம். அதை ஆசிரியர் சொல்வது சரியாகவே இருக்கிறது

ஆனால் நான் இந்தக்கதையை நல்ல கதை என்று சொல்லமாட்டேன். எனக்கு இது சங்கீதம் சம்பந்தமான ஒரு சர்ச்சை மட்டும்தான் என்றுதான் தோன்றியது. கதை ஒரு இடத்துக்கும் போய்ச்சேரவில்லை. அனுபவத்தை எழுதியதுமாதிரி இருந்தது. சங்கீதத்தைப்பற்றி பேசினால் அது கதை ஆகிவிடாது இல்லையா? வயலினையும் வீணையையும் ஒப்பிட்டு ரெண்டு வித்வான்கள் பேசுவதை எழுதினால் கதை ஆகாதுதானே?

ராமின் கதை எனக்குப்பிடிக்கவில்லை. பொதுவாக சங்கீதத்திலே கொஞ்சம் தூக்கலான உணர்ச்சிகள் உண்டு. அது சங்கீதத்தின் தேவைக்கு அப்படி அமையவேண்டும். சங்கீதத்தைப்பற்றி எழுதும்போது உடனே அந்தமாதிரி அதிகமான உணர்ச்சிகளை எழுதுவது எல்லாரும் செய்யக்கூடிய தப்புதான். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ரோமெய்ன் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோப் என்ற நாவலை சொல்லுவார்கள். அந்தமாதிரி அதிகமான உணர்ச்சிகளை சங்கீதத்தின் மீது ஏற்றி வைத்து பேசுவதை டால்ஸ்டாய் கூட எங்கோ சொல்லியிருக்கிறார். அதை நீங்களேகூட எங்கோ சொல்லி நான் வாசித்திருக்கிறேன். இந்தக்கதையும் அப்படித்தான். ஜாஸ்தியாக உணர்ச்சிகள். குடி, சாவு. பாடிக்கொண்டே சாவது எல்லாம் அப்படிப்பட்டவை.

எனக்கு அந்தமாதிரி கதைகளை அவ்வளவாக பிடிப்பதில்லை. சின்னவயதில் மாயவரத்தில் இருந்தநாட்களிலே ஜானகிராமன் மோகமுள்ளில் சங்கீதத்தைப்பற்றி எழுதியதை வாசித்து ரசித்திருக்கிறேன். அதெல்லாம் சங்கீதத்தைப்பற்றிய ரொமான்டிக் தாட்ஸ் மட்டும்தான் என்று நினைக்கிறேன்

சாம் ஜாஸ்

சாம்,

இசைஆய்வாளரும், இசைக் கலைக்களஞ்சிய ஆசிரியருமான நா.மம்முதுவை 1999 இல் நான் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் ஒரு தகவல் சொன்னார். இந்துஸ்தானி இசையில் உள்ள ஆலாபனை போன்ற சுதந்திரமான ராகவிரிவாக்க முறை ஐரோப்பிய இசையிலும் ஒருகாலத்தில் செல்வாக்குடன் இருந்தது என்று. பின்னர் ஐரோப்பாவின் மன்னர்சபைகள் மற்றும் மதச்சபைகள் வழியே செவ்வியலிசை உருவாகி வந்த படிப்படியான பரிணாமத்தில் ஒத்திசைவுக்கு அதிக அழுத்தம் அளித்து ராக விரிவாக்கத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்கள் என்று அவர் சொன்னார். அது அங்கே இசைக்கோப்பாளருக்கு மட்டுமுரிய சுதந்திரமாக ஆகியது என்றார். அதற்காக சில மேலையிசைக் கலைக்களஞ்சியங்களையும் மேற்கோள்காட்டினார். பேட்டி சொல்புதிது மும்மாத இதழில் வெளிவந்தது. பல கோணங்களில் தொடர்ந்து அங்கும் இங்கும் நூறாண்டுக்கும் மேலாக பேசப்பட்ட அந்தப்பிரச்சினையைத்தான் வேதா இந்தக்கதையில் கையாள்கிறார்.

ஆனால் நீங்கள் நினைப்பதுபோல இது இசை பற்றிய கதை அல்லது விவாதம் இல்லை. இசையையோ ஓவியத்தையோ அல்லது வேறு கவின்கலைகளையோ கையாளும் ஓர் இலக்கியப்படைப்பு உண்மையில் அவற்றை ஒரு முகாந்திரமாகவே எடுத்துக்கொள்கிறது. இசையைப்பற்றிப் பேசும்போது அது இசையைப்பற்றி பேசவில்லை. ஓவியம்பற்றிப் பேசும்போது அது ஓவியம் பற்றிப் பேசவில்லை. குறியீடுகளை உருவாக்க வசதியான ஒரு களமாகவே இலக்கியம் அந்தக் கவின்கலைகளை காண்கிறது. அந்த இலக்கியப்படைப்பை வாசிக்க இசையோ ஓவியமோ தெரிந்திருக்கவேண்டுமென்பதில்லை. அவற்றை குறியீடுகளாக உணருமளவுக்கு அக்கலைகள் மீதான அறிமுகமும் இலக்கியநுண்ணுணர்வும் இருந்தால் மட்டும் போதுமானது.

ழீன் கிறிஸ்தோஃப் இசையைப்பற்றிப் பேசக்கூடிய நாவல் அல்ல என்றே விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள். அது காமத்தையும் காதலையும் பற்றிப்பேசக்கூடிய நாவல். இசை அதற்கான குறியீடாகவே அதில் வருகிறது. காதல், இசை இரண்டுமே pure passion தான் என்ற பார்வை அதிலே மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அதிலுள்ள இசையை அப்படி உணர்ச்சிகள் பற்றிய குறியீட்டுரீதியான சித்தரிப்பு என நோக்கினால் அந்நாவல் ஒரு பெரிய செவ்வியல்படைப்பாக ஆகும். அதை வெறும் இசையாக மட்டுமே நோக்கினால் அது அன்றைய ஐரோப்பாவில் செவ்வியல் இசை சந்தித்த விவாதங்களைப்பற்றியதாக மட்டும் தெரியும். அந்தவிவாதமே இன்று காலாவதியாகிவிட்டது.

இதையே ஓரான் பாமுக்கின் மை நேம் இஸ் ரெட் நாவலில் கீழைக்கலை மேலைக்கலை பற்றிய விவாதத்துக்கும் சொல்லலாம். உம்பர்ட்டோ எக்கோவின் நேம் ஆப் ரோஸ் நாவலில் சுவரோவியங்கள் பற்றிய விவாதத்துக்கும் சொல்லலாம். ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலில் நடுக்காலகட்டத்து இறையியல்குறியீடுகள் பற்றி வரும் விவாதத்துக்கும் சொல்லலாம். அவை குறியீடாக அல்லாமல் வாசிக்கப்பட்டால் வெற்று விவாதங்களே.மோகமுள்ளுக்கும் இது பொருந்தும். மோகமுள்ளில் இசை பாபுவின் இன்னதென்றறியாத தாகத்தின் குறியீடு மட்டுமே. மோகமாகவும் அதற்கு அப்பாற்பட்ட ஒன்றுக்கான தேடலாகவும் மட்டுமே அது பேசப்படுகிறது. அது இசையைப்பற்றி பேசுமிடங்களை மீண்டும் கவனியுங்கள்.

வேதாவின் இந்தக்கதையில் வெறுமே இரு இசைவகைகளைப்பற்றிய விவாதம் மட்டுமே வந்திருந்தால் நீங்கள் சொல்வது சரி. மாறாக அது இசையை இரு பண்பாடுகளின் அடையாளமாகச் சுட்டிக்காட்டுகிறது. அந்த இரண்டு பண்பாடுகளுக்கும் நடுவே உள்ள ஒரு இடத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக்கோணத்தில் அந்த உரையாடல் வெறும் இசைவிவாதமாக இல்லாமல் பண்பாட்டு உரையாடலாகவே ஆகிவிடுகிறது. அத்துடன் இசை சேராவின் தனிப்பட்ட வாழ்க்கையின் துக்கத்துக்கும் குறியீடாக அமைகிறது. அதுதான் அந்தக்கதையை முக்கியமானதாக ஆக்குகிறது

ராமின் கதையைப்பொறுத்தவரை நீங்கள் வாசித்ததற்கு நேர் எதிர்கோணத்தில் நான் வாசிக்கிறேன். உச்சநிலைகளைச் சொல்ல விரும்புகிறார் ஆசிரியர். அதற்குப் பொருத்தமானவை இசையின் குறியீடுகள்தான் என்பதனால் அக்கதை இசையைப்பற்றிப் பேசுகிறது, அவ்வளவுதான்.

ஜெ

முந்தைய கட்டுரைஅறம் – ஒரு விருது
அடுத்த கட்டுரைபிரகாஷ் சங்கரன்