காகிதக்கப்பல்-சுரேந்திரகுமார்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

காகிதக்கப்பல் கதையா கவிதையா என்று தெரியாத ஒரு வடிவில் இருப்பதே அதன் அழகு. ஒரு சிறந்த உருவகக்கதை அது.

இலங்கை ஒரு சிறிய தீவு என்ற ஒரு பிரக்ஞை அங்குள்ள குழந்தை மனதில்கூட உள்ளது. அருகே உள்ள இந்தியநிலம் பற்றி அவர்கள் ஒரு நம்பிக்கையைக் கொண்டிருப்பது அதனால்தான். பெருவெள்ளம் வந்தால் இந்தியாவில் இருந்து கப்பல் வரும் என்று அம்மா சொல்லிக்கொடுப்பதைப்பற்றி நினைக்கையில் சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை

நல்லவேளை மழை நின்றுவிட்டது

சண்முகம்
மதுரை

*

அன்புள்ள ஜெ,

அலுவல் நடுவே மொபைலில்தான் தளத்தை திறந்தேன்..சுரேந்திரகுமார் அவர்களின் காகிதக்கப்பல்.கவிதையின் உத்வேகமும் , அதன் பின்னே இழையும் துன்பவியலுமாக கதை அது.. படித்ததும் உருவான மனநடுக்கமும் அதன் பின்னணியும் மிக அந்தரங்கமானவை .முதிரா இளமையில் எழுதிக்குவித்த அபத்த கவிதை (?)யின் சாரமான பின்பொருளை மீட்டியதே காரணம்..எப்போதடா வீடு திரும்புவோம் என்று இருந்தது…எழுதிய அத்துணை நோட்டுகளையும் இந்தியாவில் இருந்து கூடவே கொண்டு வந்து இருந்தேன்..கை நடுக்கத்துடன் நோட்டை எடுத்து ,பார்த்த அந்த பக்கங்களில் எழுதியது இருந்தது ..

மன்னிக்கவும் ஜெ.. உங்களுடன் பகிர வேண்டும் என்று தோன்றியது.வேறென்ன சொல்ல .

அதிகாலை
கனவுகள் மட்டுமல்ல தேகமும் சில்லிட
கண்களை திறந்தேன்
என்
ஜன்னலோரத்தில் மழை..
முகம் திருப்பிக்கொண்டேன்.
சரச தூதாக அனுப்பியது
சாரலை
ஒலியை
பின்னே ஒளியையும்
திரும்பவில்லை நான் ..
சதிகார மழை
தெரிந்தே ஈரம் படிந்த
இறந்த நினைவுகளை
அனுப்பி தொலைத்து ..
சட்டென்று திரும்பினேன்..
தூரத்தில் வெகு தூரத்தில்
மௌனமாய் பெய்து கொண்டு இருந்தது
இடியை மட்டும் இங்கே இறக்கி சென்று.

கழுவி கொண்டிருக்கின்றன
அதிகாலையின் இருளை
என் கண்ணீர்துளிகள்..
இருள் வெளுக்கும் என்ற
நப்பாசையில்
மீண்டமொரு மழைக்கால இரவுக்காக
ஏங்குகிறேன்.

அன்புடன்,
பிரதீப் பாரதி

அன்புள்ள ஜெ

காகிதக்கப்பல் அரிய கதை. வாசிக்கையில் சாதாரணமாக இருந்தாலும் நினைவில் ஒரு வலுவான உருவகமாக நீடிக்கக்கூடியது. மழைபெய்து வெள்ளம் வந்து அதன்பின் இந்தியாவில் இருந்து கப்பல் வந்து இந்தியாவுக்குத் திரும்பிவிடலாம் என்று குழந்தைகள் ஆசைப்பட்டு நினைப்பதைப்பற்றி பல கோணங்களில் யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒரு இலங்கைத்தமிழரின் பண்பாட்டு நினைவு இந்த அளவுக்கு துல்லியமாக அதிகம் கதைகளில் வந்ததில்லை

குமார்

முந்தைய கட்டுரைமகாபாரதம் கும்பகோணம் பதிப்பு முன்பதிவு
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா