வேதா ,பீத்தோவனின் ஆவி – கடிதங்கள்

ஜெ,

வேதா எழுதிய கதை பீத்தோவனின் ஆவி கதை வாசித்தேன். இந்தவரிசையில் இதுவரை வெளிவந்த கதைகளிலே இதுதான் சிறந்த கதை என்று நினைக்கிறேன். பலவகையிலும் முக்கியமானது இந்தக்கதை. இசையைப்பற்றிப்பேசுகிறது என்றாலும் இசையின் வழியாக இரண்டு நாகரீகங்களைப்பற்றிப்பேசுகிறது என்றே எனக்குப்படுகிறது.

இந்தக்கதைக்குப்பின்னணியாக உள்ள சில பண்பாட்டு அம்சங்களைக் கவனித்தாகவேண்டும். நவ ஐரோப்பா என்பது சொல்லப்போனால் மூன்று இசைமேதைகளால் உருவாக்கப்பட்ட்து என்று சொல்வார்கள். என் நினைவு சரியென்றால் எலியட் அப்படிச் சொல்லியிருக்கிறார். மொசாத், பீத்தோவன், ஃபாக். பீத்தோவனின் ஆவி என அந்தப்பெண்மணியை ஆசிரியர் சொல்லியிருப்பதிலேயே கதை ஆரம்பித்துவிடுகிறது

மிகுந்த உயிர்த்துடிப்புடன் இருந்த ஐரோப்பியநாகரீகம் சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தேங்கிநின்றுவிட்டது என்ற விமர்சனத்தை இன்று பல இலக்கியவிமர்சகர்களும் பண்பாட்டு விமர்சகர்களும் சொல்லிவருகிறார்கள். என் நினைவு சரியென்றால் ஃபோர்ஹெஸ் சொல்லியிருக்கிறார். நாகரீகம் எரிந்து அணைந்த கனல்தான் ஐரோப்ப என்று அவர் சொன்னார்.

ஐரோப்பா அதன் கடந்தகால மேன்மைகளை மீண்டும் மீண்டும் நகல் செய்துகொண்டிருக்கிறது. அதைத்தான் பீத்தோவனை அச்சுஅசலாக நகல்செய்யும் அந்தப்பெண்மணி வழியாக இந்தக்கதை சுட்டிக்காட்டுகிறதென நினைக்கிறேன்

ஆனால் இங்கேயும் அதுதான் பெரும்பாலும் நடக்கிறது. சம்பிரதாயமாகப் பாடப்படும் சங்கீதம் என்பது ஏற்கனவே இருந்த சங்கீத்த்தை அப்படியே திரும்பிப்பாடுவதாகவே இருக்கிறது. ஆனால் இங்கே இன்று அதற்குள் தனிப்பட்ட ஆன்மாக்கள் தங்கள் குரலைத்தேடிக்கொண்டிருக்கின்றன.

அந்த இந்துஸ்தானிப்பாடகனின் பாட்டு என்பது தன் ஆன்மாவைத்தேடி இன்னும் கண்டுபிடிக்காத கிழக்கின் துக்கம்தான். அதைத்தான் அந்தப்பெண்மணி அடையாளம் கண்டுகொள்கிறாள். கிழக்கின் துக்கமும் பீத்தோவனின் ஆவியும் ஒரு இடத்தில் சந்தித்து ஹலோ சொல்லி பிரிகின்றன.

அற்புதமான அந்தத் தருணத்தை அலட்டிக்கொள்ளாமல் சொல்லியிருக்கிறார் வேதா. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சண்முகம்
மதுரை

அன்புள்ள சண்முகம்

கதைகளைப்புரிந்துகொள்ள எப்போதுமே உங்கள் கடிதங்கள் வழிகாட்டி. எனக்கே கூட

ஜெ

அன்புள்ள ஜெ

தமிழர்கள் பெருவாரியாக புலம்பெயர்ந்து வாழ ஆரம்பித்து ஒருதலைமுறைக்காலம் தாண்டிவிட்டது. இன்னும்கூட தமிழ் இலக்கியம் அதன் சின்ன எல்லைகளை உடைத்து வெளியே செல்லவில்லை என்ற எண்ணம் எனக்கிருந்தது. பீத்தோவனின் ஆவி கதை அந்த எண்ணத்துக்கு வந்த முதல் எதிர்தரப்பு என்று சொல்லவிரும்புகிறேன். இங்குள்ளவர்கள் மேற்கில் எழுதப்படும் எதையாவது முக்கிமோதி வாசித்துவிட்டு அதை இங்கே எழுத முயற்சிசெய்வார்கள். இந்தக்கதை அங்கே வாழ்ந்து அந்தப்பண்பாட்டை நுணுக்கமாக அறிந்து அதேசமயம் இங்கேயும் மானசீகமாக தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அரிய படைப்பு.

இந்தக்கதையுடன் என்னால் இணைத்துப்பார்க்கப்பட்ட ராஜாராவ் எழுதிய பாம்பும் கயிறும் என்ற படைப்பு. இது சாகித்ய அக்காதமியால் தமிழிலே வெளியிடப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியிலே பர்த்தேன். அறுபதுகளிலேயே புகழ்பெற்றிருந்த நாவல் அது. கிழக்கையும் மேற்கையும் தத்துவார்த்தமாக உரையாடச்செய்த அந்நாவலைப்பற்றி அதிகமாக தமிழிலே பேசப்பட்டதில்லை என்பது சோகம். ஆனால் அந்நாவலில் கிழக்கத்தியநாகரீகத்தைக் கொஞ்சம் தூக்கிப்பிடிக்கும் பார்வை உண்டு.

வேதாவின் கதையிலே கிழக்கும் மேற்கும் சுபாவமாக சந்திக்கின்றன. கிழக்கும் மேற்கும் ஒன்றை ஒன்று மட்டம்தட்டவோ தன்னை உயர்த்திக்கொள்ளவோ முயலவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள முயல்கின்றன.

நான் இரண்டு சங்கீதவகைகளையும் இந்தக்கதையை வைத்து ஒப்பிட்டு யோசித்துப்பார்த்தேன். எனக்கு சங்கீதம் அதிகமாகத் தெரியாது. மேலைநாட்டுச் சங்கீதம் கொஞ்சம்தான் அறிமுகம். ஆசிரியர் இரண்டு இசைகளையும் தெரிந்தவர் என்று தெரிகிறது. அந்த வாசிப்பிலே எனக்குத் தோன்றியது இதுதான். இந்தியஇசை மிகவும் personal ஆக இருக்கிறது. அதில் தனிமனித துக்கம் வழிந்து ஓடுகிறது. இங்கேஆலாபனைக்கு உள்ள சுதந்திரத்தைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

ஆனால் மேலைநாட்டு இசை impersonal ஆக இருப்பதேகூட மகத்தான விஷயம் என்று எனக்குப்படுகிறது. மலைகளும் கடல்களும் நதிகளும் எல்லாம் நம்மை விடவெளியே அப்படி impersonal ஆகத்தானே இருக்கின்றன. அதில் ஒரு பயங்கரமான விஷயம் இருக்கிறது அல்லவா? Something horrifying நான் சரியாகத்தான் சொல்கிறேனா என்று தெரியவில்லை.

அந்தப் பெண்மணியிடம் கதைசொல்லி சொல்லக்கூடிய வரிகள் இந்தக்கோணத்திலே மிகுந்த முக்கியமாக தோன்றுகின்றன. ’கொஞ்சநேரமாவது நீங்கள் பீத்தோவனாக ஆவது முக்கியம் அல்லவா’என்ற வரியையும் ‘பிறர் இயற்றிய இசை என்றும் அல்லது நாம் இயற்றிய சொந்த இசை என்றும் அகங்காரம் கொள்ள ஒரு மனிதனுக்கு என்ன தேவை இருக்கிறது?” என்ற கேள்வியையும் இப்படித்தான் புரிந்துகொள்ளமுடிகிறது. இசை வெளியே இருக்கிறது. இயற்கையை மாதிரி. நாம் அங்கே சென்று அதிலே கலந்துகொள்கிறோம்.

மேலைநாட்டு இசை வெளியே இருக்கும் இயற்கையைப்போல ஒரு பெரிய கட்டுமானத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. கட்டுமானம் என்று சொல்கிறேன். கட்டுமானம் என்பதைவிட காடு என்றுதான் சொல்லவேண்டும். நம்முடைய இசை நமக்குள்ளே ஒரு குரல்போல ஒலிக்கிறது. இரண்டும் சரிதான். இரண்டும் ஒன்றை ஒன்று அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய இடம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்

ஜெ, உளறுகிறேன் என்றும் தோன்றுகிறது. இந்த எண்ணங்கள் எல்லாம் இந்தக்கதையால் உருவானவை. அவ்வளவுதான். மற்றபடி நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று அர்த்தம் கிடையாது.

சுதாகர்

அன்புள்ள சுதாகர்,

மயில்கழுத்துக்குப்பின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி

ஜெ

ஜெ,

வேதாவின் கதை வாசித்தேன். இதேபோன்ற கருவில் நேர் எதிராக ஒரு கதையை பொ.கருணாகரமூர்த்தி எழுதியிருக்கிறார். ஜெர்மனியில் ஓர் இளைஞன் இரவில் இந்திய இசையை போட்டுக்கொண்டு ரெஸ்டாரெண்டை கூட்டித்துடைப்பான். அப்போது ஒரு வயதானவர் வெளியே குளிரில் நின்று அதை ரசிப்பார். அவரை இவன் உள்ளே கூட்டிவைத்து மது கொடுப்பான். அவர் கிழக்கு ஜெர்மனியைச்சேர்ந்த ஒரு மேலை இசை மேதை என்று தெரியவரும். அகதியாக வந்து ஒரு பாலத்துக்கு அடியில் தங்கியிருப்பவர். அவர் இந்தியஇசையை ரசிக்கும் காட்சி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் எதைக்கண்டார் என்ற எண்ணம் ஏற்பட்ட்து.

சிவம்

அன்புள்ள சிவராமன்,

நீங்கள் சொல்வது ’கலைஞன்’ சிறுகதை.

தி.ஜானகிராமன் கூட இதே கருவில் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு நாதஸ்வர வித்வான் வாசித்த தியாகையர் கிருதியை மொழியோ இந்தியஇசையோ அறியாத மேலைஇசைமேதை ஒருவன் கண்டுகொள்வதைப்பற்றிய கதை

ஜெ

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கதைகள் 6, பீத்தோவனின் ஆவி-வேதா
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்