ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?

aranga

 

நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் ,

ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்?

பீடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறீர்களா ? உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறீர்கள் ,

(என்னுடைய கேள்வியல்ல , சில நண்பர்களுடையது , பதில் அளிக்க வேண்டுமெனில் மட்டுமே அளிக்கலாம் , எனக்கு பதில் உண்டு ,மனதுக்குள் , அவர்களுக்கு தெளிவாக சொல்ல இயலவில்லை )

அன்புடன்

Arangasamy.K.V

aranga

அன்புள்ள அரங்கசாமி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான். ஆனால் அடிக்கடி நான் பதில் சொல்லிவிட்ட கேள்வியும்கூட.

இம்மாதிரி கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னதாக கேட்பவர்கள் இக்கேள்வியை பொதுமைப்படுத்த முயலவேண்டும். ஜெயமோகன் இதையெல்லாம் எழுதலாமா என்ற கேள்வியை எழுத்தாளர்கள் இதையெல்லாம் எழுதலாமா என்று கேட்டுக்கொண்டு, தானறிந்த எழுத்தாளர்களை எல்லாம் அதைச்சார்ந்து பரிசீலித்துவிட்டு, அதன்பின்னரும் அதே கேள்வி எஞ்சுமென்றால் மட்டுமே என்னிடம் கேட்க வேண்டும்.

தமிழையே எடுத்துக்கொள்வோம். இலக்கியதளத்திற்கு வெளியே விரிவாக கருத்துக்களை முன்வைத்த எழுத்தாளர்களை நிராகரிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நாஞ்சில்நாடன் அரசியல், ஆன்மீகம், இசை, சமூகம் என எல்லா தளங்களிலும் ஆணித்தரமான கருத்துக்களை எழுதிவருகிறார். அதற்கு முந்தைய தலைமுறையில் சுந்தர ராமசாமி விரிவாக பிற விஷயங்களை எழுதினார். ஜெயகாந்தன் முப்பது வருடம் அரசியல் சமூகத் தளங்களில் கருத்து உருவாக்குநராகச் செயல்பட்டார். அதற்கு முன் பாரதி… அவன் தொடாத துறைகளே இல்லை. இவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு எஞ்சியவர்களை வைத்து தமிழிலக்கிய உலகைப்பற்றிப் பேசப்போகிறோமா என்ன?

மலையாளத்தில் சி.வி.ராமன்பிள்ளை, குமாரன் ஆசான் முதல் சக்கரியா வரை அத்தனை முக்கியமான எழுத்தாளர்களும் அரசியல் சமூகத்தளங்களில் கருத்துச் சொல்லிவந்தவர்கள். குவெம்பு , சிவராம காரந்த் முதல் யூ.ஆர்.அனந்தமூர்த்தி வரை அப்படித்தான். அவர்கள் தேவையில்லை என்றால் எழுத்தாளர்களில் எஞ்சுவது எவராக இருக்கும்?

எழுத்தாளனின் சமூக இடம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆழமான அவநம்பிக்கையில் இருந்தே இந்த கேள்வி எழுகிறது. அவனை ஒருவகை கேளிக்கையாளன் என்றே நம் சமூக ஆழ்மனம் இன்றும் நினைக்கிறது. இது நம் நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தில் இருந்து வந்த நம்பிக்கை. அவனை சிந்தனையாளனாக, ஏதேனும் முறையில் சமூகத்திற்கு வழிகாட்டுபவனாக, சமூகத்தின் முதன்மைப் பிரஜையாக நம் சமூக ஆழ்மனம் நினைப்பதில்லை.

ஆகவேதான் கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் நம் சமூகமனதுக்கு அது கேவலமாக படவில்லை. அவன் அதைச் செய்யலாம், இலக்கியவாதிதானே என்றே நாம் எண்ணுகிறோம். நம் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேருக்கு  இலக்கியவாதிகள் என்பவர்கள் சமூகத்தின் ‘பரிசிலை’ வாங்கிக்கொண்டு தொழுது நிற்க வேண்டியவர்கள் மட்டுமே. நாதஸ்வரக் கலைஞர்கள் ஊர்ப்பெரியமனிதர்களுக்கு சந்தனம்பூசிவிடவேண்டும் என்று எண்ணிய சமூகமனதின் பிம்பம் இன்றும் தொடர்கிறது.

நம் பெரியமனிதர்கள் இலக்கியவாதிகளை நடத்தும் பாவனையில் அதைக் கண்டிருக்கிறேன். ஒருவகை ‘புரவலர்’ பாசத்துடன், ‘கருணை’யுடன் நடந்துகொள்வார்கள். உபதேசங்கள் அளிப்பார்கள். தங்கள் வீட்டில் எப்படி எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சோறு போடுவதுண்டு என்பார்கள். நம் கல்வித்தந்தைகள், துணைவேந்தர்கள் நடந்துகொள்ளும் முறையும் இதுவே. தமிழ்நாட்டில் இந்த நுண் அவமானத்தைச் சந்திக்காத எழுத்தாளனே இருக்கமாட்டான் — அவன் அதை அவமானமாகக் கொண்டானென்றால்.

ஆனால் நவீன இலக்கியவாதி என்பவன் நிலப்பிரபுத்துவகாலக் கலைஞன் அல்ல. அவன் தன்னை கேளிக்கையாளனாக நினைத்துக்கொண்டவன் அல்ல. அவன் தன்னை சமூகத்தின் அதிகபட்ச நுண்ணுணர்வுகொண்ட உறுப்பினனாக ,அதனால் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ளவனாக, சமூகத்தின் குரலாக ஒலிப்பவனாக உருவகம் செய்துகொண்டவன். பாரதி அப்படித்தான் தன்னை  உருவகம் செய்துகொண்டான். ஆகவேதான் அரசியல், கல்வி ,சுகாதாரம் ,தொழில் ,வர்த்தகம் என எல்லாவற்றைப்பற்றியும் அவன் எழுதினான். ஆனால் அவனை அவன் வாழ்ந்த சமூகம் நிலப்பிரபுத்துவ நோக்குடன் பார்த்தது. இதுவே அவனது அவலம். நக்கலாகவும் கிண்டலாகவும் புதுமைப்பித்தனும் இந்தச் சமூக அணுகுமுறையைக் குறித்து கடும் விமரிசனம் எழுதியிருப்பதைக் காணலாம்.

ஏன் எழுத்தாளன் இவற்றை எழுத வேண்டும்? மூன்று காரணங்கள். சமூகத்தின் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன. ஆகவே அவன் இயல்பாகவே எதிர்வினையாற்றுவதில் முதலாவதாக முன்வருகிறான். இரண்டாவதாக, பிற குடிமகன்களிடம் இல்லாத ஒன்று, மொழித்திறன், அவனிடம் உள்ளது. ஒரு எளிய குடிமகனின் குரலை எழுத்தாளன் மேலும் தீவிரமாக, உக்கிரமாக, முன்வைத்துவிட முடியும். அந்தப்பங்களிப்பை அவன் செய்வது என்றும் சமூகத்திற்கு உதவியானதே

மூன்றாவதாக, எந்தத் துறையிலும் நிபுணர்கள் சொல்வதற்கு வெளியே உள்ள சிலவற்றை எழுத்தாளன் அவனது நுண்ணுணர்வு மற்றும் அவன் கருவியாகக் கொள்ளும் கற்பனை மூலம் கண்டு சொல்ல முடியும். ஆய்வுமுறைபப்டி சொல்லப்படும் கருத்துக்களுக்கு வெளியே நின்று உள்ளுணர்வு சார்ந்து அவன் பேச முடியும். ஆரோக்கியமான சமூகங்களில் அந்தக் கோணம் எப்போதுமே பொருட்படுத்தவும் படுகிறது.சிலசமயம் அவனது தரப்பு தர்க்கபூர்வமானதாக இல்லாமலிருக்கலாம். சிலசமயம் குழப்பமானதாக இருக்கலாம். சிலசமயம் போதிய தகவல்சார்பு இல்லாததாக இருக்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானது, காரணம் அவன் வேறு நுண்கருவி ஒன்றை கையில் வைத்திருக்கிறான்.

ஆனால் இந்தப் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளன், ஒரு சமூகக்குடிமகனாக, குடிமக்களில் ஒருவனாக நின்று தன் கருத்துக்களை பதிவுசெய்யலாம். அதற்கு மேல் அவனுக்கு ஓரளவேனும் ஆர்வமும் பயிற்சியும் உள்ள துறைகள் சார்ந்து கருத்துக்கள் சொல்லலாம். முற்றிலும் தெரியாத துறைகள் சார்ந்து கருத்துச் சொல்வது பெரும்பாலும் சரியானதல்ல. நான் எப்போதுமே இந்த எல்லைக்குள் நின்றுகொண்டே என் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.

என் தெருவில் குப்பை அள்ளப்படாததைப் பற்றி, எனக்கு பேருந்துப்பயணத்தில் நிகழ்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேச நான் ஒரு சமூகக் குடிமகன் என்ற தகுதியே போதும். ஒழுங்காக வரிகளைக் கட்டியிருந்தாலே போதும். பொதுப்பிரச்சினைகளில் இந்த எல்லையை நான் தாண்டுவதில்லை. உதாரணமாக சமீபத்தில் ஒரு ஆவணப்படத்திற்காக மரபணுமாற்ற கத்தரிக்காய் குறித்து என் கருத்தைக் கேட்டார்கள். அதில்  ஒரு குடிமகனாக இத்தகைய அறிவியல் சோதனைகளுக்கு நம் நாடு களமாக ஆக்கப்படுவதைப்பற்றிய என் அச்சத்தையும் குழப்பத்தையும் மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

நான் ஆர்வமும் பயிற்சியும் கொண்டிருக்கும் தளங்கள் சில உண்டு. இலக்கியத்திற்கு அப்பால் இந்தியதத்துவம், தென்தமிழகம் மற்றும் கேரள வரலாறு, தென்தமிழக சமூகவியல், காந்திய சிந்தனைகள்  ஆகியவை அந்தத் தளங்கள். அவற்றில் கருத்துச்சொல்ல எனக்கு தகுதியில்லை என்று அந்தத் தளங்களைப் பற்றி ஓரளவேனும் அறிமுகம் உடைய  எவரும் சொல்ல மாட்டார்கள். அந்தத் தளங்களில் என்னுடன் விவாதிக்கத் தகுதியுடையவர்களாக நான் அவற்றின் நிபுணர்களையே தேர்வுசெய்வேன்.

இதைத்தவிர தொழிற்சங்க அரசியல், மற்றும் அதன் பொருளியல் தளங்கள் சார்ந்து எனக்கு இருபதாண்டுக்கால அனுபவம் உண்டு. மாற்றுமருத்துவம் என்னுடைய நெடுங்கால ஆர்வங்களில் ஒன்று. என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் இருந்து பெற்றுக் கொண்டது அது.

இந்த தளங்களுக்கு வெளியே எந்த அறிவுத்துறை குறித்தும் ஒரு எளிய பார்வையாளன், சமூகக் குடிமகன் என்ற அடையாளத்துக்கு அப்பால் சென்று நான் கருத்துக்கள் சொல்வதில்லை. சினிமா, இசை போன்ற தளங்களில்கூட நான் இந்த அடையாளத்தை எனக்கெனச் சொல்லிவிட்டே கருத்துச் சொல்கிறேன் என்பதைக் காணலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் போன்ற பல தளங்களில் கருத்துச் சொல்ல முன்வருவதேயில்லை. என் எல்லைகளுக்குள் நான் கருத்துச் சொல்கிறேன் என்றே நினைக்கிறேன்.

இத்தனைக்கும் அப்பால், என் கருத்துக்கள் பொருட்படுத்தத் தக்கன அல்ல என்றால் அவற்றை எளிதில் எவரும் புறக்கணித்துவிடலாமே. பல தளங்களைச் சார்ந்த முக்கியமான நிபுணர்கள் என் கருத்துக்களை வாசித்து வருகிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள் என நானும் அறிவேன்.

*

இந்த விவாதத்தில் கடைசியாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் எனக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டே கருத்துச் சொல்கிறேன். காரணம் நான் என்னை ஏற்கனவே அடையாளம் உருவாகிவிட்ட  எழுத்தாளன் என நினைப்பதுதான். ஆனால் எளிய குடிமக்கள், செய்தித்தாள்கள் மூலம் கருத்துக்களை தெரிந்துகொள்பவர்கள் இத்தகைய எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

நிபுணர்கள் எனப்படுவோர்  இத்தகைய சாதாரண குடிமக்களின் அறிதலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் கருத்துச்சொல்லும் உரிமையை அல்லது தகுதியை நிராகரிப்பதென்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த நிபுணர்கள் ஒரு தனி சமூக அமைப்பு போலச் செயல்படுகிறார்கள். அவர்களின் சொந்த அறிவுத்துறைகளின் ஒழுக்கக்கெடுபிடிகளுக்கும் அதிகாரத்துக்கும் கட்டுப்படுகிறார்கள். அத்துடன் பற்பல சுயநல நோக்குகளுடன் அனைத்து மானுட அறங்களையும் எளிதில் மீறுகிறார்கள். சாமானிய மக்களை தங்கள் சோதனை எலிகளாக நினைக்கிறார்கள்.

அந்த அறிவுத்திமிருக்கு எதிராக சமானிய மக்களின் அறவுணர்ச்சி அல்லது அச்சம் குரலெழுப்பும்போது அறிவின் அகங்காரத்துடன் ‘நீ ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்?’ என்று கேட்கும் நிபுணரின் குரல் ·பாசிசத்தின் எதிரொலியே. ஏனென்றால் இன்று சாமானியனுக்காக போராட சாமானியன்தான் இருக்கிறான். அவனை நவீனத்துவ தொழில்நுட்பமும் அறிவியலும் இரக்கமில்லாமல் கைவிட்டுவிட்டன. இன்றைய அறிவியலும் தொழில்நுட்பமும் அற அடிப்படை இல்லாதவையாக, தங்கள் சொந்த விதிகள் கொண்டவையாக ஆகிவிட்டன.

நான் அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றியோ, மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றியோ, புவிவெப்பமாதல் பற்றியோ ஏதும் எழுதியதில்லை. எனக்குத்தெரியாத தளங்கள் அவை என்பதே காரணம். ஆனால் இந்தியமொழிகளில் என்னைப்போன்ற  எழுத்தாளர்கள் அவற்றைப்பற்றி தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களிடம் ‘நீ ஏன் இதையெல்லாம் பேசவேண்டும், போய் கதை மட்டும் எழுது போ’ என்று சொல்லும் குரலின் ஆணவத்தை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அங்கே எழுத்தாளன் மொழியில்லாத சாதாரண மனிதர்களின் மொழியாக நின்று பேசுகிறான் என்பதே அதற்குக் காரணம்.

ஜெ

[மார்ச் 2010ல் வெளியான கேள்வி பதில், மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரைநிறம் கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73