கதைகள், கடிதங்கள்

யாவரும் கேளிர் போன்றே காகிதக்கப்பல் கதையும் அடையாளம் சார்ந்த மனித உணர்வின்
நுட்பமான விளையாட்டைக்கொண்டாடுகிறது. ஆனால் இதில் ஒரு வித குழந்தைத்தனம் இருக்கிறது. விஷயம் சொல்லவேண்டும் என்ற முனைப்பிலாதது போல் தோன்றி பெரிய விஷயத்தைச்சொல்கிறது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இலங்கைத்தமிழர்கள் அந்த நாட்டுப்பெருவெள்ளத்துடன் இணைய ஓர் ஆழ்மனத்தடை உள்ளது – அதை மிகவும் குறைந்த வரிகளில் பட்டென்று சொல்லும்போது, பல வரலாற்று சான்றுகள் தந்து விளக்க முற்படும் கருதுகோள்களை ஒரு கதைசொல்லி எப்படி அனாயாசமாக சொல்கிறான் என்று வியப்பு மேலிடுகிறது. அந்த நாடு அந்த மக்களைத்தாயுள்ளத்தோடு இணைத்துக்கொள்ளும் – மேலும் மழைக்கு அவசியமிறாது என்று நான் வணங்கும் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
ஜெய்கணேஷ்.

ஜெ,

கதைகள் தொடர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஒவ்வொருநாளும் எதிர்பார்ப்புடன் கதைகளுக்காக காத்திருக்கிறேன். ஒரேவகையான கதைகளாக இல்லாமல் ஒவ்வொரு கதையிலும் ஒரு பாணி கடைப்பிடிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியான விஷயமாக நினைக்கிறேன்

இந்தக்கதைகளில் எனக்கு தனசேகரின் உறவு கதையும் ஹரன்பிரசன்னாவின் தொலைதல் கதையும் மிகவும் பிடித்திருந்தன. இரண்டுகதைகளிலும் எனக்கு தனிப்பட்டமுறையில் நெருக்கமானவர்களை நான் காணமுடிந்தது காரணமாக இருக்கலாம்

செந்தில்குமார்

அன்புள்ள ஜெயமோகன்

பிரசுரமாகக்கூடிய கதைகளை நீங்கள் எந்த அடிப்படையில் தேர்வுசெய்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?

சரவணன் குமாரசாமி [சரன்]

அன்புள்ள சரவணன் .

கதைகள் ஏதேனும் ஒருவகையில் எனக்குப்பிடித்திருக்கவேண்டும், அவ்வளவுதான். அதன்பின் அவற்றை கொஞ்சம் கூர்ந்து ஆராய்கிறேன்.அவற்றின் கருவோ கூறுமுறையோ புதியதாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் இருந்து அவை கிளைத்தெழுந்திருக்கவேண்டும். உண்மையான மனித உணர்ச்சிகள் வெளிப்பட்டிருக்கவேண்டும்.வாழ்க்கைசார்ந்த பார்வை கவித்துவமாக வெளிப்பட்டிருக்கவேண்டும். மொழியிலும் வடிவத்திலும் முதிர்ச்சியும் கவனமும் இருக்கவேண்டும்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து கதைகளில் இருந்து நான் தேர்வுசெய்த கதைகள் இவை.

ஜெ

ஜெ,

பிரசுரமான கதைகளில் யாவரும் கேளிர் ஒரு முக்கியமான கதை. நம்முடைய உள்ளே வாழக்கூடிய சாதியையும் ஆசாரத்தையும் முள்ளால் குத்துவதுபோல காட்டுகிறது அந்தக்கதை.

பிரபாகரன்

முந்தைய கட்டுரைவேதா ,பீத்தோவனின் ஆவி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்