தொலைதல்- ஹரன்பிரசன்னா-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நேற்று நண்பரிடம் தொலைபேசியில் நீங்கள் வெளியிட்டுவரும் புதியவர்களின் சிறுகதைகள் வரிசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சரியான அசோகமித்திரன் பாணி கதை ஒன்று வரும் என்று நான் சொன்னேன். ஏன் என்று கேட்டார். அசோகமித்திரன் எழுதவந்த காலகட்டம் முதல் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளில் அவர் தொடர்ச்சியான பாதிப்பை நிகழ்த்திவருகிறார் என்றேன். தலித் இலக்கியம் வந்தபோதுகூட இமையம் அசோகமித்திரன் வழியில்தான் எழுதினார்.

அசோகமித்திரனிடம் உள்ள ‘மினிமலிசம்’ கவரக்கூடிய விஷயம்.அதோடு ஒரு ‘மெட்டீரியலிஸ்ட் விஸ்டம்’ அது எப்போதும் தமிழ்ச்சமூகத்தில் இருந்துகொண்டிருக்கிறது. நமக்கு இயல்பாக வரக்கூடிய எழுத்து என்பது அசோகமித்திரன் பாணி எழுத்துதான்.

கூந்தலிலே ஒரு மலர் என்று ஒரு நாவல். பிவிஆர் எழுதியது. குப்பைநாவல். ஆனால் அதிலே யதார்த்தம் கண்ணையன் என்று கதாபாத்திரம் வரும். நான் சின்னவயசில் படித்தநாவல். கண்ணையன் எல்லாவற்றையும் மினிமமாகத்தான் சொல்வார். அதை வாசித்தபோது நான் என் பாட்டி அப்படிப்பட்டவள் என்று நினைத்தது ஞாபகமிருக்கிறது. நமது பழைய ஆட்கள் பலரும் அப்படிப்பட்டவர்கள்

ஹரன்பிரசன்னாவின் கதை ஒரு ‘டிப்பிக்கல்’ அசோகமித்திரன் கதை. அதன் தொடக்கம்கூட அசோகமித்திரன்தான். எவரையும் விவரிக்காமல், வர்ணிக்காமல் ஆளை மட்டும் சொல்லி கதையை ஆரம்பிக்கிறார். என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்று மட்டும் சொல்கிறார். அப்படியே ஒரு நல்ல கதையை எழுதிவிட்டார்

கதையின் உச்சம்கூட ஒரு சரியான அசோகமித்திரன் ஸ்டைல் லௌகீகம்தான் .நல்லகதை ஜெ. இளம் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்

செந்தில்நாதன்

அன்புள்ள ஜெ,

ஹரன்பிரசன்னாவின் கதை நுட்பமாக அமைந்திருந்தது. வாழ்க்கையைப்பற்றி கொஞ்சம்கூட romanticism இல்லாமல்பார்க்கும் பார்வை இளம் எழுத்தாளர்களுக்கு இருப்பது ஆச்சரியம்தான். அனேகமாக அவர் சொந்தக்குடும்பத்தில் கண்டு கேட்டு அறிந்த சம்பவமாக இருக்கலாம். நன்றாகச் சொல்லியிருந்தார்

சிவப்பிரசாத்

அன்புள்ள ஜெயமோகன்

ஹரன்பிரசன்னாவின் தொலைதல் மிகச்சிறப்பான கதை

வெளியில் அவ்வா திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் காலை மடக்கி வழிவிட்டாள். என்னவ்வா என்றேன். இரண்டு கைகளையும் வானத்தை நோக்கிக் காட்டினாள். ‘மருந்து எடுத்துக்கிட்டுப் போனானான்னு தெரியலை’ என்றாள்.

என்ற வரியில்தான் கதையின் உச்சம் உள்ளது. சிவபாஸ்கரன் அவ்வா இருப்பது வரை தொலைந்துபோக முடியாது. தப்பி ஓடத்தான் முடியும் என்று நினைத்துக்கொண்டேன்

சண்முகம்
மதுரை

முந்தைய கட்டுரைகதைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபத்துரூபாய்