நகைச்சுவை கடிதங்கள்

ஜெமோ,
 
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நகைச்சுவையில் வர்க்க வேறுபாடு கொண்டு வருவதை  நான் ஒப்புக்கொள்ளவில்லை. சிரிப்பு பொதுச்சொத்து. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும்  நகைச்சுவைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை நகைச்சுவைக்கு உட்படுத்த உழைக்கும் வர்க்கத்திலிருந்து ஒருவன் வந்துதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடங்கினால் நகைச்சுவை எழுத்திற்கு இட ஒதுக்கீடு கோருவதில் வந்து முடியும். ”ஒரு சமூகம் ஃபாஸிசம் நோக்கி நகர்வதற்கான முதல் அடையாளமே அது நகைச்சுவையை அஞ்சும் என்பதுதான்” என்பது உழைக்கும் சமூகத்திற்கும் பொருந்தும்தான். (மேலும் ”உழைக்கும் சமூகம்” என்ற ஒற்றைப்பெருங்கல், அரசியல் விளையாட்டுகளில் தவிர வேறெங்கும் இல்லை).
 
அருணகிரி.

 

அன்புள்ள அருணகிரி

உழைக்கும் மக்கள் என்பது ஓர் பொது உருவகமே. நம்மைவிட எளியவர்காள் என்று நடைமுறைப்பொருள். நகைச்சுவை வன்மங்களை குறைப்பதாக மையலாம். வன்மங்களுக்கான வழியாக அமையலாகாது என்பது என் எண்ணம்

ஜெ

 

அன்புள்ள ஜெமோ
 
ஆமாம்.  வன்மமும் காழ்ப்புமற்ற நகைச்சுவை எல்லாமே நல்ல நகைச்சுவைதான். அப்படிப்பட்ட நகைச்சுவை பரஸ்பர கிண்டலையும் சுய எள்ளலையும் எளிதாக அனுமதிக்கும். ஆனால் இது தமிழகத்தில் சினிமா, அரசியல் ஆகிய இரு பெரும் தளங்களிலுமே காணப்படுவதில்லை எனும்போது, இவற்றில் மூழ்கிக்கிடக்கும் சராசரி தமிழனின் மனத்தில் எப்படி இருக்கும்?

 

அருணகிரி.

குறைந்தபட்சம் அதை அறிவுஜீவிகளின் தளத்திலாவது செய்யலாமே. அவர்கள் இன்று நினைப்பதை நாளை மக்கள் நினைப்பார்கள். பிரச்சினை என்பது நம் அறிவுஜீவிகளிடம் இருக்கும் நகைச்சுவையற்ற மனநிலைதான்

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
தங்களின் “பயணக் கட்டுரை” படித்தேன். நீங்கள் சென்று வந்த இடத்தைப் பற்றிய பயணக்கட்டுரையாக இருக்கக்கூடும் என்றுதான் எட்டிப் பார்த்தேன். ஒரு பயணக்கட்டுரையை விடவும் சுவையாக இருந்தது பயணக் கட்டுரைகள் பற்றிய இந்தக் கட்டுரை. பொதுவில் பயணக் கட்டுரைகள் எழுதப்படுவது குறித்த நுணுக்கமாய் ஆழ்ந்து கவனித்து எழுதியிருக்கிறீர்கள். குறிப்பாக சியாச்சின், பளனி, கஜகிஸ்தான் மாமியின் தயிர் சாதம். அப்புறம் கோயில் சுற்றுலாக்கள் பற்றியது.
//பொதுவாக இவ்வகை கட்டுரைகளில் சற்றே ஞானக்கசிவு இருந்துகொண்டிருக்கும். ”ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைப் பார்த்தபோது இந்த ஆறு இப்படியே எத்தனை காலம் ஓடிக்கொண்டிருக்கிறாது இன்னும் எத்தனை காலம் ஓடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆறுபோலத்தான் நாமும் ஓடிக்கொன்டிருக்கிறோம் இல்லையா?” என்று முடிக்கும் போது கவித்துவம் உருவாகிறது.//
இந்த இடத்தில் என்னையும் மீறி ஏன் சிரித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஒரு சின்ன ஹாஸ்யம் கலந்திருப்பதுபோலொரு உணர்வு என்று நினைக்கிறேன்.

 
அன்புடன்
சித்ரன்
www.chithran.com

 

அன்புள்ள சித்ரன்

ஒரு கட்டுரையில் ஒரு வரியில் சற்றே சிரிபு கலந்திருப்பது போல சந்தேகம் வந்தால் அது அனேகமாக சிரிப்பாகவே இருக்கத்தான் மிகப்பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன.

செட்டியாரைப்பற்றி எழுதலாம். மறந்துவிட்டேன்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் உங்கள் அமெரிக்க பயணம் நன்றாக போகிறதென்று நினைக்கிறேன். நகைச்சுவை குறித்து நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மையான ஆன்மிகம் குறித்து சொல்லியிருப்பதும் மிகவும் உண்மைகளாக நான் உணர்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வே வாழ்க்கையை ஆழமாக்குகிறது.

 

அரவிந்தன் நீலகண்டன்

 
அமெரிக்கப்பயணம் மிக உற்சாகமாகப்போய் முடியப்போகிறது. செப் ஆறாம் தேதி ஊருக்குக் கிளம்புகிறேன். கீரோ வாலாட்டியபடி கனவில் வந்தால் வீட்டு நினைவு வந்துவிட்டது என்று பொருள்

ஜெ

முந்தைய கட்டுரைஎழுத்துப்பிழை கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறியவிஷயங்களின் கதைசொல்லி