இரு பொற்கபாடங்கள்

நமக்குக் கிடைத்துள்ள இவ்வாழ்க்கை மிகமிக அரிய ஒரு பரிசு என்பதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இரு தளங்களில் பெரும் இன்பத்தை அடைவதற்கான வாசல் திறந்திருக்கிறது நமக்கு. இயற்கை, உறவுகள். என் இதுநாள் வரையிலான வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில் இயற்கையின் முன் நின்ற தருணங்களும் உறவுடனும் நட்புடனும் இயைந்திருந்த தருணங்களும்தான் நான் பெரும்பரவசத்தை அடைந்தவை என்று படுகிறது. அக்கணங்களில்தான் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திருக்கிறேன்.

அதிருஷ்டவசமாக மிக இளமையிலேயே இவ்வுண்மையை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆகவே அந்தத் தருணங்களை நானே உருவாக்கிக் கொண்டேன். வளர்த்துக்கொண்டேன். என் நாட்களை கூடுமானவரை அத்தகைய தருணங்களைக்கொண்டு நிறைக்க முயன்றேன். திரும்பிப்பார்க்கையில் என் வாழ்க்கையை நான் பொருள் நிறைந்த நிறைவாழ்க்கை என நினைப்பது அதனால்தான்.

இவ்வெளிய விஷயம், நூற்றாண்டுகளாக ஞானிகளாலும் கவிஞர்களாலும் மீளமீளச் சொல்லப்பட்ட விஷயம் ஏன் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை? தன் வாழ்க்கையின் பிரச்சினைகளைப்பற்றிப் பேசும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இந்த இரு மகத்தான கதவுகளையும் திறந்துகொண்டவர்களே அல்ல. ஏன்? ஒற்றைச்சொல்லில் வேதாந்தம் இதற்கு பதில் சொல்லும். அகங்காரம்.

நான் என்னும் எண்ணமே அகங்காரம் என்று வேதாந்தத்தில் சொல்லப்படுகிறது. தன் நலம், தன் வெற்றி குறித்த விருப்பாக அது மாறுகிறது. தன்மையச் சிந்தனையாக அது நிலைக்கிறது. அது இரு பொற்கபாடங்களையும் இறுகமூடிவிடுகிறது.

நம்மில் பெரும்பாலானவர்கள் இயற்கையை அறியாதிருப்பது எப்போதும் தன்னைப்பற்றிய சிந்தனையில் மூழ்கியிருப்பதனால்தான். வாழ்க்கையில் வெற்றி என ஒன்றை இறுகப்பற்றியிருக்கிறார்கள். உலகியல் வாழ்க்கையில் மறுக்கமுடியாத ஆதிக்கத்தை அடைவதையே அவர்கள் வெற்றி என்கிறார்கள். ஊதிப்பெருத்த தன்னகங்காரத்தின் நிறைவையே வெற்றி என்கிறார்கள். அதற்காக விழித்திருக்கும் நேரமெல்லாம் கவலைப்பட்டு போராடிச் சலிக்கும் வாழ்க்கையில் இயற்கையின் மகத்துவங்களுக்கு இடமிருப்பதேயில்லை.

உறவுகளைப்பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் தன்னைப்பற்றியே பேசுவதைக் காணலாம். சாதகமாகப்பேசினாலும் எதிர்மறையாகப் பேசினாலும். ‘என் மக்கள், என்குடும்பம்’ என்ற பேச்சும் சரி ‘என்னை மதிக்கலை’ என்ற பேச்சும் சரி ஒரே அகங்காரத்தின் இரு பக்கங்கள். ஒன்று இருந்தால் இன்னொன்றும் வரும். இதை முழுக்க உதறிவிடுவது மிகக்கடினம் என்பது சரி. ஆனால் உறவுகளை மதிப்பிடுவதில் இதற்கப்பால் செல்லும் மனநிலை கொஞ்சமேனும் வாய்த்தால் உறவுகளை புரிந்துகொள்ளமுடியும், கையாளமுடியும்.

வாழ்க்கையின் வெற்றி என்பது மகிழ்ச்சியைக்கொண்டே அளக்கப்படவேண்டும். வாழ்க்கையை முடிந்தவரை மகிழ்ச்சியைக்கொண்டு நிறைத்தலே வாழ்க்கையை கௌரவப்படுத்துவது. வாழ்க்கையை நமக்களித்த பேராற்றலுக்கு நன்றியுடன் இருப்பது. நித்ய சைதன்ய யதி சொன்னார், மகிழ்ச்சியாக இருப்பது மனிதனின் கடமை என. மகிழ்ச்சியாக இருப்பவன் ஒரு பெரிய கடனை திருப்பிச் செலுத்துகிறான்.

தன்மைய நோக்கிலிருந்து விடுபடமுயல்பவன், கூடுமானவரை விடுபட்டவன் இயற்கையின் முன் வான்வெளியின் ஒரு வெறும்பகுதியாக தன்னை உணர்ந்து நிற்கமுடியும். உறவுகளின் பெருந்திரளில் தன்னை கடலில் ஒரு துளியாக உணர்ந்து கரையமுடியும். அதுவே உண்மையான மகிழ்ச்சி என்பது. அவ்விரு வாசல்கள் வழியாகச் செல்பவன் முழுமையை பெருநிறைவை பேரின்பத்தை அடையமுடியும்.

ஆம், வையத்தில் வாழ்வாங்கு வாழ்தலே வானுறையும் வழி.

ஜெ

[சொல்புதிது வெளியீடாக வரவிருக்கும் ’பொன்னிறப்பாதை’ என்ற நூலின் முன்னுரை]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅறம் – ஹரணி