நான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்

போத்திவேலுப்பண்டாரம் மேல் முதல் சில அத்தியாயங்களுக்குக் கோபம்தான் வந்தது. ஆனால் அவன் தொழிலையும் மீறி அவனையும் புரிந்துகொள்ள முடிந்தது தொடர்ந்த அத்தியாயங்களில்.
போத்திவேலுப்பண்டாரத்துக்கு இருந்த உருப்படி வியாபார அறிவு தாண்டவனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மலையாளத்தானின் மாட்டுக்கறி உணவையும் மீறித்தான் அந்த அறிவே வருகிறது. பண்டாரம் உருப்படிகளை பெற்கவைத்துதான் உருவாக்கினான் – வளர்ந்தவர்களை உருமாற்றுவதை கவலையோடுதான் பார்த்தான். தாண்டவனுக்கு அதுதான் தொழிலே.
தாண்டவன், கடவுளால் தண்டிக்கப்படவே படைக்கப்பட்டவன். அவன்மேல் கோபம் தவிர வேறெந்த உணர்ச்சியும் ஏற்பட்டுவிடலாகாது என்பது எழுதிவைக்கப்பட்ட விதி. ஒரு ஆக்ரோஷமான சண்டைக்கும், வரத்துக்கும தண்டனைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவதற்காகவும் பண்டாரம் தாண்டவனாகவும் ஓரளவு முருகனாக்வும் மாறி இருக்கலாம். ஆனால் தட்டையாகிவிட்டான்.
எருக்கு Vs அம்சவல்லி
இந்த ஒப்புமை எப்படி சரிவரும் எனத்தெரியவில்லை. ஏழாம் உலகத்தில் உருப்படிகளை மீறிய திறமையாளர்கள் (ஆடல் பாடல் குழு) வரவில்லை, எனவே அம்சவல்லி இல்லை. எருக்கு இரண்டிலுமே இருக்கிறாள். ஆனால் நான் ஒப்புமைப்படுத்த விரும்புவது அம்சவல்லியின் கற்பைக் காப்பாற்றும் ஆர்வத்தையும் எருக்கு போலீஸ் நிலையத்துக்கு சைக்கிள் காரியரில் வைத்து  எடுத்துச் செல்லப்படுவதும் பற்றி.
கற்பு என்பதைப்பற்றி படமும் புத்தகமும் மாறும் புள்ளிகள் முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது. அதுவே தாண்டவன், ருத்ரன் அம்சவல்லி ஆகியோரின் பாத்திரப்படைப்புகளை தட்டையாக ஆக்கிவிட்டதாகவும் கருதுகிறேன்.
பத்து லட்சம் கொடுக்கத் தயாராக உள்ள கோர சொரூபனிடம் செல்வதில் அம்சவல்லிக்கு மற்றவர்களால் ஏற்றப்பட்ட பயம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? அந்த கோர சொரூபனுக்கும், பத்து லட்சம் கொடுத்தால் வேறாரும் கிடைக்க மாட்டார்களா? குருட்டுப் பிச்சைக்காரி “அன்போடு” வந்தால் மட்டும்தான் ஏற்க முடியுமா?
எருக்கு காரியர் சவாரி பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முருகனின் தாலி மட்டும்தான் எல்லாவற்றையும் மீறி நின்றது அவளுக்கு.
கற்புநிலையைப்பற்றிய தமிழ்சினிமா விழுமியங்கள் உள்ளவர்களாக இந்த நிஜ மக்கள் இருப்பார்களா? எருக்குதான் நிஜத்துக்கு அருகே இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு.
சுரேஷ் கண்ணன் கதை கொடுத்த தாக்கத்தை படம் கொடுக்கவில்லை என எழுதி இருந்தார். எனக்கும் அதேதான் தோன்றியது. இவைதான் காரணமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
படத்துக்காகவே உருவாக்கப்பட்ட ருத்ரனும் உறுத்தல்களை உருவாக்காமல் இல்லை. ஏன் அவன் காசியைவிட்டு வந்தான்? அவன் பந்தங்களை ரயிலேறும் முன்னரே அறுத்துவிட்டான். இங்கே அவனுக்கு குடும்பத்தோடு மட்டுமில்லை, சக சாமியார்களுடன் கூடக்கூட ஒட்டவில்லை. அம்சவல்லிக்கு வர்தான் செய்தவுடன் அவன் பந்தங்கள் அறுபடுகின்றன என்பது எந்த நியதிக்கும் ஒத்துவரவில்லை.
ஆனால்..
இந்தக்குறைகள் நான் கடவுள் ஒரு சிறந்த படம் என்பதை மாற்றிவிடாது. நாம் பார்த்தும் கவனிக்க மறுக்கும், எல்லோரின் வாழ்வையும் தொட்டுச்செல்லும் ஒதுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இயல்பான பார்வை; பார்ப்பவர்களுக்கு நாமும் ஏதேனும் செய்யவேண்டும் என்ற குற்ற உணர்வை உண்டுசெய்யும் மிகைப்படுத்தப்படாத காட்சியமைப்புகள்,  தொழில்நேர்த்தி, இருப்பதே தெரியாமல் கதையோடும் இயையும் இசை, கடவுளின் இருத்தல் பற்றிய விவாதங்களைக் கிளப்பும் காட்சிகள், வசனம், பூஜாவின் மிக அற்புதமான நடிப்பு, ஆர்யாவின் உழைப்பு.. எல்லாம் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கதை படிக்காமல் இருந்திருந்தால் படத்தை இன்னும் ரசித்திருப்பேனோ என்னமோ. கதை ஏற்படுத்திய உணர்வுகளை இங்கே எழுதி இருக்கிறேன்

சுரேஷ் பாபு

அன்புள்ள சுரேஷ் பாபு

உங்கள் கடிதம். உங்கள் ஒப்புமை  கூர்மையாக நாவலை அணுகுகிறது. முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. ஒரு நாவல் தேர்ந்த வாசகர்களுக்காக உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒரு சினிமா பொதுவான வாசகர்களுக்காக, சராசரிக்காக உருவாக்கப்படுகிறது. அதற்கு  பல எல்லைகள் உள்ளன. ஒரு கதையில் தன்னை இணைத்துக்கொள்ள, அடையாளம் காண ஒரு மையக்கதாபாத்திரம் இல்லாமல் பொதுவாக  சினிமா பார்க்க முடியாது, சராசரி ரசிகர்களால். அந்த நாயகன் அந்த ரசிகனின் பகற்கனவுகளில் இருந்து வந்தவனாக, அவனால் செய்ய முடியாதவற்றைச் செய்பவனாக இருப்பான். இது ஒரு கட்டாயம். ஆகவே கதநாயகன் தேவைப்படுகிறான். அவன் வீர சூர பராக்ரமியாக இருந்தாகவேண்டும். அபப்டியானால் அவனுக்கு இணையான பராக்ரமியான வில்லன் தேவை. இப்படியே செல்கிறது தேவைகள். போத்திவேலு பண்டாரத்தை ருத்ரன் போட்டு நொங்கெடுத்தால் எப்படி இருக்கும்?

ஏழாம் உலகத்துக்கும் நான் கடவுளுக்குமான ஒப்புமைகளைப் பற்றி விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. இந்த இணைய தளத்தில் கட்டுரைகள் உள்ளன. ஏன் ருத்ரன் ஊரைவிட்டுவந்தான் ஏன் அவன் திரும்பிப்போனான் என்பதற்கான வலுவான காரணங்கள் திரைக்கதையில் இருந்தன. அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.  அந்தக் கரு கதையின் வேகத்தை மட்டுமே கருத்தில்கொண்ட  படத்தொகுப்பில் காணாமல் போய்விட்டது.
வணிக சினிமா என்பது சராசரி ரசனையின் கலை. அதற்குள் சில அம்சங்களாக வாழ்க்கைக்கூறுகளைக் கலக்க முடியும். வாழ்க்கையை எடுக்க முடியாது

ஜெ

ஏழாம் உலகம்: கடிதங்கள்

முந்தைய கட்டுரைஊடக இல்லம்,அறிவிப்பு
அடுத்த கட்டுரைஜெயமோகன் உரை